Published:Updated:

ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழும் குழந்தைகளை மீட்க 6 கருவிகள்... நாகை மெக்கானிக்கின் முயற்சி!

குழந்தைகளை மீட்க உதவும் கருவிகள்
குழந்தைகளை மீட்க உதவும் கருவிகள்

``நாகேந்திரனின் இந்த முயற்சியை மத்திய, மாநில அரசுகள் பரிசோதனை செய்து அங்கீகரிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கும் அப்பகுதி மக்கள், அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழக்கும் குழந்தைகளை உயிருடன் மீட்க ஆறு வகையான நவீன கருவிகளை வடிவமைத்திருக்கிறார் நாகையைச் சேர்ந்த மெக்கானிக் நாகேந்திரன்.

விழுப்புரம் மதுமிதா, குஜராத் கிர்டான் ப்ரனாமி, ஆந்திரா தரவத் மகேஷ், ராஜஸ்தான் அன்கிட்... இப்படி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீட்க முடியாமல் உயிரிழந்த குழந்தைகளின் பட்டியலில் இறுதியாக இணைந்த திருச்சி சுர்ஜித் பெயரை நம்மால் மறக்க முடியாது.

குழந்தைகளை மீட்க உதவும் கருவிகள்
குழந்தைகளை மீட்க உதவும் கருவிகள்

இந்தியா தொழில்நுட்பத்தில் மேலோங்கி இருந்தாலும், `உலகை ஆளும் டெக்னாலஜி நபர்கள் பெரும்பாலும் இந்தியர்கள்தாம்' என மார்தட்டிக்கொண்டாலும், போர்வெல் குழாயில் விழும் குழந்தைகளை மீட்க இரண்டே வழிகளைதான் பின்பற்றுகிறோம். ஒன்று, கயிறு கட்டிக் குழந்தையை இழுப்பது. இரண்டாவது, விழுந்த போர்வலுக்கு அருகே இன்னொரு ஆழ்துளை தோண்டி ஆட்களை அனுப்பி மீட்பது. அவ்வளவுதான்.

வளர்ந்து வரும் நாடுகளில் இதுபோன்ற சிக்கலான விஷயங்களுக்கான ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கிக் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறார்கள். ஆனால், நம் நாட்டிலோ இன்னமும் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சிக்குபவர்களையும், ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுபவர்களையும் மீட்க பழைய முறைகளையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறு சிறு கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட அவை முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுவதில்லை.

இப்படியான ஒரு சூழ்நிலையில், இந்தியாவில் ஆழ்துளைக் கிணறு மரணங்களைத் தடுக்க, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த மெக்கானிக் நாகேந்திரன் ஆறு வகையான கருவிகளை வடிவமைத்துள்ளார். அவரிடம் பேசினோம்.

``விவசாயத்துக்காகத் தோண்டப்படும் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாத காரணத்தால், குழந்தைகள் ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். அவ்வப்போது ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகளின் உயிரிழப்புகளை வெறும் செய்தியாகவே கடந்து செல்லும் நிலையில், அதற்குத் தீர்வளிக்கும் விதமாக அக்குழந்தைகளை மீட்கும் அதிகாரபூர்வ கருவியை யாராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த கடைசிக் குழந்தை திருச்சியைச் சேர்ந்த சுர்ஜித்தாக இருக்க வேண்டும் என்று சபதமேற்று குழந்தையை மீட்கும் கருவியை வடிவமைத்துள்ளேன்" என்கிறார் நாகேந்திரன்.

வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையில் வெல்டிங் டிங்கரிங் வொர்க் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார் நாகேந்திரன். இவர் ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்பதற்காக ஏதாவது கருவி செய்ய வேண்டும் என்று கடந்த 3 மாதங்கள் இரவு பகலாக ஈடுபட்டு 6 வகையான கருவிகளை உருவாக்கியுள்ளார். இதற்குக் கொரோனா ஊரடங்குக் காலம் உதவியாக இருந்ததாகவும் கூறுகிறார். தான் கண்டுபிடித்த ஆறு வகையான கருவிகள் மூலம், குழந்தையை மீட்கும் முறையை விவரிக்கிறார் நாகேந்திரன்.

``முதலில், ஆழ்துளைக் கிணற்றில் குழந்தையை மீட்பதற்கான கருவியை பக்கவாட்டில் செலுத்தி குழந்தை கீழே இறங்காமல் தடுக்க வேண்டும். அந்தக் கருவியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குழாயில் உள்ள குழந்தையின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை கம்ப்யூட்டரில் அறிந்து குழந்தையை எளிதாகத் தூக்க முடியும்.

பின்னர், கைகள் போன்ற மீட்புக் கருவியை உள்ளே செலுத்தி குழந்தையின் தலைபாகத்தைப் பிடித்தவாறு குழந்தையை மேலே தூக்க வேண்டும். தலை பக்கவாட்டில் உரசி பாதிப்படையாமல் இருக்க தடுப்பும் உள்ளது. கைகள், கால்கள் விரியாமல் கட்டிவிடவும் ஒரு கருவி உள்ளது.

ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழும் குழந்தைகளை மீட்க 6 கருவிகள்... நாகை மெக்கானிக்கின் முயற்சி!

குழந்தை நேராக விழுந்திருந்தாலும் சரி, தலைகீழாக விழுந்திருந்தாலும் சரி, கைகளை மேலே வைத்தவாறு விழுந்திருந்தாலும் சரி... எந்த நிலையிலும் குழந்தையை மீட்பதற்கான 6 கருவிகளையும் தனித்தனியாக வடிவமைத்துள்ளேன். இதனால் குழந்தைக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல், குழந்தை எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் உயிருடன் மீட்க முடியும்.

இந்தக் கருவி வடிவமைப்பதற்காக ரூ. 20,000 மட்டுமே செலவானது. இந்தக் கருவியை அரசு சோதனைக்கு உட்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். அரசு தரப்பில் மாற்று யோசனைகள் சொன்னாலும் அதற்கேற்ப வடிவமைக்க முடியும்.

மேலும், கிணற்றில் விழுந்த மான், ஆடு, மாடு அல்லது ஏதேனும் பொருள் போன்றவற்றை மீட்கவும் புதுக் கருவி செய்யும் முயற்சில் ஈடுபட்டுள்ளேன்" என்றார்.

``நாகேந்திரனின் இந்த முயற்சியை மத்திய, மாநில அரசுகள் பரிசோதனை செய்து அங்கீகரிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கும் அப்பகுதி மக்கள், அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, மதுரை, திருச்சி பகுதிகளைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தவர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான சிறிய அளவிலான கருவிகளை ஏற்கெனவே வடிவமைத்துள்ளனர். ஆனால், இவற்றை ஆழம் அதிகமுள்ள இடங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ``இதுபோன்ற கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளித்து உதவினால், கண்டுபிடிப்பில் உள்ள சிறு குறைகள் களையப்பட்டு முழுமையானதொரு கருவியைக் கண்டுபிடிக்க முடியும். பல உயிர்களையும் காப்பாற்ற முடியும்'' என்கிறார்கள் இந்த இளம் விஞ்ஞானிகள்.

ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழும் குழந்தைகளை மீட்க 6 கருவிகள்... நாகை மெக்கானிக்கின் முயற்சி!

`பொருளாதாரம், வாழ்வாதாரம், தொழில் வசதி எனப் பல்வேறு விஷயங்களிலும் தன்னிறைவு கொண்ட நாடாக இருக்கிறது இந்தியா' என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால், அதே இந்தியா எளிய மக்களின் தேவையான அடிப்படை விஷயங்களில் படுமோசமாகப் பின்தங்கியுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். மேலும், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அலட்சியங்களே ஆழ்துளைக் கிணறு விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்களாக இருக்கின்றன. அடுத்து ஓர் ஆழ்துளை விபத்து நடந்துவிடாமல், அரசுகள் இவ்விஷயத்தில் நல்லதொரு தீர்வு காணவேண்டும். மீட்புக் கருவிகளை உருவாக்குபவர்களையும், அந்தக் கருவிகளையும் அங்கீகரிக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு