Published:Updated:

சொந்த மக்களையே கொலை செய்யும் மியான்மர் ராணுவம்!

மியான்மர்
பிரீமியம் ஸ்டோரி
News
மியான்மர்

உயிரோடு எரிக்கப்பட்ட ஆண்கள்... கண்கள் பிடுங்கப்பட்ட உடல்கள்...

அந்தச் சிறுமி பெருங்குரலெடுத்துக் கதறும் வீடியோ காட்சியைப் பார்க்கும்போதே நெஞ்சம் பதைபதைக்கிறது. கழுத்தறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தன் தாத்தாவின் உடலைப் பார்த்தபடியே, “ஐயோ... யாராச்சும் எங்க தாத்தாவைக் காப்பாத்துங்களேன்... என்னைவிட்டுப் போக மாட்டேன்னு சொன்னியே தாத்தா...” என்று பர்மிய மொழியில் கதறுகிறாள் அந்தக் கிராமத்துச் சிறுமி. அடுத்தடுத்த வீடியோக்களில், அந்தக் கிராமத்திலிருக்கும் ஆண்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு, உடல்கள் விவசாய நிலங்களில் புதைக்கப்படும் காட்சிகளும், கை கால்கள் வெட்டப்பட்டு பலர் காடுகளில் தூக்கியெறியப்படும் காட்சிகளும் உலக நாடுகளைப் பதறச் செய்திருக்கின்றன. நம் அண்டை நாடான மியான்மரில்தான் இந்தக் கொடூரங்கள் அரங்கேறியுள்ளன. இதைச் செய்தது ஒன்றும் எதிரி நாட்டு ராணுவம் அல்ல... மியான்மரின் ராணுவமே தன் சொந்த மக்களை இப்படிக் கொன்று குவித்திருக்கிறது!

2021, பிப்ரவரி 1-ம் தேதி மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் தலைமை யிலான தேசிய ஜனநாயக லீக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, மியான்மரில் துப்பாக்கிமுனையில் அதிகாரத்தைக் கைப்பற்றியது ராணுவம். தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகக் கூறி அரச ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஊடகங் கள், சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. பொதுவெளியில் ஐந்து பேருக்கு மேல் நடமாட, தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சொந்த மக்களையே கொலை செய்யும் மியான்மர் ராணுவம்!

ராணுவ ஆட்சியை ஏற்காத மக்கள், அகிம்சை வழிப் போராட்டங்களைத் தொடங்கினார்கள். இப்படி அமைதியான முறையில் போராடிய மக்கள்மீதுதான் கடந்த மார்ச் மாதத்திலிருந்தே கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்திருக்கிறது மியான்மர் ராணுவம். அது இப்போதுவரை நின்றபாடில்லை. கடந்த மார்ச் மாதம் மியான்மரின் 76-வது ஆயுதப்படை தினத்தன்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் 114 பேரைச் சரமாரியாகச் சுட்டுக்கொன்றது ராணுவம். ராணுவ ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் 45 குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 600 பேர், ஜூலை மாதத்தில் 900 பேர் என உயர்ந்துகொண்டே சென்றது. இவற்றுக்கெல்லாம் ஐ.நா சபை, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது.

ராணுவத்தின் கொடூரங்கள் அதிகரிக்கவே... ஒருகட்டத்தில் மக்களில் ஒரு பகுதியினர் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார்கள். கடந்த மே 6 அன்று மியான்மர் கவிஞரும், அரசியல் கைதியு மான மவுங் டின் திட் தலைமையில், திரண்ட ஏராளமான இளைஞர்கள் `மக்கள் பாதுகாப்புப் படை’ என்ற போராளிக்குழுவாக உருவெடுத்தனர். பல இடங்களில் கிராம மக்களுடன் இணைந்து, ராணுவத்தினருக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மக்களின் அகிம்சைப் போராட்டங்களுடன், ஆயுதப் போராட்டமும் ராணுவ ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தவே, ராணுவத் தின் தாக்குதல் இன்னும் மூர்க்கமாகத் தொடங்கியிருக்கிறது.

டிசம்பர் 8-ம் தேதி, சகெயிங் கிராமத்தை முற்றுகையிட்ட ராணுவத் தினர், 14 வயதுச் சிறுவன் உட்பட 11 பேரின் கை கால்களைக் கட்டி உயிரோடு தீவைத்திருக்கின்றனர். இதில், 11 பேரும் எரிந்து சாம்பலாகினர். இந்தக் கொடூரம் நிகழ்ந்து சில வாரங்களே ஆகியிருக்கும் சூழலில், தற்போது ராணுத்தினரால் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மியான்மரின் மத்தியப் பகுதியில் இருக்கும் கெனி நகரம், போராட்டங்கள் அதிக அளவில் நிகழும் பகுதி. கடந்த ஜூலையில் அந்த நகரத்தையொட்டிய கிராமங்களுக்குள் புகுந்த ராணுவத்தினர், 40-க்கும் மேற்பட்ட ஆண்களைக் கொடூரமாகச் சித்ரவதை செய்து, படுகொலை செய்திருக்கின்றனர். அந்த வீடியோ காட்சிகள் சர்வதேச ஊடகங்களிலும் சமூக வலைதளங் களிலும் வெளியாக, அதைப் பார்த்தவர்கள் பீதியில் உறைந்திருக்கிறார்கள். ‘யின்’ கிராமத்தில் 14 ஆண்களை இழுத்துச் சென்ற ராணுவத்தினர், அவர்களைப் பல மணி நேரம் சித்ரவதை செய்து, கற்களால் அடித்தே கொலை செய்துள்ளனர். அவர்களின் உடல்கள் விவசாய நிலங்களிலும், அடர்ந்த காடுகளிலும் தூக்கியெறியப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 அன்றும் மிக மோசமான படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது ராணுவம். கயா மாகாணம், மோசோ கிராமத்தில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என 30 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம், அவர்களின் உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோக்களில் மக்கள் பலரின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டும், விரல்கள் வெட்டப்பட்டும் கிடக்கும் காட்சிகள் ஹிட்லரின் சித்ரவதை முகாம்களை நினைவு படுத்துகின்றன.

சொந்த மக்களையே கொலை செய்யும் மியான்மர் ராணுவம்!

இந்தச் சம்பவங்களை நேரில் பார்த்த பெண்களின் சாட்சியங்களும் வெளியாகி யிருக்கின்றன... ``எங்கள் கிராமத்துக்குள் புகுந்த ராணுவத்தினர் ஆண்களை மட்டும் தனியாகப் பிரித்து அவர்களின் கை கால்களை இறுக்கமாகக் கட்டினார்கள். அவர்களைக் கற்களாலும் துப்பாக்கிகளாலும் தாக்கினார்கள். நாங்கள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவர்களை விடவில்லை. `தொந்தரவு செய்தால் உங்களையும் கொன்றுவிடுவோம்’ என்று மிரட்டினர். எதுவும் செய்ய முடியாத நாங்கள் தலைகுனிந்து நின்றோம்” எனத் தங்கள் குடும்ப ஆண்களை இழந்த கிராமப் பெண்கள் கண்ணீருடன் கதறியிருக்கிறார்கள்.

இதற்கிடையே ஐ.நா சபையால் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் `மியான்மரில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து 10,700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் 1,300-க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லா யிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு அகதி களாக வெளியேறியிருக்கிறார்கள்’ என்று அறிவித் துள்ளது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

`அமைதியைவிட உயர்வான மகிழ்ச்சி, இந்த பூமியில் வேறொன்றும் இல்லை’ என்று போதித்த புத்தரின் தேசத்தில் அமைதி திரும்புவது எப்போது?’