சினிமா
தொடர்கள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 9 - கல்வி இடைவெளியைக் குறைக்கும் இருவர்...

 சத்யராஜ் - வசந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
சத்யராஜ் - வசந்தகுமார்

மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்

``கொஞ்சம் பிசகியிருந்தாலும் எங்க வாழ்க்கை தப்பாப்போயிருக்கும் சார்... சலனப்படுத்த அவ்வளவு விஷயங்கள் இங்கே இருக்கு. எங்க காலத்தைவிட இன்னைக்கு இருக்கிற பிள்ளைகளுக்கு சவால்கள் அதிகம். எல்லாமே எளிதாக் கிடைக்குது. நாங்க பாக்குற விஷயங்கள் ரொம்பவே அதிர்ச்சி தருது. கல்வி மட்டும்தான் இவங்களுக்கு அரண். நல்ல முன்னுதாரணங்களைக் காமிச்சு, அவங்களை வளர்த்தெடுக்கணும். மாணவர்களைவிட பெற்றோருக்குத்தான் இன்னைக்குக் கல்வி அவசியமாயிருக்கு...’’ வசந்தகுமாரின் வார்த்தைகளில் அவ்வளவு அக்கறை, நம்பிக்கை!

வசந்தகுமாரையும் அவர் நண்பர் சத்யராஜையும் தண்டையார்பேட்டை, சுந்தரம் பிள்ளை நகரில் சந்தித்தேன். ஓர் அறையில் 20-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் ஆண்களும் பெண்களும் படித்துக்கொண்டிருந்தார்கள். நிறைய பேர் வயதானவர்கள். நான்கு இளைஞர்கள் Tally கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வசந்தகுமார் -  சத்யராஜ்
வசந்தகுமார் - சத்யராஜ்

அங்கிருந்து மூன்று கட்டடங்கள் தள்ளி விசாலமான இன்னொரு கட்டடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க, ஆறு ஆசிரியைகள் அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். நூலகம், ஸ்மார்ட் கிளாஸ் என அந்த வகுப்பறை விஸ்தீரணமாக இருக்கிறது.

கம்ப்யூட்டர் பயிற்சி நடக்கும் அறை வசந்தகுமாரின் அலுவலகம். வகுப்பு நடக்கும் இடம் அவரது தொழிற்சாலை. ‘‘பிள்ளைங்க அதிகமாகிக்கிட்டே இருக்காங்க. அதனால அலுவலகத்தையும் பேக்டரியையும் ரெட்ஹில்ஸ்க்கு மாத்திட்டேன். இங்கே முழுநேரமா வகுப்புகள் நடக்கும். மாலை நேரத்துல பள்ளி மாணவர்கள் வருவாங்க. மதியம், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி நடக்கும். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் உண்டு. வாரவாரம் லீடர்ஷிப் பயிற்சிகள் தருவாங்க. இதை முழுநேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த வகுப்பறையா மாத்தியிருக்கோம்.

கம்ப்யூட்டர் சென்டர்ல ஒருநாளைக்கு 60 பேருக்கு மேல வருவாங்க. மாணவர்களுக்குத் தனியாவும் மாணவர்களோட பெற்றோருக்குத் தனியாவும் பயிற்சி கொடுக்கிறோம். பெற்றோர்களோட சூழல் பிள்ளைகளோட கல்வியைப் பாதிச்சிடக்கூடாது. அதனாலதான் பெற்றோருக்குத் தொழில்பயிற்சி. சென்னை முழுவதும் நிறைய நிறுவனங்களை இணைச்சு ஒரு குரூப் வச்சிருக்கோம். பயிற்சி முடிச்சதும் அந்த நிறுவனங்கள்ல வேலையும் வாங்கித் தருவோம்’’ - செயல்பாடுகளை அடுக்குகிறார் வசந்தகுமார்.

வசந்தகுமாரின் பூர்வீகம் திண்டிவனம். தாத்தா காலத்தில் சென்னைக்குத் தொழில்நாடி வந்தவர்களுக்கு வாழ்விடம் தந்து அரவணைத்தது வடசென்னை. விழுந்து, எழுந்து இன்று வெற்றிகரமான தொழில்முனைவோராக இருக்கிறார். அவரும் அவரின் பள்ளிக்காலத்தோழர் சத்யராஜும் இணைந்து ‘கடமை' என்றோர் அமைப்பை நடத்துகிறார்கள். வடசென்னைக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக முனைப்போடு இயங்குகிறது கடமை. கொரோனா சுழற்றியடித்த இரண்டாம் அலைக் காலத்தில் ஆட்டோக்களில் சிலிண்டர்களைப் பொருத்திக்கொண்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாகக் களத்தில் நின்றார்கள் வசந்தகுமாரும் அவர் நண்பர்களும்.

‘‘வடசென்னையைப் பத்தி நிறைய மிகைப்படுத்துதல்கள் இருக்கு. ஒண்ணு, மொத்தமா மோசம்னு பேசுறது. இன்னொண்ணு, ‘இது புனித பூமி, இதைப்போய் தப்பாப் பேசுறீங்களே'ன்னு சொல்றது. ரெண்டுமே தவறு. பிரச்னைகளைத் தெளிவாப் புரிஞ்சுக்கணும். பிள்ளைகளுக்கு ஆதரவும் வழிகாட்டுதலும் அவசியமா இருக்கு. எங்க காலத்துல ஒளிஞ்சு ஒளிஞ்சு செஞ்ச விஷயங்களை இன்னைக்கு வெளிப்படையாச் செய்யமுடியுது. நல்லதும் கெட்டதும் திறந்துதான் கிடக்கு. பள்ளிக்கூடங்கள் முன்பிருந்த இணக்கத்தோடு இல்லை. ஆசிரியர்களை தெய்வமா மதிச்ச சூழல் இப்போ இல்லை. நிறைய மாறியிருக்கு. பிளஸ் 2 வரைக்கும் சரியா வழிகாமிச்சு, மனம் திரும்பாம வளர்த்தெடுத்துட்டா அதுக்கப்புறம் அவங்க வாழ்க்கையை அவங்களே வடிவமைச்சுக்குவாங்க.

வசந்தகுமார் -  சத்யராஜ்
வசந்தகுமார் - சத்யராஜ்

இங்கிருக்கிற பெரிய பிரச்னை வறுமை. குடும்பத்துல அஞ்சு பேர் இருந்தா அஞ்சு பேரோட உழைப்பும் குடும்பத்துக்கு அவசியமா இருக்கு. முதல் தலைமுறை பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காம, உழைப்பு உழைப்புன்னு வாழ்க்கையைக் கழிச்சிடுச்சு. வறுமை ஒழிஞ்சாதான் பிள்ளைகள் பள்ளிக்கூடம் வருவாங்க. அதுக்காகத்தான் பெற்றோருக்கு நிறைய தொழிற்பயிற்சிகளைக் கொடுக்க ஆரம்பிச்சோம். பயிற்சி முடிச்சவங்களுக்கு நாகரிகமான சம்பளத்துல வேலையும் வாங்கிக் கொடுக்கிறோம். 45 வயசுல பயிற்சி முடிச்சு டேட்டா என்ட்ரி ஆபரேட்டரா வேலைக்குப் போறவங்கெல்லாம் இருக்காங்க. கல்வியும் பொருளாதாரமும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கு. அதனாலதான் இது ரெண்டுலயும் வேலை செய்யணும்னு தீர்மானிச்சோம்...’’ விரிவாகப் பேசுகிறார் வசந்தகுமார்.

சத்யராஜ் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். 8-ம் வகுப்பு படிக்கும்போது அப்பா மின்சாரம் தாக்கி இறந்துவிட, பிழைப்பு நாடி வடசென்னை வந்தடைந்தது குடும்பம். ஒரு எம்.என்.சி. நிறுவனத்தில் பணியாற்றிய சத்யராஜ் இப்போது டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்டராக இருக்கிறார்.

‘‘படிச்சோம்... தொழிலுக்குள்ள வந்தோம்... பத்துப்பேருக்கு வேலை கொடுக்கிற நிலை வந்துச்சு. வாழ்க்கை நல்லாத்தான் இருந்துச்சு. இங்கே கிடைச்ச பட்டனுபவங்கள், நாம வாழ்றது வாழ்க்கையில்லேன்னு உறுத்திக்கிட்டே இருந்துச்சு. நாங்க படிக்கும்போதும் சரி, இப்பவும் சரி, வடசென்னை ஒதுக்கப்பட்ட பகுதியாத்தான் இருக்கு. இங்கே பிறந்து ஒருத்தன் மேலே எழுந்து வர்றது சாதாரண விஷயம் இல்லை. நாலு பேர் சேர்ந்து அரணா நின்னு கைதூக்கி விட்டாத்தான் மேல வரமுடியும். வெறும் பேச்சா இல்லாம உருப்படியா ஏதாவது செய்ய நினைச்சோம்.

எங்க டீம்ல இருந்த குமாரசாமி, செல்வகுமார், ராம்குமார், சுரேகா... இவங்கெல்லாம் ரொம்ப நல்லாப் படிப்பாங்க. இவங்களை வச்சு சின்னதா ஒரு மாலை நேர டியூஷன் ஆரம்பிச்சோம். பிள்ளைகள் பெரிசா ஆர்வம் காட்டலே. நாங்க படிச்ச பட்டேல் நகர் மேல்நிலைப்பள்ளிக்குப் போய் தலைமையாசிரியர் கிட்ட பேசினோம். 10-ம் வகுப்புக் கணக்கு, ஆங்கிலப் பாடங்கள்ல ரொம்பப் பின்தங்கியிருந்த 34 மாணவர்களைக் கொடுத்து ‘முயற்சி பண்ணிப் பாருங்க'ன்னு சொன்னாங்க. ஒரு சோதனை முயற்சியா அதுல இறங்கினோம்.

அந்தப் பசங்ககிட்ட பேசினோம். குடும்பச்சூழல் அவங்கள பெரிசா பாதிச்சுச்சு. நாம பாடம் நடத்த வேண்டியது இந்தப் பசங்களுக்கு இல்லேன்னு புரிஞ்சுச்சு. பெற்றோர்களை அழைச்சுப் பேசினோம். வேலையில்லாத பெற்றோருக்கு வேலை வாங்கித்தந்தோம். குடிக்கு அடிமையா இருந்தவங்களுக்கு கவுன்சலிங் தந்தோம். பசங்களை உற்சாகப்படுத்தித் தேர்வெழுத வச்சோம். 34 பேர்ல 29 பேர் பாஸானாங்க.

அந்த வெற்றி பெரிய உற்சாகத்தைத் தந்துச்சு. பெரிசா ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. பள்ளியில கைப்பிடிச்சு பணிக்காலம் வரைக்கும் பசங்களைக் கொண்டுபோற மாதிரி ஒரு செயல்திட்டத்தை உருவாக்கினோம். கம்ப்யூட்டர் பயிற்சி, மாலைநேர வகுப்புகள், ஸ்போக்கன் இங்கிலீஷ், தனித்திறமைகளைக் கண்டுபிடிச்சு அதுல வாய்ப்புகளை உருவாக்கித் தர்றது, குடும்பத்தோடு தொடர்பில் இருக்கிறது, வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர்றதுன்னு தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சோம். அந்த வருஷம் 100 பசங்க வந்தாங்க. எங்களை மாதிரியே அக்கறையுள்ள நாலு ஆசிரியர்களை நியமிச்சோம். படிப்படியா செய்தி பரவி நிறைய பேர் வரத் தொடங்கினாங்க. கூட இருந்த நண்பர்களை வச்சு அந்தந்தப் பகுதிகள்ல சிறப்பு வகுப்புகளை நடத்தினோம்.

மாரத்தான் மனிதர்கள் - 9 - கல்வி இடைவெளியைக் குறைக்கும் இருவர்...

கம்ப்யூட்டர் பயிற்சிக்கும் பெரிய தேவை இருந்துச்சு. ஒரு கட்டத்துல நாங்களே சொந்தமா கம்ப்யூட்டர்களை வாங்கிட்டோம். இப்போ சென்னை கடந்து பல இடங்கள்ல இந்தச் சிறப்பு வகுப்புகள் நடக்குது. தனித்தனியா ஒவ்வொரு மாணவனையும் பத்தி டேட்டா வச்சிருக்கோம். அவங்களைத் தொடர்ந்து பாலோ பண்றோம். எங்ககிட்ட படிச்சவங்களே இப்போ ஆசிரியர்களா மாறியிருக்காங்க...’’ பெருமிதமாகச் சொல்கிறார் சத்யராஜ்.

கொரோனா பேரிடர்க் காலங்களில் ‘கடமை’ நண்பர்கள் ஆற்றிய பணி மகத்தானது. 47 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டரைப் பொருத்தி இவர்கள் உருவாக்கிய ஆட்டோ ஆம்புலன்ஸ் பலபேரின் உயிர்களை மீட்டது. கொரோனா பிரசாரத்துக்காகச் செல்லுமிடங்களிலெல்லாம் கல்விச்சூழல் பற்றி ஆய்வு நடத்தி அங்குள்ள அமைப்புகளை ஒருங்கிணைத்துச் சிறப்புப்பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளார்கள்.

‘‘வடசென்னை மிகப்பெரிய குடியேற்றப்பகுதி சார். இங்கே வாழ்ற 99% பேர் பிழைப்புக்காக இந்த மண்ணை நம்பி வந்தவங்க. மாசம் பத்தாயிரம் சம்பாதிச்சா இங்கே வாழ்க்கையை ஓட்டிட முடியும். ஆனா அடுத்த தலைமுறை வாழ்க்கை மாறணும்னா ஒரே வழி கல்வி மட்டும்தான். கல்விக்குத் தடையா இருக்கிற விஷயங்களை சரி பண்ணணும். அதுக்காகவும் சில செயல் திட்டங்கள் வச்சிருக்கோம். சென்னையில் இருந்தாலும் இன்னைக்கு வரைக்கும் இங்கிருக்கிற பல பிள்ளைகளுக்கு, ‘ஐ.ஐ.டி-ன்னு ஒரு நிறுவனம் இருக்கு, நல்லா படிச்சா அங்கே நாமும் படிக்க முடியும்'ன்னு தெரியாது. கணக்கு நல்லா வர்ற ஒரு பையனுக்கு கணக்குக்குன்னே ஒரு உயர்கல்வி நிறுவனம் சென்னையில இருக்குன்னு தெரியாது. கல்வியில எவ்வளவு பெரிய இடைவெளி பாருங்க.

இந்த மண்ணுல கலெக்டர்கள் வரணும். ஐ.ஐ.டி-யன்ஸ் வரணும். இஸ்ரோவுக்கு இங்கிருந்து மாணவர்கள் போகணும். காவல்துறை உயரதிகாரிகளா இங்கிருந்து பிள்ளைகள் வரணும். வங்கி அதிகாரிகளா இங்கிருந்து வரணும். நிர்வாகத்துல, கொள்கை முடிவுகள்ல இங்கிருக்கிறவங்க இடம்பெற்றாதான், அடுத்தடுத்த தலைமுறைகள் மாறும்.

ஆரம்பத்துல ஒருநாளைக்கு மூணு மணி நேரம் இந்த வேலைக்கு ஒதுக்க முடிவு செஞ்சிருந்தோம். இப்போ முழுநேரப் பணியாவே இது மாறியிருக்கு. நானோ, வசந்தோ இங்கே இருந்தாகணும். வேலையைப் பகிர்ந்துக்கிறோம். குடும்பம் ஒத்துழைக்குது. நிறைய தம்பி, தங்கைகள் எங்ககூட கைகோக்க வந்துக்கிட்டிருக்காங்க. மிகப்பெரிய ஒரு போட்டித் தேர்வு மையத்தைத் தொடங்குற கனவோடு வேலை செஞ்சுக் கிட்டிருக்கோம்...’’ கட்டை விரலை உயர்த்திச் சிரிக்கிறார் சத்யராஜ்.

மனிதம் வலுவானது. அது உணர்ச்சிகளால் நெய்யப் பட்டிருக்கிறது. கண்ணீரைத் துடைக்க ஓராயிரம் கரங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். அவர்கள்தான் இந்த உலகத்தைச் சுழற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

- வருவார்கள்