Published:Updated:

மும்பை துணை கமிஷனராக ‘தமிழர்’ ஹரி பாலாஜி - கலக்கத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பல்!

 ஹரி பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
ஹரி பாலாஜி

படம்: கோவிந்தன் சேவன்

மும்பை துணை கமிஷனராக ‘தமிழர்’ ஹரி பாலாஜி - கலக்கத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பல்!

படம்: கோவிந்தன் சேவன்

Published:Updated:
 ஹரி பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
ஹரி பாலாஜி

மகாராஷ்டிராவில், நக்சல் ஒழிப்புப் பணியில் தீவிரம்காட்டிய காவல்துறை அதிகாரியான ஹரி பாலாஜி, மும்பையின் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழரான ஹரி பாலாஜி பெயரைக் கேட்டாலே, குற்றச் செயல்களில், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் நடுநடுங்குகின்றன. அவரது நியமனத்தால், மும்பையிலுள்ள தாவூத் இப்ராஹிம் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடும் கலக்கமடைந்துள்ளனர்!

கடந்த 2008-ம் ஆண்டு, மும்பைக்குள் கடல்வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. அதன் பிறகு, கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், தீவிரவாதத் தாக்குதல் குறித்த அச்சம் மக்களிடையே இருந்துகொண்டுதானிருக்கிறது.

மும்பை துணை கமிஷனராக ‘தமிழர்’ ஹரி பாலாஜி - கலக்கத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பல்!

மகாராஷ்டிராவின் எல்லையோர மாவட்டமான கட்சிரோலியில், இரண்டு ஆண்டுகள் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ஹரி பாலாஜி. அந்தப் பகுதியில் தீவிரவாதச் செயல்களை முறியடிக்கும், போலீஸாரின் தேடுதல் வேட்டையின்போது 70-க்கும் அதிகமான நக்சல்கள் கொல்லப்பட்டதால், ஹரி பாலாஜியை `என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்றே காவல்துறை வட்டாரத்தில் அழைக்கிறார்கள். இவர், மும்பையின் முக்கியமான பாதுகாப்பு மையங்களான துறைமுகம், வான்கடே ஸ்டேடியம், கேட்வே ஆஃப் இந்தியா, சட்டமன்றம், தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளின் கேந்திரமான டோங்கிரி பகுதியை உள்ளடக்கிய மும்பையின் ஒன்றாவது மண்டலத்துக்குத் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோரின் தூக்கம் தொலைந்திருக்கிறது.

ஹரி பாலாஜியைச் சந்தித்துப் பேசினோம். “வில்லிபுத்தூர் எனது சொந்த ஊர். அப்பா மில் தொழிலாளி. அவர் வேலை செய்த மில் திடீரென மூடப்பட்டதால், குடும்பக் கஷ்டத்தைச் சுமந்து எங்களைப் படிக்கவைத்தார். அண்ணனை டாக்டருக்குப் படிக்கவைத்தார். அதைத் தொடர்ந்து நானும் நன்றாகப் படித்ததால், மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்தது. எனக்குச் சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் அதிகம். தடகளப் போட்டிகளில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன். ஐ.பி.எஸ் அதிகாரியாக வர வேண்டும் என்பது சிறுவயது முதலே எனக்குக் கனவாக இருந்தது. ஆனால், நான் டாக்டராகிவிட்டதால் நேரம் கிடைப்பதே அரிதாக இருந்தது. ஆனாலும், கஷ்டப்பட்டு யூ.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாரானேன்.

முதல் இரண்டு வருடங்கள் என்னால் தேர்வாக முடியாத நிலையில், 2012-ம் ஆண்டில், மூன்றாவது முறையாக எழுதும் தேர்வில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று நன்றாகத் தயார் செய்திருந்தேன். ஆனால், தேர்வுக்கு முன்பாக வைரஸ் காய்ச்சல் வந்துவிட்டது. காய்ச்சலுடன்தான் தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சியடைந்து ஹைதராபாத்தில் நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்றேன்.

பயிற்சி முகாமில் சிறப்பாகப் பயிற்சி முடிந்து முதலிடம் வந்ததற்காகவும், சிறந்த விளையாட்டு வீரருக்காகவும் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் கையால் வீரவாள் பரிசாகப் பெற்றேன். பயிற்சி முடித்த பிறகு, முதலில் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் எனக்குப் பணி ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு பீட் மாவட்டத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, அதன் பிறகுதான் கட்சிரோலி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டேன்.

மும்பை துணை கமிஷனராக ‘தமிழர்’ ஹரி பாலாஜி - கலக்கத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பல்!

கட்சிரோலி, நக்சல்கள் நிறைந்த பகுதி. அங்கு பணியில் சேரும் அதிகாரிகள் வெளியில் வரவே மாட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன். நான் பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி என்னை அச்சுறுத்த முயன்றார்கள். நான் உடனடியாக என்னுடன் போலீஸாரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்குப் போனேன். முன்பெல்லாம் அந்தப் பகுதியில், நக்சல்களால் போலீஸார் கொல்லப்பட்ட நிலையில், பயமின்றி நானே களத்தில் இறங்கி நின்றதால், போலீஸார் தைரியமாகச் செயல்பட்டார்கள். அதனால், போலீஸ் தரப்பில் உயிரிழப்புகள் குறைந்தன. முன்னைக்காட்டிலும் நம்பிக்கையுடன் என்னோடு களத்துக்கு வந்தார்கள்.

150 போலீஸாருடன் அடர்ந்த காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகளைத் தேடினோம். கட்சிரோலி மாவட்டம் என்பது சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஒடிசா எல்லையில் இருப்பதால், இங்கு தேடினால் பக்கத்து மாநிலங்களுக்குள் சென்று ஒளிந்துகொள்வார்கள். ஆனாலும், 2017-ம் ஆண்டு நான் பணியில் சேர்ந்த பிறகு, இரண்டரை வருடங்களில் எழுபதுக்கும் அதிகமான நக்சல்கள் கொல்லப்பட்டார்கள். அதற்காக ஒரே ஆண்டில் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தில் ஜனாதிபதி பதக்கம் பெற்றேன்.

இப்போது என்னை மும்பையின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு மாற்றியிருக்கிறார்கள். மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்தது போன்ற தாக்குதல் மீண்டும் நடக்காமலிருக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறேன். கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் நிறைந்த டோங்கிரியில் கண்காணிப்பு கேமரா அமைத்து, 24 மணி நேரமும் கண்காணித்துவருகிறோம்” என்றார்.

மும்பையின் துணை கமிஷனராக ஹரி பாலாஜி பொறுப்பேற்றதும், ரௌடிகள் பலர் வெளியில் செல்லத் தொடங்கியிருப்பதிலிருந்தே அவரது திறமையைப் புரிந்துகொள்ள முடிவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். “என்மீது மகாராஷ்டிரா மாநில அரசு வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதியாகக் காப்பாற்றுவேன்” என்கிறார், இளம் ஐ.பி.எஸ் அதிகாரியான ஹரி பாலாஜி.

வாழ்த்துகள் அதிகாரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism