சினிமா
Published:Updated:

இரவுக்காவலரின் கனவு நிறைவேறியது!

ரஞ்சித் ராமசந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரஞ்சித் ராமசந்திரன்

ஓவியம்: ராஜா

கதைகளுக்குப் பெரும்பலம் உண்டு, அதுவும் அனுபவக் கதைகள் நம்மை ஊடுருவி ஆட்கொள்ளும் சக்தி படைத்தவை. கதைகள் நம்மைச் சிரிக்க வைக்கும், அழ வைக்கும், ஆறுதல் தரும், ஊக்கப்படுத்தும். கதை நாயகர்கள் அவர்களின் தடைகளை உடைப்பதைக் காண, தைரியம் பிறக்கும்; அவர்களின் வெற்றி நம்பிக்கை கொடுக்கும். அசாதாரணச் சூழல்களில் இருந்துகொண்டு பெருங் கனவுகள் காணும் அனைவர்க்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு கதையின் நாயகன் ரஞ்சித் ராமசந்திரன். சிறு குடிசையில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, இரவுக் காவலராகப் பணியாற்றி, மொழி தெரியாத ஊரிலே மிரண்டு, முனைவர் பட்டம் முடித்து, இன்று ராஞ்சியில் மத்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐஐம்) துணைப்பேராசிரியராக தன் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இரவுக்காவலரின் கனவு நிறைவேறியது!

தார்ப்பாய் போர்த்தப்பட்ட சிறு குடிசையின் புகைப்படத்துடன், ‘ஒரு ஐஐஎம் பேராசிரியர் பிறந்த வீடு இதுதான்...’ எனத் தொடங்கிய அவரது முகநூல் பதிவு ஓர் இரவில் வைரல் ஆனது. கேரள வருவாய்த் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் தொடங்கி பலர் அவரது வெற்றியைக் கொண்டாடிவருகின்றனர்.

நம்முடைய வாழ்த்துகளையும் சொல்லி அவரிடம் பேசினோம். ”என் வாழ்க்கை அனுபவம் இருவருக்காவது எடுத்துக்காட்டாக வேண்டும் என நினைத்தேன். ஆனால் ஒரே இரவில் ஆயிரக்கணக்கானோர் என்னைப் பற்றிப் பேசுவார்கள் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவன் நான். அப்பா தையல்காரர். அரசுப் பள்ளியில் படித்ததால், குடும்பக்கஷ்டம் கல்விக்குத் தடையாக இல்லை. என் ஆசிரியர்கள் என்மீது ஏற்படுத்திய தாக்கம் அதிகம், சிறு வயதிலிருந்தே ஆசிரியர் பணிதான் என் கனவு. கல்லூரிப் படிப்பிற்குத்தான் பொருளாதாரம் தடையாய் நின்றது. பன்னிரண்டாவது தேர்வில் ஓரளவு மதிப்பெண் பெற்ற போதும் படிப்பைத் தொடர முடியாத சூழல்.

அப்போதுதான் தொலைபேசி அலுவலகத்தில் இரவுக் காவலராக வேலை கிடைத்தது. அந்த வருமானம் என் படிப்பிற்குப் பயன்பட்டது. அங்கிருந்தபடியே இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் முடித்தேன். உடன் பணியாற்றிய சூப்பர்வைசர், என் ஆசிரியர்கள், பெற்றோர் அனைவரும் துணை நின்றார்கள். எல்லா வகையிலும் எனக்கு உதவி செய்தார்கள்” என்கிறார்.

இத்தனை ஆண்டுகளில் அவர் சந்தித்த சவால்களைப் பற்றிப் பேசியவர், “இரவில் வேலை, பகலில் படிப்பு என சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. அதுவும் மழைக்காலங்களில் என்ஜின் டியூட்டி அதிகம் இருக்கும். சற்று இளைப்பாறக்கூட முடியாது. முதுகலைப் படிப்பின் போது நீண்ட தூரம் பயணம் செய்யவும் வேண்டியிருந்தது. என் கனவுகள் மட்டுமே அந்தச் சோர்வை நீக்கின. வேலை, படிப்பு என இதே சூழலில்தான் 5 ஆண்டுகளுக்கு, என் 24 மணி நேரமும் இருந்தது. பின்னர்தான் முனைவர் பட்டம் ஆராய்ச்சியில் ஈடுபாடு வந்தது. சென்னை வந்து சேர்ந்தேன். IIT-ல் இணைந்தேன். அது ஒரு தனி உலகம். பிரமாண்ட உலகம். அவ்வளவு கூட்டத்திலும் தனித்து விடப்பட்டதுபோல உணர்வு, எனக்குக் காசர்கோட்டைத் தாண்டி எதுவும் தெரியாது. மலையாளம் தவிர எதுவும் புரியாது. புதிய இடம், தெரியாத மொழி. நான் தோல்வியை ஒப்புக்கொண்டு பலமுறை திரும்பிவிடலாம் என எண்ணியிருக்கிறேன். ஆனால் என் வழிகாட்டி பேராசிரியர் சுபாஷ் என்னை ஊக்கப்படுத்தினார். மேலும் உழைக்கத் தூண்டினார். அப்படித்தான் முனைவர் பட்டம் பெற்றேன்” என்கிறார்.

இரவுக்காவலரின் கனவு நிறைவேறியது!

அந்நிய நேரடி முதலீடு பற்றி முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்திருக்கும் ரஞ்சித்திடம் IIM வேலை பற்றியும், வைரல் பதிவு பற்றியும் கேட்டோம். “என் உடன்பயின்ற இருவர் IIT , IIM எனப் பணியில் சேர்ந்தார்கள். அவர்களைப் பார்த்துதான் எனக்கும் IIM போன்ற ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அதற்காக என்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள நிறைய உழைத்தேன். IIM பணிக்கான தேர்வுகளில் நான் அந்த நம்பிக்கையில்தான் கலந்துகொண்டேன். எல்லோரும் தான் கனவு காண்கிறோம், ஆனால் எல்லோராலும், எல்லாச் சமயங்களிலும் அதை எட்டிப் பிடிக்க முடிவதில்லை. வேலை கிடைத்ததும் இத்தனை தடைகளையும் தாண்டி என் கனவை நான் அடைந்த திருப்தியும் பெருமிதமும் எனக்கு இருந்தது. என் நண்பர்தான் ‘உன் பயணம் பிறருக்குப் பயன்படும். அதை ஒரு பதிவாக எழுது’ என்று சொன்னார். அது இவ்வளவு பேரைச் சென்றடைந்ததில் மகிழ்ச்சி” என்கிறார்.

கனவுகளும் கதைகளும் இந்த உலகை மாற்றும் சக்தி கொண்டவை. ரஞ்சித்திடம் இரண்டும் இருக்கின்றன.