மும்பை: நிலை தடுமாறி விழுந்ததில் இறந்த மகன்... உயிருடன் இருப்பதாக விடியவிடிய மருந்து தடவிய தாய்!

இறந்து போன மகன் உயிருடன் இருப்பதாக கருதி இரவு முழுவதும் காயத்திற்கு மருந்து தடவிய தாயின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சாந்தாகுரூஸ் கலீனா பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஷ்(42). கொரோனா தீவிரமாக இருந்த காலத்தில், வேலையிழந்தவர்களில் இவரும் ஒருவர். வேலையிழந்த மன உளைச்சலில் மதுப்பழக்கதுக்கும் ஆளானார்.
அப்படி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சந்தோஷ், கழிவறையில் நிலை தடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த அடிபட்டு ரத்தப் போக்கு ஏற்பட்டது. நீண்ட நேரம் கழித்தே இதனை கவனித்திருக்கிறார் சந்தோஷின் 70 வயது தாயார்.

மயங்கிக் கிடந்த மகனை, அப்படியே இழுத்து வந்து படுக்கையில் படுக்க வைத்திருக்கிறார். பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்த சந்தோஷின் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மஞ்சளை மருந்தாகத் தேய்த்துள்ளார். சந்தோஷ் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை உணராமல் விடியவிடிய மஞ்சள் தடவி கொடுத்துள்ளார்.
காலையில் வழக்கம் போல் மகன் எழுந்துவிடுவார் என்று நினைத்த தாய்க்கு ஒரு கட்டத்தில் விவரம் புரிய ஆரம்பித்துள்ளது. பின்னர் தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அவர்கள் வந்து பார்த்துவிட்டு உடனே சந்தோஷை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கின்றனர்.
மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்தபோது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரித்துவிட்டு விபத்து மரணம், என்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கழிவறையில் வழுக்கி விழுந்தவுடன் மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மகன் இறந்தது தெரியாமல் விடிய விடிய மருந்து தடவிய தாயின் பரிதாப நிலை காண்போரைக் கண்கலங்க வைத்தது.