Published:Updated:

“ஆண்கள் அப்படித்தான் இருப்பாங்க... நாமதான் பொறுத்துப் போகணும்!”

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பிரீமியம் ஸ்டோரி
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

- மாணவிக்குப் பாடம் எடுத்த பேராசிரியை

“ஆண்கள் அப்படித்தான் இருப்பாங்க... நாமதான் பொறுத்துப் போகணும்!”

- மாணவிக்குப் பாடம் எடுத்த பேராசிரியை

Published:Updated:
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பிரீமியம் ஸ்டோரி
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கல்விக்கூடங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களாக மாறிவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில், பாலியல்ரீதியில் பாதிக்கப்படும் மாணவிகள் கொடுக்கும் புகார்களை அலட்சியமாகக் கையாளும் நிர்வாகத்தின் மெத்தனங்களால் கொதித்துப்போயிருக்கிறார்கள் பெற்றோர்கள்!

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலப் பேராசியர் மீது மூன்றாம் ஆண்டு படித்துவரும் மாணவி ஒருவரே பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். நீண்ட தேடலுக்குப் பின்னர் புகார் அளித்த மாணவியைச் சந்தித்தோம். தனது அடையாளங்களை மறைத்துக்கொண்டு பேசிய அவர், “ஆங்கிலத்துறை சார்பாக ஒரு ‘வாட்ஸ்அப்’ குரூப் இருக்கு. அதில் பேராசிரியர்கள் பாடம் சம்பந்தமான மெசேஜ் போடுவாங்க. ஆனால், பேராசிரியர் சகரியா செல்வராஜ், ராத்திரி 11 மணிக்கெல்லாம் எனக்குத் தனியாக பாலியல் மெசேஜ் அனுப்பி, டார்ச்சர் செய்தார். இது குறித்து ஆங்கிலத்துறை தலைவி லிண்டா செல்லாவிடம் புகார் செய்தேன். ஆனால், ‘ஆண்கள் அப்படித்தான் இருப்பாங்க. பொம்பளைங்க நாமதான் பொறுத்துப் போகணும். இந்தப் பிரச்னையை அப்படியே விட்டுவிடு...’ என்றார்.

“ஆண்கள் அப்படித்தான் இருப்பாங்க... நாமதான் பொறுத்துப் போகணும்!”

இதையடுத்து, எஸ்.எஃப்.ஐ மாணவர் அமைப்பு நண்பர்களிடம் இந்தப் பிரச்னை குறித்துப் பேசினேன். எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகள் கல்லூரிக்கு வந்து நியாயம் கேட்ட பிறகே, சகரியா செல்வராஜை கல்லூரியைவிட்டு நீக்கியிருக்கிறார்கள்” என்றார்.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு சகரியா செல்வராஜிடம் பேசியபோது, “கல்லூரியில் நடந்த ஒரு புரோகிராம் தொடர்பாகவே அந்தப் பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பினேன். அதை அவர் தவறாகப் புரிந்துகொண்டார். குறைவான சம்பளத்துக்கு, தற்காலிகப் பணியிலிருந்த என்மீது இப்படியொரு புகார் வந்ததும் வேலையில் தொடர விரும்பாமல், வெளியேறிவிட்டேன்” என்று முடித்துக்கொண்டார்.

பிரகாசி அருள்ஜோதி
பிரகாசி அருள்ஜோதி
லிண்டா செல்லா
லிண்டா செல்லா

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய பேராசிரியை லிண்டா செல்லா, “அந்த மாணவிக்கு பேராசிரியர் அனுப்பிய மேசேஜ் அனைத்தையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கல்லூரி முதல்வருக்கு அனுப்பிவிட்டேன்’’ என்றார். முதல்வர் பிரகாசி அருள்ஜோதியும், “இந்தப் புகார் பற்றி சீனியர் பேராசிரியர்களிடம் விவாதித்து முடிவு எடுப்பதற்குள், சம்பந்தப்பட்ட பேராசிரியரே ரிசைன் லெட்டர் கொடுத்துட்டார். அதோடு பிரச்னை முடிந்துவிட்டது” என்றார் கூலாக.

ஆனால், பெற்றோர் தரப்பில் பேசுபவர்கள், ‘‘மாணவி பாலியல் புகார் கொடுத்ததும், ‘விசாகா கமிட்டி’ அமைத்து விசாரணை நடத்தி, சர்ச்சைக்குரிய பேராசிரியரிடம் ‘தான் செய்தது தவறு’ என்று எழுதி வாங்கியிருக்க வேண்டும். இவை எதையுமே கல்லூரி நிர்வாகம் செய்யாமல், அவரை வெளியேற்றியிருக்கிறார்கள். இனி அவர் வேறு கல்லூரியிலோ அல்லது அடுத்த சில மாதங்களில் இதே கல்லூரியிலோ பணியில் சேர்ந்து, மீண்டும் தன் ‘வேலை’யைக் காட்ட ஆரம்பித்தால்... இன்னும் எத்தனையோ மாணவிகள் பாதிக்கப்படுவார்களே...” என்கின்றனர் ஆதங்கத்தோடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism