Published:Updated:

சயானின் ஐபோனில் இருப்பது என்ன? - கொடநாடு விவகாரத்தில் விலகாத மர்மங்கள்...

சயான்
பிரீமியம் ஸ்டோரி
சயான்

இப்போவரைக்கும் என்கிட்ட இருந்து நாலு செல்போன்களைப் பறிச்சிருக்கீங்க. அதுல எந்த செல்போனையும் கோர்ட்டுலயும் ஒப்படைக்கலை; என்கிட்டயும் கொடுக்கலை.

சயானின் ஐபோனில் இருப்பது என்ன? - கொடநாடு விவகாரத்தில் விலகாத மர்மங்கள்...

இப்போவரைக்கும் என்கிட்ட இருந்து நாலு செல்போன்களைப் பறிச்சிருக்கீங்க. அதுல எந்த செல்போனையும் கோர்ட்டுலயும் ஒப்படைக்கலை; என்கிட்டயும் கொடுக்கலை.

Published:Updated:
சயான்
பிரீமியம் ஸ்டோரி
சயான்

விலகாத மர்மங்களோடும், பரபரப்பு திருப்பங்களோடும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிலரைப் பதற்றத்திலும், சிலரை எதிர்பார்ப்பிலும் வைத்திருக்கிறது. காரணம், சயான் அளித்த மூன்று மணி நேர ரகசிய வாக்குமூலம். இந்தநிலையில், ‘‘கொடநாடு சம்பவத்தின் முக்கிய ஆதாரங்களை அழிக்கவே, சயானின் நான்கு செல்போன்களும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு மாயமாக்கப்பட்டுள்ளன’’ என்று சயான் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு, இந்த வழக்கில் அனலைக் கூட்டியிருக்கிறது!

கொடநாடு வழக்கின் முதல் குற்றவாளியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேர்க்கப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த ஐந்தாவது நாளிலேயே அவர் வாகன விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு வாகன விபத்தில் மனைவி, மகளைப் பறிகொடுத்து படுகாயங்களுடன் உயிர் பிழைத்த இரண்டாவது குற்றவாளியான சயானை முதல் குற்றவாளியாகச் சேர்த்தது காவல்துறை. தற்போது வரை ‘சயான் வகையறா’ என்றே இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மற்ற ஒன்பது பேரையும் அழைக்கிறது நீதிமன்றம்.

சயானின் ஐபோனில் இருப்பது என்ன? - கொடநாடு விவகாரத்தில் விலகாத மர்மங்கள்...

கடந்த 2019-ல் ஜாமீனில் வெளியில் வந்த சயான், வாளையார் மனோஜ் இருவரும் சேர்ந்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து, ‘‘எடப்பாடி பழனிசாமி சொன்னதன் பேரிலேயே இந்தச் சம்பவத்தை செய்தோம்’’ என அப்போதைய முதலமைச்சர் மீதே கொலைக் குற்றத்தைச் சுமத்திப் பேட்டியளித்தது, நாடு முழுக்கப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இருவரும் கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டமும் பாய்ந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகச் சிறையிலிருந்த சயானுக்கு, கடந்த ஜூலை மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவரும் சயான், கடந்தமுறை விசாரணையின்போது நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தபோதுதான் மாயமான செல்போன் சர்ச்சை வெடித்தது.

‘‘இப்போவரைக்கும் என்கிட்ட இருந்து நாலு செல்போன்களைப் பறிச்சிருக்கீங்க. அதுல எந்த செல்போனையும் கோர்ட்டுலயும் ஒப்படைக்கலை; என்கிட்டயும் கொடுக்கலை. என்னோட செல்போனைத் திருப்பிக் கொடுக்கலைன்னா நீதிமன்றத்துல முறையிடுவேன்’’ என்று செய்தியாளர்கள் முன்னிலையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சயான்.

சயானின் ஐபோனில் இருப்பது என்ன? - கொடநாடு விவகாரத்தில் விலகாத மர்மங்கள்...

செல்போன் மாயமானது பற்றி சயான் தரப்பு வழக்கறிஞர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்தது 2017, ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு. தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணையைத் தொடங்கிய ஐந்தாவது நாளான ஏப்ரல் 28-ம் தேதி, சேலம் ஆத்தூரில் நடந்த வாகன விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். மறுநாளான 29-ம்‌ தேதி அதிகாலை 5:30 மணிக்கு காரில் மனைவி, மகளுடன் சென்றுகொண்டிருந்த சயான், பாலக்காடு அருகில் விபத்துக்குள்ளாகி அவரின் மனைவி, மகள் இருவரும் உயிரிழந்தார்கள். படுகாயத்துடன் உயிர்பிழைத்த சயானிடம் காவல்துறை கேட்ட முதல் கேள்வி, ‘உன் செல்போன் பாஸ்வேர்டைச் சொல்லு’ என்பதுதான். விபத்தில் தனது ஐபோன் காணாமல் போய்விட்டதாகத்தான் சயான் முதலில் நினைத்திருந்தார். ஆனால், எஸ்.ஐ ஒருவர் பாஸ்வேர்டைக் கேட்டபோதுதான், போன் அவர்களிடம் இருப்பது சயானுக்குத் தெரிந்தது. கொடநாடு சம்பவத்துக்கு முன்னர் சயானுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமியுடன், தான் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை கனகராஜ் அனுப்பியிருக்கிறார். அவை அந்த போனில்தான் இருக்கின்றன. மேலும், சில அ.தி.மு.க நிர்வாகிகள் சயானுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் அதில் இருக்கின்றன. கடந்த ஆட்சியில் அவற்றை காவல்துறையினர் அழித்துவிட்டனர்” என்றார்.

நம்மிடம் பேசிய சயான் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான விஜயன், ‘‘சயானின் செல்போன் விவகாரத்தில் காவல்துறை செய்திருப்பது அப்பட்டமான உரிமை மீறல். 2019 டெல்லி பேட்டிக்குப் பிறகு அழைத்துவரப்பட்ட சயானிடமிருந்து இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்கள், ஒரு பேசிக் மாடல் போன் என மூன்று போன்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தார்கள். அவை என்னவாகின என்று தெரியவில்லை. சயானிடமிருந்து பறிமுதல் செய்த செல்போன்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது ஏன்... சயானிடமும் திரும்பக் கொடுக்காதது ஏன் ஆகிய கேள்விகளுக்கான விடையைத் தேடினாலே பல மர்ம முடிச்சுகள் அவிழும்’’ என்றார்.

விஜயன்
விஜயன்

பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், ‘‘விபத்து நடந்த இடத்திலிருந்து பாலக்காடு போலீஸார் சயானின் ஆப்பிள் ஐபோனைக் கைப்பற்றியிருந்தார்கள். அதில் ஏகப்பட்ட ஆதாரங்கள் இருந்தன. இதைத் தெரிந்துகொண்ட தமிழக காவல்துறை உயரதிகாரி ஒருவரும், அப்போதைய அமைச்சர் ஒருவரும் கேரளா போலீஸிடம் டீல் பேசி அந்த போனை கைப்பற்றிவிட்டார்கள்’’ என்றார்.

இந்தநிலையில்தான், செப்டம்பர் 2-ம் தேதி ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 10 நிமிடங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அக்டோபர் 1-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி சஞ்சய் பாபா. இந்த விசாரணையில் செல்போன் விவகாரத்தை சயான் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் அவர் எதுவும் பேசாதது வழக்கின் மர்மத்தை மேலும் கூட்டியிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism