Published:Updated:

“அவள் மனைவியல்ல, என் தெய்வம்!” - சிலைவைத்து வணங்கும் கணவர்

மூகாம்பிகை சேதுராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
மூகாம்பிகை சேதுராமன்

மனைவிக்கு மரியாதை

‘`என் மனைவி இல்லாத வீட்ல என்னால இருக்கவே முடியல. எப்பவும் சிரிச்ச முகத்தோட நம்மள சுத்தி சுத்தி வந்தவங்க, திடீர்னு ஒருநாள் இல்லாமப் போறதை எப்படித் தாங்கிக்கிறது... இந்தச் சிலை, அந்த ஆற்றாமைக்கு ஓரளவுக்கு ஆறுதல் தருது...’’ - பிரிவுத் துயரில் பேசுகிறார் மதுரையைச் சேர்ந்த மூகாம்பிகை சேதுராமன்.

பிரியமானவர் இவ்வுலகைவிட்டுப் பிரியும்போது, அவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று ஏங்குவதும் அழுவதும் மனிதர்களின் அறிவை மீறிய ஓர் உணர்வு. அதற்கு வடிகால் தேடியிருக்கிறார், மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த 78 வயதுப் பெரியவர் மூகாம்பிகை சேதுராமன். சமீபத்தில் அவர் மனைவி பிச்சைமணி உடல்நலக் குறைவால் மறைந்தார். இத்தனை வருடங்களாகத் தன்னுடன் ஒட்டிவந்த இல்லற உறவை மரணம் துண்டித்துவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல், மனைவியின் 30-வது நாள் காரியத்தன்று அவருக்கு வீட்டில் சிலைவைத்து ஆறுதல் தேடி, வழிபட்டு வருகிறார்.

மதுரையில் பலருக்கும் அறிமுகமான தொழில் அதிபர் மூகாம்பிகை சேதுராமனிடம் பேசினோம்.

“திருமணமாகி 48 வருஷங்களாச்சு. இத்தனை வருஷத்துல எனக்கு எத்தனை வேலையிருந்தாலும், மனைவி பிச்சைமணியை பிரிஞ்சதேயில்ல. ரொம்ப அந்நியோன்யமா வாழ்ந்தோம். எங்களுக்கு மூணு பொண்ணுங்க. மூத்த மகள் கனிமொழி; மருமகன் டாக்டர் சரவணன், திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ ரெண்டாவது மகள் அறிவுமலர்; மருமகன் சதீஷ், கரூர்ல டாக்டர். மூன்றாவது மகள் சுபாஷினி; மருமகன் பிரபாகரன், மதுரையில் கிரிக்கெட் பயிற்சியாளரா இருக்கார்.

மூகாம்பிகை சேதுராமன்.
மூகாம்பிகை சேதுராமன்.

குடும்ப வாழ்க்கையில எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வந்ததில்ல. எங்கம்மாவுக்குப் பிறகு, என்னைக் குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டாங்க. யார்கிட்டயும் கோபப்பட மாட்டாங்க, எல்லாத்தையும் எளிமையா கடந்து போவாங்க. நான் தொழில் ரீதியான பிரச்னைகள்ல அப்செட் ஆகும்போதெல்லாம், ‘சரி விடுங்க... நாம என்ன ஆரம்பத்துல வசதியாவா இருந்தோம்... கல்யாணமானப்போ, நீங்க பார்த்த குறைவான சம்பள அரசு வேலையிலதான் வாழ்க்கைய ஆரம்பிச்சோம். தொழில் ஆர்வத்துல நீங்க வேலையை ராஜினாமா செய்துட்டு, கடுமையான உழைப்பால இந்த நிலைக்கு வந்திருக்கீங்க. அதனால, ஆண்டவன் நமக்குக் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது’னு ஒவ்வொரு முறையும், பழைய வாழ்க்கையிலிருந்தே எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுப்பாங்க. அவங்க வார்த்தைகள் எல்லாம் எனக்கு மந்திரம் மாதிரி ஒரு புத்துணர்வைக் கொடுக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மகள்கள், பேரப்பிள்ளைகள்னு எல்லார் மேலயும் பாசத்தைக் கொட்டினாலும், என் மேல அவங்க எடுத்துக்கிட்ட அக்கறை இணையில்லாதது. எவ்வளவு பெரிய பிரச்னைகளையும் அவங்களோட வார்த்தைகள் தீர்த்துடும். இந்தளவுக்கு தொழில்ல நான் உயர்ந்ததற்கு அவங்களோட சிரிச்ச முகமும் நல்ல மனசும், பிறருக்கு உதவும் குணமும்தான் காரணம். அவங்களை மனைவினு சொல்றதைவிட, என் தெய்வம்னு சொல்லுவேன்’’ என்றவர், தன் மனைவியின் பிரிவு பற்றிச் சொல்லும்போது குரல் தளர்கிறார்.

‘`அவங்களுக்கு உடல்நிலை சரியில்லாமப் போக, கடந்த ஆகஸ்ட் மாதம் என்னை தவிக்க விட்டுட்டுப் போயிட்டாங்க. அவங்க இல்லாம விடிஞ்ச ஒவ்வொரு நாளும், எனக்கு ரொம்ப வெறுமையா இருந்தது. என்னால தாங்கிக்கவே முடியலை. அவங்க இல்லாத வீட்ல என்னால இருக்கவே முடியலை. எப்பவும் சிரிச்ச முகமா அங்கயும் இங்கயும்னு வீட்டுல வளையவர்ற அவங்க உருவம் என் கண்ணை விட்டு அகலவேயில்ல.

மீளமுடியாத மன வேதனையில இருந்த என்கிட்ட, என் நண்பர் ஒருவர், விபத்தில் இறந்த தன் மனைவிக்கு கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் சிலைவடித்து, வீட்டில் வெச்சுக்கிட்ட செய்தியைப் பற்றிச் சொன்னார். அதுபோல நானும் என் மனைவிக்கு சிலை வைக்க முடிவு செஞ்சு, அதே சிற்பியைத் தொடர்புகொண்டு விவரம் சொன்னேன். அவரோ, சிலை செய்து முடிக்க பல மாசம் ஆகும்னு சொன்னார். அதுவரை என்னால காத்திருக்க முடியும்னு தோணல. பிச்சைமணி இறந்த 30-வது நாள் காரியத்தில், அவங்க சிலை வீட்ல இருக்கணும்னு மனசு தவிச்சிச்சு. மதுரையில இதுபோல சிலை செய்யும் சிற்பி இருக்காங்களானு தேடினப்போ, வில்லாபுரத்தைச் சேர்ந்த சிற்பி பிரசன்னாவை பற்றிக் கேள்விப்பட்டோம். அவர்கிட்ட இந்தப் பொறுப்பை ஒப்படைச்சோம். அவர் என் மனைவியோட சிலையை ஃபைபரில் அச்சு அசலா, அற்புதமாக வடிச்சுக் கொடுத்தார்.

நான் நினைச்ச மாதிரியே பிச்சைமணி இறந்த 30-வது நாளில் அவர் சிலையை வீட்ல வெச்சேன். என் மனைவி மறுபடியும் வீட்டுக்கு வந்துட்ட ஓர் ஆறுதல் கிடைச்சிருக்கு. தினமும் அவர் சிலைக்கு பூஜை செய்றேன். ஒவ்வொரு முறை வெளியில போகும்போதும், அவங்ககிட்ட சொல்லிட்டுத்தான் போறேன். மத்தவங்க இதைப் பத்தி பேசணும் பாராட்டணும்னு எல்லாம் இதைச் செய்யல. என் மனைவி என் மேல காட்டின மாசற்ற பாசத்துக்கான நன்றிக்கடனாவும், அவங்க எப்பவும் என்கூடத்தான் இருக்காங்கிற உணர்வு தர்ற மன அமைதிக்காகவும்தான் செஞ்சேன்’’ - ஆழ்மனத்திலிருந்து சொல்கிறார் மூகாம்பிகை சேதுராமன்.

அன்பின் வெளிப்பாடு சில நேரம் ஆச்சர்யமூட்டக்கூடியது!