Published:Updated:

`கணவரின் குடிப்பழக்கம்; பசியின் கோரம்!’- சைல்டு லைன் அதிகாரிகளை அதிரவைத்த கேரளப் பெண்

சாப்பிட எதுவும் இல்லாததால், என் மூத்த மகன் மண்ணை அள்ளித் தின்றதைப் பார்த்து நெஞ்சு பொறுக்கவில்லை. எனவே, எனது குழந்தைகளைக் காப்பகத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார், தாய் ஸ்ரீதேவி.

அதிகாரிகளிடம் குழந்தைகளை ஒப்படைத்த தாய்
அதிகாரிகளிடம் குழந்தைகளை ஒப்படைத்த தாய்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரள தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கைதமுக்கு. அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே புறம்போக்கு நிலத்தில் ஷெட் அமைத்து, பல குடும்பங்கள் வசித்துவருகின்றன. அதில், ஸ்ரீதேவி என்ற தாய்க்கு ஆறு குழந்தைகள். முதல் குழந்தைக்கு ஏழு வயது ஆகிறது. கடைசிக் குழந்தைக்கு மூன்று மாதமே ஆகிறது. இந்த நிலையில் ஸ்ரீதேவி, திருவனந்தபுரம் குழந்தைகள் நலக்குழு அலுவலகத்திற்குச் சென்று ஒரு மனுவை அளித்தார். அதைப் படித்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தார்கள்.

குழந்தைகளைக் காப்பகத்தில் ஒப்படைத்த தாய் ஸ்ரீதேவி
குழந்தைகளைக் காப்பகத்தில் ஒப்படைத்த தாய் ஸ்ரீதேவி

அந்தக் கடிதத்தில், "எனக்கு ஆறு குழந்தைகள் உள்ளன. கூலி வேலை செய்யும் எனது கணவர், தினமும் மது குடித்துவிட்டு வருவதால் குழந்தைகளுக்கு உணவுப்பொருள் எதுவும் வாங்க இயலவில்லை. பசித்த சமயத்தில் சாப்பிட எதுவும் இல்லாததால், எனது மூத்த மகன் மண்ணை அள்ளித் தின்றதைப் பார்த்து நெஞ்சு பொறுக்கவில்லை. எனவே, எனது குழந்தைகளைக் குழந்தைகள் காப்பகத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று ஸ்ரீதேவி கூறியிருந்தார்.

சைல்டு லைன் அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று இதுகுறித்து ஆய்வுசெய்தனர். ஏழு வயதும் ஐந்து வயதும் ஆன இரண்டு மகன்கள், நான்கு வயதும் இரண்டு வயதும் ஆன இரண்டு பெண் குழந்தைகளையும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தாய்ப்பால் குடிக்கும் கடைசி இரண்டு குழந்தைகளையும் தாயிடமிருந்து பிரிக்கவில்லை. பின்னர், அனைவருக்கும் உணவு வாங்கிக் கொடுத்தனர். "என் கணவர் மீது நான் புகார் கொடுக்க விரும்பவில்லை. அதேநேரம், என் குழந்தைகள் வயிறார உணவு உண்டு ஆரோக்கியமாக இருந்தால் போதும்" என்று கூறி, குழந்தைகளுக்குப் பிரியாவிடை கொடுத்து நெகிழவைத்தார், தாய் ஸ்ரீதேவி.

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஸ்ரீகுமார்
திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஸ்ரீகுமார்

இதுகுறித்து சைல்டு லைன் அதிகாரிகள் கூறும்போது, "காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவும், கல்வியும் அளிக்கப்படும். தாய் விரும்பும் சமயத்தில் குழந்தைகளை அழைத்துச்செல்லலாம்" என்றனர். திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஸ்ரீகுமார் கூறும்போது, "குழந்தைகளின் தாய் ஸ்ரீதேவிக்கு தற்காலிகப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்பில் அந்தக் குடும்பத்திற்கு வீடு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார அட்டவணையில், கேரளம் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த நிலையில், தலைநகரிலேயே குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவலம் கேரளத்தை உலுக்கியுள்ளது.