Published:Updated:

`தன் அய்யனை இசையால் குளிப்பாட்டுகிறான்!’ - கமல் பாராட்டிய நாதஸ்வரக் கலைஞர் பில்லப்பன்

 கே.பில்லப்பன்
கே.பில்லப்பன்

சிவகங்கை மாவட்டம் பாகனேரிதான் பில்லப்பனின் சொந்த ஊர். பல பெரிய கலைஞர்கள் தன்னை பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எந்தப் பிரஞையும் இல்லாமல் இருந்தார்.

``தனித்ததோர் ஆலயம்!

ஆட்கூட்டம் அதிகமில்லாத

ஒரு தலம்.

ஒரு தனிக் கலைஞன்,

தன் இசையை

வணிக நோக்கு எதுவுமின்றி,

தன் அய்யனை

இசையால்

குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றான்.

இவன்

ஆழ்மனக் கவலைகளை விசாரித்தறிவார்

இல்லாததால்,

தன் இசைக்கருவியை

தன் சோகத்தின், பக்தியின், விரக்தியின்

கழிப்பிடமாகக் கருதுகிறான்.

அவன் தன்

ஆலயமும்

அதுவே! "

- கமல்ஹாசன்

 கே.பில்லப்பன்
கே.பில்லப்பன்
நாதஸ்வரக் கலைஞர் பாகநேரி கே.பில்லப்பன் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வரிகள்தான் இவை.

தம் துறையில் அளப்பரிய ஆற்றல்கொண்ட பல கலைஞர்கள் சமூகத்தின் வெளிச்சம் படாமல், அவர்தம் திறமைக்கேற்ற ஊதியமில்லாமல் இந்நிலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவை குறித்த எந்தக் குற்றச்சாட்டுகளும் அவர்களுக்கு இருந்ததில்லை. அவர்களின் திறமை என்றாவது ஒருநாள் பிரபஞ்ச வெளியில் அறியப்பட்டு கொண்டாடப்படும். அப்படித்தான் பாகநேரி கே.பில்லப்பனின் திறமை இந்த ஊரடங்கு காலத்தில் பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலம் ஒருவர் இந்தத் தனி இசைக்கலைஞனைக் கொண்டாடுவதும் அதனால்தான். பில்லப்பனின் விலாசம் கண்டு அவரைச் சந்தித்துப் பேசினோம்.

சிவகங்கை மாவட்டம் பாகனேரிதான் பில்லப்பனின் சொந்த ஊர். பல பெரிய கலைஞர்கள் தன்னை பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எந்தப் பிரஞையும் இல்லாமல் இருந்தார்.

``தலைமுறை தலைமுறையா நாதஸ்வரம் வாசிக்குற குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனக்கு 10 வயசா இருக்கும்போதே நாதஸ்வரத்தைக் கையில புடிச்சு வாசிக்கக் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். 45 வருஷமா வாசிச்சுக்கிட்டு இருக்கேன்.

 கே.பில்லப்பன்
கே.பில்லப்பன்

இந்த 45 வருஷமா என்னோட இன்பம், துன்பம், தொழில், கலை எல்லாமே இந்த நாதஸ்வரமும் இசையும்தான். எனக்கு ஒரு மகன் இருக்கான். அவனும் நாதஸ்வரம்தான் வாசிக்கிறான். கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், சாமி புறப்பாடு, சபா கச்சேரிகள்... இப்படிப் பல இடங்களில் நாதஸ்வரம் வாசிப்போம். நாதஸ்வரம் வாசிக்கிறதன் வழியா கிடைக்கிற சொற்ப வருமானத்தை வச்சுதான் இத்தனை காலமா குடும்பத்த ஓட்டிக்கிட்டு இருக்கோம்.

Vikatan

இப்போ ஊரடங்குனால அதுவும் இல்லாமப் போச்சு. எல்லா தொழிலாளிகள் மாதிரியும் என் நிலைமையும் இப்ப சிரமம்தான். இந்த வருஷம் பூரா இந்த சிரமத்தோடதான் எங்களோட வாழ்க்கை ஓடும். எனக்கு மட்டும் சொல்லல... பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க இப்படியெல்லாம் நடக்கும்னு. இந்த ஊரடங்கு காலத்துல எல்லோரும் சிரமத்துலதான் கிடக்காங்க. நிறைய பேரு தங்களோட கஷ்டத்த வெளிய காட்டிக்கிறதே இல்லை.

தன் குழுவினருடன்  கே.பில்லப்பன்
தன் குழுவினருடன் கே.பில்லப்பன்

இந்த 4 மாசமும் காலையிலேயே பாகனேரில இருக்குற சிவன் கோயிலுக்கு போய் நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பிச்சிருவேன். `ஆண்டவா நீதான் எங்க எல்லாரையும் காப்பாத்தணும்'னு கடவுள் மேல பாரத்தையெல்லாம் எறக்கி வச்சிருவேன். நாதஸ்வரத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சதும் ஒரு நிம்மதியும் நல்லது நடக்கும்கிற ஒரு நம்பிக்கையும் கிடைக்கும். அப்படி நான் வாசிச்சதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டு இருக்கார். அதுதான் நிறைய பேர் பாத்துருக்காங்க போல.

கமல்ஹாசன் சார் நான் நாதஸ்வரம் வாசிக்குற அந்த வீடியோ பார்த்துட்டு 10 நிமிஷம் போன்ல எங்கிட்ட பேசினார். `ரொம்ப நல்லா நாதஸ்வரம் வாசிக்கிறீங்க, கவலைப்படாதீங்க... எல்லாம் சீக்கிரமே சரியாகிரும்னு' ஊக்கப்படுத்துனாங்க. ஒரு கலைஞனோட வலியை இன்னொரு கலைஞன்தான் உணரமுடியும். அந்த வகையில கமல் சார் ஊக்கப்படுத்துனது வாழ்க்கை மேலையும் என் தொழில் மேலையும் இன்னும் கூடுதலான நம்பிக்கை கொடுத்துருக்குனுதான் சொல்லணும்.

தன் கஷ்டத்தை மறைச்சுகிட்டு கலையைக் காப்பாத்திக்கிட்டு இருக்காங்க பல கலைஞர்கள். அவர்களோட ஒரே நம்பிக்கை, விடியல், உதயம் இது எல்லாமே அவங்க உசுருக்கு உசுரா நேசிக்கிற அவங்களோட கலைதான். அதுக்காகவே எங்க வாழ்க்கையை ஒப்புக் கொடுத்துருக்கோம்.
கே.பில்லப்பன்

நாதஸ்வரம் உட்பட எல்லா கலைகளுக்கும் மக்கள் மத்தியில மவுசு குறைஞ்சுகிட்டு வருது. இதுதான் உண்மையான நம்முடைய பாரம்பர்ய மக்களிசை. நிறைய பேரு அதைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. எல்லோருமே இந்த மண்ணின் இசையை ஆதரிக்கணும். பல தனி இசைக்கலைஞர்கள் என்னைப் போலவே பல சிரமங்களுக்கிடையிலையும் தங்களோட கலையைக் கைவிடாம இருக்காங்க. அரசாங்கம் சார்புல நாட்டுப்புற கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் எதுவுமே எங்களுக்குக் கிடைக்கல.

கஷ்டப்படுறோம். ஆனா, அதை வெளியே காட்டிக்க மாட்டோம். தன் கஷ்டத்தை மறைச்சுகிட்டுதான் கலையைக் காப்பாத்திக்கிட்டு இருக்காங்க பல கலைஞர்கள். அவர்களோட ஒரே நம்பிக்கை, விடியல், உதயம் இது எல்லாமே அவங்க உசுருக்கு உசுரா நேசிக்கிற அவங்களோட கலைதான். அதுக்காக எங்க வாழ்க்கையை ஒப்புக் கொடுத்துருக்கோம்" என்கிறார்.

பெரும் சோகம் நிரம்பியிருந்த பில்லப்பனின் குரலில் தன் கலையைக் கைவிட்டுவிடக் கூடாத கவனமும் நேர்மையும் அழுத்தமாக இருந்தது.

அடுத்த கட்டுரைக்கு