Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-1

வனிதாமணி
பிரீமியம் ஸ்டோரி
வனிதாமணி

கதைங்கிறது அன்பு... பாதுகாப்பு... உரையாடல்..!

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-1

கதைங்கிறது அன்பு... பாதுகாப்பு... உரையாடல்..!

Published:Updated:
வனிதாமணி
பிரீமியம் ஸ்டோரி
வனிதாமணி

``அந்தக் காட்டுக்குள்ள கரடி அதுபாட்டுக்கு உலாத்திக்கிட்டு இருந்துச்சு. அப்பிடியே பராக்குப் பாத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கும்போது, `இது என்ன இங்கே புதுசாத் தெரியுதே'ன்னு பக்கத்துல போய்ப் பாத்தா, ஒரு மரத்தண்டு மேல ஒரு சின்னப்பையன் உக்காந்து அழுதுகிட்டிருக்கான். `ஏய், என்னாச்சு... ஏன் அழுவுறே..."ன்னு கரடி கேட்டுச்சு. `ஒரு பெரிய பிரச்னை... நான் தொலைஞ்சுபோயிட்டேன்... அதான் அழுகிறேன்'னு பையன் சொன்னான்...’’

கரடியாகவும் பையனாகவும் மாறிக் கதை சொல்லும் வனி அத்தையை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். ஒரு கற்பனை வனத்துக்குள் கரடிக்கும் சிறுவனுக்கும் முன்பாகக் குழந்தைகளை அமரவைத்துக் காட்சிகளை விரிக்கிறார் வனிதாமணி.

வனிதாமணி, குழந்தைகளுக்கான கதைகளைத் தேடிப் பயணித்துக் கொண்டேயிருக்கிறார். கதைகளுக்குள்ளாகவே வாழ்கிறார். குழந்தைகள், `வனி அத்தை', `வனி அத்தை' என அவரைச் சூழ்ந்து கொண்டாடுகிறார்கள்.

இன்று கதைகளிலிருந்து அந்நியப்பட்டுவிட்டார்கள் குழந்தைகள். பெரியவர்களுக்கு இணையாகக் குழந்தைகளின் வாழ்க்கையும் பரபரப்பாகிவிட்டது. பள்ளி, பயிற்சியென அவர்களின் நேரங்கள் கரைகின்றன. ஒற்றைத் தலையணையில் படுத்து, அவர்களின் மனதறிந்து தலைகோதி, கதை சொல்லி உறங்கவைக்க இன்றைய இளந்தாய்களுக்கு நேரமுமில்லை பொறுமையுமில்லை. துப்பாக்கி தரித்த ஹீரோக்களும், ரத்தம் தெரிக்கும் ஆன்லைன் கேம்களும் குழந்தைகளின் உலகத்தை அபகரித்துவிட்டன.

இந்தச்சூழலில்தான் கதைகளைச் சுமந்துகொண்டு பள்ளி பள்ளியாக அலைந்துகொண்டிருக்கிறார் வனிதாமணி.

``குழந்தைகளோட மனசுக்குள்ள கதைகள் ஏற்படுத்துற தாக்கம் சாதாரணமானதில்லை. நம்ம தலைமுறை வரைக்கும் அந்தக் கொடுப்பினை இருந்துச்சு. ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கிக்கொடுத்தாலும் நிறையாத குழந்தைகளோட மனசு, அம்மாவோ அப்பாவோ பக்கத்துல உக்காந்து உரையாடினா, கதை சொன்னா நிறைஞ்சிடும். கதைங்கிறது அன்பு, பாதுகாப்பு, உரையாடல்...’’ புன்னகையோடு சொல்கிறார் வனிதாமணி.

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-1

வனிதாமணி கோவையில் பிறந்தவர். ஈரோட்டில் வசிக்கிறார். குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதில் ஆரம்பித்து, கதைகள் மூலமாகவே கல்லூரி மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி என அவரது களம் விரிகிறது. இணையம், சமூக ஊடகங்கள் வழியும் கதைகள் சொல்லி உரையாடுகிறார்.

``கதை எங்க பாட்டி தந்த சொத்து. பாட்டி ஊர்ல இருந்தாங்க. அப்பா, விவசாயத்தை விட்டு தொழில்நாடிப்போன முதல் தலைமுறை. அதனால நாங்க நகரத்துக்கு வந்துட்டோம். விடுமுறைக்காலங்கள்ல பாட்டி வீட்டுக்குப் போவோம். அவ்வளவு கொண்டாட்டமா இருக்கும். பாட்டி வீட்டைச் சுற்றிலும் நிறைய உறவுக்காரங்க இருந்தாங்க. பாட்டி எங்களை வரப்புகள் வழியா அவங்க வீட்டுக்கெல்லாம் கூட்டிக்கிட்டுப் போவாங்க. கிணறுகள்ல தண்ணி குடிச்சுக்கிட்டே நடப்போம். ஒவ்வொரு கிணற்றுத்தண்ணிக்கும் ஒரு சுவை இருக்கும். நடக்குற களைப்புத் தெரியாம இருக்க பாட்டி கதை சொல்வாங்க. அந்தச்சூழல்ல அந்தக் கதைகள் அவ்வளவு தித்திப்பா இருந்துச்சு. இரவுகள்ல வீட்டுல பாட்டியோட அரவணைப்புல எல்லோரும் திண்ணையில படுத்திருப்போம். அப்போ பாட்டி சொல்ற கதைகள்ல புத்திசாலிக் குள்ளநரி வரும். முரட்டுக் கரடி வரும். முட்டாள் சிங்கம் வரும்... சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிச்சிடும். என் நினைவுப்படி பாட்டி சீரியஸா, அறிவுபூர்வமா, நீதிபோதிக்கிற மாதிரி ஒரு கதைகூடச் சொன்னதில்லை. சமீபத்துலகூட ஒரு உறவுக்கார அண்ணனும் நானும் சந்திச்சப்போ பாட்டி சொன்ன கதைகள் பத்திப் பேசிச் சிரிச்சோம்... இன்னைக்கும் அவ்வளவு பசுமையா மனசுக்குள்ள நிக்குது...’’ ஆத்மார்த்தமாகப் பேசுகிறார் வனிதாமணி.

பள்ளி, கல்லூரி, திருமணம் என வனிதாமணியின் வாழ்க்கை வளர்ந்தது. இரண்டாவது குழந்தை மகிழ் கருக் கொண்டபிறகுதான் மீண்டும் கதை துளிர்த்திருக்கிறது.

``நிஷாந்துக்கும் மகிழுக்கும் நிறைய கால இடைவெளி. மகிழ் வயித்துல இருந்த முதல்மாதமே பெண்குழந்தைத்தான்னு உறுதியா நம்பி அவளுக்கு நிலான்னு பேரு வச்சு அவகூட உரையாட ஆரம்பிச்சிட்டோம். ஹோட்டலுக்குப் போனா, `நீ என்ன சாப்பிடுறே'ன்னு கேக்குறது, கதை சொல்லித் தூங்க வைக்கிறதுன்னு அவ வெளியே இருக்கிற மாதிரியே பாத்துக் கிட்டோம். அந்தக் காலகட்டத்துல அவளுக்கு நிறைய கதைகள் சொன்னேன். ரொம்பவே சுகமான, சிக்கலில்லாத பிரசவத்துல மகிழ் பிறந்தா. பிறந்ததும் என் கணவர் அவளைக் கையில வாங்கி `நிலா'ன்னு கூப்பிட்டப்போ மலர்ந்து சிரிச்சா... அந்தக் காட்சியை ஒரு புகைப் படமா எடுத்துப் பாதுகாத்து வச்சிருக்கோம்.

குடும்பத்துடன்
குடும்பத்துடன்

அந்த நொடியில, நாம பேசுற வார்த்தைகளும் கதைகளும் குழந்தைகளைப் பாதுகாப்பா உணரச் செய்யுதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். மகிழ் பிறக்குற வரைக்கும் வேலைக்குப் போய்க்கிட்டிருந்தேன். ஒருநாள், `நான் வேலையை விடப்போறோம்பா'ன்னு என் கணவர்கிட்ட சொன்னேன். `என்ன பண்ணப்போறே'ன்னு கேட்டார். `குழந்தைகளுக்குக் கதை சொல்லப்போறேன்'னு சொன்னேன். `நல்லது, செய்'ன்னார்.

அப்போ ஈரோட்டு நூலகத்துல நிறைய நிகழ்ச்சிகள் நடத்திக்கிட்டிருந்தாங்க. நூலகரைப் போய்ப் பார்த்து, `வாரம் ஒருநாள் நான் கதை சொல்றேன்'னு சொன்னேன். முதல் வாரம் 20 குழந்தைகள் வந்தாங்க. அப்படியே அது பெரிசா வளர்ந்துச்சு. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை திருவிழா மாதிரி மனசு சந்தோஷமாயிருக்கும். பலமாதங்கள் இந்த நிகழ்வு நடந்துச்சு.

கதை சொல்றதோட சேர்த்து குழந்தைகளை வாசிக்க வைக்கணும்னு நினைச்சேன். வீட்டுல ஒரு பெரிய நூலகம் உருவாக்கினோம். `பட்டாம்பூச்சி குழந்தைகள் நூலகம்'ன்னு பேரு வச்சேன். `கதைக்களம்'ங்கிற பேர்ல வீட்டுக்கே குழந்தைகளை வரவழைச்சுக் கதை சொல்ல ஆரம்பிச்சேன். வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி... குழந்தைகளும் பாட்டுப்பாடுவாங்க, கதை சொல்வாங்க, புத்தகங்களை எடு்த்துப் படிப்பாங்க... 50 வாரம் இதை நடத்தினோம். குழந்தைகள் சொன்ன கதைகள், புதிர்களையெல்லாம் தொகுத்து `அமிழ்து'ன்னு ஒரு புத்தகமாப் போட்டோம்.

கொஞ்சம் கொஞ்சமா இதெல்லாம் வெளியில் பரவ, நிறைய பள்ளிகள்ல இருந்து கதை சொல்லக் கூப்பிட்டாங்க. குழந்தைகளை மனசால நெருங்கிட்டா அப்படியே நம்மை வாரி அணைச்சுக்குவாங்க. வனி அத்தை, வனி அத்தைன்னு அவ்வளவு நெருக்க மாகிட்டாங்க. என்னையும் குழந்தையா மாத்தி அவங்க கொண்டு வந்த ஸ்நாக்ஸ், சாப்பாடெல்லாம் கொடுப்பாங்க. எனக்கு அது பெரிய உற்சாகம் தந்துச்சு. குழந்தைகளைப் பேசவச்சு, கதை சொல்ல வச்சு, பாடவச்சு அவங்களோட கற்பனைத்திறன் மேல இருந்த மூடியை உடைச்சு வெளியே கொண்டு வர அது நல்ல வாய்ப்பா இருந்துச்சு...’’ நெகிழ்ந்து பேசுகிறார் வனிதாமணி.

ஒரு பள்ளியில் நடந்த சம்பவம், சிறப்புக்குழந்தைகளின் பக்கம் வனிதாமணியைத் திரும்ப வைத்தது.

``நம்ப முடியாத நிகழ்வு அது. ஒரு பள்ளியில் கதை சொன்னேன். கொடுத்த நேரத்தைவிட சீக்கிரமே நிகழ்ச்சி முடியுறமாதிரி இருந்துச்சு. முடிக்கும்போது `யாராவது பாட்டுப்பாடுங்களேன்'னு சொன்னேன். ஒரு குழந்தை எழுந்து வந்துச்சு. மைக்கைப் பிடிச்சு அழகாப் பாடுச்சு. எல்லோரும் சேர்ந்து பாடினோம். நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு ஆசிரியர்களெல்லாம் வந்து, பிரமிப்பா பேசினாங்க. அது ஒரு சிறப்புக் குழந்தை. எழுந்து நடக்கக்கூட செய்யாதாம். அதுவே வந்து மைக்கைப் பிடிச்சுப் பாடினது பெரிய ஆச்சர்யம்ன்னாங்க. எனக்கும் வியப்பாதான் இருந்துச்சு. பிள்ளைகளோட உரையாட ஆரம்பிச்சா எவ்வளவு மாற்றங்கள் நடக்குது பாருங்க... அதுக்கப்புறம் சிறப்புக் குழந்தைகள் படிக்கிற பள்ளிகளுக்கெல்லாம் கதை சொல்லப்போனேன்...’’

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-1
வனிதாமணி

ஒரு கட்டத்தில் வனிதாமணியை கல்லூரிகளி லெல்லாம் அழைக்கத் தொடங்கினார்கள். கதைகளைக் கொண்டே மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையையும் தயக்கத்தையும் போக்கி, கற்பனைத்திறனை வளர்த்தார்.

``நிறைய கல்லூரிகள் அழைத்ததால ஒரு பாடத்திட்டத்தையே உருவாக்கிக்கிட்டேன். எமோஷனல் பேலன்ஸ், மேடை அச்சம், கிரியேட்டிவ்னு எல்லாத்தையும் கதைகளைக் கொண்டே சொல்லிக்கொடுத்தேன்.

கொரோனா வந்தபிறகு நம் வாழ்க்கையில நிறைய மாற்றம். குறிப்பா குழந்தைகள் மிகப்பெரிய குழப்பத்துக்கு ஆளாகியிருக்காங்க. முன்பைவிட அதிகமாகக் கதைகளோட தேவையிருக்கு. இடைவிடாம இணையம் வழியா கதைகள் சொன்னேன். நோய்த்தொற்றுக்குப் பிறகு பள்ளிக்கு வந்த குழந்தைகளை வகுப்பறையில தக்க வைக்கிறது சவாலா இருந்துச்சு. வகுப்பறையை மகிழ்ச்சியா வச்சுக்குறது பத்தி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க அழைச்சாங்க. இப்போ அதுவும் பிரதான வேலையாப் போகுது...’’ என்கிறார் வனிதாமணி.

ஒருநாள்கூட ஓய்வில்லை. திருச்சி ஆல் இந்தியா ரேடியோவில் கதை சொல்கிறார். இணைய வழி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பாட்காஸ்ட் செய்கிறார். யூடியூப்பில் குழந்தைகளோடு அமர்ந்து பேசுகிறார். ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கிறார். பழங்குடிக் குழந்தைகள் மத்தியில் வேலை செய்கிறார். குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்கள் வழங்க விரும்பும் பெற்றோருக்கு உதவ `நூல் தளம்' என்ற அமைப்பைத் தொடங்கி அவரே நல்ல நூல்களை வாங்கித்தருகிறார்.

``என் பாட்டி சொன்ன கதைகளெல்லாம் மனசுக்குள்ளயே இருக்கு. அதையெல்லாம் நூலாக்கணும். இளம்தாய்களுக்குக் கதைகள் சொல்லிக்கொடுக்கணும். நிறைய திட்டங்கள் இருக்கு... பார்ப்போம்’’ என்று கைகூப்புகிறார் வனிதாமணி.

கதைக்காக காத்திருக்கும் குழந்தைகள், வனி அத்தையை வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள்!

- வருவார்கள்...