Published:Updated:

`மீட்கப்பட்ட குளம்; உயிருக்கு ஆபத்து!’ - பாதுகாப்பு கேட்கும் எழுத்தாளர்

கறம்பக்குடியில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி இருந்த குளம் அரசால் மீட்கப்பட்டுத் தூர்வாரப்பட்டது. இது, தொடர்பாக, தன் உயிருக்கே ஆபத்து உள்ளதாகவும், தனக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரியும் எழுத்தாளர் துரைகுணா கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

துரைகுணா
துரைகுணா ( ஆர்.வெங்கடேஷ் )

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் துரைகுணா. இவர் குளந்திரான்பட்டுவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இருந்த சுமார் 8 ஏக்கர் குளத்தைக் காணவில்லை என்றும் காணாமல் போன குளத்தை மீட்க, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ``வேலைக்கு ஆட்கள் தேவை" எனக் கறம்பக்குடி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அவசர அவசரமாக குளந்திரான்பட்டுவில் விசிட் அடித்துச் சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆர்.வெங்கடேஷ்

தொடர்ந்து, குளம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அங்கு நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு சில தினங்களே இருந்த போதிலும், அவசர அவசரமாக நடவு செய்யப்பட்ட பயிர்களை அழித்துத் தூர்வாரினர். இதற்கிடையே, அரசு அதிகாரிகளுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக, குளந்திரான்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் பேகம் கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீஸார் துரைகுணா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தற்போது, துரைகுணா நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில்தான், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறி கறம்பக்குடி போலீஸாரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார். அதில்,  வெட்டுக்குளம் ஆக்கிரமிப்புகள் அரசால் மீட்கப்பட்டிருக்கிறது. அதற்கு நான்தான் காரணம் என்று கருதி என் மீது உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் இருவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. கரூர் மாவட்டத்தில் நடந்தது போன்ற சம்பவம் நடந்திராத வகையில் எனக்கும், என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

புகார் மனு
புகார் மனு
ஆர்.வெங்கடேஷ்

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``குளம் மீட்கப்பட்டது தொடர்பாக, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மனு அளித்துள்ளார். கொலைமிரட்டல் விடுத்ததாக ஏதும் துரைகுணா குறிப்பிடவில்லை. உள்ளூர் அரசியல் பிரமுகர்களால் ஆபத்து உள்ளதாக 2 பேர் பெயரை அதில் சேர்த்துள்ளார். அவர்களுக்கும் அந்தக் குளத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனினும் அவர்களிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.