Published:Updated:

“பத்திரமாக வந்து சேர்ந்த சொந்தங்கள்!”

மும்பைவாழ் தமிழர்களின் உதவி
பிரீமியம் ஸ்டோரி
மும்பைவாழ் தமிழர்களின் உதவி

நெகிழவைக்கும் மும்பைவாழ் தமிழர்களின் உதவி...

“பத்திரமாக வந்து சேர்ந்த சொந்தங்கள்!”

நெகிழவைக்கும் மும்பைவாழ் தமிழர்களின் உதவி...

Published:Updated:
மும்பைவாழ் தமிழர்களின் உதவி
பிரீமியம் ஸ்டோரி
மும்பைவாழ் தமிழர்களின் உதவி
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்கள் ஏராளம்.

அதேசமயம், அந்தத் தொழிலாளர்களுக்கு பல ஈர நெஞ்சங்கள் செய்த உதவிகள் நெகிழவைக்கின்றன. அப்படி மும்பையில் தவித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து, ரயிலிலும் விமானத்திலும் அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர் மும்பைவாழ் தமிழர்கள் சிலர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வோர் ஆண்டும் அறுவடைக்காலம் முடிந்தவுடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் குடும்பத்துடன் மும்பை சென்றுவிடுவது வழக்கம். ஆறேழு மாதங்கள் அங்கு தங்கியிருந்து கட்டுமானம் உள்ளிட்ட கூலித் தொழில்களில் ஈடுபடுவார்கள். மும்பையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால், இம்முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான தமிழர்கள் மும்பையில் சிக்கிக்கொண்டார்கள்.

எஸ்.ஜி.ஷியாம் சுந்தர்
எஸ்.ஜி.ஷியாம் சுந்தர்

சாலை ஓரங்களில் தார்ப்பாய்க் கூடாரங்கள் அமைத்துத் தங்கியிருந்த அவர்களில் கர்ப்பிணிகள் உட்பட ஏராளமான பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் உணவு இல்லாமலும், அத்தியாவசிய மருந்துகள் வாங்க முடியாமலும் தவித்தனர். கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் கொல்கத்தா ஐ.ஐ.எம் மாணவர்கள் பலர் மும்பையின் பன்னாட்டு நிறுவனங்களில் முக்கியப் பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களுடன் நல்ல உள்ளம்கொண்ட பலரும் கைகோத்து, ‘ஹங்கர் கலெக்டிவ்’ என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் புலம்பெயர்ந்த தமிழகத் தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்தனர்.

அமெரிக்கப் பன்னாட்டு நிதி நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார் எஸ்.ஜி.ஷியாம் சுந்தர். தஞ்சாவூரைப் பூர்விகமாகக்கொண்ட இவர்தான் ‘ஹங்கர் கலெக்டிவ்’ அமைப்பின் தலைமைக் காப்பாளர். இந்த அமைப்பின் செயலாளர் ராஜஸ்ரீ. அவரிடம் பேசினோம். “தமிழகத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களில் ஏராளமான பெண்கள் இருந்தனர். அவர்களில் 15 பேர் கர்ப்பிணிகள். அனைவரும் சாலையோரம் தங்கியிருந்தார்கள்.

அவர்களை ரயில்களில் அனுப்பிவைப்பதற்காக தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய இரு மாநில அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோரிடம் பேசினோம். ஆனால், அதில் பல சிக்கல்கள். குறிப்பாக, அவர்களை இங்கிருந்து அனுப்புவதற்கு ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்பட்டன. பலரிடம் எந்த ஆவணமும் இல்லை. எனவே, ஆவணங்களைப் பெறுவதற்கு வழக்கறிஞர் மஞ்சுளா என்பவர் தீவிர முயற்சிகளை எடுத்தார். ஒருவழியாக வாட்ஸ்அப் மூலம் ஆவணங்களை வாங்கினோம். அவற்றை அதிகாரிகளுக்கு அனுப்பிய பிறகே அனுமதி கிடைத்தது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து தொழிலாளர்கள் முதற்கட்டமாக மே மாதம் 23, 28, 29 ஆகிய தேதிகளிலும், இரண்டாம் கட்டமாக ஜூன் 12 தேதியிலும் நான்கு ரயில்களில் புறப்பட்டு மொத்தம் 6,400 பேர் தமிழகம் வந்தனர். சென்னையி லிருந்து இவர்களை ஏற்றிக்கொண்டு இரண்டு ரயில்கள் விழுப்புரத்துக்கும் இரண்டு ரயில்கள் திருநெல்வேலிக்கும் சென்றன.

‘ஹங்கர் கலெக்டிவ்’ அமைப்பினர்
‘ஹங்கர் கலெக்டிவ்’ அமைப்பினர்

மும்பையில் வசித்துவரும் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான குருமூர்த்தியிடம் பேசினோம். “உணவுக்குச் சிரமப்பட்ட அவர்களுக்கு ‘ஹங்கர் கலெக்டிவ்’ மூலம் இரண்டு மாதங்கள் உணவு வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் உணவு வழங்குவது மட்டுமே தீர்வல்ல என்பதை உணர்ந்தோம். அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப திட்டமிட்டோம். இதற்கான முயற்சியில்

அ.தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி ஆகியோர் உதவினார்கள். மூன்று ரயில்களை இயக்குவதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன. ஆனால், நான்காவது ரயிலை இயக்குவதற்கான செலவை மாநில அரசுகள் ஏற்கவில்லை. அதனால், ‘ஹங்கர் கலெக்டிவ்’ மூலமாக நிதி திரட்டி ரூ.11 லட்சம் செலுத்தி, தொழிலாளர்களை அனுப்பிவைத்தோம்” என்றார்.

மும்பைவாழ் தமிழர்களின் இந்த முயற்சிக்கு தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான அதுல்ய மிஸ்ரா, ஜெ.ராதாகிருஷ்ணன், பூஜா குல்கர்னி, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர்

ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரும் உதவியிருக்கிறார்கள். ரயிலில் ஏறுவதற்கு முன்பாக, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொற்று இல்லாதவர்களை மட்டுமே தமிழகத்துக்கு அனுப்பிவைத்துள்ளார்கள். ரயில் பயணத்தில் அவர்களுக்குத் தேவையான உணவு, பால், பிஸ்கட் உள்ளிட்டவற்றையும் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் மும்பைவாழ் நண்பர்கள். சிலரை விமானத்திலும் அனுப்பி வைத்துள்ளனர்.

மும்பையிலிருந்து விமானத்தில் வந்த சேலத்தைச் சேர்ந்த கலைமுத்துவிடம் பேசினோம். “ரெண்டு மாசமா மும்பையில வசிக்கும் தமிழர்கள்தான் சோறு போட்டாங்க. நிறைமாத கர்ப்பிணியா இருந்த என் மனைவிக்கு மும்பையிலேயே குழந்தை பிறந்தது. எல்லா மருத்துவ உதவிகளையும் அந்த நண்பர்கள்தான் செஞ்சாங்க. ரயில்ல வருவதாகத்தான் இருந்தோம். ஆனா, `பிறந்து 18 நாள் ஆன குழந்தையை ரயில்ல அனுப்பினா பாதுகாப்பாக இருக்காது’னு சொல்லி, ஷியாம் சுந்தர் சாரும் ராஜஸ்ரீ மேடமும் எங்களை விமானத்துல அனுப்பிவெச்சாங்க” என்றார் நெகிழ்ச்சியுடன்.

கொடிய கொரோனா காலத்திலும் வாழ்க்கைமீது நம்பிக்கை பிறக்கிறது என்றால் காரணம், இது போன்ற நல்ல உள்ளங்கள்தான்... நன்றி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism