சினிமா
Published:Updated:

காதலால் இணைந்தோம்; இயங்குகிறோம்!

பாலன் - ஸ்டெல்லா
பிரீமியம் ஸ்டோரி
News
பாலன் - ஸ்டெல்லா

இவர்கள்தாம் இந்த உலகை உன்னிப்பாகக் கவனித்து, தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்

”இவங்களுக்கு உதவி தேவைப்பான்னு உலகம் நினைக்கும், ஆனா நாலு பேருக்கு உதவுற தன்னம்பிக்கை எங்ககிட்ட இருக்கு” ஒருமித்த உறுதியோடு பேசுகிறார்கள் பாலன் - ஸ்டெல்லா மாற்றுத்திறனாளி ஜோடி.

இருத்தல், பிழைத்தல் என்பதெல்லாம் உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் சாத்தியமானவை. ஆனால் வாழ்தல் என்பது மனிதம் பெற்ற சுகம். உண்டு, உறங்கி, புணர்ந்து, மடிதல் மட்டுமன்றி உணர்ந்து, தெளிந்து, ரசித்து, பகிர்ந்து மகிழ்வதில்தான் அர்த்தமுள்ளதாகிறது மனிதர்களின் வாழ்வு. பல தடைகளைத் தாண்டி அப்படியொரு வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள்தான் பாலன் - ஸ்டெல்லா தம்பதி.

காதலால் இணைந்தோம்; இயங்குகிறோம்!

போலியோ பாதிப்பினால் ஸ்டெல்லாவின் கால்கள் செயல்படாது, 85% விழித்திறன் இழந்தவர் பாலன். இவர்கள்தாம் இந்த உலகை உன்னிப்பாகக் கவனித்து, தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். பாலனின் கண்களாக ஸ்டெல்லாவும், ஸ்டெல்லாவின் கால்களாக பாலனும் துணை நின்று சமூகப்பணியாற்றுகிறார்கள். ஒரு மாலைச் சந்திப்பில், அவர்கள் சந்தித்த சவால்கள், காதல், சமூகப்பணி எனப் பலவற்றையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் இந்தக் காதல் புறாக்கள்.

“வந்தவாசி பக்கத்துல `கண்டவரட்டி’ன்னு ஒரு சின்ன கிராமம்தான் எனக்குச் சொந்த ஊரு. பெருசா படிக்கல. சராசரியான வாழ்க்கை போய்ட்டிருந்தது. அப்போ திடீர்னு கண்ல கோளாறு. கொஞ்சம் கொஞ்சமா பார்வை குறைய ஆரம்பிச்சு சில நாள்ல எதுவுமே தெரியாமப் போச்சு. பிழைப்பு தேடிச் சென்னை வந்தேன். புது ஊரு, புது மனுஷங்க. வெளிய போக வர ரொம்ப சிரமப்பட்டேன். அரசு நடத்துற ஸ்கில் டிரெயினிங் சென்டர்ல பிஸியோதெரபி மசாஜ் டிரெயினிங் முடிச்சுட்டு வேலை பாத்துட்டு இருந்தேன். ஒருநாள் ரோடு கிராஸ் பண்ணும்போது சின்ன விபத்து, வாயில பல்லெல்லாம் ஒடஞ்சுபோச்சு. இவ்ளோ பெரிய ஊருல, ஒருநாள் வாழக்கையை ஓட்டுறதே கஷ்டமா இருந்தது. சாப்பாடு, தங்குற இடம், போக்குவரத்து உதவி, ஒரு ஃபார்ம் ஃபில் பண்றதுகூட போராட்டம்தான். 2014-ல அந்தப் பழைய விபத்து வழக்குல நஷ்ட ஈடா ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கிடைச்சது. நாம பட்ட கஷ்டம் நம்மள மாதிரி யாரும் படக்கூடாதுன்னு காசு கொடுத்து ஒரு வீடு வாடகைக்குப் பிடிச்சு ‘ஹெல்ப் அண்ட் ஹெல்ப் டிரஸ்ட்’ ஆரம்பிச்சேன்.

காதலால் இணைந்தோம்; இயங்குகிறோம்!

வெளியூரிலிருந்து இங்கே வரும் பார்வைக்குறைபாடு உள்ள நபர்களுக்கு தங்க இடமும் உணவும் குடுக்கணும். அவங்களுக்குத் தேவையான பஸ் பாஸ் எடுத்துக் கொடுக்கிறதுல இருந்து, படிப்புக்குத் தேவையான பொருள் வாங்க உதவுறது வரை ஆதரவா இருந்து பாத்துக்க ஆரம்பிச்சேன். என்னுடைய வருமானமும், அப்பப்போ வர நன்கொடைகளும் அதுக்கு உதவியா இருந்தது...” பாலன் பேசுவதை நிறுத்தி ஸ்டெல்லாவின் பக்கம் திரும்ப, அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார் ஸ்டெல்லா.

“எனக்கு சின்ன வயசுல போலியோ அட்டாக் ஆகி நடக்க முடியாமப் போய்டுச்சு, கஷ்டப்படுற குடும்பம். வீட்ல யாருக்கும் பாரமா இருக்கக்கூடாதுன்னு கொஞ்சம் படிச்சதும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். டெலி காலர் வேலை பார்த்துட்டு இருந்தப்பதான் ஒரு தோழி மூலமா இவரைப் பத்தித் தெரிஞ்சது. இவருக்குப் பார்வைப் பிரச்னை இருக்கிறதால, கணக்கு எழுதுறது, போன் அட்டென்ட் பண்றது, ஆன்லைன்ல நன்கொடைக்கு முயற்சி செய்றதுன்னு இவருக்கு ஆள் தேவைப்பட்டது. ஆர்வமா வேலைக்குச் சேர்ந்தேன். ஆனாலும் என் வீட்ல இருந்து இந்த ஹோமுக்கு வர சிரமப்பட்டேன். இவர்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு டூ வீலர் ஏற்பாடு பண்ணி, வண்டி ஓட்டக் கத்துக்கவும் வெச்சாரு. இவரோட அக்கறையும் அன்பும் பிடிச்சிருந்தது. அப்புறம்தான் திருமணம் செஞ்சிக்க முடிவு செஞ்சோம்...” கதை காதல் பகுதிக்கு வந்ததும் வெட்கப்படுகிறார்.

மீதியைச் சொல்லத் தொடங்குகிறார் பாலன், ``இவங்க பொறுமையும் சகிப்புத்தன்மையும் எனக்குப் பிடிச்சிருந்தது. கஷ்டத்தையும் நிராகரிப்பையும் உணர்ந்தவங்களுக்குத்தான் அதோட வலி தெரியும். என்னோட சமூகப் பணிக்கு அப்படியான புரிதலும் அக்கறையும் அவசியம். அதான் கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டேன். வீடும், எங்க ஆதரவற்றோர் இல்லமும் ஒண்ணுதான். கணவன் மனைவிக்காக பிரேத்யேகத் தனிமையும் வாழ்க்கையும் இருக்காது. இல்லத்தில் இருக்கவங்களோடு இணைஞ்சுதான் நாம வாழணும்னு சொன்னேன். அவங்க சம்மதிச்சதுல சந்தோஷம். கல்யாணம் ஆகி மூணு வருஷம் முடிஞ்சுடுச்சு. என்னுடைய எல்லாப் பணிகளிலும் உறுதுணையா இருக்காங்க. பார்வையற்றவர்களுக்குன்னு ஆரம்பிச்சாலும், இன்னைக்கு மனவளர்ச்சி குறைந்த ஒரு நபர், வயசானவங்கன்னு எங்க வீடு ஆதரவற்றவர்களுக்கான இல்லமா மாறிடுச்சு. தேவைப்படுறவங்களுக்கு உதவணும், அவ்வளவுதான் எங்களுக்கு. எங்களுக்கு ஒரு மகள் இருக்கா. ஆனாலும் எங்ககூட நாலு வருஷமா இருக்கிற மனநலம் பாதிப்படைந்த கார்த்திதான் எங்க முதல் குழந்தை. கொரோனா சமயத்துல இங்க தங்கியிருந்த பலர் அவங்க சொந்த ஊருக்குப் போய்ட்டாங்க. சிலர் அப்பப்போ தங்குறது உண்டு. கார்த்தி, இரண்டு ஆதரவற்ற முதியோர்தான் முழுநேரமா தாங்குறாங்க. அதிகப்படியான உணவு சில சமயம் கிடைச்சாலும். அக்கம் பக்கம் பசியில இருக்கவங்க நிறைய உண்டு இல்லையா, எதுவும் வீணாகாம அங்க போய்ச் சேர்ந்திடும்.எல்லோரும் எங்க குடும்பத்தினர்தான்” என்கிறார்.

வாஞ்சையோடு பாலனின் முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசுகிறார் ஸ்டெல்லா, ``என் குழந்தைக்கு அண்ணன், தாத்தான்னு இவ்ளோ பேர் சுத்தி இருக்கிறதுல சந்தோஷம். நீயெல்லாம் குழந்தை பெத்துக்க முடியுமா, உன்னால போய் மத்தவங்களுக்கு உதவ முடியுமான்னு நிறைய பேர் கேப்பாங்க. எல்லாத்துக்கும் பதில் நாங்க செயல்ல காட்டுறோம். இங்க அதனை பேர் இருந்தபோதும் எல்லோருக்கும் ஒரு ஆளா சமைச்சிடுவேன். அழகா ஆரோக்கியமா ஒரு குழந்தையும் பெத்துக்கிட்டேன். நான் பிரசவத்துக்கு ஆஸ்பத்திரியில இருந்தப்போ இவர்தான் அவ்வளவு அலைஞ்சு எல்லாரையும் பாத்துக்கிட்டாரு. காலைல எல்லோரையும் இங்க பாத்துட்டு, என்னைப் பாக்க ஆஸ்பத்திரி வருவாரு. குளிப்பாட்டி, டிரஸ் மாத்தி, கண்ணாடி ரூம்ல இருந்த குழந்தைகிட்ட கூட்டிட்டுப் போய்க் காட்டுவாரு. இப்படி இவ்வளவு அன்பா இருக்கிற ஒரு கணவர் அமைஞ்சது சந்தோஷம். முக்கியமா, நானோ, குழந்தையோ, இல்லத்துல இருக்கிறவங்களோ எல்லோரும் அவருக்கு ஒண்ணுதான். அப்படி அவர் சமமா பாக்குறதுதான் எனக்கு அவர்கிட்ட பிடிச்ச விஷயம்.”

வாழ்க்கை எல்லோருக்கும் சவால்களைக் கொடுக்கிறது. ஒரு சிலரே அதைச் சமாளித்து, சந்தோஷத்தைத் தனதாக்கிக் கொள்கிறார்கள் பாலன் - ஸ்டெல்லா தம்பதிபோல்.