Published:Updated:

நளினி மகளுக்கு லண்டன் மாப்பிள்ளை?- களைகட்டும் திருமண ஏற்பாடுகள்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

மகள் திருமணத்துக்காக வேலூர் சிறையில் இருந்த நளினி, ஒரு மாத பரோலில் இன்று காலை வெளியே வந்திருக்கிறார். சத்துவாச்சாரியில் அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்த நளினி.
வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்த நளினி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி-முருகன் தம்பதியரின் மகள் ஹரித்ரா, சிறையில் பிறந்தவர். லண்டனில் தங்கியிருக்கும் ஹரித்ராவுக்கு திருமணம் செய்துவைக்க 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடர்ந்தார். சமீபத்தில் நடைபெற்ற அந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் ஒரு மாதம் மட்டும் பரோல் வழங்கியது.

வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்த நளினி.
வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்த நளினி.

அதைத் தொடர்ந்து, நளினி இன்று காலை வேலூர் பெண்கள் சிறையிலிருந்து ஆரஞ்சு நிற பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு புன்னகைத்தபடி வெளியே வந்தார். துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார். 

வீட்டுக்குள் நுழைந்த நளினிக்கு அவரின் தாயார் பத்மாவதி ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்துச்சென்றார். இங்கேயே தங்கியிருந்து மகளின் திருமண ஏற்பாடுகளை அவர் செய்ய உள்ளார். நளினியுடன் தாய் பத்மாவதி, சகோதரி கல்யாணி, சகோதரன் பாக்கியநாதன் ஆகியோர் தங்கியிருக்கிறார்கள். லண்டனில் உள்ள மகள் ஹரித்ராவும் விரைவில் வேலூர் வருகிறார். 

‘‘ஈழத்தமிழர் ஒருவரைத்தான் தனது மகளுக்கு மாப்பிள்ளையாகத் தேர்வுசெய்ய உள்ளார் நளினி.’’
வழக்கறிஞர் புகழேந்தி

மேலும், ‘‘நல்ல நடத்தையுடன் நடந்துகொள்ள வேண்டும். சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது. அரசியல் கட்சித் தலைவர்கள், எந்தவொரு அமைப்பையும் சந்திக்கக்கூடாது. ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு வேலூர் சிறைக்கு திரும்பிவிட வேண்டும்’’ என்பன உட்பட, 12 நிபந்தனைகளைக் கடைப்பிடிக்குமாறு நளினிக்கு சிறை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது. 

இது சம்பந்தமாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். ‘ஹரித்ராவுக்கு நல்ல வரனைப் பார்த்துவருகிறோம். நாலைந்து மாப்பிள்ளைகளின் பொருத்தம் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, ஈழத்தமிழர் ஒருவரைத்தான் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்க நளினி விரும்புகிறார். 

சத்துவாச்சாரியில் நளினி தங்கியிருக்கும் வீடு.
சத்துவாச்சாரியில் நளினி தங்கியிருக்கும் வீடு.

மாப்பிள்ளை இலங்கையில் இல்லையென்றாலும் வெளிநாடுகளில் வசிப்பவராகக்கூட இருக்கலாம். நளினிதான் மகளுக்கான மாப்பிள்ளையைத் தேர்வுசெய்வார். மகள் திருமண ஏற்பாடுகளைச் செய்து முடித்த பிறகு, முருகனுக்கு பரோல் கேட்க உள்ளோம்’’ என்றார். மாப்பிள்ளை இலங்கையில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு, அவர் இலங்கையிலும் இருக்கலாம் வெளிநாட்டிலும் இருக்கலாம் என்று பதில் அளித்தார். இதனிடையே, மாப்பிள்ளையாக வர உள்ளவர், லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர் என்று கூறப்படுகிறது.

லண்டனில் இருந்து திருமணத்துக்காக இந்தியா வரப்போகும் நளினியின் மகள் ஹரித்ரா சிறையில் பிறந்தவர். நளினி அடைக்கப்பட்டிருந்த 10 x 12 அளவுள்ள அறைதான், ஹரித்ராவுக்கு உலகமாக இருந்தது என்று அவர் நம்மிடம் 2017ம் ஆண்டு கூறியிருந்தார். சில நேரங்களில் லாக்கப் கம்பிகளுக்குள் புகுந்து வெளியேறிவிடும் ஹரித்ராவை மீண்டும் கம்பி வழியாக அறைக்குள் கொண்டுவர படாதபாடு படுவார்களாம்!

Nalini
Nalini

நளினி 2017ம் ஆண்டு தன் மகள் ஹரித்ரா பற்றி கொடுத்த பேட்டியில் இன்னும் அதிகமான தகவல்களைக் கூறியிருக்கிறார். மே 21-ம் தேதி என்ன நடந்தது என்றும் சொல்கிறார். அந்த முக்கியமான பேட்டி APPAPPO ஆப்பில் உங்களுக்கான ஹோம்பேஜில் பதிவாகியிருக்கிறது!

http://bit.ly/NaliniHarithra லிங்க்கை க்ளிக் செய்து உங்கள் APPAPPO ஆப்பை பயன்படுத்தலாம்!