Published:Updated:

பகலில் சொந்தத் தொழில்... இரவில் இலவச டியூஷன்! - கிராமத்துக்கே ‘வெளிச்சம்’ காட்டும் ஓர் ஆதர்ஷதம்பதி

தாஹிர் அகமது, சைனாஸ் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
தாஹிர் அகமது, சைனாஸ் தம்பதி

#Motivation

பகலில் சொந்தத் தொழில்... இரவில் இலவச டியூஷன்! - கிராமத்துக்கே ‘வெளிச்சம்’ காட்டும் ஓர் ஆதர்ஷதம்பதி

#Motivation

Published:Updated:
தாஹிர் அகமது, சைனாஸ் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
தாஹிர் அகமது, சைனாஸ் தம்பதி

``இந்த 136 பசங்களும் எங்க பசங்கதான். இவங்க எல்லாரையும் வெற்றியாளர்களா உருவாக்கணும்’’ என்று அன்பும் அக்கறையுமாகச் சொல்கிறார்கள் தாஹிர் அகமது, சைனாஸ் தம்பதி. தங்கள் கிராமத்து மாணவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் விளையாட்டுப் பயிற்சி கொடுத்து வரும் நம்பிக்கை மனிதர்கள். விழுப்புரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பில்லூர் கிராமத்தில் சந்தித்தோம், இந்த இளம் ஜோடியை.

‘`நானும் மனைவியும் செவிலியர் மற்றும் லேப் டெக்னீஷியன் படிப்பு முடிச்சுட்டு, ரெண்டு பேருமே கோடம்பாக்கத்தில் இருக்கிற ஒரு தனியார் மருத்துவமனையில வேலை செஞ்சுகிட்டு வந்தோம். எனக்கு 20,000 ரூபாய் சம்பளம், மனைவிக்கு 18,000 ரூபாய் சம்பளம். ஆனாலும், வயசான என் அப்பா, அம்மா வுடன் இருக்கலாம்னு 2018-ல் சொந்த ஊரான பில்லூருக்கு வந்துட்டோம். விழுப்புரத்தில் ரத்தப் பரிசோதனை நிலையம் ஆரம்பிச்சோம். என் மனைவிக்கு டீச்சிங்கில் ரொம்ப விருப்பம் என்பதால அப்பப்போ பக்கத்து வீட்டுப் பசங்களுக்கு பாடம் எடுப்பாங்க. அப்படியே இன்னும் கொஞ்சம் பசங்களும் வந்து ‘சொல்லிக்கொடுங்க மிஸ்’னு கேட்க, அவங்க ரொம்ப உற்சாகமா யிட்டாங்க. பார்த்தா... பத்தே நாள்ல 50 பசங்க வந்து சேர்ந்துட்டாங்க. எல்லாருக்கும் என் மனைவி இலவசமா டியூஷன் எடுக்க ஆரம்பிச் சாங்க.

தாஹிர் அகமது, சைனாஸ் தம்பதி.
தாஹிர் அகமது, சைனாஸ் தம்பதி.

ஒரு கட்டத்துல, நானும் என் மனைவி யுடன் சேர்ந்து பசங்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பிச்சுட்டேன். காலையில லேப்க்கு போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் ரெண்டு பேரும் டியூஷனை ஆரம்பிச்சிடுவோம். இப்போ நூற்றுக்கும் மேற்பட்ட பசங்க படிக்கிறதால, ஆறு நண்பர்கள் எங்க கூட இணைந்து வகுப்பெடுக் கிறாங்க. ‘வெளிச்சம் பாடசாலை’னு எங்க டியூஷன் சென்டருக்குப் பேரு வெச்சிருக் கோம். ஏதாவது சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் நடத்தும்போது காவல்துறையினரும் உதவி செய்வாங்க’’ என்று ஒரு புள்ளி கோலமான கதை சொன்னார் தாஹிர் அகமது.

‘`கல்வி தவிரவும் எங்க பிள்ளைங்களோட பிற திறன்களை வளர்க்கணும்னு தோணுச்சு’’ என்று இரண்டாவது அத்தி யாயம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார் சைனாஸ்.

‘`விழுப்புரத்தில் பெண்கள் கபடி அணி, உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தது. நாங்க கபடி அசோசியேஷனுக்குப் போய் பேசினோம். அணிக்கு நாங்க வீராங்கனை களை உருவாக்கித் தர்றதா சொன்னோம். இன்னொரு பக்கம், ‘பொம்பளப் புள்ளைக்கு ஏதாச்சும் அடிபட்டுட்டா எப்படி கட்டிக் கொடுக்குறது’னு சிறுமிகளை இந்த விளை யாட்டுக்கு அனுப்ப பெற்றோர்கள்கிட்ட மனத்தடை இருக்க, அவங்ககிட்டயும் பேசினோம். எங்க பிள்ளைங்களுக்கு நம்பிக்கை கொடுத்து, பெண்கள் மற்றும் ஆண்கள் கபடி அணிகளை உருவாக்கி கடந்த ஒரு வருஷமா பயிற்சி கொடுத்துகிட்டு வர்றோம். அதுக்காகவே பானாம்பட்டை யைச் சேர்ந்த மூன்று நண்பர்களிடம் என் கணவர் கபடி கத்துக்கிட்டு, இப்போ மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்’’ என்று ஆச்சர்யப்படுத்தினார்.

ஆண் பிள்ளைகள் கபடி அணிக்கு ‘வேலுப்பிள்ளை அணி’ என்றும், பெண் பிள்ளைகள் கபடி அணிக்கு ‘செங்காந்தள் அணி’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள் தாஹிர், சைனாஸ் தம்பதி.

‘`இந்தப் பிள்ளைகள் எல் லாம் மிகவும் பின்தங்கிய குடும்பத்துப் பிள்ளைகள் என்பதால, எங்க நண்பர்கள், உறவினர்கள்கிட்ட முட்டை, இறைச்சி, பேரீச்சம்பழம், மூக்கடலை (கொண்டைக் கடலை) போன்ற உணவுப் பொருள்களை இவங்களுக்கு வாங்கிக் கொடுக்கும்படி கேட்போம். அவங்களால முடியும்போதெல்லாம் உதவி செய்வாங்க. மற்ற நேரங்கள்ல நாங்க பார்த்துக்குவோம். வெளியிலிருந்து இதுவரை யார்கிட்டயும் உதவி பெற்ற தில்ல. ‘முதல்ல இதை ஓர் அமைப்பா பதிவு பண் ணுங்க...’னு சில நண்பர்கள் சொன்னதால, ரெஜிஸ்ட் ரேஷன் செய்யுறதுக்காக 10,000 ரூபாய் வரை சேர்த்து வெச்சோம். அப்போ கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட, அந்தப் பணத்தோடு மனைவியின் கொஞ்சம் நகைகளையும் அடகு வெச்சு, எங்க எல்லா பிள்ளைகளுக்கும் ஆளுக்கு 400 ரூபாய் கொரோனா நிதியா கொடுத்தோம்’’ என்கிறார் தாஹிர்.

‘`ஒவ்வொரு நாளும் என் கணவர் லேப்ல இருந்து கிளம்பும்போது, அன்னிக்கு என்ன காசு கிடைச்சதோ, அதுக்கு ஏத்த மாதிரி தேவையிருக்குற பசங்களுக்கு நோட், பேனானு வாங்கிக்குவார். ஆரம்பத்துல, ஒரு மாண வருக்கு 10 ரூபாய் கட்டணம்னு வாங்கினோம். அப்போதான் ஆர்வம், ஒழுங்கு வரும்னு. ஒவ்வொரு வாரமும் டெஸ்ட் வெச்சு சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டணத் தொகையில இருந்து பரிசு வாங்கிக் கொடுப்போம். ஆனா, ரெண்டு மாசத்துல பசங்க எல்லாரும் அர்ப்பணிப்போட வகுப்புக்கு வர ஆரம்பிக்க, அப்புறம் கட்டணத்தை நிறுத்திட்டோம். இன்றுவரை டியூஷன் மற்றும் கபடி பயிற்சியை இலவசமா தான் கொடுத்துகிட்டு வர்றோம்’’ என்றார் சைனாஸ்.

கொரோனா ஊரடங்கு நாள்களில் பயிற்சி களை நிறுத்தி வைக்கிறார்கள். மற்ற நாள்களில் கபடி பயிற்சியை காலை 6.00 - 9.00 மணி வரையிலும், மாலை 4.00 - 5.00 மணி வரையிலும் வழங்குகிறார்கள். மாலை 6.00 - 8.00 மணி வரை டியூஷன் எடுக்கிறார்கள். 75 பெண் பிள்ளைகளும், 61 ஆண் பிள்ளைகளும் இவர்களது பாடசாலையில் படிக்கிறார்கள். அனைவருமே பில்லூர் கிராமத்தைச் சேர்ந் தவர்கள்.

‘`கல்வியுடன் சேர்த்து விளையாட்டுப் பயிற்சியும் அளிப்பதால ‘வெளிச்சம் இலவச கல்வி மற்றும் விளையாட்டுப் பயிற்சி மையம்’னு பெயரை மாத்தியிருக்கோம்’’ என்ற சைனாஸ், ‘`டியூஷனை வீட்டு மாடியிலும், மழை நேரத்தில் வீட்டுக்குள்ளயும் எடுப்போம். விளையாட்டுப் பயிற்சிக்கு, வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற தனியார் வீட்டுமனையில, அதன் உரிமையாளர்கிட்ட அனுமதி வாங்கி பயிற்சி அளிக்கிறோம். படிப்பு, விளையாட்டுனு ஆர்வம் செலுத்தப்படுற மாணவர்கள்கிட்ட எதிர்மறை பழக்கங்கள் எதுவும் அண்டாது. அப்படி, ‘எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மாணவர்கள்’னு எங்க கிராமத்தோட இளைய சமுதாயத்தை உருவாக்கணும். அதுக் கான பாதையைக் காட்டுறதுதான் எங்க நோக்கம்.

விளையாட்டுப் பயிற்சி மைய மாணவர்கள்
விளையாட்டுப் பயிற்சி மைய மாணவர்கள்

சமீபத்துல ஈரோடு மாவட்டத்துல நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான தென்மண்டல கபடி போட்டியில, எங்க ‘செங்காந்தள்’ அணி முதலிடம் பிடிச்சது பெரிய மகிழ்ச்சி. வரும் நாள்கள்ல மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி அறிவிக்கப்படும் போது அவங்களை அதுல பங்குபெறச் செய்து அடுத்தகட்டத்துக்கு அழைச்சுட்டுப் போக ணும்” என்றார்.

‘`இந்த 136 மாணவர்களும் எங்க பொறுப்புனு உணர்றோம். அடுத்ததா, தமிழர் பாரம்பர்ய மான பறை இசையை இவங்களுக்கு இலவசமா கற்றுத் தர, ஆனந்த சமத்துவர் என்பவர் முன்வந்திருக்கார். கொரோனா காலம் என்பதால அது நிலுவையில இருந்தது. சீக்கிரமே இசைக்கருவிகள் வாங்கி வகுப்பை தொடங்கப் போறோம். எங்க பிள்ளைங்க எல்லாரையும் நல்லா கொண்டுட்டு வரணும்’’

- உளப்பூர்வமான அக்கறையுடன் சொல் கிறார்கள் தாஹிரும் சைனாஸும்!‘

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism