Election bannerElection banner
Published:Updated:

இரட்டை பச்சிளம் குழந்தைகள்; தூக்கிச் சென்ற குரங்குகள்! - தஞ்சையை பதறவைத்த குழந்தையின் மரணம்

சம்பவம் நடந்த வீடு
சம்பவம் நடந்த வீடு

தஞ்சாவூரில் வீட்டுக்குள் படுக்க வைத்திருந்த பிறந்து ஏழு நாட்களே ஆன இரண்டு பச்சிளம் குழந்தைகளை வீட்டிற்குள் புகுந்து குரங்குகள் தூக்கி சென்றதில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் நகர பகுதியில் உள்ள மேலவீதி கோட்டை அகழியைச் சேர்ந்தவர் ராஜா(29). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிற நிலையில், ஏற்கெனவே ஜீவிதா(5) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 7 தினங்களுக்கு முன்பாக புவனேஸ்வரிக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இதனால் புவனேஸ்வரிக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னரே மருத்துவமனையிலிருந்து புவனேஸ்வரி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். நம்ம குழந்தையை எந்த சிரமும் இல்லாமல் வளர்த்து பெரிய ஆள வளர்க்கணும் என தன் கணவரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் இரண்டு குழந்தைகளுக்கும் பாலூட்டி, வீட்டின் நடுவே படுக்க வைத்து விட்டு புவனேஸ்வரிக்கு வீட்டிற்கு வெளியே மற்ற வேலைகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மேற்கூரையில் உள்ள ஓட்டை பிரித்து கொண்டு இரண்டு குரங்குகள் வீட்டிற்குள் இறங்கின.

சம்பவம் நடந்த வீடு
சம்பவம் நடந்த வீடு

பின்னர் குழந்தைகள் படுத்திருந்ததை பார்த்த இரண்டு குரங்குகளும், தன் குட்டியை எப்படி அணைத்து தூக்கி கொண்டு தாவி ஓடுமோ அதே போல ஒவ்வொரு குழந்தையை தனி தனியாக தூக்கி கொண்டு தாவி குதித்து ஓடின. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து சத்தமிட்டனர். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே இப்பகுதியில் குரங்குகள் தொல்லை இருப்பதால் வழக்கம் போல் வீட்டிற்குள் இருந்த பொருள் எதையோ தூக்கி சென்று விட்டது என புவனேஸ்வரி நினைத்துள்ளார்.

திருவள்ளூர்: கால்வாயில் பச்சிளம் குழந்தை, தாய்ப்பாலூட்டிய பெண்... நெகிழ்ச்சி சம்பவம்!

ஆனால் வீட்டிற்குள் சென்ற புவனேஸ்வரி குழந்தைகள் காணாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பதறி துடித்து குழந்தைகளை குரங்கு தூக்கி சென்றதாக கதறியிருக்கிறார். மேலும் அங்கிருந்தவர்களும் பதை பதைப்புடன் கூச்சலிட்டபடியே குரங்கை தேடினர். அப்போது வீட்டின் மேற்கூரையில் ஒரு குரங்கு கையில் ஒரு குழந்தையை வைத்திருந்தது. குழந்தை அழுது கொண்டிருந்தது. பின்னர் புவனேஸ்வரி மற்றும் சிலர் குரங்கை பார்த்து கத்தினர். இதையடுத்து குழந்தையை அப்படியே போட்டு விட்டு சென்றது அந்த குரங்கு. பின்னர் அந்த குழந்தை பத்திரமாக மீட்டு பார்த்ததில் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. இது அவர்களுக்கு நிம்மதியை தந்தாலும் மற்றொரு குழந்தையை பரபரப்பும் தவிப்புமாக அப்பகுதி முழுவதும் தேடத் தொடங்கினர்.

இதில் வீட்டின் பின்புறம் உள்ள கோட்டை அகழி எனப்படும் குளத்து கரையில் மற்றொரு குழந்தையை விட்டு சென்றதை கண்டுபிடித்தனர். பின்னர் உடனடியாக அந்த குழந்தையை இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அகழி
அகழி

இதை கேட்ட புவனேஸ்வரி அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். `ரெட்டை புள்ளையில ஒத்த புள்ளைய அநியாம பறிகொடுத்துட்டேன். இனி நான் என்ன செய்யப் போறேன்’ என கதறியவரை எந்த வார்த்தையும் கூறி தேற்ற முடியாமல் தவித்தனர் உறவினர்கள். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக புவனேஸ்வரி, `எங்க ஏரியாவுல ஒரு வருடத்திற்கு மேலாக சுமார் 20 குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது. அதனை எங்களால தாங்க முடியலை. இதனை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்க தெருக்காரங்க வனத்துறையை சேர்ந்த அதிகாரிங்க கிட்ட புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

புவனேஸ்வரி
புவனேஸ்வரி

அதிகாரிங்க அலட்சியத்தால் ஒரு பச்ச உசுரு பலியாகி விட்டது. ரெண்டு கண்ண கொடுத்த ஆண்டவன் ஒரு கண்ண பிடிங்கிட்டான். இத எப்படி நான் மறக்கப் போறேன். என் பவுனு முகம் அப்படியே நெஞ்சுக்குள்ளேயே இருக்கு’ என அழத் தொடங்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும்,பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு