Published:Updated:

சாதகமாக தீர்ப்பு; ஊராட்சி மேல்முறையீடு!‍ -பாதையை மீட்க பலியான மாமியார், உயிருக்குப் போராடும் மருமகள்

`பூங்கொடி வீட்டுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிக்கக்கூடாது' என்றும், `பாதை உடனே அமைத்துத் தர வேண்டும்' என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

தீக்குளித்த மாமியார், மருமகள்
தீக்குளித்த மாமியார், மருமகள்

வீட்டுக்குச் செல்லும் பாதையை மீட்பதற்காக மாமியார், மருமகள் தீக்குளித்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி.டி.ஓ, கிளர்க், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 12 பேர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ளது, மேல உசேன் நகரம் கிராமம். இந்தக் கிராமத்திலுள்ள சீமான் குளத்தின் கரை பகுதியில் இரண்டு போர்வெல் அமைக்கப்பட்டு, ஒரு போர்வெல் மூலம் கூத்தூர், பிலிமிசை, கொட்டரை, ஆதனூர் ஆகிய கிராமங்களுக்கும், மற்றொரு போர்வெல் மூலம் மேல உசேன் நகரம், கீழ உசேன் நகரம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது. இதனிடையே, போர்வெல் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மோட்டார் ரூமும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், அவற்றைச் சுற்றி காம்பவுண்டு சுவரும் ஊராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இந்நிலையில், காம்பவுண்டு சுவரின் பின் பகுதியில் ராமதாஸ், பூங்கொடி தம்பதி, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய வீட்டில் மகன் குமரேசன், மருமகள் தங்க லட்சுமி மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்துவருகின்றனர். இதனிடையே, "தங்களது வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைக்கும் நோக்கத்தில் ஊராட்சி சார்பில் காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டுள்ளது. தங்களது வீட்டுக்குச் சென்றுவந்த பாதையை ஆக்கிரமிக்கக்கூடாது" நீதிமன்றத்தில், கடந்த 2006-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார் பூங்கொடி. வழக்கு விசாரணையின் முடிவில் 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றம், "பூங்கொடி வீட்டுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிக்கக்கூடாது" என்றும், "பாதை அமைத்துத் தர வேண்டும்" என்றும் கூறியிருந்தது.

Vikatan

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அல்லிநகரம் ஊராட்சி நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், மேலஉசேன் கிராமத்திலுள்ள போர்வெல் பழுது ஏற்பட்டதால், புதியதாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் போர்வெல் அமைக்கப்பட்டு, கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு ஊராட்சி சார்பில் பேர்வெல் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு, பூங்கொடி குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பூங்கொடி
உயிரிழந்த பூங்கொடி

இது தொடர்பாக, அல்லிநகரம் ஊராட்சி செயலாளர் கலையரசி, குன்னம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மேலும், கீழ உசேன் நகரம் மற்றும் மேல உசேன் நகர கிராம மக்கள், ஒரு குடும்பத்தின் எதிர்ப்பால் தங்களுக்குத் தண்ணீர் வழங்குவதை நிறுத்தக்கூடாது என ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி செயலாளர் கலையரசி முன்னிலையில் டேங்க் ஆப்பரேட்டர் சுப்பிரமணி மற்றும் எலெக்ட்ரீஷியன் சுப்ரமணியன் ஆகியோர் நேற்று மாலை மின்மோட்டார் அமைத்துக்கொண்டிருந்தனர்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த, பூங்கொடி மற்றும் அவரது மருமகள் தங்க லட்சுமி, மின்மோட்டார் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பூங்கொடி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருமகள் தங்க லட்சுமி உயிருக்குப் போராடிவருகிறார்.

உயிருக்கு போராடும் தங்க லட்சுமி
உயிருக்கு போராடும் தங்க லட்சுமி

இதுகுறித்த புகாரின் பேரில், குன்னம் போலீஸார் ஆலத்தூர் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, ஊராட்சி செயலாளர் கலையரசி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன் உட்பட, 12 பேர்மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.