Published:Updated:

நள்ளிரவில் பெய்த பேய்மழை… காவு வாங்கிய காட்டாற்று வெள்ளம்… என்ன நடந்தது மூணாறில்? #Munnar

மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணி
மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணி

மூணாறு அருகேயுள்ள பெட்டிமுடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு நிலச்சரிவில் சிக்கியதில், 71 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்றோம்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய, இன்றைய தூத்துக்குடி, திருநெல்வேலிப் பகுதிகளில் வசித்துவந்த மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படி அங்கு சென்றவர்களில் பலர் நான்கு தலைமுறைகளாக அங்கேயே வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்குள்ளாகவே திருமணம் செய்துகொண்டு, தங்களுடைய உறவுகளை விரிவாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும், சொந்த ஊரிலுள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவதையும், திருவிழா, திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்வதையும் இன்றும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.
உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.

இப்படி, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் தேயிலைத்தோட்டங்களில், தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட சுமார் 15,000 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளை, சுதந்திரத்துக்குப் பின்னர் தேயிலைத் தோட்டங்களை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது புதுப்பித்துக் கொடுக்கின்றன.

மூணாறு நிலச்சரிவு: `5-வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!' - உடல்களைத் தேடும் பணி தீவிரம்

மூணாறைச் சுற்றிலும் 23 தேயிலை தோட்ட எஸ்டேட்கள் உள்ளன. நிர்வாக வசதிக்காக இவை 110 டிவிஷன்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. `நயமக்காடு’ எனும் எஸ்ட்டேட்டை தலைமையிடமாகக்கொண்ட கல்லாறு, ராஜமலை உள்ளிட்ட சில டிவிஷன்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பெட்டிமுடி டிவிஷன். மூணாறு தேயிலைத் தோட்டங்களில், கடைசி டிவிஷனாகக் கருதப்படும் பெட்டிமுடியில் 120 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட லைன் வீடுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். ஒரு லைன் என்றால், 10 முதல் 15 வீடுகள் இருக்கும். பெட்டிமுடியில் மொத்தம் 13 லைன் வீடுகள் உள்ளன. இவற்றில், மலையிலிருந்து வரும் ஓடை ஒன்றின் அருகிலிருந்தன நான்கு லைன் வீடுகள்.

உடலை எடுத்துவரும் மீட்புக் குழுவினர்.
உடலை எடுத்துவரும் மீட்புக் குழுவினர்.

பெய்த கனமழையால் நீரோடை காட்டாறு வெள்ளமாக மாறி, மண்ணை அள்ளிக்கொண்டுவந்து, அந்த நான்கு லைனில் இருந்த 25 வீடுகளை மூழ்கடித்தது. இந்தச் விபத்தில் 82 பேர் சிக்கிக்கொண்டார்கள். அவர்களில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மீதமுள்ள 70 பேர் மண்ணில் புதைந்துபோயினர். கடந்த 6-ம் தேதி, இரவு 11:30 மணியளவில் நடந்த இந்த துயரச் சம்பவத்தை அறிந்த கேரள அரசு, மீட்புக்குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பியது. 7-ம் தேதி மதியம் முதல் இன்று வரை உடல்களை மீட்டுவருகின்றனர். நேற்றைய கணக்கின்படி 10 சிறுமிகள், 15 சிறுவர்கள் உட்பட 49 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இன்று காலை இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 19 பேரின் உடல்கள் தேடப்பட்டுவருகின்றன.

மூணாறில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் கரடுமுரடான மலைப்பாதையில் ஜீப் மூலம் பயணித்து, வரையாடுகள் வாழும் இரவிக்குளம் தேசியப் பூங்காவை கடந்து பெட்டிமுடியை அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது. சம்பவம் நடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அன்று கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. ராஜமலை டிவிஷனிலிருந்து பெட்டிமுடி டிவிஷனுக்குச் செல்லும் பாதையில் மண் சரிந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. அன்றைய இரவு நிலச்சரிவு ஏற்பட்ட பெட்டிமுடியிலிருந்து தகவல் தெரிவிக்க, ராஜமலை வருவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆகியிருக்கிறது. சம்பவத்தை அறிந்த ராஜமலை மக்களால் பெட்டிமுடிக்குச் செல்ல முடியாத அளவுக்குக் கடுமையான மழையும் காற்றும் இருந்திருக்கின்றன. மறுநாள் காலை 6 மணிக்கு மேல்தான் பெட்டிமுடிக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கே காயம்பட்ட நான்கு பேரை மீட்டு, ராஜமலை தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தகவலறிந்து மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு வருவதற்கு மதியம் 1 மணிக்கு மேல் ஆகியுள்ளது.

மண்ணில் புதைந்துள்ள ஜீப் மற்றும் வீடுகள்.
மண்ணில் புதைந்துள்ள ஜீப் மற்றும் வீடுகள்.
மூணாறு நிலச்சரிவு: `மீட்புப் பணிகள் ஒருவாரம் நீடிக்கலாம்!' - மத்திய அமைச்சர் முரளிதரன்

``காலையில 8 மணிக்கு வேலைக்கு போவோம். 24 கிலோ தேயிலை பறிச்சா 400 ரூபா சம்பளம். ஆனா நாங்க, ஒரு நாளைக்கு 100 கிலோ பறிப்போம். 24 கிலோவுக்கு மேல, கிலோவுக்கு ஒரு ரூபா கிடைக்கும். மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்துடுவோம். எப்பவும் இங்கே மழை பெய்யும். எப்பவாவது வெயில் அடிக்கும். யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, புலின்னு வன விலங்குகளுக்குப் பஞ்சமில்லை. ராத்திரியில வீட்டு வாசலுக்கே யானை வந்திருக்கு. ஆனா, வன விலங்குகள் எங்களை எதுவும் செய்யாது. நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்தோம். இந்த நிலச்சரிவு எங்களை ரொம்ப பாதிச்சிடுச்சு. எங்க கூடவே தேயிலை பறிச்சிக்கிட்டு, சாப்பாடு, குழம்புனு பங்கு போட்டு சாப்பிட்டுக்கிட்டு, ஒண்ணா உட்கார்ந்து டி.வி பார்த்துகிட்டு இருந்த எங்க சொந்தங்களை இழந்திருக்கோம். இனி நாங்க இங்கே இருக்க மாட்டோம். வேற எஸ்டேட்டுக்கு போகப் போறோம்” என்று கண்ணீரோடு பேசினார் பெட்டிமுடியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.

உடலை எடுத்துவரும் மீட்புக் குழுவினர்.
உடலை எடுத்துவரும் மீட்புக் குழுவினர்.

பெட்டிமுடியிலுள்ள மற்ற லைன் வீடுகளில் இருந்த மக்களை உடனடியாக வேறு டிவிஷனுக்கு மாற்றியுள்ளது தேயிலைத் தோட்ட நிர்வாகம். இறந்தவர்களை அடையாளம் காண்பிக்க உறவினர்கள் சம்பவ இடத்தில் கூடியிருந்தனர். அவர்களிடம் பேசினோம். ``நாங்க எல்லாரும் நயமக்காடு கிழக்கு, கல்லாறு டிவிஷன்லருந்து வர்றோம். இங்கே இருந்த பெட்டிமுடி ஆளுக எங்க டிவிஷன்ல பெண் எடுத்து, பெண் கொடுத்திருக்காங்க. அவங்க நிலச்சரிவுல சிக்கி பலியாகிட்டாங்க. அதான் அவங்களோட உடலை எடுத்துட்டு வர்றாங்களா’னு பார்க்கிறோம். நாலு நாளா இங்கேதான் இருக்கோம். இன்னும் நிறைய பேரைக் காணலை” என்றனர் முகத்தில் கவலை தோய.

எப்படி நடக்கிறது மீட்புப் பணி?
பேரிடர் மீட்புக்குழுவினர், தாங்கள் கொண்டு வந்திருக்கும் உயர் தொழில்நுட்ப ஸ்கேனர் கருவி மூலம் மண்ணில் 20 அடிக்குக் கீழே புதைந்திருக்கும் உடல்களை அடையாளம் கண்டு தோண்டி எடுக்கின்றனர். மேலும், இடுக்கி காவல்துறையின் மோப்ப நாயும் உடல்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காட்டப் பயன்படுத்தப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்களை, பெட்டிமுடி அருகேயுள்ள இடத்தில் வரிசையாகப் புதைக்கும் பணியில் இடுக்கி மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலியிலிருக்கும் சொந்தங்கள் பெட்டிமுடி வந்தாலும், அவர்களிடம் உடல்கள் கொடுத்து அனுப்பப்படுவதில்லை. முகத்தைப் பார்க்கவைத்து, சிறிது நேரத்தில் புதைத்துவிடுகின்றனர்.

உடல்கள் புதைக்கப்பட்ட இடம்.
உடல்கள் புதைக்கப்பட்ட இடம்.
மூணாறு நிலச்சரிவு: மோப்ப நாய்; ஒரே இடத்தில் 8 உடல்கள்... 42 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

`இன்னும் சிலரின் உடல்களைத் தோண்டி எடுக்க வேண்டியிருப்பதால், மீட்புப் பணி மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கலாம்’ எனக் கூறப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் மத்திய அரசு அறிவித்துள்ளது. இறந்த நபர் ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது கேரள அரசு. தேயிலைத் தோட்ட நிர்வாகம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. என்னதான் நிவாரணம் கொடுத்தாலும், உறவுகளை இனி பார்க்க முடியாத சோகத்தில் இருக்கிறார்கள் மூணாறுவாழ் தமிழக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். அவர்களின் மனதில் பெட்டிமுடி சம்பவம் ஆறாத வடுவாக அழுத்தமாகப் பதிந்துபோயிருக்கும் என்பது மட்டும் உண்மை.

அடுத்த கட்டுரைக்கு