Published:Updated:

“இந்த உலகத்துல, பொம்பளயாப் பிழைக்க முடியலயே!”

முத்து அண்ணாச்சி
பிரீமியம் ஸ்டோரி
முத்து அண்ணாச்சி

மகளை வளர்க்க ‘ஆணாக’ மாறிய அம்மா!

“இந்த உலகத்துல, பொம்பளயாப் பிழைக்க முடியலயே!”

மகளை வளர்க்க ‘ஆணாக’ மாறிய அம்மா!

Published:Updated:
முத்து அண்ணாச்சி
பிரீமியம் ஸ்டோரி
முத்து அண்ணாச்சி

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றானுக்கு அருகில் உள்ளது காட்டுநாயக்கன்பட்டி கிராமம். முத்து அண்ணாச்சி, முத்து மாஸ்டர், முத்து அண்ணன்... இப்படிச் சொன்னால், சின்னக் குழந்தைகூட அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. “வீட்டுக்கு வெள்ளை அடிக் கணும்னு சொன்னீயளே..? சப்போர்ட்டுக்கெல்லாம் ஆள் வேணாம், ஒரு ஏணிய மட்டும் ரெடி பண்ணிடுங்க வந்துடுறேன்’’ - கால் மேல் கால் போட்டுக் கொண்டு போனில் பேசிக் கொண்டிருந்த முத்து மாஸ்டர், “யாருப்பு நீங்க, என்ன விஷயம்...” என கணீர் குரலில், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டே வீட்டி லிருந்து வெளியே வந்தார்.

கழுத்தில் உத்திராட்சக் கொட்டை, வேட்டி, சட்டை, கையில் பீடிக்கட்டு டன் அவரைப் பார்த்தபோது ஆச் சர்யப்பட்டோம். “எம்மா... உன்னை பத்தி தெரிஞ்சுதான் வந்திருக்காக’’ என அவரின் மகள் சண்முக சுந்தரி சொல்ல, “அப்படியா… வீட்டுக்குள்ள வாங்க சார்வாள்” என வேட்டியை கீழே இறக்கிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார். சிறிய ஆஸ்பெஸ்டாஸ் வீடு. ‘`பழைய கட்டிலு, துருப்பிடிச்ச பீரோ, டேபிள் பேனு, பத்து பதினஞ்சு சமையல் பாத்திரம், 13 செட் வேஷ்டி, சட்டை, 8 கைலி... இதான் என் சொத்து’’ என்று சிரித்தவர், மோர் கொடுத்தார். துன்பம், திருப்பம், நெகிழ்ச்சி, நம்பிக்கை எனக் கலவையாகப் பயணித்த அவர் கதையைக் கேட்டுமுடித்தபோது, ஒரு கனமான திரைப் படம் பார்த்த உணர்வு.

 பணியின்போது...
பணியின்போது...

16-வது நாளு இறந்துட்டாரு!

‘`என் உண்மையான பேரு பேச்சியம்மாள். செக்காரக்குடி பக்கத்துல உள்ள சொக்கலிங்க புரம்தான் என் சொந்த ஊரு. கல்யாணம் முடிச்சதும் அங்கதான். பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் போகல. எனக்கு இருவது வயசுல கல்யாணமாச்சு. என் வீட்டுக்காரர் பேரு சிவா. முதல் வாரம் பேசி முடிச்சு, மறு வாரம் வீட்டுல விளக்கு முன்னால தாலி கெட்டி விட்டுட்டாக. அவரு லாரி டிரைவரு. கல்யாணமாகி 15 நாளு தான் வாழ்ந்தேன். 16-வது நாள்ல மாரடைப்பு வந்து இறந்துட்டாரு. அப்போ அவருக்கு 27 வயசுதான். ‘நீ ராசியில்லாதவ, என் புள்ளைய மேல அனுப்பிட்டியே’ன்னு கணவர் வீட்டுல பேசுனாக. நான் கொண்டு போன டிரெங்கு பெட்டியை தூக்கிட்டு, எங்கப்பா வீட்டுக்கு வந்துட்டேன். ‘கயித்துல மஞ்சள்கூடக் குறை யல, தாலியறுத்துட்டு வந்து நிக்கா பாரு’ ஊரு, உறவு ஏசுனாக. ஆனா, எங்கம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, தம்பிங்க எல்லாம் அரவணைச் சுக்கிட்டாக.

ரெண்டாவது மாசத்துலதான் தெரிஞ்சது!

‘`ரெண்டாவது மாசத்துலதான், நான் உண்டாயிருந்தது எனக்குத் தெரிஞ்சது. நான் சந்தோஷப்பட்டதை பார்த்த ஊரு பொம் பளைங்க சிலர், ‘புருசன்கூட 15 நாளு நடத்தின வாழ்க்கைக்கு ஒரு புள்ள வேற தேவையா? அதை எப்படி வளப்ப? கருவைக் கலைச்சுட்டு வேற கல்யாணத்தை செஞ்சுக்கோ. ஆம்பள துணையில்லாம உன்னால வாழ முடியுமாடி’னு சொன்னாக. ஆனா, நான் புள்ளையைப் பெத்துக்குறதுல உறுதியா இருந்தேன். பொம்பளப் புள்ள பொறந்துச்சு. சண்முகசுந்தரின்னு பேரு வச்சேன். ஏழாவது மாசத்துல, புள்ளைய என் மூத்த அக்காக்கிட்ட பார்த்துக்கச் சொல்லிக் கொடுத்துட்டு, வேலைக்குக் கிளம்பினேன்.

நடுராத்தியில துரத்தின லாரி!

‘புருசன் செத்து ஒரு வருசம் முடியல, அதுக்குள்ள கிளம்பிட்டா’னு பேசுன ஊரு சனமா எனக்கும் புள்ளைக்கும் கஞ்சு ஊத்தப் போகுதுனு நான் எதையும் கண்டுக்கல. எங்க ஊருல இருந்து, தூத்துக்குடி, மடத்தூர் பைபாஸுல இருந்த அடுப்புக்கரி அரைக்கிற ஒரு கம்பெனிக்கு ஆளுக போவாக. அவுககூட கரி அள்ளிப்போடுற வேலைக்குப் போனேன். ‘ஒரு சிப்டுக்குன்னு வேலைக்கு கூப்புட முடியாது, மூணு சிப்டுக்கும் வேலைக்கு வர சம்மதம்னா வாம்மா’னு மேனேஜர் சொல்ல, சரின்னுட்டேன். நாலு வருசம் வேலை பார்த்தேன். ஒரு நாள் ராத்திரி 10 மணி சிப்டுக்கு தனியா நடந்து வந்துக்கிட்டிருந்தப்போ, லாரிக்காரன் ஒருத்தன் ‘வர்றியா?’னு கேட்டு பின்னாடியே வர, பக்கத்துல இருந்த ஒரு வொர்க்‌ஷாப்புக்குள்ள ஓடிப் போனேன். அங்க இருந்த தம்பிகிட்ட விஷயத்தை சொல்ல, பக்கத்துல இருந்த வொர்க்‌ஷாப்காரங்க எல்லாரும் சேர்ந்து அந்த டிரைவரை விரட்டி னாக. ராத்திரி சிப்டுல என்னால பாதுகாப்பா வேலைபார்க்க முடியாதுனு நினைச்சப்போ, அழுகையா வந்துச்சு.

 சண்முக சுந்தரி
சண்முக சுந்தரி

சேலைய கடல்ல விட்டேன், வேட்டியக் கட்டுனேன்!

ஒரு பொம்பளையா இந்த உலகத்துல கூலி வேலைக்குக்கூட போக முடியல, இனிமேலு நம்ம சேலை கட்டக்கூடாதுனு நினைச்சேன். ராத்திரியே, எங்கவூரு அக்காட்ட ஐநூறு ரூவாக் கடனா வாங்குனேன். ஒரு நாள் லீவு சொல்லிட்டு, திருச்செந்தூருக்கு பஸ் ஏறுனேன். கோயில் வாசல்ல இறங்குனதும் கழுத்து வச்ச பனியனு, வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி, உத்திராட்சக் கயிறு வாங்குனேன். மொட்டையப் போட்டேன். கடல்ல குளிச் சிட்டு, சேலையை அலையோட விட்டுட்டேன். வேட்டி, சட்டை போட்டுக்கிட்டேன். திருச்செந்தூர்ல இருந்து தூத்துக்குடிக்குப் பஸ்ஸு ஏறுனப்போ, ஆம்பளைக பக்கத்துல தைரியமா உட்கார்ந்து வந்தேன். வீட்டுக்கு வந்ததும் எல்லாரும், ‘இப்படி பண்ணிட்டு வந்து நிக்கியேட்டி பாவத்தி மவளே?’னு ஏசுனாக.

கரி கம்பெனி வேலை வேணாம், இனி ஆம்பளைக பாக்குற வேலையத்தான் பாக் கணும்னு முடிவெடுத்தேன். டீ ஆத்தக் கத்துக் கிட்டு டீ மாஸ்டர் ஆனேன். அப்படியே புரோட்டா மாஸ்டர் ஆனேன். மண்ணு சுமக் குறது, சிமென்ட் மூட்டை தூக்குறது, வெள்ளை அடிக்கிறதுன்னு எல்லா வேலையும் பழகு னேன். ஒரு நாளு ஒருத்தர், ‘மாஸ்டர் ஒரு பீடி குடுங்க’ன்னு கேட்டார். ‘பழக்கம் இல்லியே அண்ணாச்சி’னு சொன்னப்போ, ‘மாஸ்டரா இருந்துக்கிட்டு பீடி இழுக்குற பழக்கம் இல்லேன்னு சொல்லுறது நம்புற மாதிரியா இருக்கு?’னு கேட்டார். பீடி இழுத்தா, ஆம் பளைனு எல்லாரும் முழுசா நம்பிடுவாகனு, ஒரு பீடி வாங்கி பத்தவெச்சேன். இழுக்கத் தெரியல. பக்கத்துல இருந்த ஒரு தாத்தா பீடி குடிச்சதைப் பார்த்து அதே மாதிரி பண்ணு னேன். மூணு நாளுக்கு தொண்டைக் கரகரப்புத் தாங்கல. அதுக்குப் பொறவு பழகிடுச்சு.

‘முத்து மாஸ்டர்’ உசுரே போனாலும் சேலைகட்ட மாட்டாரு!

காட்டுநாயக்கன்பட்டிகாரரு ஒருத்தர் சென்னையில வெச்சிருந்த ஹோட்டல்ல டீ மாஸ்டர் வேலைக்குப் போனேன். அவகதான் எனக்கு ‘முத்து மாஸ்டர்’னு பேரு வெச்சாக. ஆதார் அட்டைக்கு போட்டோ பிடிக்கப் போனப்போ, ‘ஐயா, நான் பொம்பள. பெண்ணுன்னு போடுங்க’ன்னு சொன்னேன். `சேலை கட்டினாத்தான் பெண்ணுன்னு போட முடியும்'னு சொன்னாக. ‘உசுரே போனாலும் சேலை கட்டமாட்டேன், ஆம்பளண்ணே போடுங்க’னு காலரைத் தூக்கி விட்டுட்டு நின்னேன்.

“இந்த உலகத்துல, பொம்பளயாப் பிழைக்க முடியலயே!”

மககிட்ட வாங்கியிருக்குற சத்தியம்!

ஒத்த மனுஷியானு சொல்லமாட்டேன், ஒத்த மனுஷனா இருந்து என் மகளை நல்லபடியா வளத்து ஆளாக்கிட்டேன். பொழப்புக்காக இந்த ஊருக்கு வந்து 20 வருஷங்களாச்சு. இப்போ எனக்கு வயசு 57. வேட்டி, சட்டை கட்ட ஆரம்பிச்ச இந்த 36 வருசத்துல, இதுவரை யாரும் என்னைப் பொம்பளன்னு கண்டுபிடிச்சதே இல்ல. டவுன் பஸ்ஸுல பெண்களுக்கு இலவசம்னு முதல்வர் ஐயா சொல்லிருக்காக. ஆனா, நான் டிக்கெட் எடுத்துத்தான் பஸ்ஸுல போறேன். ஊருல எல்லாருமே என்னை மாஸ்டர், அண்ணாச்சின்னுதான் கூப்புடுவாக. என் பேரன் மட்டும்தான் என்னை ஆச்சின்னு கூப்புடுவான். ஆனா அவனும்கூட வெளியில வெச்சு தாத்தான்னு கூப்புடுவான். என் மகளும் அம்மான்னு கூப்பிடுறதை விட அப்பா, மாஸ்டர்ன்னுதான் கூப்பிடுவா. பொம்பளையாப் பொறந்தாலும் ஆம்பளையா தான் வாழ்ந்திருக்கேன். உயிரில்லாத உடம்பா நான் சுடுகாட்டுக்குப் போகும்போது, ‘உன்னை வளக்குறதுக்காகத்தான் அவ ஆம்பளையா வாழ்ந்தா, இப்போவாச்சும் அவளுக்கு சேலையை போட்டுவிடு’னு யாராவது சொன் னாலும், நீ கேக்காத. எனக்குப் பாதுகாப்பு கொடுத்த இதே வேட்டி, சட்டையிலதான் என்னை அனுப்பணும்’னு என் மககிட்ட சத்தியம் வாங்கியிருக்கேன்...” - திரளும் கண்ணீரை சுண்டிவிட்டபடி, கெத்தாக காலரை தூக்கிவிடுகிறார் முத்து மாஸ்டர்.

நமக்கோ... மனது ரொம்பவே வலித்தது. ஆம், ஒரு பெண், தன் வாழ்க்கையை தனித்து வாழவேண்டுமென்றால்கூட, ஆண் வேஷம் கட்டினால்தான் உண்டு என்கிற அளவுக்கு இந்த சமூகத்தில் இன்னமும் ஆணாதிக்கம் புரையோடிப் போய்க்கிடக்கும் நிலையை நினைக்கும்போது வலிக்காமல் என்ன செய்யும்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism