Published:Updated:

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார்!

கிரீஷ் மாத்ரூபூதம்
பிரீமியம் ஸ்டோரி
கிரீஷ் மாத்ரூபூதம்

freshworks

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார்!

freshworks

Published:Updated:
கிரீஷ் மாத்ரூபூதம்
பிரீமியம் ஸ்டோரி
கிரீஷ் மாத்ரூபூதம்

‘சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு…
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு!’


‘ஹலோ... உங்க நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தைல முதல் நாளே அதன் முதலீட்டாளர்களுக்கு 32% லாபம் தந்திருக்கு. நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?’ என்ற ஒரு அமெரிக்க நிருபரின் கேள்விக்குத்தான் இந்தப் பாடலைப் பதிலாகத் தந்திருக்கிறார் கிரீஷ் மாத்ரூபூதம்.

யார் இந்த கிரீஷ்?

11 ஆண்டுகளுக்கு முன்னால் இவர் ‘ஸோஹோ’ (ZOHO) என்ற நிறுவனத்தின் துணைத்தலைவர். வீட்டுக்கடனுக்கான இ.எம்.ஐ-க்கும், குழந்தைகள் எதிர்காலப் படிப்புக்கும் நம்மிடம் இருக்கும் பணம் போதுமா என்ற குழப்பத்தையும் கொண்ட ஒரு சராசரி இளைஞர். இன்று அவர் சொத்து மதிப்பு, ரூ.2,500 கோடிக்கும் மேல் என்கிறார்கள். அவர் தொடங்கிய ஃப்ரெஷ்வொர்க்ஸின்(Freshworks) மதிப்பு 95,000 கோடிக்கும் மேல். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது சில கோடிகளும், நீங்கள் படிக்க நேரும்போது சில நூறு கோடிகளும் ஏறியிருக்கும்.

22 செப்டம்பர் 2021. இந்திய ஸ்டார்ட்அப் ஆர்வலர்களுக்கும், தமிழக இளைஞர்களுக்கும் முக்கியமானதொரு நாள். அன்றுதான் ஃப்ரெஷ்வொர்க்ஸ், அமெரிக்கப் பங்குச் சந்தையான ‘NASDAQ’-ல் தன் பங்குகளை அறிமுகம் செய்தது. 2.85 கோடி பங்குகளை விற்று ஏறத்தாழ 8,500 கோடி ரூபாயைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது ஃப்ரெஷ்வொர்க்ஸ். முதல் நாள் காலை அந்நிறுவனத்தின் பங்கு ஒன்று 36 டாலருக்கு வர்த்தமாகத் தொடங்கியது. மாலை முடியும்போது 47.55 டாலருக்கு விற்பனை ஆனது. அதாவது, ஒரே நாளில் அதன் முதலீட்டாளர்களுக்கு 32% லாபம். அதைத்தான் அந்த நிருபர் குறிப்பிட்டுக் கேட்டார். அதற்குத்தான் கிரீஷ், அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார்.

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார்!

கிரீஷ் சிகரத்தை அடைந்த கதையைத்தான் தொழில் உலகம் ஒரு வாரமாகப் பேசிக் கொண்டிருக்கிறது. அவர் சிங்கநடை போட்ட கதையை நாம் பார்க்கலாம்.

கிரீஷ், 2007-லிருந்து 2009 வரை அமெரிக்காவின் டெக்ஸாஸில் வேலை செய்துவந்தார். பின், இந்தியாவிற்குத் திரும்ப நேரிட்டபோது, அங்கு அவர் வாங்கிய பெரிய திரை கொண்ட தொலைக்காட்சியை எடுத்து வர விரும்பினார். அதற்கான கார்கோவில் டி.வி வந்தது; ஆனால் உடைந்துபோய் வந்தது. பிரேக்கிங் நியூஸ் சொல்ல வேண்டிய டி.வி-யே பிரேக் ஆகிவிட்டதென்ற நியூஸ் கிரீஷைக் கோபமடையச் செய்தது. அந்த கார்கோ நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். அவர்கள் சரியாகப் பதில் சொல்லவில்லை. பணமும் தரவில்லை. இந்த அநீதியைத் தட்டிக் கேட்டே ஆக வேண்டுமென நினைத்தார்.

அப்போது, RTI (Return to India) என்ற ஓர் இணையதள ஃபோரம் இருந்தது. இந்தியாவிற்குத் திரும்பும் மக்கள் ஒருவருக்கொருவர் கேள்விகளைக் கேட்டு பதில் சொல்லிக் கொள்ளும் களம் அது. அங்கே சென்று உடைந்த தொலைக்காட்சியின் படங்களையும், அந்நிறுவனத்தைத் தொடர்புகொள்ள அவர் பட்ட சிரமங்களையும், அவர்கள் சொன்ன அலட்சியமான பதில்களின் ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்தார். எல்லோரும் கிரீஷுக்கு ஆதரவாக கமெண்ட் செய்தனர். அந்தத் தளம்தான் அந்த கார்கோ நிறுவனத்துக்கு நிறைய வாடிக்கையாளர்களைத் தந்த இடம். அங்கே தன் பெயர் கெடுகிறது என்றதும் அதன் பிரசிடென்ட்டே களம் இறங்கி மன்னிப்பு கேட்டார். கிரீஷுக்கு நஷ்ட ஈடு தந்தார். நீதி வென்றது.

இந்தச் சம்பவத்தில் பணத்துடன் கிரீஷுக்கு இன்னொரு ஞானமும் கிடைத்தது. ‘ஏன் இந்த கஸ்டமர் ஹெல்ப் டெஸ்க்லாம் இவ்ளோ கேவலமா வச்சிருக்காங்க? நிறைய நல்ல மென்பொருள் இருக்கே?’ என்ற கேள்விதான் அந்த ஞானம். அவ்வப்போது பார்ட் டைமில் கிரீஷின் மூளை அதைப் பற்றி யோசித்தது.

ஒருநாள், இன்னொரு இணையதளத்தை மேய்ந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு முக்கியமான ஹெல்ப் டெஸ்க் சேவை தரும் மென்பொருள் நிறுவனம் ஒன்று அதன் விலையை 300 மடங்குவரை திடீரென விலை உயர்த்திய செய்தி இருந்தது. கமென்ட்டில் பலர் ‘இதெல்லாம் நியாயமாரே’ எனக் குரல் எழுப்பியிருந்தார்கள். ‘சரியான விலையில், சரியான சேவை தந்தால் இதற்கு உலக அளவில் நல்ல டிமாண்ட் இருக்கிறது’ என ‘மெகாமார்க்’ என்பவர் கமென்ட் செய்திருந்தார். ‘அது தன் முகத்தில் விழுந்த அறை’ என தன் பிளாக்கில் எழுதியிருக்கிறார் கிரீஷ். அதற்குக் காரணம் இருக்கிறது. கிரீஷ் அப்போது ஸோஹோவில் பிராடக்ட் டெவலப்மென்ட் வைஸ் பிரெஸிடென்ட். அதாவது, அவரால் மெக்மார்க் சொன்னது போல ஒரு ஹெல்ப் டெஸ்க்கை சரியான விலையில் உருவாக்கத் தெரியும்; அதற்குத் தேவை இருக்கிறதென்பது மெகாமார்க் சொல்வதற்கு முன்பே டி.வி உடைந்த விஷயத்தில் கிரீஷே உணர்ந்திருந்தார். இப்படியொரு வாய்ப்பு கண் முன் இருந்தும் அதைச் செய்யாமல் இருந்ததை கிரீஷ் விரும்பவில்லை. பார்ட் டைமில் யோசித்ததை ஃபுல் டைமாக யோசிக்கத் தொடங்கினார். அதற்கு செய்யும் வேலையை விட வேண்டுமே? இ.எம்.ஐ., குழந்தைகள் படிப்பு?

படிப்பைப் பற்றி அவர் யோசிக்கவும் ஒரு காரணமிருக்கிறது. கிரீஷின் அப்பா, திருச்சியில் ஒரு சாதாரண அரசு ஊழியர். அவரால் கிரீஷை இன்ஜினீயரிங் படிக்க வைக்க முடிந்தது. கிரீஷுக்கு எம்.பி.ஏ படிக்க விருப்பம். ஆனால், அவர் வாங்கிய மதிப்பெண்களுக்கு அவர் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. பணம் கட்டிச் சேரலாம் என்றபோது அவர் தந்தையால் பணம் தர முடியவில்லை. உறவினர்களிடம் கடன் வாங்கித்தான் படித்தார் கிரீஷ். எந்த அப்பாவும் தான் பட்ட சிரமத்தைத் தன் குழந்தைகள் படக்கூடாதென்றுதானே நினைப்பார்கள்? அதனால் தன் மகன்கள் படிப்புக்குப் பணம் தேவையென கிரீஷ் நினைத்தது சரியே. அதே சமயம், கிரீஷுக்குத் தன்மேல் நம்பிக்கையும் இருந்தது. தான் செய்யப்போகும் விஷயம் தன் குழந்தைகளுக்குக் கல்லூரியில் இடம் மட்டுமல்ல, விரும்பினால் கல்லூரியையே வாங்கித் தரும் வாய்ப்பு வழங்குமென உறுதியாக நம்பினார். உடனே களமிறங்கினார்.

தன் நீண்டகால நண்பர் ஷானிடம் இதுபற்றிப் பேசினார். கிரீஷ் மீது ஷானுக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவரும் கைகோக்க, வேலை துரிதமானது. அக்டோபர் 2010-ல் இருவரும் தங்கள் வேலையை விட்டனர். நாம் விடப்போகும் வேலையால் ஆயிரக்கணக்கானோருக்கு எதிர்காலத்தில் வேலை கிடைக்கப்போகிறது என்றும், அவர்கள் அனைவரும் தான் தரப்போகும் பங்குகளால் கோடீஸ்வரன் ஆகப்போகிறார்கள் என்பதும் அப்போது கிரீஷுக்குத் தெரியாது. ஆனால், உலகமே திரும்பிப் பார்க்கும் ஒன்றைச் செய்ய முயன்று பார்ப்போம் என்ற கனவு இருந்தது. அதற்கான பலன் 11 ஆண்டுகளில் கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார்!

கிரீஷின் பெற்றோர்கள் அவருக்கு 7 வயதிருக்கும்போதே பிரிந்துவிட்டார்கள். அதனாலே குடும்பம் என்ற ஒன்றின்மீது அவருக்கு ஏக்கம் அதிகமாக இருந்தது. குடும்பத்துக்காக எதையும் செய்வார் கிரீஷ். ஃப்ரெஷ்வொர்க்ஸின் பணியாளர்கள் அனைவரையும் தன் குடும்பமாகவே நினைக்கிறார் கிரீஷ். அவர் வளர்த்து வரும் நாயையும் அப்படித்தான் நினைக்கிறார். அதனால்தான் இந்த ஐ.பி.ஓ கொண்டாட்டத்தின் போது உலகம் பார்த்த கிரீஷின் குடும்பப் புகைப்படத்தில் கிரீஷ், அவர் மனைவி, இரண்டு மகன்களுடன் ‘நியோ’வும் சிரித்துக்கொண்டிருந்தது. நியோ, அவர் செல்ல நாய். உலக அரங்கில் தமிழ்க் குடும்பத்தைத் தலை நிமிரச் செய்த சிலரின் வரிசையில் கிரீஷ் பெயரும் சேர்ந்திருக்கிறது.

வெற்றிக்கான பொருள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பணம் மற்றும் புகழால் அதைக் கணக்கிடுவதை ஏற்க முடியாது. பெரிதாக ஒன்றை நினைத்தார்களா, தான் நினைத்ததைச் செய்து முடித்தார்களா என்பதுதான் முக்கியம்.

கிரீஷுக்கு ஃபுட்பாலும் ரஜினியும்தான் பொழுதுபோக்கு. ஆனால், அதைப் பொழுதுபோக்காக மட்டும் அவர் நினைக்கவில்லை. இரண்டிலும் அவ்வளவு விஷயங்கள் பெற்றதாகச் சொல்கிறார் கிரீஷ். இந்த ஐ.பி.ஓ விஷயத்துக்கும் ‘ஆப்ரேஷன் சூப்பர் ஸ்டார்’ என்றுதான் பெயரிட்டிருந்தார். அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தபின் சூப்பர் ஸ்டார் பாடலைச் சுட்டிக் காட்டினார் கிரீஷ். தன்னை மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் ஃபேன் என்பதில் பெருமை கொள்கிறார் கிரீஷ். ஆனால், ஸ்டார்ட்அப் கனவு காணும் இந்திய இளைஞர்களுக்கு கிரீஷே சூப்பர் ஸ்டார்!