அலசல்
Published:Updated:

வீல்சேர்தான் வாழ்க்கை! - தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள்... மகன்களுக்காக மருகும் தாய்!

லோகநாதன்-கோமதி,  சூர்யா, விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
லோகநாதன்-கோமதி, சூர்யா, விஜய்

பசங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை வந்திருக்குங்கறதே, அவங்களோட 5 வயசுக்கு அப்புறம்தான் எங்களுக்குத் தெரியவந்துச்சு. அதுவரைக்கும் ரொம்ப நார்மலாத்தான் இருந்தாங்க.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தாங்கோட்டையில் வசிக்கும் லோகநாதன்-கோமதி தம்பதிக்கு சூர்யா (15), விஜய் (14) என இரண்டு மகன்கள். அன்பும் பாசமும் கொட்டிக்கிடக்கும் அவர்களின் சிறிய ஓட்டு வீட்டுக்குள் அதேயளவு சோகமும் அப்பிக்கிடக்கிறது. ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சூர்யாவுக்கும் விஜய்க்கும், அடுத்தடுத்து ஏற்பட்ட தசைநார் சிதைவு நோய் இந்தத் தம்பதியின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது. ‘இந்த பாதிப்பைக் குணப்படுத்த முடியாது’ என்று டாக்டர்கள் கைவிரித்த நிலையில், மகன்கள் உயிரோடு இருக்கப்போகும் மிகக்குறுகிய காலத்தை மகிழ்ச்சியுடன் கடத்த வேண்டும் எனப் பெற்றோர் இருவரும் அவர்கள் அருகிலிருந்து அன்பால் அரவணைத்துவருகின்றனர்.

சிறுவர்களின் நிலை குறித்து அறிந்ததும், அவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தோம். லோகநாதன், கோமதி இருவரும் சேர்ந்து, சிறுவன் விஜய்யைக் கழிவறைக்குத் தூக்கிச் செல்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தார். தனியார் மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலைக்குச் செல்லும் லோகநாதனுக்கு சொற்ப வருமானம்தான். அதை வைத்துத்தான் இவர்களின் குடும்பம் ஓடுகிறது. லோகநாதன் வேலைக்குச் சென்றுவிட்டால், மகன்கள் இருவரையும் கவனிக்கும் பொறுப்பு கோமதியின் தோள்களில்... சமையல் வேலைகளை முடித்துவிட்டு வந்த கோமதியிடம் பேசினோம்.

வீல்சேர்தான் வாழ்க்கை! - தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள்... மகன்களுக்காக மருகும் தாய்!

“பசங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை வந்திருக்குங்கறதே, அவங்களோட 5 வயசுக்கு அப்புறம்தான் எங்களுக்குத் தெரியவந்துச்சு. அதுவரைக்கும் ரொம்ப நார்மலாத்தான் இருந்தாங்க. சின்னவன் விஜய்க்குதான் மொதல்ல இதோட அறிகுறி தென்பட்டுச்சு. நல்லா விளையாடிக்கிட்டு இருக்கும்போதே, திடீர்னு சரிஞ்சு விழுந்துடுவான். தானா எந்திரிக்க முடியாது. நாங்க யாராவது போய்தான் அவனைத் தூக்கிவிடணும். அப்புறம் எழுந்து நடப்பான். உடம்பில் தெம்பு இல்லாமதான் இப்படி விழுறான்னு முதல்ல நினைச்சுக்கிட்டு இருந்தோம். அதுக்காக சத்து டானிக் வாங்கிக் கொடுத்தோம். நாளாக நாளாகதான் பிரச்னை பெருசாகி, ராத்திரி படுத்துத் தூங்கினவன், காலையில எந்திரிக்கவே முடியாம கஷ்டப்பட்டான். பதறியடிச்சு சென்னை அரசு குழந்தைகள் மருத்துவமனைக்குக் கூட்டிக்கிட்டுப் போனோம்.

விஜய்யைப் பரிசோதிச்சுப் பார்த்த டாக்டருங்க, ‘உங்க பையனுக்கு இருப்பது தசைநார் சிதைவு நோய். உடம்பில் இருக்கும் பழைய செல்கள் அழிஞ்சு புதிய செல்கள் நம்ம எல்லாருக்கும் உருவாகும். ஆனா, உங்க பையனுக்கு பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் வளரலை. இதை குணப்படுத்த வழியில்லை’னு சொன்னதும் இதயமே நொறுங்கின மாதிரி ஆகிருச்சு. அந்த அதிர்ச்சியிலருந்து மீண்டு வர்றதுக்குள்ள, அடுத்த ரெண்டு மாசத்துல பெரியவனுக்கும், சின்னவனை மாதிரியே அறிகுறிகள் ஏற்பட்டுச்சு. அவனுக்கும் அதே நோய் இருக்குன்னு தெரிஞ்சதும் எங்க மூச்சே நின்னுடுச்சு” என்று மௌனமாகினார்.

அவரை ஆசுவாசப்படுத்தி, மீண்டும் பேசச் செய்தோம். “இருந்தாலும் மனசு கேட்காம கையில இருந்த நகைகளையெல்லாம் அடகுவெச்சு பெங்களூரு, கேரளான்னு பெரிய பெரிய ஆஸ்பத்திரிகளுக்கெல்லாம் பசங்களைத் தூக்கிட்டு அலைஞ்சோம். எந்தப் பலனும் இல்ல. ஒரு சின்னப் பொருளைக்கூட அவங்களால எடுத்துக்க முடியாது. நாமதான் எடுத்துக் கொடுக்கணும். நைட்டு சின்னவனுக்குத் தூக்கம் வராது. அடிக்கடி பாத்ரூம் வரும். ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை ரெண்டு பேரையும் திருப்பிப் திருப்பி படுக்கவெக்கணும். ஒரு பக்கமா படுத்திருந்தா வலிக்குதுன்னு கத்துவாங்க.

இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாதுதான். ஆனா, பிசியோதெரபி பண்ணிக்கிட்டே வந்தா, கொஞ்சம் பாதிப்பைத் தடுக்கலாம்னு சொன்னாங்க. நாங்களும் கொடுத்துப் பார்த்தோம். செலவுகளை எங்களால சமாளிக்க முடியலை. இப்போ சமீபமா மரபணு சிகிச்சை வந்திருக்கு. அது மூலமா குணப்படுத்தலாம்னு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் சொன்னாரு. அதுக்கும் டெஸ்ட்டெல்லாம் எடுத்துப் பார்த்தோம். ஆனா, அதுக்கும் இருபது, இருபத்தஞ்சு வயசாகணுமாம். அதுவரைக்கும் இவங்க பொழைக்குறது கஷ்டம், முடிஞ்சவரைக்கும் பசங்களை சந்தோஷமா வெச்சுக்கோங்கன்னு சொல்லிட்டாங்க” என்றவர் விம்மி அழுதார்.

வீல்சேர்தான் வாழ்க்கை! - தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள்... மகன்களுக்காக மருகும் தாய்!

லோகநாதனிடம் பேசினோம். “அரசு சார்பில் சின்னவனுக்கு வீல் சேர் கொடுத்தாங்க. அதைப் பழகிக்கிட்டு இப்போ ரெண்டு பேரும் ஓட்டுறாங்க. வீல் சேர் வந்ததுக்கு அப்புறம் அப்பப்போ வெளிய கூட்டிட்டுப் போறோம். பெரியவன் நல்லா படிப்பான், அதனால, அவனை மட்டும் விடாம படிக்கவெச்சுக்கிட்டு இருக்கோம். பக்கத்துல இருக்கற அரசுப் பள்ளியில 10-ம் வகுப்பு படிக்கிறான். இடையில எனக்கு உடல்நிலை முடியாமப்போயிருச்சுன்னா பசங்களை கவனிக்கிறது ரொம்பவே சிரமமாகிடுது. என் பிள்ளைங்க உயிரோட இருக்கற வரைக்குமாவது, அவங்களை நல்லா பார்த்துக்கணும். அதுவரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகக் கூடாதுன்னுதான் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன். எந்த தாய்க்கும் தகப்பனுக்கும் எங்க நிலைமை வரக் கூடாது” என்றவருக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

ஏழ்மையுடன் போராடிவரும் லோகநாதன்-கோமதி தம்பதிக்கு, மகன்களின் பிசியோதெரபி சிகிச்சைகளுக்கான மருத்துவ உதவியும், இன்னொரு வீல் சேரும், நிம்மதியாக வாழ ஒரு வீடும் அத்தியாவசியத் தேவை. அரசு கவனிக்க வேண்டும்.