மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-3

மது மஞ்சரி
பிரீமியம் ஸ்டோரி
News
மது மஞ்சரி

நிறைய மாறினாலும், எங்க பகுதிகள்ல பெண்கள் வெளியூர் போய்ப் படிக்கிறதும் வேலைக்குப் போறதும் திகைப்பூட்டுற விஷயமாதான் இருந்துச்சு.

‘`கிணறுகளில் அன்பையும்
சுரக்க வைக்க முடியுது..!’’

நேற்றுதான் கல்லூரி முடித்து வந்த பெண் மாதிரி இருக்கிறார் மது மஞ்சரி. குரலில் கனிவும் செயலில் தாய்மையும் ததும்புகின்றன. துயரத்தில் இருக்கும் மனிதர்களுக்காக இந்தச் சின்ன வயதில் அவர் படுகிற வேதனையும் மேற்கொள்கிற பிரார்த்தனையும் வியக்க வைக்கின்றன. கட்டடவியல் துறையில் ஐந்திலக்க சம்பளத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, தண்ணீருக்காகத் தவிக்கும் கிராமங்களை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார் மது. ஒரு காலத்தில் ஊருக்கே நீர்சுரந்து தாகம் தீர்த்து இன்று பாழடைந்து கிடக்கும் கிணறுகளை மீட்டுருவாக்கம் செய்து, அழகுபடுத்தி சாதி, மதம் கடந்து அனைவரும் விரும்பும் இடமாக மாற்றி ஊரின் கைகளிலேயே ஒப்படைத்துவிட்டுத் திரும்புவதுதான் மதுவின் பணி. இதுவரை இப்படி 9 கிணறுகளை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது, மது ஒருங்கிணைத்து வழிநடத்தும் ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்.

கிணறுகளை மட்டும் மீட்டுருவாக்கம் செய்யாமல், கிணறுகளின் ஊடாக கிராமங்களில் புரையோடிக்கிடக்கும் சாதிய வன்மங்களையும் துடைத்து சுத்தமாக்குவதும் மதுவின் பணி.

‘‘எத்தனையோ நீர்நிலைகள் இருந்தாலும் கிராமத்துல இருக்கிற ஒவ்வொரு மனிதருக்கும் கிணற்றுக்கும் பெரிய உறவு இருக்குண்ணா. எல்லோருக்கும் கிணற்றோடு ஒட்டின ஒரு கதையிருக்கும். ஊரை உருவாக்குறதுக்கு முன்னாடியே கிணற்றை வெட்டியிருக்காங்க நம்ம முன்னோர். ஒரு கிணற்றைத் தூர்வாருறது மூலமா அந்த கிராமத்துல அன்பையும் சுரக்க வைக்க முடியுதுண்ணா...’’ அவ்வளவு முதிர்ச்சியிருக்கிறது மதுவின் பேச்சில்.

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-3
மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-3

மதுமஞ்சரி, திண்டுக்கல், சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர். அப்பா நெசவாளர். அக்கா, அண்ணாவோடு மூன்றாவதாகப் பிறந்தவர் மது. ‘‘வீடு எப்பவுமே கலகலன்னு இருக்கும்ணா. பாட்டி, தாத்தா, பெரியப்பா, பெரியம்மான்னு குடும்பத்துல அன்பும் அரவணைப்பும் நிறைய கிடைக்கும். அப்பா கொஞ்சமே படிச்சிருந்தாலும் ரொம்ப நிறைவான மனிதர். நெசவு பிரதான தொழிலா இருந்தாலும் வீட்டுக்கு பிளான் போட்டுத்தருவார். அழகா வரையவும் செய்வார். அவரைப் பார்த்துதான் எனக்குக் கட்டடக்கலை படிக்கணும்ங்கிற ஆசையே வந்துச்சு.

நிறைய மாறினாலும், எங்க பகுதிகள்ல பெண்கள் வெளியூர் போய்ப் படிக்கிறதும் வேலைக்குப் போறதும் திகைப்பூட்டுற விஷயமாதான் இருந்துச்சு. ஆனாலும் அக்காவைப் படிக்கவச்சு புனே வரைக்கும் வேலைக்கு அனுப்பினார் அப்பா. உறவுக்காரங் களெல்லாம் அப்பாவை ரொம்பவே கோவிச்சுக் கிட்டாங்க. ஆனாலும் ‘பொம்பளைப் புள்ளங்கங்கிறதால அவங்க கனவுகளைக் சுருக்கக்கூடாது. அவங்க நினைக்கிறபடி வளரட்டும்’னு சொன்னாரு. இன்னைக்கு வரைக்கும் நான் எது செய்தாலும் அதை ஆமோதிக்கிற அப்பாவோட அன்பும் நம்பிக்கையும்தான் என்னை இந்தப் பாதையில நகர்த்திக் கிட்டிருக்கு...’’ - நெகிழ்வாகப் பேசுகிறார் மது.

கோவையில் கட்டட வியல் படித்தார் மது. நல்ல ஆசிரியர்கள், நண்பர்கள் அமைந் தார்கள். நிறைய பயணங்கள் வாய்த்தன. பாடப்புத்தகங்களைத் தாண்டி, பொதுவெளியில் நிறைய பாடங்கள் படித்தார் மது.

‘‘படிப்பு முடிச்சதும் உடனடியா பெரிய நிறுவனத்துல வேலை கிடைச்சுச்சு. பெங்களூரு, மும்பைன்னு பணி மாறுதல்கள். பெரிய பெரிய மால்கள், பண்ணை வீடுகளெல்லாம் டிசைன் பண்ணிக் கட்டினோம். 2 வருஷத்துக்கு மேல என்னால தாக்குப்பிடிக்க முடியலே. பெரிய பெரிய கட்டடங்கள், ஒட்டாத சூழல்னு அந்த வேலையே ஒவ்வாமை மாதிரி ஆகிடுச்சு. ஒரேநாள்ல முடிவெடுத்து சென்னைக்கு வந்து அகர்மான்னு ஒரு புராதன கட்டடக்கலையை மீட்டுருவாக்கம் பண்ற நிறுவனத்துல சேர்ந்துட்டேன்.

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-3
மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-3

ஒருநாள் அங்க குக்கூ சிவராஜ் அண்ணா வந்திருந்தார். அவரோடு நிகழ்ந்த ஒரு மணி நேர உரையாடல் என்னை மாத்திடுச்சு. கிளம்பும்போது, நிகமானந்தா பத்தின ‘நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு'ங்கிற புத்தகத்தைத் தந்தார். கங்கை நதியைக் காப்பாற்ற வலியுறுத்தி 114 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தவர் நிகமானந்தா. அந்த நூலைப் படிச்சதும், இப்படிக்கூட மனிதர்கள் இருப்பாங்களான்னு தோணுச்சு. 34 வயசுல அரசை எதிர்த்து, ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து, நதியைக் காப்பாத்தணுங்கிற நோக்கத்துல உயிரைக்கூட துச்சமா மதிச்சுத் துறக்கிறது எவ்வளவு பெரிய தியாகம்!

‘நாமல்லாம் என்ன வாழ்க்கை வாழறோம்'னு தோணுச்சு. நிறைய தேடித்தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். அனுபம் மிஷ்ராவோட ‘குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு' புத்தகம் இன்னும் சிந்தனையை விரிவாக்குச்சு. தண்ணீரை விலை கொடுத்து பாட்டில்ல வாங்கிக் குடிப்போம்னு போன தலைமுறை நினைச்சுக்கூடப் பாத்ததில்லையே... அடுத்த தலைமுறை தண்ணிக்காக எவ்வளவு துயரத்தை எதிர்கொள்ளப் போகுதுன்னு நினைச்சப்போ பதற்றமா இருந்துச்சு.

சிவராஜ் அண்ணாகிட்ட பேசினேன்... ‘பேச்சைவிட செயல் சிறந்ததும்மா... ஏரி, குளம்னு பெரிய நீர்நிலைகளைப் புனரமைக்க பெரிய ஆள்பலமும் பணபலமும் வேணும். கிணறுகள் மக்களுக்கு நெருக்கமா இருக்கு. முதல்ல அதை மீட்டெடுத்து மக்கள் கையில தருவோம். ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்துக்கு வா’ன்னு அழைச்சார். அதுவே இலக்குன்னு இறங்கிட்டேன்...’’ சிரிக்கிறார் மது.

கிராமங்களில் மக்கள் அவ்வளவு எளிதாக மதுவை அங்கீகரிக்கவில்லை. கிணற்றை முன்வைத்து மிகப்பெரும் பகைமை, கட்டுப்பாடுகள், அச்சங்கள் நிலவும். அவற்றையெல்லாம் களைந்து கிணற்றருகே செல்வதே பெரும்பாடாக இருந்திருக்கிறது.

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-3

‘‘முதல்ல யாரும் நம்ப மாட்டாங்க. ‘பல வருஷங்களா தூர்ந்து கிடக்கிற கிணறு. இனிமே அதை உயிர்ப்பிக்கமுடியாது... ஏம்மா வீண் வேலை'ன்னு கேப்பாங்க. நாங்க குழந்தைகள்கூட எங்களை இணைச்சுக்கிட்டோம். ஊருக்குள்ள நுழைஞ்சாலே ‘அக்கா... அக்கா...'ன்னு வந்து சுத்திக்குவாங்க. அவங்களோட சேர்ந்து செடி வச்சோம். பூக்கள் கோத்தோம். கதை சொன்னோம். இரவு தங்கி, பெண்கள்கிட்ட பேசினோம். ‘என்னடா இந்தப்புள்ள நம்ம ஊர்லயே கிடக்கே'ன்னு மக்கள் நிமிர்ந்து பார்த்தாங்க. அவங்க கரங்களாலேயே கிணறுகளைத் தூர்வார வச்சு நீர் சுரக்க வச்சோம்.

நாமெல்லாம் எதிர்காலத்தைப் பத்திக் கவலைப்படுறோம்ணா... இப்பவே மக்கள் தண்ணீருக்காக அல்லாட ஆரம்பிச்சுட்டாங்க. திருவண்ணாமலை மாவட்டத்துல வலசை துருவம்னு ஒரு கிராமம். 400 குடும்பங்கள் இருக்கு. 7 கிலோ மீட்டர் நடந்துபோய் பெண்கள் தண்ணீர் கொண்டுவருவாங்க. 60 அடி ஆழத்துல ஊர்ல ஒரு பெரிய கிணறு இருக்கு. அதுதான் இத்தனை நாளா மக்களோட தாகம் தீர்த்திருக்கு. 70 ஆண்டுகளுக்கு முன்னால ஒரு பிரச்னையில அதைத் தீண்டத்தகாத கிணறா மாத்திட்டாங்க. படிப்படியா குப்பையைக் கொட்டி முழுசா மூடிட்டாங்க. அந்தக் கிணற்றுக்குப் போற பாதையிலகூட யாரும் நடக்கிறதில்லை. முள்மண்டிக் கிடந்துச்சு.

நாங்க போனப்போ வயதான பாட்டி ஒரு பானையைச் சுமந்துக்கிட்டு நடந்தவந்த காட்சியைப் பாத்தோம். இதயமே நொறுங்கின மாதிரியிருந்துச்சு. ஒரு மூத்தோன் மாதிரி செயலற்று உக்காந்து அந்த ஊரை வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்த கிணற்றை மக்கள் பங்களிப்போடு தூர் வாரினோம். தாய்ப்பால் சுரக்குற மாதிரி அதுல தண்ணீர் சுரந்ததைப் பார்த்தப்போ அங்கிருந்த பெண்கள் எல்லாம் கண்கலங்கி நின்னாங்க. சாதியும் முள்ளும் மண்டிக்கிடந்த பாதையைச் சரிபண்ணினோம். கிணற்றைச் சுற்றிலும் கட்டுமானப் பணிகள் செஞ்சு, ஓவியங்கள் வரைஞ்சு மக்கள் கைகளிலே தந்தோம். இன்னைக்கு அந்தப்பாதையில எல்லா மக்களோட காலடிகளும் படுதுங்கிறது மனசுக்கு சந்தோஷமா இருக்கு...’’ உற்சாகமாகப் பேசுகிறார் மது.

புளியானூர் ஆவாரங்கோட்டை, நார்ச்சம்பட்டி, சிங்காரம்பேட்டை அம்பேத்கர் நகர், நாயக்கனூர், செம்பியன்மாதேவி, வலசை துருவம் ஆகிய பகுதிகளில் கிணறுகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. பாழடைந்து கிடந்த கிணறு, ஒரு கண்காட்சித் திடல் போல மாறிவிட்டது. குழந்தைகள் கூடி விளையாடுகிறார்கள். கிணறுகளைச் சுற்றித் தோட்டம் அமைத்து, அவர்களே நீர் வாரி ஊற்றுகிறார்கள்.

‘‘நிறைய பிரச்னைகள் வரும். எல்லாத்துக்கும் பதிலா புன்னகை மட்டும்தான் எங்ககிட்ட இருக்கும். இந்தத் திட்டத்துக்கான முழு நிதியும் நண்பர்கள் கொடுக்கிறதுதான். யார்கிட்டயும் போய்க் கேட்க மாட்டோம். சோஷியல் மீடியாவுல நாங்க போடுற பதிவுகளைப் பார்த்து நிறைய பேர் உதவுவாங்க. அந்தந்த ஊர்கள்ல கூலி வேலைக்குப் போற ஆள்களையே தூர்வாரும் பணிக்குப் பயன்படுத்தி சம்பளம் தருவோம். நாங்களும் அவங்ககூட வேலை செய்வோம்.

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-3

நிறைய நெகிழ்வான சம்பவங்கள் இருக்குண்ணா... நாயக்கனூர்ல கிட்டத்தட்ட குப்பையால நிறைஞ்சுபோன ஒரு கிணற்றை எடுத்தோம். 30 நாள்கள் அதுக்குள்ள இருந்த குப்பைகளை மட்டும் அகற்றினோம். தினமும் ஒரு பெரியவர் வந்து கிணத்துக்குப் பக்கத்துல உக்காந்து, ‘இப்போ எத்தனை அடி', ‘இப்போ எத்தனை அடி'ன்னு கேட்டுக்கிட்டே இருப்பார். ஒருநாள், ‘இன்னைக்குத் தண்ணி வந்திடும்'ன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டார். அவர் சொன்னமாதிரி அன்னைக்கு தண்ணீர் வந்துச்சு. அவரைப் பார்த்து வணங்கினோம். ‘15 வயசுல அந்தக் கிணற்றை வெட்டும்போது நானும் மண்ணள்ளிக் கொட்டியிருக்கேன். அந்தக் கிணற்றைக் கடக்கும்போதெல்லாம் அழுகையா வரும். இப்பவும் அழுகை வருது’ன்னு கண்களைத் துடைச்சுக்கிட்டார். இப்படி நிறைய நெகிழ்வான மனிதர்கள் உடன் இருக்கத்தான் இந்த வேலையை நாங்க செய்றோம்’’ என்கிறார் மது.

புனரமைக்கப்பட்ட கிணற்றை மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வைத் திருவிழா போல நடத்துகிறார்கள். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பிரார்த்தனை என கிணறு புனிதத்தலமாகவும் கூடுதலமாகவும் மாறிப்போகிறது.

‘‘ஊருக்கு ஊர் நம் முன்னோர்கள் திட்டமிட்டுக் கிணறுகளை வெட்டி வச்சிருக்காங்க. நாமதான் சாதி, மதம்னு பாகுபடுத்தி எல்லாத்தையும் அழிச்சுட்டோம். கிணறுகளை மீட்டு பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர்றது ஒருவகையில பாகுபாட்டை உடைக்கிறதும்தாண்ணா. இந்த வேலையைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தணும். நிறைய பேரை ஒருங்கிணைக்கணும்...’’

மதுவின் வார்த்தைகளில் கனவுகள் விரிகின்றன!

- வருவார்கள்...