சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

மும்பை வணங்கும் ஐ.ஏ.எஸ் தமிழர்!

ராமசாமி ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமசாமி ஐ.ஏ.எஸ்

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தமிழ்வழியில் படித்தவர். கால்நடை மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்று, சில ஆண்டுகள் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்துவிட்டு, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனவர்.

'எங்களுக்குப் போதுமான ஆக்சிஜனை மத்திய அரசு கொடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் மன்றாடுகிறது டெல்லி மாநில அரசு. ‘`இதே அளவுக்கு நோயாளிகள் இருந்த நேரத்தில் உங்களைவிடக் குறைவான ஆக்சிஜனை வைத்துக்கொண்டு தட்டுப்பாடே இல்லாமல் சிகிச்சை அளித்தது மும்பை மாநகராட்சி. நீங்கள் ஏன் நிறைய ஆக்சிஜன் கேட்கிறீர்கள்? மகாராஷ்டிராவிடம் போய்ப் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்’’ என்றனர் நீதிபதிகள்.

நீதிமன்றம் மேற்கோள் காட்டிய பிறகுதான், மும்பை மாநகராட்சியின் சாதனை வெளியே தெரியவந்துள்ளது. கொரோனா முதல் அலையிலும் சரி, இரண்டாவது அலையிலும் சரி, அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிராதான். ஆனாலும், சிகிச்சை அளிப்பதில் முடிந்தவரை நேர்த்தியாகச் செயல்பட்டது மகாராஷ்டிரா. குறிப்பாக மும்பை மாநகரம் சமாளித்தவிதம் சிறப்பானது.

ராமசாமி
ராமசாமி

கடந்த மாதம் மும்பையில் மட்டுமே தினமும் பத்தாயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெறுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்தது. ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலம் ஹாபாவிலிருந்து ரயில் மூலம் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை அனுப்பிவைத்தது. இவை 860 கி.மீ தூரத்தை 17 மணி நேரத்தில் கடந்து மும்பை வந்துசேர்ந்தன. ரயில் எங்கேயும் சிக்னலுக்காக நிற்கக்கூடாது என்பதற்காக மேற்கு ரயில்வே அதிகாரிகள் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனர். கடந்த ஆண்டு கொரோனாத் தாக்கம் ஏற்பட்டபோதே, ‘எதிர்காலத்தில் தேவையான ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்’ என்பதற்காக முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்ததும் மும்பையில் பற்றாக்குறை ஏற்படாமல் இருந்ததற்கு முக்கியக் காரணம்.

இதைச் செய்தவர், மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை கமிஷனரான டாக்டர் ராமசாமி ஐ.ஏ.எஸ். தமிழரான இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள கணக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தமிழ்வழியில் படித்தவர். கால்நடை மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்று, சில ஆண்டுகள் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்துவிட்டு, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனவர். மகாராஷ்டிர கேடர் அதிகாரியான இவர், ஆரம்பத்தில் சில மாதங்கள் மும்பையின் செவன் ஹில்ஸ் என்ற கொரோனா சிகிச்சை மருத்துவமனையின் சிறப்பு அதிகாரியாக இருந்தார். அவரின் செயல்திறனைக் கண்ட மாநில அரசு, சுகாதாரத்துறை கமிஷனராக நியமித்தது. மும்பையின் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளித்தது குறித்து அவரிடம் பேசினோம்.

‘`மகாராஷ்டிராவில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவைப்படும். இப்படி எங்களுக்கு 1,730 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை. ஆனால், மகாராஷ்டிராவில் 1,250 மெட்ரிக் டன் அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதியை குஜராத், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம். ஆக்சிஜன் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை வைத்திருக்கிறோம். 10 மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு, ஆக்சிஜன் வீணடிக்கப்படாமல் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறோம். ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்குத் தேவையான அளவு மட்டும் கிடைக்கவேண்டும் என்பதை உறுதி செய்துள்ளோம். இதன்மூலம் ஆக்சிஜன் வீணாகாமல் தடுத்துவருகிறோம். இதனால் பெரிய அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்த்திருக்கிறோம்.

மும்பை வணங்கும் ஐ.ஏ.எஸ் தமிழர்!

நான் பொறுப்பேற்றதும், எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என முன்கூட்டியே திட்டமிட்டுப் பணி செய்தோம். அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யத் தேவையான நடவடிக்கை மேற்கொண்டோம். மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 300 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது 38 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டது. இதன்மூலம் தினமும் 50 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதோடு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சேமிப்புக் கிடங்கின் அளவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்தோம். இதனால் மும்பை மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா முழுக்க ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொண்டோம்’’ என்றார் அவர்.

கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் டாக்டர் ராமசாமியின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. கொரோனா இரண்டாவது அலையையும் கட்டுப்படுத்த அவர் தேவையான நடவடிக்கையை எடுத்துவருகிறார். ஆக்சிஜன் பற்றாக்குறையை ஒருபுறம் சமாளித்தாலும், மும்பையில் கொரோனா பரவுவதையும் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், ஆக்சிஜன் தேவை இப்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது.

ராமசாமி
ராமசாமி

மும்பை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனர் சுரேஷ் ககானி, ‘’கொரோனா முதல் அலையின்போதே ஆக்சிஜன் மிகவும் முக்கியமானது என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டோம். ஆக்சிஜன் இல்லாவிட்டால் நிலைமையைச் சமாளிப்பது கடினம் என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றபடி தயார்படுத்திக்கொண்டோம். கடந்த ஜனவரியில் இருந்து மாநகராட்சி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை மாற்றிவிட்டு பைப் மூலம் ஆக்சிஜன் சப்ளை செய்யும் முறைக்கு மாறினோம். இதனால் ஆக்சிஜன் தேவையை எங்களால் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. தனியார் மருத்துவமனைகளிலும் இதே முறையைப் பின்பற்றினோம். அதோடு எப்போதும் 20 சதவிகிதம் ஆக்சிஜன் கையிருப்பு வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டோம். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டால், உடனே மருத்துவமனைகளை உஷார்படுத்த முடிந்தது. நகரில் நாளை பைப்பில் தண்ணீர் வராது என்று முன்கூட்டியே தெரிவிப்பதுபோல, ஆக்சிஜன் விநியோகம் குறித்து முன்கூட்டியே அனைத்து மருத்துவமனைகளுக்கும் தெரிவித்துவருகிறோம்’’ என்கிறார்.

இன்னொரு ஈரோடு ராமசாமி இப்போது மும்பைக்கும் வழிகாட்டுகிறார்!