Election bannerElection banner
Published:Updated:

இந்துப் பெண்ணுக்கு கோயிலில் திருமணம் செய்துவைத்த இஸ்லாமியர் - தஞ்சையில் நெகிழ்ச்சி

பிரியங்கா
பிரியங்கா ( ம.அரவிந்த் )

`உனக்கு மாப்பிள்ளை பார்த்து நான்தான் திருமணம் செஞ்சுவெப்பேன்’ என அடிக்கடி கூறுவேன். `உங்களை விட்டா எனக்கு வேறு யார் இருக்கா?’ என பிரியங்கா கேட்கும். ஒரு நல்ல வரன் வந்தது. மாப்பிள்ளையும் நல்ல பையனா இருந்தார். உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்துட்டேன்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் இஸ்லாமியர் ஒருவர் தன் கடையில் வேலை பார்த்த இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை மகளாக வளர்த்து வந்ததுடன், தன் சொந்தச் செலவில் நகை, சீர்வரிசைப் பொருள்கள் வாங்கிக் கொடுத்து கோயில் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்துவைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மணமக்களுடன் ராஜா முஹம்மது
மணமக்களுடன் ராஜா முஹம்மது

ஒரத்தநாடு கடைத்தெருவில் ஹாஜீ ஷூமார்ட் என்ற பெயரில் 32 வருடங்களுக்கு மேலாக செருப்புக்கடை நடத்திவருபவர் ராஜா முஹம்மது. மதங்களைக் கடந்து மனிதநேயப் பண்பாளராகத் திகழ்ந்துவரும் இவர், அப்பகுதியில் பல்வேறு சமூக நற்செயல்களை ஈடுபாட்டுடன் செய்துவருகிறார்.

இந்நிலையில் அவருடைய செருப்புக் கடையில் பிரியங்கா என்ற பெண் வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்பா இறந்துவிட பிரியங்காவின் அம்மாவும் அவரை கவனிக்கத் தவறிவிட்டார். இதையடுத்து கடையில் வேலை பார்த்துவந்த பிரியங்காவை சொந்த மகளாக பாவித்து பாதுகாப்பாக கவனித்து வந்தார் ராஜா முஹம்மது.

இந்நிலையில் பிரியங்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து அவரின் சொந்தங்களின் அனுமதியுடன் தங்க நகை, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட சீர் வரிசைப் பொருள்களைச் சீதனமாகக் கொடுத்து திருமணம் செய்துவைத்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரான ராஜா முஹம்மது இந்துப் பெண்ணான பிரியங்கா - விஜயகுமார் திருமணத்தை ஒரத்நாட்டிலுள்ள விசாலாட்சி அம்மன் கோயிலில் தன் குடும்பத்தினருடன் சென்று தலைமை வகித்து இந்து முறைப்படியே திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இந்தத் தகவல் வெளியே தெரிந்து பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், மத நல்லிணக்கத்துக்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு என இதை உதாரணமாகக் கூறி சமூக ஆர்வலர்கள் தொடங்கி பலரும் அவரைப் பாராட்டிவருகின்றனர்.

திருமணம்
திருமணம்

இது குறித்து ராஜா முஹம்மதுவிடம் பேசினோம், ``கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக பிரியங்கா என்னோட கடையில் வேலை பார்த்துவருகிறார். ரொம்ப தங்மான பொண்ணு. குணத்திலும் அவளுக்கு நிகர் அவள்தான். தன் சம்பாத்தியத்துல வந்த வருமானத்துல தன்னோட அக்கா ரெண்டு பேருக்கும் பிரியங்கா கல்யாணம் செஞ்சுவெச்சுது. திடீரென அவர் அப்பா இறந்ததுக்கு இறுதி சடங்குக்கான செலவு எல்லாத்தையும் பார்த்துச்சு. இந்த மாதிரி நேரத்துல பொருளாதாரரீதியா பக்கபலமா இருந்தோம்.

சொல்லப்போனா தன் குடும்பத்தையே பிரியங்கா தூக்கி சுமந்தார்னு சொன்னா சரியா இருக்கும். அப்படிப்பட்ட மனசு கொண்ட பிரியாங்காவை அப்பாவுக்குப் பிறகு கவனிக்க ஆள் இல்லை. ஒரு அண்ணனா, அப்பாவா இருந்து எங்க குடும்பத்துல ஒருத்தரா நெனச்சு நாங்க அரவணைத்து வளர்த்து வந்தோம். `கூடப் பொறந்த அண்ணன் இருந்தாக்கூட இப்படி எல்லா கஷ்டத்துலயும் கூடவே நின்னிருக்க மாட்டாங்க’ என அடிக்கடி பிரியங்கா தன் அன்பை வெளிப்படுத்துவார்.

இஸ்லாமிய குடும்பத்தினர்
இஸ்லாமிய குடும்பத்தினர்

`உனக்கு மாப்பிள்ளை பார்த்து நான் தான் திருமணம் செஞ்சுவெப்பேன்’ என அடிக்கடி கூறுவேன். `உங்களை விட்டா எனக்கு வேறு யார் இருக்கா?’ என பிரியங்கா சொல்லும். இந்நிலையில் ஒரு நல்ல வரன் வந்தது. மாப்பிள்ளையும் நல்ல பையனா இருந்தார். உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்துட்டேன். இதற்கு பிரியங்கா நல்லா இருக்கணும் என நெனச்ச அவங்க சொந்தகாரங்ககிட்டேயும் முறைப்படி அனுமதி வாங்கினேன்.

அழைப்பிதழ் அச்சடிக்காமல் எல்லோருக்கும் வாய் மொழியாகவே அழைப்பு கொடுத்தேன். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த எங்க சொந்தங்களை சேர்ந்த 30 குடும்பங்களையும் திருமணத்துக்கு அழைச்சேன். இரண்டு பவுன் நகை, கட்டில், மெத்தை,சீர் வரிசைப் பொருள்கள் சீதனமாக வாங்கிக் கொடுத்து சிம்பிள் அண்ட் சூப்பராக திருமணம் நடந்துச்சு. எங்க கடையின் மற்ற ஊழியர்களும் தங்களால முடிஞ்ச உதவிய செஞ்சாங்க. இஸ்லாமியரான நான் முன்னே நின்று கோயிலில் திருமணத்தை நடத்திவெச்சதை எல்லோரும் ஆச்சர்யமா பேசுனாங்க. சிலர் என்னை ஆரத் தழுவி உங்களுக்கு பெரிய மனசுன்னு வாழ்த்தினாங்க.

சீர் வரிசை
சீர் வரிசை

பிரியங்காவிடம் பேசினோம்.`` கடைக்கு வேலைக்குப் போன என்னை ஒரு ஊழியரா பார்க்காம உசுரா பார்த்துக்கிட்டதோட , எனக்குக் கல்யாணமும் செஞ்சு அழகு பார்த்தாங்க. இன்னைக்கு இல்ல என்னைக்கும் இதை மறக்க மாட்டேன்" எனக் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தபடி கூறினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு