Published:Updated:

“ஒருமுறையாவது அம்மானு கூப்பிடுங்க செல்லங்களா!” - இதயத்தை நொறுக்கும் ஒரு தாயின் துயரம்!

சுகந்தி
பிரீமியம் ஸ்டோரி
சுகந்தி

நைட்டுல பெரியவன் நல்லாத் தூங்கிடுவான். சின்னவனுக்குத் தூக்கம் வராது. வலிப்பு நோயும் அவனுக்கு இருக்கு. வலிப்புக்கும் தூக்கத்துக்கும் மாத்திரை கொடுத்துத்தான் தூங்கவெக்கிறேன்.

“ஒருமுறையாவது அம்மானு கூப்பிடுங்க செல்லங்களா!” - இதயத்தை நொறுக்கும் ஒரு தாயின் துயரம்!

நைட்டுல பெரியவன் நல்லாத் தூங்கிடுவான். சின்னவனுக்குத் தூக்கம் வராது. வலிப்பு நோயும் அவனுக்கு இருக்கு. வலிப்புக்கும் தூக்கத்துக்கும் மாத்திரை கொடுத்துத்தான் தூங்கவெக்கிறேன்.

Published:Updated:
சுகந்தி
பிரீமியம் ஸ்டோரி
சுகந்தி

துயரங்களைத் தாங்குவதிலும், குடும்பத்தின் பாரம் சுமப்பதிலும் பெண்களின் வலிமை பிரமிப்பானது. இதைக் கேட்பதற்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால், ஒற்றை மனுஷியாக சுகந்தி சுமக்கும் மனபாரங்களையும் துயரங்களையும் கேட்டால் கல்லும் கரைந்துவிடும்!

வேலூர், கழிஞ்சூர் பாரதியார் கிளைத் தெருவிலிருக்கிற சிறு வீடு அது. அன்பும் பாசமும் கொட்டிக்கிடக்கும் கூடு. அந்த வீட்டுக்குள் வயதான மாமனார், மாமியார், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய், சுயநினைவில்லாத கணவன், மன வளர்ச்சி குன்றிய இரண்டு குழந்தைகள் ஆகியோரை அருகிலிருந்து அரவணைத்து, தனது அன்பால் காத்துவருகிறார் சுகந்தி.

 “ஒருமுறையாவது அம்மானு கூப்பிடுங்க செல்லங்களா!”  - இதயத்தை நொறுக்கும் ஒரு தாயின் துயரம்!

“வலிக்குதுடி சுகந்தி!”

சுகந்தியின் துயரத்தைக் கேள்வியுற்று, அவரது வீட்டுக்குச் சென்றோம். பார்வையற்று, மன வளர்ச்சி குன்றிய அவரின் 13 வயது, 11 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளும், இடுப்பில் தூக்கிக்கொள்ளும்படி அடம்பிடித்துக்கொண்டிருந்தார்கள். பாசக்கூடாக இருந்தாலும் வறுமையின் துயரத்தால், வீடே சோகமயமாகக் காட்சியளித்தது. ஒருபக்கம் வயதான மாமியார், மாமனார் படுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதிர்ப்புறம் மாத்திரை அட்டைகள், மருந்து குப்பிகள் சூழப் படுத்திருக்கும் சுகந்தியின் தாய், புற்றுநோய் தரும் வலியால் “சுகந்தி... சுகந்தி... வலிக்குதுடி...” என்று அரற்றிக்கொண்டிருக்கிறார். இன்னொரு மூலையில் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி சுயநினைவே இல்லாமல் இருக்கிறார் சுகந்தியின் கணவர். அத்தனை பேரையும் ஒற்றைத் தாயாக ஆற்றுப்படுத்துகிறார் சுகந்தி!

‘‘நான் எனக்காகச் சிந்துன கண்ணீரைவிட குடும்பத்துக்காகச் சிந்தினதுதான் அதிகம்’’ என்றபடியே பேசத் தொடங்கினார் சுகந்தி. ‘‘குடிச்சு குடிச்சே என் அப்பா இறந்துட்டாரு. அப்போ எனக்கு விவரம் தெரியாத வயசு. அம்மாதான் கஷ்டப்பட்டு என்னை வளர்த்தாங்க. நான் பெரியவளான பின்னாடி, என் மாமா மகன் சிவராஜையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கு இப்போ 30 வயசாகுது. ரெண்டு பசங்க பொறந்தாங்க. முதல் பையன் விக்னேஷ்வரன். ரெண்டாவது பையன் யுகேந்திரன். ரெண்டு பேருக்குமே மூளை வளர்ச்சி பாதிப்பால பிறவியிலிருந்தே பார்வை தெரியாது. வாய்பேச முடியாது. இத்தனை வருஷத்துல ஒருமுறைகூட என்னை `அம்மா’னு கூப்பிட்டது இல்லை. ‘அங்... அங்’னு சத்தம் கொடுத்தா பசிக்குதுனு அர்த்தம். அந்த நேரத்துல தரையிலயோ சுவத்துலயோ தலையை முட்டிக்குவானுங்க. எதுன்னாலும் நாமதான் ஊட்டிவிடணும். தண்ணி டம்ளரைக்கூட பிடிச்சு குடிக்கத் தெரியாது.

எத்தனையோ பெரிய பெரிய ஆஸ்பத்திரிக்கெல்லாம் போய் பார்த்துட்டோம். எதுவும் பண்ண முடியலை. ரத்தச் சொந்தத்துல கல்யாணம் பணணினதுனால, குழந்தைகளுக்கு இப்படியான பாதிப்பு வந்திருக்கலாம்னு டாக்டருங்க சொன்னாங்க. ரெண்டு பேருக்கும் வயசு கூடினாலும், ஆறு மாசக் குழந்தைக்கான மூளை வளர்ச்சிதான் இருக்கு. கைக்குழந்தை மாதிரி பார்த்துக்குறேன். என் குரல் கேட்காம ஒரு நிமிஷம்கூட இருக்க மாட்டானுங்க. தூக்கிக்கச் சொல்லி அழுவானுங்க.

நைட்டுல பெரியவன் நல்லாத் தூங்கிடுவான். சின்னவனுக்குத் தூக்கம் வராது. வலிப்பு நோயும் அவனுக்கு இருக்கு. வலிப்புக்கும் தூக்கத்துக்கும் மாத்திரை கொடுத்துத்தான் தூங்கவெக்கிறேன். இந்த நிலைமையில, பெரியவனுக்குக் கருவிழி முழுசா வெள்ளையாகிப் போச்சு. இப்படியே விட்டா கண்ணு அழுகிப் போயிடும்னு டாக்டருங்க சொல்றாங்க. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலதான் காட்டிக்கிட்டு இருக்கோம். பெரிய ஆபரேஷன் பண்ணணும்னு டாக்டருங்க சொல்லியிருக்காங்க.

வெயில் சுரீர்னு அடிச்சா போதும், பசங்க கதறி அழுவானுங்க. மழை வரும்போது, இடி இடிச்சா பயந்து நடுங்குவானுங்க. எங்களுக்கு ஒருவேளை சோறுபோட யாருமில்லை. இவனுங்க எதிர்காலத்தை நெனச்சாத்தான் மனசெல்லாம் பதறுது. நானும் இல்லைன்னா, இவங்க நிலைமை என்னவாகுமோ?’’ என்று கதறி அழுத சுகந்தி, குடும்பத்திலுள்ள மற்றவர்களின் நிலையையும் விவரித்தபோது நெஞ்சம் கனத்துப்போனது.

 “ஒருமுறையாவது அம்மானு கூப்பிடுங்க செல்லங்களா!”  - இதயத்தை நொறுக்கும் ஒரு தாயின் துயரம்!

துயரத்தால் பிறழ்ந்த மனநிலை!

‘‘என் புருஷன் சிவராஜ் ஆரோக்கியமாத்தான் இருந்தாரு. கட்டட வேலைக்குப் போய்க்கிட்டு குடும்பத்தையும் பார்த்துக்கிட்டிருந்தவரு, ரெண்டு குழந்தைகளும் இப்படி பொறந்துட்டானுங்களேனு நெனச்சு நெனச்சு அழுதுக்கிட்டிருந்தாரு. இந்தத் துயரமே, அவரோட மனநிலை பாதிப்புக்குக் காரணமாகிடுச்சு. சுத்திலும் என்ன நடக்குதுன்னு அவருக்கு எதுவுமே தெரியாது. அவரையும் பக்கத்துல இருந்துதான் பார்த்துக்கணும். பத்து வருஷத்துக்கும் மேல மனநல மருத்துவமனையில அவருக்கும் சிகிச்சை எடுத்துக்கிட்டு வர்றோம்.

மாமனார், மாமியாருக்கு ஒரே பையன், என் புருஷன்தான். அவங்களுக்கும் வயசாகிடுச்சு. எங்ககூடதான் இருக்காங்க. என் அம்மாவுக்கும் கேன்சர். நாங்க எல்லாரும் சின்ன வாடகை வீட்டுலதான் தங்கியிருக்கோம். ஆயிரம் ரூபாய் வாடகை. அதைக்கூட கட்ட முடியாத நிலைமையில இருக்கேன். சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. பசங்களை தாத்தா, பாட்டிகிட்ட விட்டுட்டு பக்கத்துல இருக்குற ஸ்கூல்ல கூட்டிப் பெருக்குற வேலைக்குப் போறேன். மாசம் மூவாயிரம் ரூபா கிடைக்குது. பசங்க, புருஷன், அம்மானு இவங்க மருத்துவச் செலவுக்கே அந்தக் காசு பத்தல. சொத்துபத்து எதுவும் இல்லை. சொந்தபந்தமும் ஒதுங்கி நிக்குது’’ என்றவர், பேச முடியாமல் புடவை தலைப்பால் வாயைப் பொத்தியபடி விம்மினார்.

“இதையெல்லாம்கூட நான் தாங்கிக்கிட்டுத்தான் வாழ்ந்திட்டு இருக்கேன். ஆனா, ஒரு அம்மாவா ஒரு விஷயத்த மட்டும் என்னால தாங்கவே முடியல... ஒரு வாட்டியாவது என் செல்லங்கள் என்னை அம்மானு கூப்பிடணும். இதுவரை கூப்பிட்டதில்ல. நான் அதுக்காகத்தான் காத்திருக்கேன். பாவம்... அவங்க ரெண்டு பேருக்கும் எதுவுமே புரியல” என்று அவர் கதறியபோது, நம்மிடம் சொல்ல வார்த்தை இல்லை. பல்வேறு இன்னல்களில் சிக்கி அவதிப்படும் எளியோருக்கு தமிழக அரசு உதவிக்கரங்களை நீட்டிவருகிறது. அதுபோலவே, பெரும் துயரத்தில் சிக்கியிருக்கும் இந்தக் குடும்பத்தினருக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!