Published:Updated:

`யாரையும் எளிதில் சிரிக்க வைத்துவிடுவார்!’ - நடிகர் விவேக் நினைவுகளைப் பகிரும் பள்ளித் தோழன்

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

பள்ளியில் படிக்கும் காலத்தில் நடிகர் விவேக் பின்னால் எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அந்த அளவுக்கு எதையாவது நகைச்சுவையாகப் பேசிக்கொண்டே இருப்பார் என அவரது பள்ளித் தோழர் நினைவுகூர்கிறார்.

திரையுலகில் நகைச்சுவையில் தனக்கென தனி முத்திரை பதித்துச் செயல்பட்டவர், நடிகர் விவேக். பார்வையாளர்களைச் சிரிக்கவைத்ததுடன் சிந்திக்கவும் வைத்ததால் அவரை,`சின்ன கலைவாணர்’ என அழைத்தார்கள்.

நடிகர் விவேக் காலமானார். அவர் 2019-இல் விகடனுக்கு அளித்த நேர்காணல்... #RIPVivek  #Vivek

நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், தன்னைச் சுற்றிலும் வாழும் மக்களின் மீதும் அக்கறைகொண்டவராக நடிகர் விவேக் இருந்தார். சுற்றுச்சூழல் மீதும் அதிக அக்கறை அவருக்கு இருந்தது. அதனால், தான் செல்லும் நிகழ்ச்சிகளிலெல்லாம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தியதுடன், தானே மரக்கன்றுகளை நட்டுவந்தார்.

நடிகர் விவேக்கின் குடும்பம் அவரது இளம் வயதில் நெல்லையில் குடியிருந்தது. பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் அவரின் பெற்றோர் வாடகை வீட்டில் குடியிருந்தனர். பள்ளிக்கு அருகிலிருந்த அந்த வீட்டிலிருந்த விவேக், அங்கிருந்த மேரி சார்ஜென்ட் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். பின்னர் சாப்டர் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றிருக்கிறார்.

பள்ளிக்காலத் தோழர் சூசைராஜ்
பள்ளிக்காலத் தோழர் சூசைராஜ்

அவரோடு படித்த பள்ளித் தோழரான சூசைராஜ் பேசுகையில், ``நானும் விவேக்கும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலும் மேரி சார்ஜென்ட் பள்ளியில் படித்தோம். எங்கள் வீடு அருகருகே இருந்ததால், எப்போதும் ஒன்றாகவே சுற்றித் திரிவோம்.

பள்ளிக்குச் சென்று திரும்பிய பிறகு பெரும்பாலான நேரங்களில் நானும் அவரும் இந்தப் பகுதியிலுள்ள வாய்க்கால் கரையின் ஓரத்தில் நண்பர்களோடு விளையாடுவோம். சின்னப் பையனாக இருந்தபோதே அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு.

சிறு வயதில் விவேக் வாழ்ந்த வீடு இருக்கும் தெரு
சிறு வயதில் விவேக் வாழ்ந்த வீடு இருக்கும் தெரு

எதைச் செய்தாலும் அதில் நகைச்சுவை உணர்வு இருக்கும். யாரையும் எளிதில் சிரிக்கவைத்துவிடுவார். அதனால் பள்ளிக்கூடத்திலும் சரி, தெருவிலும் சரி... எப்போதும் அவருக்குப் பின்னல் பெரும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அவர் எல்லோரையும் சிரிக்கவைக்கும் திறமையைக் குழந்தையாக இருக்கும்போதே பெற்றிருந்தார்.

பெரிய நடிகரான பிறகும் அவர் என்னோடு தொடர்பில் இருந்தார். நான் சென்னைக்குப் போகும்போதெல்லாம் அவரைச் சந்திப்பேன். அதேபோல அவர் நெல்லைக்கு எப்போது வந்தாலும் என்னைப் பார்க்காமல் செல்ல மாட்டார்.

இறுதி அஞ்சலி
இறுதி அஞ்சலி

சிறு வயதில் ஏற்பட்ட நட்பை இப்போது வரையிலும் பாதுகாத்துவந்தார். என்னைப்போல அவருக்கு இங்கு மேலும் சில நண்பர்களும் இருக்கிறார்கள். இன்று என் நண்பர் இல்லை என்று நினைக்கும்போது நெஞ்சம் வேதனையால் துடிக்கிறது” என்றார் கண்ணீருடன்.

நடிகர் விவேக் மறைவையொட்டி அவர் வாழ்ந்த முருகன்குறிச்சி பகுதியில் நடிகர் விவேக் உருவப்படத்துக்குப் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு