Published:Updated:

வேகமாக பரவும் ‘மங்கி பாக்ஸ்’ - கொரோனாவைப்போல் தாக்கம் இருக்குமா?

குரங்கு அம்மை
பிரீமியம் ஸ்டோரி
குரங்கு அம்மை

மங்கி பாக்ஸ் வைரஸ், பெரியம்மை வகையைச் சார்ந்தது. காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன

வேகமாக பரவும் ‘மங்கி பாக்ஸ்’ - கொரோனாவைப்போல் தாக்கம் இருக்குமா?

மங்கி பாக்ஸ் வைரஸ், பெரியம்மை வகையைச் சார்ந்தது. காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன

Published:Updated:
குரங்கு அம்மை
பிரீமியம் ஸ்டோரி
குரங்கு அம்மை

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே வாட்டி வதைத்த கொரோனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவரும் நிலையில், புதிய நோய் ஒன்று உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது. `மங்கி பாக்ஸ்’ என்றழைக்கப்படும் `குரங்கு அம்மை’தான் அந்த புதிய நோய்த் தொற்று. ``உலகம் சந்திக்கக்கூடிய முக்கியமான சவால்களுள் ஒன்றாகக் குரங்கு அம்மையும் இருக்கும்’’ என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இந்த அம்மை நோய்த் தொற்று எப்படிப் பரவுகிறது... இது கோவிட் பெருந்தொற்றுபோல பாதிப்புகளை உண்டாக்குமா?

மங்கி பாக்ஸ் என்றால் என்ன?

1958-ம் ஆண்டில், மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள குரங்குகளிடம் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட இந்த நோய், 1970-ல் மனிதர்களிடமும் பரவத் தொடங்கியது. அப்போதிலிருந்து நைஜீரியா, காங்கோ உள்ளிட்ட 10 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய்ப் பரவல் அதிகம் காணப்பட்டது. கடைசியாக 2017-ம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். பயணிகள் மூலம் ஆப்பிரிக்க நாடுகளைத் தாண்டி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கும் குரங்கு அம்மை பரவியது. அதிகபட்சமாக 2003-ம் ஆண்டு அமெரிக்காவில், இந்த நோயால் 47 பேர் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு, ஆப்பிரிக்க நாடுகளைத் தாண்டி வெளியில், இந்த நோய் பெரிதாகப் பரவியதில்லை.

தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியே 18-க்கும் அதிகமான நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியிருக்கிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் அதிகமானோருக்குக் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

வேகமாக பரவும் ‘மங்கி பாக்ஸ்’ - கொரோனாவைப்போல் தாக்கம் இருக்குமா?

அறிகுறிகள் என்னென்ன?

மங்கி பாக்ஸ் வைரஸ், பெரியம்மை வகையைச் சார்ந்தது. காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன. கூடவே, இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு 1-3 நாள்களுக்குள்ளாக உடல் முழுவதும் சிவப்பு நிறப் புள்ளிகள் ஏற்பட்டு, பின்னர் அவை கொப்பளங்களாக மாறும் என்கிறார்கள். நோய் பாதிப்பு தெரியவே 7 முதல் 14 நாள்கள் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது. ரத்தம், சளி உள்ளிட்டவற்றைப் பரிசோதனை செய்வதன் மூலம் தொற்று உறுதிசெய்யப்படுகிறது. ஆர்.டி - பி.சி.ஆர் சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கண்கள், மூக்கு, வாய், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் வழியாகவும் இந்நோய் பரவும் என்கிறார்கள் மருத்துவர்கள். கொரோனாவைப்போலவே இந்த நோய் பாதித்தவர்களும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்கென பிரத்யேகமாக இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனாபோலத் தாக்கம் இருக்காது!

குரங்கு அம்மை நோய் பாதிப்பிலிருந்து சில வாரங்களில் மீண்டுவிடலாம் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு நோயின் தாக்குதல் தீவிரமாக இருக்கலாம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ``மிகவும் பின்தங்கிய மருத்துவ கட்டமைப்புகொண்ட சில ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10-ல் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்கள். அந்த உயிரிழப்புகளுக்கு முழுக்க முழுக்க இந்த நோய் மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. நோய் பாதிப்பின்போது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் நிச்சயம் இதிலிருந்து மீண்டுவிடலாம்’’ என்கிறார்கள் ஐரோப்பாவைச் சேர்ந்த மருத்துவர்கள்.

வேகமாக பரவும் ‘மங்கி பாக்ஸ்’ - கொரோனாவைப்போல் தாக்கம் இருக்குமா?

அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் தலைவரான டாக்டர் ஃபஹீம் யூனுஸ், ``குரங்கு அம்மை கவலைக்குரியதுதான் என்றாலும், கொரோனாபோல பெருந்தொற்றாகப் பரவும் வாய்ப்பு முற்றிலும் இல்லை. இது ஆபத்தான நாவல் வைரஸ் வகையைச் சார்ந்தது இல்லை என்பதால், உயிரிழப்பு என்பது மிக மிக அரிது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இருக்கும் இந்தக் குரங்கு அம்மையின் பரவலை, பெரியம்மைக்குப் போடப்படும் தடுப்பூசிகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்’’ என்று நம்பிக்கையூட்டுகிறார்.

பெருந்தொற்றான கொரோனாவையே எதிர்கொண்ட நமக்கு, இந்தத் தொற்று பெரும் சவாலாக இருக்காது என்றாலும், நமது சுமைகளை மேலும் அதிகரித்துவிடுமோ என்கிற அச்சம் மட்டும் தொற்றிக்கொள்கிறது!

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மையால் யாரும் பாதிக்கப்படவில்லையென்றாலும், கவனமாக இருக்கும்படி அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியிருக்கிறது மத்திய சுகாதாரத்துறை. அதிகத் தொற்றுப் பரவல் ஏற்படும் மாநிலங்களான கேரளாவும் மகாராஷ்டிராவும் கடந்த வாரமே குரங்கு அம்மை நோய்த் தடுப்புக்கான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. தமிழ்நாட்டிலும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த நோய் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மதுரை இராசாசி மருத்துவமனையில் குரங்கு அம்மைக்காக 20 படுக்கைகள் கொண்ட சிறப்புச் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``இந்த நோய் பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது’’ என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism