பிரீமியம் ஸ்டோரி

வேலூர் சிறையில் இருந்த நளினி, தன் மகள் திருமணத்துக்காக ஒரு மாத பரோலில் வெளியே வந்திருக்கிறார். சத்துவாச்சாரியில் தங்கியிருக்கும் அவர், தன் மகளுக்கு ஈழத்தமிழர் ஒருவரை மாப்பிள்ளையாகத் தேர்வுசெய்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி - முருகன் தம்பதியரின் மகள் ஹரித்ரா, சிறையில் பிறந்தவர். லண்டனில் தங்கியிருக்கும் ஹரித்ராவுக்கு திருமணம் செய்துவைக்க, ஆறு மாதங்கள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் நளினி விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவை, சிறை நிர்வாகம் ஏற்கவில்லை.

பரோலில் வந்தார் நளினி...

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி ஒரு மாதம் பரோல் பெற்றார் நளினி. ஜூலை 25-ம் தேதி காலை, வேலூர் பெண்கள் சிறையிலிருந்து ஆரஞ்சு நிற பட்டுப்புடவை, தலையில் சூடிய மல்லிகைப்பூவுடன் வெளியில் வந்தார் நளினி. சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கியுள்ள நளினி, மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்துவருகிறார். நளினியுடன் அவரின் தாய் பத்மாவதி, சகோதரி கல்யாணி, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் தங்கியிருக்கிறார்கள். லண்டனில் உள்ள மகள் ஹரித்ராவும் வேலூர் வரவிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘நல்ல நடத்தையுடன் நடந்துகொள்ள வேண்டும். சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும். ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது. அரசியல் கட்சித் தலைவர்களையோ, எந்த ஓர் அமைப்பையோ சந்திக்கக் கூடாது. ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு வேலூர் சிறைக்குத் திரும்பிவிட வேண்டும்’’ உள்ளிட்ட 12 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்கும்படி நளினிக்குச் சிறை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது.

நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். ‘‘2016-ல் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நளினி பரோலில் வந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மகளின் திருமணத்துக்காக இப்போதுதான் பரோலில் வந்திருக்கிறார். சூழ்நிலையைப் பொறுத்து பரோலை நீடிக்கக்கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம். நளினியைச் சென்னையில் தங்கவைப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. அதனால்தான், வேலூரிலேயே தங்க அனுமதி கேட்டோம்.

நளினியின் கணவர் முருகன், தற்சமயம் பரோல் வேண்டாம் என்று கூறிவிட்டார். மகளின் திருமணத்துக்குள் விடுதலையாகிவிடுவேன் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார். விடுதலை செய்யப்படாதபட்சத்தில், திருமணத்துக்குச் சில நாள்களுக்கு முன்பாக முருகன் பரோலில் வருவார். நல்ல வரன்களைப் பார்த்துவருகிறோம். நான்கைந்து மாப்பிள்ளைகளை உறவினர்கள் தேர்வுசெய்து வைத்திருக்கிறார்கள். ஈழத்தமிழர் ஒருவரைத்தான் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்க நளினி விரும்புகிறார். மாப்பிள்ளை இலங்கையில் இல்லை என்றாலும் வெளிநாட்டில் வசிப்பவராகக்கூட இருக்கலாம். நளினிதான் மகளுக்கான மாப்பிள்ளையைத் தேர்வுசெய்வார்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு