கட்டுரைகள்
Published:Updated:

சருகு மானுக்கு சரணாலயம் அமைக்குமா தமிழக அரசு?

சருகு மான்
பிரீமியம் ஸ்டோரி
News
சருகு மான்

மான்களுக்கு இருப்பதுபோல் சருகு மான்களுக்குக் கொம்புகள் கிடையாது. இவை அசைபோடும் விலங்குகளில் மிகவும் பழைமையானவை.

இயற்கையில் ஒவ்வோர் உயிரினமும் முக்கியத்தும் வாய்ந்தது. மானைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் சருகு மான் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது அந்த உயிரினத்தைக் காப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதை அறிவுறுத்துகிறது. சூழல் ஆர்வலர்கள் அதற்காகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். இருப்பினும் சருகு மானை வேட்டையாடும் செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியில் தென்பட்ட சருகு மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் பொதுமக்கள்.

சருகு மான் என்றழைக்கப்படும் இந்த உயிரினம், மான் இனத்தைச் சேர்ந்தது அல்ல என்கிறார்கள் விலங்கியல் ஆர்வலர்கள். இது இரட்டைக்குளம்பு இனத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. அதாவது பரிணாம வளர்ச்சி முழுமையடையாததால் இது மான் வகையைச் சேர்ந்தும் இல்லாமல், பிற இனத்தைச் சேர்ந்தும் இல்லாமல் இரட்டை நிலையில் இருக்கிறது. ஆனால், ஆங்கிலத்தில் இதை மௌஸ் டீர் (Mouse-deer) என்றே அழைத்துவருகிறார்கள்.

சருகு மானுக்கு சரணாலயம் அமைக்குமா தமிழக அரசு?

‘சருகு’ என்பதற்கு உண்மைத்தன்மை இல்லாதது என்று அர்த்தம். மான் இனத்தைச் சேராத பொய்யான மான் என்பதாலும், இலை தழைகளுக்கு மறைவிலும் புதருக்கு மத்தியிலும் வாழ்வதாலும் இது சருகு மான் என்றழைக்கப்படுகிறது. சருகு மானைப் பொய்மான், மாயமான் என்றும் அழைப்பர். சருகு என்ற பெயர் காரணப் பெயராக இருக்கலாம். இது, உலகின் மிகச்சிறிய குளம்புள்ள உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களால் சருகு மான் கண்டறியப்பட்டுள்ளது. சருகு மான் உயரம் குறைந்தது. குறுகிய கால வளர்ச்சியை உடையது. இது 1 கிலோ முதல் 13 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். வலுவான தசைகளை உடையது. அடர் பழுப்பு நிற உடலில் வெள்ளை நிறத் திட்டுகளையும் கோடுகளையும் கொண்டது. இவை தனித்தோ, இணைகளாகவோ வாழ்கின்றன. புற்களையும், இலைகளையும் உணவாகக் கொள்கின்றன.

மான்களுக்கு இருப்பதுபோல் சருகு மான்களுக்குக் கொம்புகள் கிடையாது. இவை அசைபோடும் விலங்குகளில் மிகவும் பழைமையானவை. சருகு மானுக்குக் கால் குளம்புகள் (Toed hooves) உள்ளன. மூன்று அறைகள் கொண்ட வயிறு உடையது. இவற்றை ஆராய்ச்சியாளர்கள், அசைபோடும் விலங்குகள், அசைபோடாத விலங்குகளுக்கு இடையிலுள்ள பரிணாம வளர்ச்சியின் இணைப்புப்புள்ளியாகப் (Evolutionary link) பார்க்கின்றனர்.

சருகு மானுக்கு சரணாலயம் அமைக்குமா தமிழக அரசு?

சருகு மான் தன் வயிற்றில் குட்டிகளை சுமார் 3 முதல் 9 மாதங்கள் வரை சுமக்கும். சருகுமான் குட்டிகள் பிறந்த ஒரு மணி நேரத்தில் எழுந்து நிற்கும். ‘இந்தியாவில், சருகு மான்கள் வேட்டையாடப் படுவதன் காரணமாக அழியக்கூடிய தறுவாயில் உள்ளன’ என்று எச்சரிக்கிறது உலக இயற்கை வளப் பாதுகாப்பு அமைப்பு (ஐ.யூ.சி.என்).

சதாசிவம்
சதாசிவம்

சூழல் ஆர்வலர் கோவை சதாசிவத்திடம் பேசியபோது, “சருகு மான்கள் எண்ணிக்கைக் குறைவினால் தம் இணையுடன் தனித்து வாழ்ந்துவருகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காய்ந்த இலை, தழைகள் உதிர்ந்து சருகுகள் அதிகமாக இருக்கின்றன. இதுபோன்ற பகுதிகளில் சருகு மான்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றன. காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறோம். அப்போதுதான் இதுபோன்ற விலங்குகளைக் காப்பாற்ற முடியும். அழியும் நிலையில் இருந்த தேவாங்குகளுக்குச் சரணாலயம் அமைத்தது போல் சருகு மான் உள்ளிட்ட, எண்ணிக்கையில் மிகவும் குறைந்து காணப்படும் விலங்குகளைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.