
மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்
``சிறைங்கிறது, குற்றம் செய்தவங்களை திருத்தி மறுவாழ்வு கொடுக்கிற இடம். ஆனா எதார்த்தத்துல அப்படியில்லை. ஒருமுறை சிறைக்குள்ள போயிட்டா அதுக்கப்புறம் இந்தச் சமூகத்துல இயல்பா வாழமுடியாது. இந்த சமூகத்துக்குப் பெரிய அச்சுறுத் தலாவும் அவர் மாறிடுவார். தமிழக சிறைகள்ல இருக்கிற 60% முதல் 70% பேர் குற்றமேயிழைக்காத அல்லது எந்த நோக்கமும் இல்லாம உணர்ச்சி வேகத்துல குற்றமிழைச்ச வங்க. அவங்களை மனம் திருத்தி இந்தச் சமூக நீரோட்டத்துல இணைக் கலேன்னா விளைவு ரொம்ப மோசமா இருக்கும்...’’ - ரவி குமார் பாலின் வார்த்தைகளில் அத்தனை கனிவும் தெளிவும் நிரம்பி யிருக்கின்றன.
ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர். எந்த வெளிச்சமும் பட்டுவிடாமல் கவனத்தோடு கடந்த 10 ஆண்டுகளாக சிறைவாசிகளுக்கென பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார். விடுதலையாகும் சிறைவாசிகளுக்கு வெளியே நல்வாழ்க்கை வாழ்வதற்கான நம்பிக்கையைத் தருவது, உள்ளேயிருக்கும் நன்னடத்தைக் குற்றவாளிகளுக்கு சட்ட உதவிகள் செய்வது, வெளியே வருபவர்களை அரவணைத்து இருப்பிடம் தந்து, வேலை பெற்றுத்தந்து காப்பது என விரிவான செயல்திட்டங்களோடு இயங்குகிறார்.

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக்கொண்ட ரவிக்கு வயது 66. அப்பா சி.ஜே.ஆர்.பால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். இளநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு சட்டம் படித்த ரவி, அதைப் பாதியில் விட்டுவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி மத்தியப் பாதுகாப்புத்துறையில் பணியாற்றினார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பணியை உதறிவிட்டு மீண்டும் சட்டப்படிப்பைத் தொடர்ந்து வழக்கறிஞரானார்.
‘‘வழக்கறிஞர் தொழிலின் கம்பீரம் எனக்குப் பிடிக்கும். ஒரு அரசுக் கட்டமைப்புக்குள்ள பெரிசா சாதிக்க எதுவுமில்லைன்னு தோணுச்சு. பிற்காலத்துல ரெண்டு முறை நீதிபதி பணி தேடிவந்தபோதும் அதுக்காகத்தான் மறுத்தேன். 2010 வரைக்கும் என் துறை சார்ந்த வேலையை மட்டும்தான் செஞ்சேன். ‘தமிழக சிறையில இருக்கிற 60% பேர் வெளியே இருக்கவேண்டியவர்கள்னு ஒரு கட்டுரை வாசிச்சேன். பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. நம் நீதியமைப்பு ‘1,000 குற்றவாளிகள் தப்பிச்சாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது’ன்னு சொல்ற சூழல்ல, அப்பாவிகள் சிறையில வாடுறாங்கன்னு என்னால நம்ப முடியலே.
தவறு நிரூபணமான பிறகு தரப்படுற தண்டனை பழிக்குப் பழியில்லை. தவறிழைச்ச ஒருத்தன் தான் செய்த தவறுக்கு வருந்தி திருந்தி புது மனிதனா வெளியே வரணும். ஆனா, நம் சிறைகள் பொதுவெளியில இருந்து அவனைத் தனிமைப்படுத்துதே ஒழிய, தண்டனைக்காலம் முடிஞ்சு சராசரியா இந்தச் சமூகத்துல அவன் வாழ்ற நம்பிக்கையைத் தர்றதில்லை. அதுக்குப் பல காரணங்கள் இருக்கு.
ஒருத்தன் குற்றம் செஞ்சு சிறைக்கு வந்துட்டா, குடும்பம் நிலைகுலைஞ்சு போயிடுது. சிறையில இருந்து வெளியே போய் அந்தக் குடும்பத்தோட இணைஞ்சு வாழ்ற சூழல் எல்லோருக்கும் அமையுறதில்லை. இன்னொரு பக்கம், அவன் மேல விழுகிற கண்காணிப்பு... ஒரு கட்டத்துல வேறொரு குற்றத்தைப் பண்ணிட்டு அவன் சிறைக்குள்ளயே வர வேண்டியிருக்கு. அல்லது தப்பே செய்யாமலும் வர நேருது. சிறை, குற்றவாளிகளைத் திருத்தாம அவங்கள உற்பத்தி பண்ற இடமா இருக்குங்கிறது தான் பிரச்னை.
சில வழக்கறிஞர் நண்பர்களோட புழல் சிறைக்குப் போனேன். சிறைவாசிகளைச் சந்தித்துப் பேசினேன். ‘குடும்பத்துல இருந்துகூட யாரும் வந்து பாக்கலைய்யா... நீங்க வந்து உதவி செய்யட்டுமான்னு கேக்குறீங்க'ன்னு பலபேர் நெகிழ்ந்து போனாங்க. ‘உங்க ஆவணங்கள், குற்றத் தோட தன்மை, உங்க நன்ன டத்தைன்னு நிறைய விஷயங்கள் இருக்கு. எல்லாத்தையும் வச்சுத்தான் உதவி செய்யமுடியும்'னு புரிய வச்சேன்.
சட்டத்தைப் பொருத்தவரைக்கும் குற்றம், குற்றம்தான். நோக்கம், காரண காரியங்களை வச்சு அந்தக் குற்றத்தோட தன்மையை நீதிபதிகள் தீர்மானிப்பாங்க. ரோட்டுல போற ஒருத்தரோட மொபைலைத் திருட ஒருத்தன் முயற்சி பண்றான். அவன்கூட அந்த மனிதர் போராடுறார்... திருடவந்த பையன் சாலையில விழுந்து தலை அடிபட்டு இறந்துட்டான்னா... சட்டத்தின் பார்வையில அவர் குற்றவாளிதான். ஆனா, அந்த இடத்துல நீங்களும் நானும் இருந்திருந்தா என்ன செஞ்சிருப்போம்... அதுதான் என் அளவுகோல். திட்டமிட்டுக் குற்றமிழைக் கிறவங்களைப் பத்தி நான் பேசல. 70 சதவிகிதம் குற்றங்கள் இப்படி உணர்ச்சி வேகத்துல நடக்கிறதுதான்.
ஒரு பையனுக்கு 10 வருடத் தண்டனை. ஏழு வருடங்கள் சிறையில கழிச்சுட்டான். வீட்டுக்குப் பக்கத்துல குழாய்ல தண்ணி புடிச்சுக்கிட்டிருக்கும் போது அவனோட அம்மாவை ஒருத்தன் அடிச்சுட்டான். ரத்தக்காயத்தோட துடிச்சுக் கிட்டிருக்கிற அம்மாவைப் பார்த்த அந்தப் பையன் சுத்தும் முத்தும் பாத்திருக்கான். ஒரு கட்டை கிடைச்சிருக்கு. அதைவச்சு அம்மாவை அடிச்சவனை அடிச்சுட்டான். அதுல அவன் செத்துட்டான். இதுதான் வழக்கு. நானும் நீங்களும் அம்மாவை ஒருத்தன் அடிச்சா வேடிக்கை பார்க்கமாட்டோம்தானே... அவன் கைக்குப் பக்கமா ஒரு கட்டை கிடைச்சதுதான் பிரச்னை... அவன் வாழ்க்கையே போயிடுச்சு. கோர்ட்டுக்குப் போனோம். 10 வருட தண்டனையை ஏழு வருடமாக் குறைச்சாங்க நீதிபதிகள். ஏற்கெனவே அவன் 7 வருஷம் சிறையில இருந்துட்டதால விடுதலையாகலாம்.
‘நான் சிறைக்கு வந்தவுடனே, என் மனைவி நீ வேண்டவே வேண்டாம்னு போயிட்டா... அம்மா இறந்துட்டாங்க. உறவுக்காரங்கள்லாம் மொத்தமா ஒதுங்கிட்டாங்க. சிறையிலயாவது படுக்க ஒரு திண்ணை, சாப்பிட மூணுவேளை சோறு கிடைச்சுச்சு. வெளியில நான் என்ன செய்வேன்’னு கேட்டான். சிறைக்கு வெளியிலயும் நாம வேலை செய்ய வேண்டியிருக்குன்னு அந்தத் தருணத்துலதான் புரிஞ்சுக்கிட்டேன். அவனை வெளியில எடுத்து ஆட்டோ வாங்கித்தந்து, எங்க பார்வையிலேயே வச்சிருந்தோம். இப்போ அவன்கிட்ட நாலு பேர் வேலை செய்றாங்க.
சிறையிலருந்து மாதம் பத்து பேர் விடுதலையாகுறாங்க. அதில 99% பேருக்கு வெளியில வாழமுடியும்ங்கிற நம்பிக்கையில்லை. அவங்களுக்கு ஆறுதலா தோள்ல கைபோட்டு ‘நாங்க இருக்கோம். தைரியமா வா'ன்னு சொல்றமாதிரி ஒரு திட்டத்தை ஆரம்பிச்சேன்.
விடுதலையாகுற கைதிகளுக்கு சிறைக்குள்ளயே முறையான வாழ்வியல் பயிற்சி கொடுக்கணும்னு சிறை விதிமுறைகள்ல இருக்கு. ஆனா, அது முழுமையா வழங்கப்படலே. அதை நாங்க உருவாக்கினோம். முதல்ல புழல் சிறையிலதான் ஆரம்பிச்சோம். கார்ப்பரேட் பயிற்சியாளர்களை அழைச்சுட்டுப் போய் சிறைவாசிகளுக்குப் பயிற்சி தந்தோம். முதல் முயற்சியிலேயே கண்ணுக்கு முன்னாடி மாற்றங்களைப் பாத்தோம்.
சிறைவாசிகள் எல்லோரையும் ஒரே மாதிரி வகைப்படுத்த முடியாது. வழக்கு, படிப்பு, குற்றம், தண்டனைன்னு எல்லாமே ஒருத்தருக்கொருத்தர் வேறுபடும். அவங்களுக்கு வாழணுங்கிற ஆசையை உண்டாக்கி, லட்சியத்தைக் கொண்டு வந்து வெளியே விட்டா, அவங்க திரும்ப சிறைக்கு வரவே மாட்டாங்க. அதை எங்க பயிற்சியாளர்கள் நிறைவா செஞ்சுக் கிட்டிருக் காங்க...’’ - மனம் நெகிழப் பேசுகிறார் ரவி.
சட்ட உதவி, உளவியல் பயிற்சியென பணிகள் விரிய PRISM (Prisoners Rights Intervention Support Misson) என்ற அமைப்பைத் தொடங்கினார் ரவி. தமிழகத்தில் இருக்கும் 8 மத்தியச் சிறைகளிலும் ரவியின் PRISM அமைப்பு இப்போதும் விடுதலையாகும் சிறைவாசிகளுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிறையிலும் தலா 5 தண்டனை சிறைவாசிகள் வீதம் 40 பேரைத் தேர்வு செய்து அவர்களையே பயிற்சியாளர்களாக மாற்றியிருக்கிறார். பிற சிறைவாசிகளுக்கு அவர்கள் பயிற்சியளிப்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது.
‘‘நாம முழுமையா கவனம் செலுத்தி வேலை செய்யவேண்டிய இடம், 18 வயதுல இருந்து 24 வயது வரையிலான இளைஞர்கள். சிறைக்கு வர்ற இவங்க வெளியே போனா நிம்மதியா வாழவே முடியாதுங்கிற நிலை இருக்கு. தவிர, அவங்கதான் வெளியில நடக்கிற பல பிரச்னைகளுக்குக் காரணமாவும் இருக்காங்க. இந்தக்கட்டத்துலயே சரி செஞ்சுட்டா, அவங்க வாழ்க்கையும் நல்லாயிருக்கும். சமூகத்துல குற்றங்களும் குறைஞ்சிடும். அவங்களைத் திருத்துறதுக்கான ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.

சைதாப்பேட்டை சப் ஜெயில்ல அந்தத் திட்டத்தை செயல்படுத்தினோம். அதுக்குப் பேரு ‘பட்டம்'. சென்னைக்குள்ள 7 ஆண்டுகளுக்கும் குறைவா தண்டனை வழங்கக்கூடிய குற்றங்களைச் செய்தவர்களை சைதாப்பேட்டை சிறைக்குத்தான் அனுப்பணும்னு உயர் நீதிமன்றமே காவல்நிலையங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி எங்க கையில தந்தாங்க.
சிறைக்குள்ள அவங்களுக்கு கவுன்சலிங் தருவோம். சட்ட உதவிகள் செய்வோம். எல்லோரையும் குழுவா உக்கார வச்சு விவாதிக்க வைப்போம். தொழில் திறன் பயிற்சிகளும் இருக்கும். எதிர்காலம் பத்திப் பேசுவோம். விளையாடுறதுக்காக சிறை வளாகத் திலேயே மைதானங்களை உருவாக்கி னோம். குடும்பத்தாரையும் சந்திச்சு கவுன்சலிங் தருவோம். போதை அடிமை நிலையில இருந்து விடுபட பயிற்சியை அளிப்போம். இன்னும் தீவிர சிகிச்சை தேவைன்னா முறைப்படி அனுமதி வாங்கி மறுவாழ்வு இல்லங்கள்ல சேர்த்து மீட்கவும் செஞ்சிருக்கோம். சிறைக்குள்ள கெட்ட சகவாசங்களுக்கே இடம் தராம மேம்படுத்திக்கிற பயிற்சிகளைத் தந்து வெளியே அனுப்புவோம். அதன்பிறகும் உதவி தேவைப்பட்டா கூட நிப்போம். எந்தச் சூழல்லயும் இரண்டாவது முறை சிறைக்கு வராமப் பாத்துக்குவோம்’’ என்கிறார் ரவி.
சென்னையில் ‘பட்டம்’ திட்டத்தில் இணைந்திருந்த இருந்த 348 சிறைவாசி களில் 8 பேர் மட்டுமே இரண்டாம் முறை குற்றமிழைத்துச் சிறைக்கு வந்தார்கள். மதுரையில் பட்டத்தில் இணைந்திருந்த 263 பேரில் 20 பேர் மட்டுமே இரண்டாம் முறை சிறைக்கு வந்தார்கள்.
‘‘ரொம்ப நாளாவே இன்னொரு உறுத்தல் இருந்துச்சு. குற்றமிழைக்கிற இளஞ்சிறார்களோட எண்ணிக்கை அதிகமாகிட்டே இருக்கு. அறியாத வயசுல தெரிஞ்சோ தெரியாமலே தவறிழைச்சுட்டு சிறைக்கு வர்ற பசங்களோட வாழ்க்கை மொத்தமா அழிஞ்சிடுது. 2021-ல இல்லத்துக்கு வந்த இளஞ்சிறார்கள்ல 96% பேர் முதல்முறை குற்றமிழைச்சவர்கள். அதுல 80% பேர் மைனர் க்ரைம்னு சொல்லப்படுற சிறு குற்றம் இழைச்சவங்க.

தண்டனை குறைவுங்கிறதால பெரியவர்கள் சிறியவர்களைப் பயன்படுத்தி குற்றம் செய்ய வைக்கிற நிலையும் உருவாகியிருக்கு. சமூகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலா இவங்க மாறிக்கிட்டே இருக்காங்க. அவங்க உலகத்துக்குள்ள நுழைய, ‘பறவை'ன்னு ஒரு திட்டம் உருவாக்கினோம்.
காவல்துறைக்கு இதுல நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருந்துச்சு. இந்தப் பசங்களை முறையாக் கையாண்டாலே காவலர்களோட பணிச்சுமை பாதி குறைஞ்சிடும். அதனால முறைப்படி அனுமதி வாங்கி காவலர்களை இந்தத் திட்டத்துல இணைச்சோம். சென்னையோட தென்மண்டலத்துல ஒரு சிறுபகுதியில இதை முன்மாதிரியா செயல்படுத்தினோம். களத்துல நிக்கிற தலைமைக் காவலர்கள், ஆய்வாளர்களுக்குப் பயிற்சி தந்தோம். கெல்லீஸ் இல்லத்துல நிரந்தரமா ஒரு கவுன்சலிங் சென்டர் போட்டோம். நல்ல விளைவுகள் இருந்துச்சு. இப்போ இந்தத் திட்டத்தை அரசே செயல்படுத்தும்னு முதல்வர் அறிவிச்சிருக்கார். முழுப்பொறுப்பும் காவல்துறை கையில இருக்கறதால நல்ல விளைவுகள் ஏற்படும்னு நம்புறேன்’’ என்கிறார் ரவி.
‘‘நம்மக்கிட்ட மிகச்சிறந்த சிஸ்டம் இருக்கு. சி.ஆர்.பி.சி 41வது பிரிவு, எல்லா வழக்குகளுக்கும் கைது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லைன்னு தெளிவா சொல்லுது. கைது செய்யாமலே எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம். மாஜிஸ்ட்ரேட்கள் மேலே நிமிர்ந்து பாக்காம ரிமாண்ட் எழுதிடுறாங்க. மீடியாக்களும் ஒருத்தர் மேல சந்தேகம் வந்துட்டாலே குற்றவாளிக்கூண்டுல ஏத்திடுறாங்க. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பிறகுதான் ஒருத்தரை குற்றவாளின்னு சொல்லமுடியும். தொடர்ந்து நாங்க பேசுறதால இன்னைக்கு ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்திருக்கு. நாளைக்கு நம் தெருக்கள் அமைதியா இருக்கணும், எல்லோரும் சுதந்திரமா நடமாடணும், அமைதிப்பூங்காவா நம் ஊர் இருக்கணும்னா முதல்ல சிறைகள்ல இருந்துதான் நம் வேலையைத் தொடங்கணும். எங்களால முடிஞ்ச அளவுக்கு அந்த வேலையைச் செஞ்சுக்கிட்டிருக்கோம்.’’
புன்னகையோடு சொல்லிவிட்டு விடைபெற்று நீதிமன்றத்துக்குள் நுழைகிறார் ரவி. அந்த வெளியை முழுமையாக நம்பிக்கை சூழ்கிறது!
- வருவார்கள்...