Published:Updated:

உசுரை கையில பிடிச்சுக்கிட்டிருக்கோம்! - முருகேசன் பெற்றோரைத் தாக்கியது வி.சி.க-வினரா?

முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவும், தாய் சின்னப்பிள்ளையும் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கண்ணகி - முருகேசன் வழக்கில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், முருகேசனின் வயதான பெற்றோர்மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் எழுப்பியிருக்கும் புகார், பல்வேறு விவாதங்களையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்காலனியில் வசித்த முருகேசனும், புதுக்கூர்பேட்டையில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த கண்ணகியும் 2003-ம் ஆண்டு ரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இது கண்ணகியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததால், அதே ஆண்டு இருவரின் கை கால்களையும் கட்டி, ஊர் மக்கள் முன்னிலையில் விஷம் கொடுத்து, ஆணவப் படுகொலை செய்து உடல்களை எரித்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில், 2021, செப்டம்பர் 24 அன்று, 12 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு தூக்குத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது கடலூர் சிறப்பு நீதிமன்றம்.

சின்னப்பிள்ளை
சின்னப்பிள்ளை

இந்தத் தீர்ப்பு வெளியாகி மூன்று வாரங்கள் கடந்திருக்கும் நிலையில், முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவும், தாய் சின்னப்பிள்ளையும் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சுந்தரமூர்த்தி, வரதராஜன், பாக்கியராஜ், சதீஷ்குமார், வெங்கடேஷ், ராஜீவ் காந்தி, வினோத்குமார் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணியை அறிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முருகேசனின் தாய் சின்னப்பிள்ளையைச் சந்தித்தோம். அப்போதுதான் ‘டிரிப்ஸ்’ போட்டு முடித்த நிலையில், சோர்வும் அழுகையுமாகப் பேசினார் சின்னப்பிள்ளை...

“ஆயுதபூஜை அன்னைக்கு சாயந்தரம் என் சின்ன மகன் சுந்தரபாண்டியன் தெருவுல வண்டியைக் கழுவிக்கிட்டிருந்தான்.

உசுரை கையில பிடிச்சுக்கிட்டிருக்கோம்! - முருகேசன் பெற்றோரைத் தாக்கியது வி.சி.க-வினரா?

அங்க வந்த வினோத்குமாரு, திடீர்னு எட்டி உதைச்சதுல, எம்மவன் கீழ விழுந்துட்டான். அஞ்சாறு பேரு திபுதிபுனு வீட்டுக்குள்ள புகுந்து, என்னை அசிங்க அசிங்கமா திட்டி தலைமுடியைப் புடிச்சிக்கிட்டு அடிச்சாங்க. அதுல சதீஷ்குமாருங்கிறவன், `எங்க ஆண்டை எல்லாத்தையும் ஜெயில்ல போட்டுட்டு நீ சந்தோஷமா சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கியாடி’னு கேட்டு என் காதுல ஓங்கி அறைஞ்சான். தடுக்க வந்த என் வூட்டுக்காரரையும் அடிச்சானுங்க. என்னத்தைச் சொல்றதுப்பா... பதினெட்டு வருஷமா கேஸை வாபஸ் வாங்குங்கன்னு சொல்லி அடிச்சவனுங்க, இப்போ தீர்ப்பு வந்தப்புறமும் அடிக்குறானுங்க. புள்ளையையும் பறிகொடுத்துட்டு, இப்போ உசுரைக் கையில பிடிச்சுக்கிட்டு இருக்கோம். எங்களை அடிச்சவங்க மேல போலீஸ் நடவடிக்கை எடுக்கலைன்னா, ஸ்டேஷன் வாசலிலேயே தீக்குளிச்சு தற்கொலை செஞ்சுக்குவோம்” என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவர் தலைமையில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது” என்று வெடிக்கிறார் முருகேசனின் சகோதரர் வேல்முருகன்... “ஆணவக் கொலை வழக்குல எங்களைச் சமாதானமா போகச் சொல்லி பிரச்னை செஞ்சுக்கிட்டிருந்த வரதராஜனும் சுந்தரமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவங்க. அவங்க தலைமையில்தான் அப்பா, அம்மா மேல கொலைவெறித் தாக்குதலை நடத்தியிருக்காங்க. கண்ணகி குடும்பத்தார்கிட்ட பல வருஷமா வேலை செய்யற இவங்கல்லாம் எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்கதான். எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டிய போலீஸ்காரங்களோ, `நீங்க ஊருல இருந்தா பிரச்னை வரும். எங்கேயாச்சும் போயிடுங்க’னு சொல்லி எங்க அண்ணன், தம்பிங்க மூணு பேரையும் ஊரைவிட்டு அனுப்பிட்டாங்க. நாங்க இல்லாததால இப்போ எங்க அம்மா, அப்பாவை அடிச்சிருக்காங்க.” என்றார் அச்சத்துடன்.

‘முருகேசனின் பெற்றோர்களைத் தாக்கியவர்களைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று டி.ஜி.பி-யிடம் மனு அளித்திருக்கும் வழக்கறிஞர் பொ.ரத்தினம் நம்மிடம், “இந்த வழக்கில் தமிழக அரசு, அரசியல்வாதிகள், காவல்துறை என மூன்று தரப்புகளுமே குற்றவாளி களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகின்றன. `எங்க ஆண்டைகளை ஜெயில்ல போட்டுட்டு சந்தோஷமா இருக்கீங்களா?’ என்று கேட்டுத்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். புகாரும் அப்படித்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வரியை மட்டும் நீக்கிவிட்டு, எஸ்.சி., எஸ்.டி வழக்கு வராதபடி எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைதுசெய்வதுடன், முருகேசனின் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும் வரை நான் ஓயப் போவதில்லை” என்றார் உறுதியுடன்.

விருத்தாசலம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் விஜய்ரங்கனோ, “கண்ணகி குடும்பத்தினருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. முருகேசனின் பெற்றோரை அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களே தாக்கியிருக்கிறார்கள். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதுடன் முடித்துக்கொண்டார்.

சாமிக்கண்ணு
சாமிக்கண்ணு

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக காட்டுமன்னார்குடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வனிடம் விளக்கம் கேட்டோம். குற்றச்சாட்டை மறுத்தவர், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுபவர்களில் ஒருவரான வரதராஜனிடம் ‘கான்ஃபிரன்ஸ் கால்’ மூலம் பேசவைத்தார்... “நான் குப்பநத்தம் பகுதி அ.தி.மு.க கிளைக்கழகச் செயலாளராக இருக்கிறேன். சுந்தரம் தி.மு.க உறுப்பினர். எனக்கும் முருகேசன் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருப்பது உண்மைதான். ஆனால், அந்தச் சம்பவம் நடந்தபோது நான் அங்கு இல்லை. ஆனால், என்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்” என்றார். தொடர்ந்து பேசிய சிந்தனைச் செல்வன், “இந்தச் சம்பவத்துக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கள் கட்சிக்காரர்களும் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிரான சதித்திட்டம் இது” என்றார்.

தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு