Published:Updated:

"பனைமரம் தாய்மாதிரி... கைவிடாது!" - பார்வையற்ற பனையேறி முருகாண்டி

குடும்பத்தினருடன் முருகாண்டி
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தினருடன் முருகாண்டி

வாழ்க்கை

"பனைமரம் தாய்மாதிரி... கைவிடாது!" - பார்வையற்ற பனையேறி முருகாண்டி

வாழ்க்கை

Published:Updated:
குடும்பத்தினருடன் முருகாண்டி
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தினருடன் முருகாண்டி
“அறுக்க மாட்டாதவன் இடுப்புக்கு எதுக்கு அம்பத்தெட்டு அருவானு பார்க்குறீகளா..?”

- பனைமரம் ஏறத் தயாரான முருகாண்டி நம்மிடம் ஒரு ‘வார்த்தை’ பேச ஆரம்பித்தால், ‘லந்து’ வந்து விளையாடுகிறது.

“நான் ஸ்போர்ட்ஸான ஆளு தம்பி... கம்பு சுத்துவேன்; கர்லா சுத்துவேன்; மானம் பார்த்த பூமியில நல்லா காடுகரைனு வேலை பார்ப்பேன். விலாங்கு மீனா சாப்பிட்டு வளர்ந்த ஒடம்பு தம்பி. எங்கிட்ட கிராமத்து இளந்தாரிப்பயலுக கேட்பானுக... ‘எப்படிய்யா இந்த வயசுலயும் மரம் ஏறி ஓல வெட்டுறே?’னு... இதுக்கே இப்படின்னா... என் தாத்தன் கோவிச்சுட்டுப் போயி பனைமரத்துல ஒக்காந்துருவாராம். பனைமரம் அவருக்கு இன்னொரு வீடு மாதிரி. ராத்திரிக்கு ஆளைக் காங்கலைனா பனைமர உச்சாணிய பேட்டரி லைட்டடிச்சு பார்த்தா அம்புட்டுக்குவாரு. அந்த ரத்தம் எனக்குள்ளார ஓடுதில்லையா... கெதியா எவ்வளவு கருக்கு இருக்குற மரம்னாலும் புடிச்சி ஏறிப்புடுவேன். மேல போயி, ஓலையப் பிடிச்சு சேமங்காலு போட்டு ஒக்கார்ந்தேன்னா பகல் பூரா நுங்கு குடிச்சிக்கிட்டே பசியாத்திக்கிட்டு மரத்துல தங்கிருவேன் பார்த்துக்கங்க!”

"பனைமரம் தாய்மாதிரி... கைவிடாது!"  - பார்வையற்ற பனையேறி முருகாண்டி

- அதிர அதிர சிரித்தபடிச் சொல்கிறார் முருகாண்டி. அப்பத்தா முடிந்து வைத்த சிறுவாட்டுக் காசைப் பார்த்ததைப்போல நமக்குத்தான் வியப்பு மேலிடுகிறது.

ஆம். ராமநாதபுரம் மாவட்டம், வெள்ளரி ஓடை கிராமத்தைச் சேர்ந்த 58 வயதான முருகாண்டி, நம் எல்லோரையும்போல சாதாரண மனிதர் அல்ல. பிறக்கும்போதே பார்வைத்திறனை பறிகொடுத்த மாற்றுத்திறனாளி. ஆனால், அந்தக் குறையே தெரியாமல் பனை ஏறும் தொழிலாளியாக ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க 9 வயது முதல் பயணம் செய்து தொழில் பார்த்தவர். இப்போது நூறு நாள் வேலைத் திட்டத்தில் குடும்பத்தை நடத்திவரும் முன்னாள் பனையேறி!

"பனைமரம் தாய்மாதிரி... கைவிடாது!"  - பார்வையற்ற பனையேறி முருகாண்டி

“ராம்நாடு ஜில்லா உச்சிப்புளி, ரெகுநாதபுரம் பகுதியில இப்ப மாதிரி இல்லை... 70, 80கள்ல எங்கே பார்த்தாலும் பனைமரமா... பனங்காடா கிடக்கும். இந்த மண்ணுக்கேத்த மரம் அதான். பனைமரம் மாதிரி உடம்புபூரா உலகத்துக்கு பயன்படுற மரம் இல்லை. மழையை வரவைக்குற பச்சையம் பனைமரத்துக்கு உண்டு. நுங்கு வெட்டுறது, பதநீர் இறக்குறது, பனை வெல்லம், பனங்கிழங்கு பறிக்குறது, பனம்பழம், கொட்டை தழைக்கிறதுக்கு முன்னாடி வர்ற பீய்ச்சி... அப்புறம் ஓலைய வெட்டி கூரை வேயுறது, பாய் முடையுறது, பொட்டி முடையுறது, வேலியடைக்க மட்டை வெட்டுறது, சாய்ஞ்சாலும் வீட்டுக்கு உத்திரமா நிக்கிறதுனு சொல்லிட்டே போகலாம்..!

பிறவியிலயே கண்ணு இல்லாத குறையை இந்தப் பனை மரம்தான் போக்கிச்சு. நான் சின்னப் பையனா இருந்தப்போ 1965-ல அம்மாவையும், என்னையும் என் தங்கச்சியையும் விட்டுட்டு என்னைப் பெத்த அப்பாரு பொழப்புக்காக சிலோன் போயிட்டாரு. நாங்க தனியாத்தான் நாதியத்துக் கெடந்தோம். 1983-ல அவரு செத்துட்டாருனு தகவல் மட்டும் கிடைச்சுது. அம்மா பன ஓலை முடையுறதுக்குப் போகும். அப்போ என்னையும் கூட்டிட்டுப் போகும். படிக்க அம்புட்டு பிரயாசைதான். ஆனா, தட்டிப்போட்ட ரொட்டிய புரட்டிப் போட நாதி இல்லாத கணக்கா... கண் பார்வை இல்லாததும் வறுமையும் படிப்பைப் பத்தின நினைப்பே வர முடியாத அளவுக்கு வாழ்க்கையைப் புரட்டிப் போட்ருச்சு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊரைச் சுத்தி பனங்காடுங்கிறதால 9 வயசுலேயே மரம் ஏறப் பழகிட்டேன். காரணம், கண் பார்வை இல்லைனு என்மேல யாராச்சும் பரிதாபப்பட்டா எனக்குப் புடிக்காது. அதுக்காகவே நானா மரம் ஏறக் கத்துக்கிட்டேன். ஒண்ணு இல்லைனா இன்னொண்ணு இருக்கும்லயா... என்ன கைதவறி விழுந்தா உசிரா போகும்? ஊனம்கிறது மனசுலதான் இருக்கு. கைகால் உடைஞ்சாலும் பரவாயில்லை. நாம மரம் ஏறிக் குடும்பத்தைக் காப்பாத்தணும்னு ஏற ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ஊர்க்காரங்க, ‘இந்த வயசுல கண்ணு இல்லாம மரம் ஏறி என்ன பண்ணப்போறே... விழுந்தா பார்க்க நாதியிருக்காது பார்த்துக்க!’னு பேசினாங்க.

"பனைமரம் தாய்மாதிரி... கைவிடாது!"  - பார்வையற்ற பனையேறி முருகாண்டி

அப்பல்லாம் காது கேக்காத மாதிரி இருந்துட்டு அம்மாவுக்கு ஒத்தாசையா இருந்தேன். திரேகம் காய்ச்சுப்போயி ஒரு கட்டத்துல பனைமரத்தைத் தடவிப் பார்த்தே அஞ்சு நிமிஷத்துல உச்சாணிக்கு ஏறிப் பழகிட்டேன்.

எனக்கு மரம் கைக்குள்ள வந்த மாதிரி ஆகிப்போச்சு. 2009 வரைக்கும் ஓலை வெட்ட பார்ட்டிக்காரவுக ஊர் ஊரா கூட்டிட்டுப் போவாங்க. அப்பல்லாம் ஒரு மரத்துக்கு இருவது ரூபா குடுப்பாக. ஒரு நாளைக்கு 50 மரத்தை ஏறிப் பார்த்துடுவேன். என்னை ஆரம்பத்துல பார்க்குறவுக, `இந்தாளு வெட்டுவானானு டவுட்டா பார்ப்பாக... ஆனா, வேலையப் பார்த்துப்புட்டு அப்படியே வாயடைச்சுப் போயிடுவாக. மீன் குஞ்சு கடலுக்குள்ள நீந்தும்லயா, அது போலத்தான் எனக்கு இந்தப் பனங்காடு!” - வாஞ்சையோடு பனை மரத்தை ஒரு குழந்தையைத் தடவும் லாகவத்தோடு தடவியபடி பேசுகிறார் முருகாண்டி. அவர் பேசுவதை மனைவி கலாவதியும், மகள்கள் சிம்ரா ஷாலினியும், லாவண்யாவும் முகத்தில் பெருமிதம் வழியப் பார்க்கிறார்கள்.

"பனைமரம் தாய்மாதிரி... கைவிடாது!"  - பார்வையற்ற பனையேறி முருகாண்டி

“ராமேஸ்வரம், அரியமான், ஓலைக்குடானு நல்லா அடர்ந்து கெடக்குற பனங்காட்டுக்கு மரம் ஏறப் போவேன். ஓலை அருவாளையே அப்பிக்கிரும். கை கால்ல சிலாம்பு குத்தி காயம் வரும். கறுக்கு குத்துனா பெரிய காயமாகிடும். அதனால முந்திரிக்கொட்டையை எப்பவும் எடுத்துட்டுப் போவோம். அதான் வைத்தியம். காயம்பட்ட இடத்துல தேய்ச்சாக்கா ரத்தம் மறிபடும். முந்திரி இல்லாம வேலைக்கே போக மாட்டோம். இப்பல்லாம் சின்னக் காயம்னு போனா கவருமென்ட் ஆசுபத்திரியில ஊசி போட்டு மாத்திரை மருந்தே அஞ்சாயிரம் ரூவா வந்துரும். ஆனா, முந்திரிக்கொட்டைதான் எங்க ஆசுபத்திரி அப்போ. அதிகமா வெட்டுக் காயம் ஆகிடுச்சுன்னா பனமட்டை நரம்பெடுத்து முள்ளு வெச்சு தைச்சுப்போம். நாலு நாள்ல காயம் போன சுவடு தெரியாது. ஒரு நாளைக்கு 50 மரம் ஏறினாலும் அசதி தெரியாது!

தாண்டு பனை கேள்விப் பட்டிருக்கீங்களா? வரப்புல விதைச்ச மரம்லாம் வரிசையா இருக்கும்ல... அப்படி ஒரு பனை மரத்துல ஏறி அப்படியே வரிசையா உச்சியில இருந்தே ஓலையப் பிடிச்சு இன்னொரு மரத்துக்கு தாவுறதுக்குப் பேருதான் தாண்டு பனை. இப்படி 40 பனை வரை தாவுவேன். கண்பார்வை இல்லாத என்னால எப்படித் தாண்ட முடியுதுனு ஊரே கூடி ஆச்சர்யமாப் பார்ப்பாங்க. ஆனா, பனை மட்டைய நம்பி தாவலாம். ஒரு கணக்கு இருக்கு. பனமட்டையை ஆட்டிப் பார்த்துத் தாவணும். தென்னை மட்டைதான் ஆபத்து. கவுத்தி விட்ரும். தென்னை மரம் மட்டும் ஏற மாட்டேன். பக்கத்து பக்கத்துல இருக்குற பனை மரங்கள்ல தாண்டுறது இன்னும் சுளுவா இருக்கும். என் வாழ்க்கையில ஒரே ஒரு தடவை கைதவறி கீழே விழுந்துருக்கேன். 1977-ல வளைஞ்ச பனையில என் நெஞ்சைக் கொடுத்துட்டேன். சிராய்ச்சு கீழே விழுந்து அடிபட்டுருச்சு. குணமாக நாளாச்சு. நல்லவேளை பொழச்சிக்கிட்டேன். அதேபோல, 2007-ல மலங்கொளவி தலையில கொட்டிருச்சு. அது சரியான விஷம். ஒரு கொளவியப் புடிச்சு கொன்னுட்டு கீழே வந்து ஜனங்ககிட்ட காட்டுனப்போதான் எல்லாரும் ஆச்சர்யப்பட்டுப் போனாக. அம்புட்டு விஷம் அது. மலைக்காட்டுல கூடுகட்டி வாழும். அப்பப்போ பனமரத்துல கூடுகட்டும். அப்புறம் மரங்கள்ல எறும்புகள் இருக்கும். கால்ல மண்ணெண்ணெய் தடவிட்டு போவேன். கொம்பேறிமூக்கன், பச்சப் பாம்புல்லாம் பனைமரத்து உச்சி ஓலையில நல்லா அடர்ந்து கெடக்குற ஓலைகளுக்குள்ள இருக்கும். நான் மேலே போனா உருவிட்டு கீழே விழும். ஒருநாளும் கடிச்சதில்லை. பனைமரம் தாய்மாதிரி. கைவிடாது.

முருகாண்டி
முருகாண்டி

அருவா, இடுப்புல இருந்து நழுவிரும். அருவாளை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் கீழே போட்டுறக் கூடாது. சாமிக் குத்தம். அதோட, மத்தவங்க அந்த அரிவாளைப் புடிக்கிறப்போ ஷேப் மாறும். அறுத்துப்புடும். ஆபத்து. நான் கீழே யாராச்சும் போனாங்கன்னா பேச்சுக் கொடுத்துட்டே இறங்குவேன். என்னதான் கெட்டியா பிடிச்சிக்கிட்டாலும் விலகி விழுந்துடுச்சுனா ஆபத்து இல்லையா... அதான்!

இப்படி எல்லாமே நுணுக்கமா கத்துக்க சில மாசங்கள் ஆகும். முதல் முறை ஏறுறப்போ அப்படி ஒரு வலி வலிக்கும். அப்புறம் அணையிறது சுளுவா இருக்கும்.

"பனைமரம் தாய்மாதிரி... கைவிடாது!"  - பார்வையற்ற பனையேறி முருகாண்டி

அப்புறம் பதநீர் கள்ளு எறக்குறவுக, சுரக்குடுக்கையையும் கொண்டு போவாங்க. சுரக்காய நல்லா பழுக்கப்போட்டு உள்ளே மண்ணை வெச்சு நல்லா கொஞ்ச நாள் காய வெச்சா சுரக்குடுக்கையோட வாய் அகண்டு கொடுத்திரும். மண்ணைத் தட்டிட்டா குடுக்கை தயாராகிடும். இடுப்புல கட்டிக்கிட்டு மேல போயி பதநீரும் கள்ளும் எறக்கிக் கொண்டு வர்றதுக்கு இது பயன்படும்... இப்பல்லாம் பதநீர் எறக்குனாக்கூட சந்தேகப்படுற அரசாங்கத்தால யாருமே சுரக்காய்கூட பயிர்போடுறது இல்லை. பதநீர் வித்து வாழ்ந்த குடும்பங்கள்கூட வேண்டாம்டா சாமினு விட்டுட்டாங்க. பனங்காடே சுருங்கிடுச்சு. என்னை இந்தத் தொழிலுக்கு கூப்பிடுறதே அரிதாப்போச்சு. 2009-க்குப் பிறகு யாரும் கூப்பிடுறதில்லை. ஓலைப்பாயோ, ஓலைப் பொட்டியோ மவுசு இல்லாமப் போச்சு. பனைமட்டையில நம்ம வீடுகள்ல வேலி போட்ட காலங்கள்லாம் மலையேறிப்போச்சு. முன்னாடில்லாம் எல்லாருமே பனமட்டைலதான் வேலி போடுவாங்க. கண்ணுக்கு அழகா குளிர்ச்சியா இருக்கும். நாகரிகம், அது இதுனு முள்ளுக் கம்பி வேலி வந்துருச்சு. பனமட்டை வேலிய மறந்துட்டாங்க. வேலியில நல்ல காசு கிடைக்கும்... ம்ம்ம்!” என்று பெருமூச்சுவிட்டபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

"பனைமரம் தாய்மாதிரி... கைவிடாது!"  - பார்வையற்ற பனையேறி முருகாண்டி

``அம்மாவுக்கு வயசு போயிடுச்சுங்கிறதால, நான் இளவட்டமா இருந்தப்போ பொண்ணு பார்த்து கட்டிக்கொடுக்க சொந்தத்துல பார்த்துச்சு. ஆனா, எனக்கு பொண்ணு யாரும் தரலை. என் மனைவி என்னோட உழைப்பையும் மனசையும் பார்த்து விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா. பக்கத்துல தாமரைக்குளத்துல தும்பு மில்லுல வேலை பார்த்த புள்ளை. அவளுக்கும் கால்ல சின்னதா ஊனம். கஷ்டப்படுற குடும்பம், நல்ல மனசுக்காரி. அழகுபட்ட புள்ளைனு சொல்லக் கேள்வி. கட்டினா நல்ல உழைப்பாளிய, குடும்பத்தைவெச்சு காப்பாத்துற ஆளா இருக்கணும்னு ஆளுவெச்சு எங்கிட்ட சொல்லிவிட்டா. அவ பேச்சுலயே நல்ல மனசு தெரிஞ்சுச்சு. நானும் விருப்பப்பட்டு கட்டிக்கிட்டேன். ரெண்டு பொம்பளப் புள்ளைங்க பொறந்துச்சுங்க. நாமதான் கல்விக் கண்ணை மூடிக்கிட்டோம். புள்ளைங்க கண்ணைத் திறந்துவிட்டுரணும்னு படிக்கவெச்சேன். மூத்தது இன்ஜினீயரிங் படிப்பை இப்பதான் முடிச்சுச்சு. இரண்டாவது புள்ளை நர்ஸிங் படிக்குது. ரெண்டும் நல்லா படிக்கிற புள்ளைங்கன்றதால நல்ல மனுஷங்க சில பேரு படிப்புக்கு உதவி செஞ்சாங்க. என் காலம் போயிடுச்சு. அதுக தலையெடுத்து அதுக வாழ்க்கையை நல்லவிதமா அமைச்சுக்க யாராச்சும் வேலைவாய்ப்புக்கு உதவுனாங்கன்னா கோடி புண்ணியமாப் போகும். ஏன்னா அப்பன் ஆத்தாவோட கஷ்டத்தை உணர்ந்து படிச்ச புள்ளைங்க!” - சொல்லும்போதே கண்கள் பனிக்கிறது முருகாண்டிக்கு!

மனைவி கலாதேவி தன் கணவரைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசினார்.

குடும்பத்தினருடன் முருகாண்டி
குடும்பத்தினருடன் முருகாண்டி

“இந்த மனுஷனால சும்மாவே உட்கார முடியாது. துறுதுறுனு ஏதாச்சும் பண்ணிக்கிட்டே இருப்பாரு. வீட்டுல எலெக்ட்ரிக் வேலை, ஓடு வேயுறதுன்னு நாம பயப்படுற வேலைய ஈஸியா செய்வாரு. அவருக்கு ராமநாதபுரம் போகுறதுக்குத்தான் ஆளு ஒத்தாசை வேணும். மாற்றுத்திறனாளி பாஸ் வெச்சிருக்காரு. ஊருக்குப் போயிட்டு ரெகுநாதபுரம் வந்து பஸ் ஸ்டாண்ட்ல இறங்கிட்டா... லெக்கு கண்டுபிடிச்சு வீட்டுக்கு கரெக்ட்டா வந்துடுவாரு. ரேஷன் கடைக்கு அவரே போயி பொருளுல்லாம் வாங்கிட்டு வருவாரு. நான் கயித்து கம்பெனியில வேலை பார்த்ததால ஓலைப்பாய் முடைவேன். இப்ப பனைத் தொழில் நசிஞ்சு போனதால வீட்டு வேலைகளோட நிப்பாட்டிக்கிட்டேன். பாவம் இந்த மனுஷன்... நூறு நாள் வேலைக்குப் போயி வம்பாடுபட்டு இப்போ எங்களைக் காப்பாத்துறாரு!” என்று தன் மனைவி கலாதேவி சொல்வதைக் கேட்டு புன்னகை பூக்கிறார் முருகாண்டி.

"பனைமரம் தாய்மாதிரி... கைவிடாது!"  - பார்வையற்ற பனையேறி முருகாண்டி

“ `ரெண்டு புள்ளைகளையும் ஏன் படிக்க வெக்கிறே... பேசாம வேலைக்கு அனுப்பிடு்’னு ஊர்க்காரவுக சொன்னாங்க. நம்ம காலம்தான் கஷ்டத்துல போச்சு. அதுகளாச்சும் நல்லா வாழட்டுமேனுதான் படிக்க வெச்சேன். இந்த வைராக்கியத்தோட அதுகளும் படிக்கிதுங்க!” என்கிறார் முருகாண்டி.

“அப்புறம் தம்பி! என்ன தலையில முடி இவ்ளோ நரைச்சிருச்சேனு பார்க்குறீங்களா? எனக்கு ஊரார் சொல்லித்தான் நரைச்சதே தெரியும். இப்பவும் திருக்கை மீனாட்டம்தான் இருக்கேன். தேன் ராட்டு தலையில தட்டி தேனீ மழை மாதிரி மண்டையில கொட்டிருச்சு தம்பி. அப்படியே நரைச்சுப் போயிடுச்சு. எம் புள்ளைங்களோட நடந்தா, ‘ஏட்டி...அது உங்க தாத்தனாடி?’னு பொண்டுங்க கேலி பேசுதுகளாம். என்ன கருமாயத்த சொல்ல!” - விட்டடித்தபடி பேசுகிறார் முருகாண்டி.

“அரசாங்கம் பனையேறிகளுக்கு ஏதாச்சும் உதவி பண்ணணும். அழிஞ்சு போன இந்தத் தொழிலாளர்களைக் காப்பாத்தணும். இதை நம்பி வேற பொழப்பைக் கத்துக்காத குடும்பங்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுதுக. நாங்க ரேஷன் அரிசியைத் தவிர வேற அரிசியை வாழ்க்கையில சாப்பிட்டதில்லை. பிள்ளைங்களைப் படிக்கவெச்சு கரையேத்துறது வம்பாடா போகுது” என்றவர் ரூட்டு மாறினார்.

“அட, விடுங்க தம்பி... கடவுள் இருக்கான்..! எங்களை சும்மா விட்ர மாட்டான். பனைமரத் தொழில் பழைய மாதிரி வந்துச்சுன்னா நாலு குடும்பத்துக்கு என்னால உதவ முடியும். இந்தாங்க இந்த டீயக் குடிங்க!” - உபசரிப்பில் அன்பைப் பொழிகிற முருகாண்டி பேச்சைத் தொடர்ந்தார்.

“உங்களுக்கு பனை ஏறுறதுக்கு ஒரு நுணுக்கம் சொல்லித் தர்றேன். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டம்தான்.

நாலு நாளு உந்தித் தள்ளி மேலே தொடர்ந்து ஏறுனா பாதி பனைக்கு நெஞ்சு காய்ச்சிடும். சில பேருக்கு தோல் தேய்ஞ்சுரும். செருப்பு தைக்கும் வார் இருக்குல்ல...அதை நெஞ்சுல போட்டு ஆரம்பத்துல பனையோட அணைஞ்சு ஏறுனீங்கன்னா, அதுவே உங்களை ஏத்திவிடுறது கணக்கா நடக்கும்.

அரை மணி நேரம் நெதமும் இப்படிப் பழகிட்டீங்கன்னா நாலாம் நாள் கைக்குள்ள பனைமரம் வந்துரும்!” என்கிறார் சிரித்தபடி.

அந்த ஏழையின் சிரிப்பில் இறைவன் தெரிந்தான்.