Published:Updated:

பார்வை நீ... பாதை நான்!

ரமேஷ் - சரோஜாதேவி
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ் - சரோஜாதேவி

பிறக்கும்போது பார்வையில்லாமப் பிறந்துட்டா பிரச்னையில்லை... படிப்படியா வெளிச்சம் பறிபோறது ரொம்பவே துயரம்.

பார்வை நீ... பாதை நான்!

பிறக்கும்போது பார்வையில்லாமப் பிறந்துட்டா பிரச்னையில்லை... படிப்படியா வெளிச்சம் பறிபோறது ரொம்பவே துயரம்.

Published:Updated:
ரமேஷ் - சரோஜாதேவி
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ் - சரோஜாதேவி

“தர்மபுரி பக்கத்துல ஒரு குக்கிராமத்துல பிறந்த பார்வையில்லாத ஒருத்தனுக்கு என்ன வாய்ப்புகள் அமைஞ்சிடும், இருட்டும் விரக்தியும் தவிர. அந்தச் சூழல்ல இருந்து விடுபட்டு அடையாளம் தெரியிறமாதிரி வாழணும்னு ஆசைப்பட்டேன். மாணவியா அறிமுகமான சரோஜாதேவி என் வாழ்க்கை முழுவதும் வெளிச்சமா வந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு... காதல்ங்கிறதும் இல்லறம்ங்கிறதும் என்னளவுல வழிகாட்டுற வெளிச்சம்” - மு.ரமேஷின் வார்த்தைகள் பூடகமான கவிதையைப் போலிருக்கின்றன.

நந்தனம் அரசுக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் ரமேஷ், சங்க இலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர். கவிதை, சிறுகதை, ஆய்வு என எழுத்தின் சகல துறைகளிலும் அழுந்தத் தடம் பதித்தவர். 12 நூல்கள் எழுதியிருக்கிறார். செவ்விலக்கியங்களில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைத் தேடியெடுத்துப் பதிவுசெய்வதைக் களமாகக் கொண்ட ரமேஷ், பார்வைச்சவால் கொண்டவர். அவரின் காதல் மனைவி சரோஜாதேவி, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக இருக்கிறார்.

பார்வை நீ... பாதை நான்!

“பிறக்கும்போது பார்வையில்லாமப் பிறந்துட்டா பிரச்னையில்லை... படிப்படியா வெளிச்சம் பறிபோறது ரொம்பவே துயரம். இன்னும் கொஞ்ச நாள்ல இப்போ ஒட்டியிருக்கிற குறைபார்வையும் போயிடும்ங்கிறதை ஜீரணிக்கிறதுக்குள்ள, தம்பிக்கும் பார்வையில்லைங்கிற இடி குடும்பத்தைத் தாக்குச்சு. கிராமப்புறங்கள்ல பார்வையில்லா தவங்களை இளக்காரமாவும் பயன்படாத மனிதர்களாவும்தான் பார்ப்பாங்க. குடும்பத்திலயும் சரி, வெளியிலயும் சரி, அனுதாபம் தேடுறதை விரும்பாதவன் நான். எப்படியாவது இது எல்லாத்தையும் கடந்து மேல வந்திடணும்னு விரும்பினேன். பள்ளிக்காலங்கள்ல கொஞ்சமா பார்வையிருந்துச்சு. நிழல்மாதிரி உருவங்களை உணரமுடியும். பிளஸ் டூ முடிக்கிறதுக்குள்ள மொத்தமும் இருள் சூழ்ந்திடுச்சு.

பிளஸ் டூ வரைக்கும் தட்டுத்தடுமாறிப் படிச்சு, ஒரு டெலிபோன் ஆபரேட்டராகிட்டா யாரையும் எதிர்பார்க்காம வாழ்ந்திடலாம்னு இலக்கு வச்சுப் படிச்சேன். மதுரையில இருந்த இந்திய பார்வையற்றோர் சங்கம், பார்வைச்சவால் கொண்டவங்களுக்குத் தொழிற்பயிற்சி கொடுக்கிறாங்க. பிளஸ் டூ முடிச்சதும் அங்கே டெலிபோன் ஆபரேட்டர் பயிற்சியில சேர்ந்துட்டேன்.

அது வேற மாதிரி உலகம். கூட இருக்கிற எல்லோரும் ஏதோவொரு வகையில சாதனையாளர்கள். தடைகளைக் கடந்து ஜெயிச்சவங்க. கூட பயிற்சி எடுத்துக்கிட்ட சுப்பையாங்கற நண்பர், ‘நீ நல்லாப் படிக்கணும்... அப்போதான் நாலு பேரு மதிப்பாங்க’ன்னு ஊக்கப்படுத்தினார். கொஞ்சம் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கணும்ங்கிறதுக்காக கிடைச்ச நேரத்துல பினாயில், ஊதுவத்தி விற்பேன். கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்துக்கிட்டு மயிலம் தமிழ்க்கல்லூரியில சேர்ந்தேன். அந்தக் கல்லூரியோட 63 ஆண்டுக்கால வரலாற்றுல முதல் பார்வையற்ற மாணவன் நான். என் பிரச்னையைப் புரிஞ்சுக்கிட்டு எல்லாப் பேராசிரியர்களும் அரவணைச்சுக்கிட்டாங்க.

நிறைய நண்பர்கள்... எந்தச்சூழல்லயும் விட்டுக்கொடுக்காம கைபிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. பாடப்புத்தகங்களை மட்டுமல்லாம ஓஷோ, சுந்தர ராமசாமி, ரமேஷ்-பிரேம்னு கலவையான புத்தகங்களையும் எனக்காக வாசிப்பாங்க. ஒரு கட்டத்துல வாசிப்பு ஆர்வம் அதிகமாச்சு. கல்லூரிக் காலத்துலயே கவிதைகள் எழுதத் தொடங்கிட்டேன். தொகுப்புகளும் கொண்டு வந்தேன். முதுகலை மொழியியல் படிச்சேன். கவிதையியல் மறுவாசிப்புங்கிற தலைப்புல எம்.பில் செஞ்சேன்.

ரமேஷ்-பிரேம் எழுத்து, வாழ்க்கை பற்றின என் மதிப்பீடுகளையெல்லாம் சுக்குநூறா உடைச்சுப் போட்டுச்சு. ஒவ்வொரு வரியும் வேற வேற படிப்பினைகளைக் கொடுத்துக்கிட்டே இருக்கும். பிரேம் சாருக்குப் போன் பண்ணி, ‘அய்யா உங்க வழிகாட்டுதல்ல பிஹெச்.டி பண்ணணும்னு ஆசை’ன்னு சொன்னேன். வாப்பான்னு கூப்பிட்டுக்கிட்டார். கூடவே வச்சிருந்து வழிகாட்டினார். அந்தக் காலகட்டத்துலதான் சரோஜாதேவி எனக்கு அறிமுகமானாங்க...” இடைநிறுத்தாமல் பேசுகிறார் மு.ர.

கணவர் எழுதிய புத்தகங்களைக் கீழே பரப்பிப் பெருமிதமாகப் பார்த்துக்கொண்டிருக்கிற சரோஜாதேவி புன்முறுவலோடு பேசுகிறார்.

“வந்தவாசி பக்கத்துல அத்திப்பாக்கம்தான் எங்க ஊர். குடும்பத்துல படிக்கணும்னு ஆசைப்பட்டவ நான் மட்டும்தான். ஆனா, ஊர்கடந்து போய் படிக்கவோ, வழிகாட்டவோ யாருமில்லை. எப்படியோ இளங்கலை வரைக்கும் வந்தேன். ரொம்பவே விரக்தியா இருக்கும். சக்திவேல்னு ஒரு நண்பர், மு.ர எழுதின கவிதைத்தொகுப்பைக் கையில தந்து, ‘இவருக்குப் பார்வையில்லை... ஆனாலும் பிஹெச்.டி படிக்கிறார். முயற்சி பண்ணாம சும்மா ஊருக்குள்ளயேயிருந்து புலம்பிக்கிட்டிருக்கியே’ன்னு சொன்னார். தொகுப்பைப் படிச்சுட்டு இவர்கிட்ட பேசினேன். அந்தப் பதினைஞ்சு நிமிஷப் பேச்சு எனக்குள்ள இருந்த எல்லா சோர்வையும் விரட்டுச்சு.

பார்வை நீ... பாதை நான்!

இந்தந்தப் புத்தகத்தையெல்லாம் படிங்கன்னு சொன்னார். தேடிப்பிடிச்சுப் படிச்சேன். அவர் வழிகாட்டுதல்படி எம்.ஏ சேர்ந்தேன். எங்க வீட்டுக்கு வந்து பேசி எம்.பில் படிக்க சம்மதம் வாங்கினார். அவர்கூட இருக்கிற நேரம், அவர்கிட்ட பேசுற நேரம், வாழ்க்கையில எதுவுமே கடினமில்லைங்கிற எண்ணம் வரும்... இவர் எல்லா நேரமும் கூடவே இருந்தா நல்லாருக்குமேன்னு தோணும். ஆனாலும் சொல்லத் தயக்கம். அவரே ஒருநாள் போன் பண்ணி, ‘நாம திருமணம் பண்ணிக்கலாமா’ன்னு கேட்டார். ‘தாராளமா பண்ணிக்கலாமே’ன்னு சொல்லிட்டேன். ஆனாலும் அது அவ்வளவு எளிதா கைகூடலே...

அந்தத் தருணத்துல அவருக்கு உதவிப் பேராசிரியர் வேலைகூட கிடைச்சிருச்சு. ஆனாலும் எங்க வீட்டுல எங்க முடிவை ஏத்துக்கலை. யார் என்ன சொன்னாலும் அவருதான் எதிர்காலம்னு முடிவு பண்ணிட்டேன். ஆனாலும் பெத்தவங்களை அழவச்சுட்டு திருமணம் பண்ணிக்க வேணாம்னு முடிவு செஞ்சோம். மு.ர-வோட பெற்றோர் நாலைஞ்சு முறை வந்து பேசினாங்க. எங்க வீட்டுல பிடிகொடுக்கமாட்டாங்க. ஒவ்வொருமுறையும் வருத்தத்தோட திரும்புவாங்க. நீங்க மனசு மாறுற வரைக்கும் காத்திருக்கேன்னு இருந்துட்டேன். கடைசியில் என் போராட்டத்தில் ஜெயிச்சேன்.

மு.ர என்னை பிஹெச்.டி படிக்க வச்சார். ஒரு ஆசிரியரா என்னை வடிவமைச்சிருக்கார். எனக்கு மட்டுமல்ல... நிறைய மாணவர்களுக்கு அவர் வெளிச்சமா இருக்கார்...” கண்கள் அரும்புகின்றன சரோஜாதேவிக்கு. அதை வார்த்தைகளில் உணர்ந்து மனைவியின் கரம் பற்றிக்கொள்கிறார் மு.ர.

அருகில் அமர்ந்து அம்மா, அப்பாவின் உரையாடல்களை அவ்வளவு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் மூன்றாம் வகுப்பு படிக்கும் அம்சிறையனும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் அறம்பொழிலனும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism