Published:Updated:

சவுதி இளவரசரை உடனடியாக தண்டிக்கக் கோரும் ஹதீஜே – யார் இவர்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ( Twitter )

இந்தக் கொலையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சவுதி அரேபிய அதிகாரிகள் சிலர் மீது அமெரிக்கா பயணத்தடையை விதித்திருக்கிறது. இருப்பினும், இளவரசர் முகமது பின் சல்மான் மீது நேரடியாக எந்தத் தடையையும் விதிக்கவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் கொலைக்கு, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அனுமதி வழங்கியிருக்கிறார் என்று வெளியான அமெரிக்கப் புலனாய்வு அறிக்கையை தொடர்ந்து, சவுதி இளவரசர் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என கஷோக்கியைத் திருமணம் செய்துகொள்ளவிருந்த ஹதீஜே ஜெங்கிஸ் (Hatice Cengiz) தெரிவித்திருக்கிறார்.

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி

59 வயதான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி 2018-ம் ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி துருக்கி இஸ்தான்புல்லில் இருக்கும் சவுதி தூதரகத்துக்குச் சென்றபோது சவுதி முகவர்களால் கொலை செய்யப்பட்டார்.

சவுதியைச் சேர்ந்த ஜமால் கஷோக்கி ஒரு காலத்தில் சவுதி அரச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார். சவுதி அரசின் ஆலோசகராகவும் இருந்துவந்தார். ஆனால், அதன் பின் சவுதி அரசையும், இளவரசர் முகமது பின் சல்மானின் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்துவந்தார்.

ஒருகட்டத்தில் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணியாற்றிவந்தார். பிறகு அங்கிருந்து இளவரசர் முகமது பின் சல்மானின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்துவந்தார்.

அமெரிக்காவின் அறிக்கை

ஜமால் கஷோக்கியின் கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அனுமதி வழங்கியிருக்கிறார் என்று கூறும் அமெரிக்கப் புலனாய்வு அறிக்கை ஒன்று சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

அதைத் தொடர்ந்து, ``சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் எந்த தாமதமுமின்றி தண்டிக்கப்பட வேண்டும்’’ என கஷோக்கியைத் திருமணம் செய்துகொள்ளவிருந்த ஹதீஜே தெரிவித்திருக்கிறார்.

``சவுதி இளவரசர் தண்டிக்கப்படவில்லை என்றால், கொலையில் ஈடுபட்டு அதன் குற்றவாளிகள் தப்பித்துவிடலாம் என்ற சமிக்ஞையை அது வழங்கும். இது நம் அனைவருக்கும் ஆபத்து. மேலும் அது மனிதகுலத்தின் மீது படிந்த கறையாக இருக்கும்,” எனவும் ஹதீஜே தெரிவித்திருக்கிறார்.

ஹதீஜே ஜெங்கிஸ்
ஹதீஜே ஜெங்கிஸ்
Twitter

2017-ம் ஆண்டிலிருந்து சவுதி அரசின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பு இளவரசர் சல்மானின் பொறுப்பில் இருப்பதால், இம்மாதிரியான ஒரு நடவடிக்கையை (கஷோக்கியின் கொலை) அவரின் அனுமதி இல்லாமல் சவுதி அதிகாரிகளில் செய்திருக்க முடியாது என அமெரிக்காவின் அந்த உளவுத்துறை அறிக்கை தெரிவித்திருக்கிறது.


சவுதி இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறது. மேலும் இது `தவறான மற்றும் எதிர்மறையான ஓர் அறிக்கை’ என்று தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கஷோக்கியின் கொலையில் தனக்குச் எந்த தொடர்பும் இல்லை என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேநேரம், இந்த அறிக்கை வெளியானதிலிருந்து சவுதி இளவரசர் மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் பைடனுக்கு நிர்பந்தங்கள் எழுந்துள்ளன. இந்தக் கொலையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சவுதி அரேபிய அதிகாரிகள் சிலர் மீது அமெரிக்கா பயணத்தடையை விதித்திருக்கிறது. இருப்பினும் இளவரசர் முகமது பின் சல்மான் மீது நேரடியாக எந்தத் தடையையும் விதிக்கவில்லை.

இந்தப் புலனாய்வு அறிக்கை வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் சவுதி அரசருடன் பைடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது உலக அளவில் மனித உரிமைகளுக்கு அமெரிக்கா தரும் முக்கியத்துவம் குறித்துப் பேசப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

கஷோக்கி - முகமது பின் சல்மான்
கஷோக்கி - முகமது பின் சல்மான்

என்ன சொல்கிறார் ஹதீஜே ஜெங்கிஸ்?

ஜமால் கஷோக்கியைக் கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஹதீஜே ஜெங்கிஸ். தற்போது இந்த அறிக்கைக்குப் பிறகு உலக நாடுகள் சவுதி இளவரசரிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும், சவுதி மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். துருக்கியைச் சேர்ந்த இவர் கல்வி ஆராய்ச்சியாளர்.

இவரைத் திருமணம் செய்துகொள்ளத் தேவையான ஆவணங்களைப் பெறத்தான் ஜமால் கஷோக்கி துருக்கி இஸ்தான்புல்லில் இருக்கும் சவுதி தூதரகத்துக்குச் சென்றிருந்தார். ஹதீஜே, கஷோக்கிக்காகத் தூதரகத்தின் வெளியே காத்திருந்தார். ஆனால் கஷோக்கி தூதரகத்தின் உள்ளே கொலை செய்யப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு