Published:Updated:

ஆறுதலுக்கு யாரும் இல்லை... அநாதை மாதிரி கெடக்குறோம்! - ஜூ.வி ஃபாலோ அப்...

நாமக்கல்
பிரீமியம் ஸ்டோரி
நாமக்கல்

அந்தக் கொடுமையை ஏன் கேக்குறீங்க... அந்தச் சம்பவம் நடந்த கொஞ்ச நாள்லயே அவங்களைச் சிலர் மிரட்ட ஆரம்பிச்சாங்க.

ஆறுதலுக்கு யாரும் இல்லை... அநாதை மாதிரி கெடக்குறோம்! - ஜூ.வி ஃபாலோ அப்...

அந்தக் கொடுமையை ஏன் கேக்குறீங்க... அந்தச் சம்பவம் நடந்த கொஞ்ச நாள்லயே அவங்களைச் சிலர் மிரட்ட ஆரம்பிச்சாங்க.

Published:Updated:
நாமக்கல்
பிரீமியம் ஸ்டோரி
நாமக்கல்

‘‘என் பொண்ணுங்க வாழ்க்கை சீரழிஞ்சது மட்டுமில்லாம, எங்களுக்கு எப்போ என்ன ஆவுமுன்னு தெரியாம ஒவ்வொரு நிமிஷமும் பயந்துகெடக்குறோம். ரெண்டு பொண்ணுங்க ஒருபக்கம்... நான், பசங்க ஒருபக்கம்னு திக்குத் தெரியாமப் பிரிஞ்சு கெடக்குற என் குடும்பத்துக்கு இந்த அரசாங்கம் நீதி வாங்கிக் கொடுக்கணும்...” - சுற்றிலும் யாருமே இல்லைதான்... ஆனாலும், யாரோ பார்த்துவிடுவார்களோ என்ற அச்சத்துடன் சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டே திகிலடைந்த முகத்துடன் திக்கி திக்கிப் பேசுகிறார் அந்தத் தாய்!

புற்றுநோயால் கணவர் இறந்துவிட, குடும்பத்தின் வறுமையை எதிர்கொள்ள அந்தப் பெண்மணி வேலைக்குச் சென்ற நேரத்தில், இடுப்பு உடைந்த வயதான பாட்டியின் கண்காணிப்பில் இருந்த இரு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரத்தை வார்த்தைகளால் சொல்லவியலாது. அந்தக் கிராமத்தில், மீசையே முளைக்காத இளந்தாரிகள் முதல் வயோதிகர்கள் வரை 12 மனித மிருகங்கள் இரண்டு சிறுமிகளையும் சீரழித்ததை, 21.10.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் வெளியிட்டிருந்தோம். “சத்தம் போடாதே... வெளியில் சொல்லாதே... போலீஸுக்குப் போகாதே!” என்ற தலைப்பிலான அந்தச் செய்தி, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்து ஒன்பது மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், அவர்களின் குடும்பத்தின் நிலை எப்படியிருக்கிறது, அவர்களுக்கான நீதி கிடைத்ததா என்பதை அறிவதற்காகக் கிளம்பினோம்.

ஆறுதலுக்கு யாரும் இல்லை... அநாதை மாதிரி கெடக்குறோம்! - ஜூ.வி ஃபாலோ அப்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது அந்தக் கிராமம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பள்ளத்தில் சிதிலமடைந்து கிடந்த அந்தக் குடிசையைப் பார்க்கும்போதே அங்கு யாருமில்லை என்பதை உணர முடிந்தது.

அக்கம்பக்கத்தில் விசாரித்தால், ‘‘அந்தக் கொடுமையை ஏன் கேக்குறீங்க... அந்தச் சம்பவம் நடந்த கொஞ்ச நாள்லயே அவங்களைச் சிலர் மிரட்ட ஆரம்பிச்சாங்க... எங்கே உசுருக்கு ஆபத்து வந்துடுமோன்னு ஒருநாள் ராத்திரியோட ராத்திரியா அவங்க கிளம்பிப் போயிட்டாங்க. எங்க இருக்காங்க, என்ன பண்றாங்கன்னு எதுவுமே தெரியலை’’ என்றார்கள்.

தொடர்ந்து விசாரித்ததில், சிறுமியின் தாய் ஒரு காப்பகத்தில் இருக்கிறார் என்பது தெரிந்தது. அங்கு சென்றபோது, ‘‘யாரையும் பார்க்கவிடக் கூடாதுன்னு போலீஸ்ல சொல்லியிருக்காங்க’’ என்று காப்பகத்தில் இருந்தவர்கள் சொல்ல, பெரும் அலைக்கழிப்புக்குப் பிறகே சிறுமிகளின் தாயைச் சந்திக்க முடிந்தது.

‘‘எப்படி இருக்கீங்க, கேஸ் என்னாச்சு?’’ என்று நாம் கேட்கும்போதே வெடித்து அழ ஆரம்பித்தார் அவர். அருகிலிருந்த ஒரு பெண்மணி, “இப்படித்தாங்க... அந்த விஷயத்தைப் பத்தி கேட்டாலே அழ ஆரம்பிச்சிடுவா” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அந்தத் தாயிடம் நம்பிக்கையாகச் சில வார்த்தைகள் பேசினோம். அப்போதும் தயங்கியபடிதான் பேச ஆரம்பித்தார்... ‘‘விஷயத்தைச் சொன்னா கொன்னுடுவோம்னு மிரட்டுனதால, என் குழந்தைகளும் மாமியாரும் என்கிட்ட அன்னைக்கு நடந்ததைச் சொல்லலை. ஊர்க்காரங்க அந்தக் கொடுமையை எங்கிட்ட சொன்னதும் உடம்பே நடுங்கிடுச்சு. வறுமையால நான் ரெண்டு ஷிஃப்ட் வேலைக்குப்போன நேரத்துல, என் ரெண்டு புள்ளைங்களையும் அந்த காட்டுமிராண்டிங்க கண்டபடி சீரழிச்சிருக்கானுங்க. போலீஸ்ல புகார் கொடுத்த ரெண்டாவது நாள்லயே ஊர்ல இருந்து எங்களை விரட்ட திட்டம் போட்டாங்க. ராத்திரி நேரத்துல எங்களை அடிச்சுக் கொல்ல திட்டம் போட்டது தெரிய வந்ததால ஊரைவிட்டே ஓடியாந்துட்டோம்.

பொண்ணுங்க ரெண்டு பேரும் இன்னொரு காப்பகத்துல இருக்காங்க. ‘அங்கேயே படிக்கவெக்கிறாங்க, நல்ல சாப்பாடு போடுறாங்க’னு கேள்விப்பட்டேன். இதோ பாருங்க... இந்த ரெண்டு பசங்களோட (ஏழு, எட்டு வயதான தன் இரு ஆண் குழந்தைகளைக் காட்டுகிறார்) நானும் மாமியாரும் இங்கேதான் இருக்கோம். மூணு வேளை சாப்பாட்டோட தங்குறதுக்கு இடமும் கொடுத்திருக்காங்க. அப்பப்போ போலீஸ்ல வந்து விசாரணைனு கூட்டிட்டுப் போவாங்க. சொந்த பந்தமுன்னு ஒரு ஆறுதலுக்குக்கூட யாரும் வந்து பார்க்க மாட்டேங்குறாங்க. நல்லது கெட்டதுனு எதுவும் இல்லாம நாங்க ஒரு இடத்துல, என் புள்ளைங்க ஒரு இடத்துலனு அநாதை மாதிரி கெடக்கோம்.

ஆறுதலுக்கு யாரும் இல்லை... அநாதை மாதிரி கெடக்குறோம்! - ஜூ.வி ஃபாலோ அப்...

ஊருக்குப் போனா எங்களை ஏதாவது செஞ்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு. எத்தனை காலத்துக்கு இங்கேயே எங்களால இருக்க முடியும்னு தெரியலை. என் பொண்ணுங்க சீரழிஞ்சது மட்டுமில்லாம, எங்களுக்கு எப்போ, என்ன ஆவுமோனு பயந்துபோய்க் கெடக்குறோம். உடைஞ்சு போயிருக்குற என் குடும்பத்துக்கு இந்த அரசாங்கம் நீதியை மட்டுமாவது வாங்கிக் கொடுத்தா போதும்’’ என்றவர் உடைந்துபோய் அழுதார். அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

வழக்கு என்ன நிலையில் இருக்கிறது என்பதை அறிய ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திராவைத் தொடர்புகொண்டால், அவர் நம்மிடம் பேசுவதையும், நேரில் சந்திப்பதையும் தவிர்த்துவிட்டார். இதையடுத்து வழக்கின் நிலை குறித்து அறிந்த காவலர் ஒருவர் நம்மிடம் விரிவாகப் பேசினார்... ‘‘பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குழந்தைகள் அடையாளம் காட்டிய செந்தமிழ்செல்வம், மணிகண்டன், சூர்யா, சண்முகம், சிவா (எ) சங்கர், வரதராஜ், பெரியசாமி (எ) மல்லி, கோகுலக்கண்ணன், ஊமையன் (எ) முத்துசாமி, பிரபு, 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் இரண்டு பேர் என மொத்தம் 12 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் எட்டு பேர்மீது குண்டாஸ் போடப்பட்டிருக்கிறது. முதியோர் என்ற காரணத்தால் ஊமையன், பெரியசாமி ஆகியோருக்கும், சிறுவர்கள் இருவருக்கும் குண்டாஸ் போட முடியவில்லை. 70 வயதான பெரியசாமியும், சிறுவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள் சேலம் மத்தியச் சிறையில் இருக்கிறார்கள்.

ஆறுதலுக்கு யாரும் இல்லை... அநாதை மாதிரி கெடக்குறோம்! - ஜூ.வி ஃபாலோ அப்...

நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கில், இதுவரை நான்கு சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் ஒருசில சாட்சிகளை விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குற்றவாளியும் தனித்தனியாக வழக்கறிஞர்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சாட்சியிடமும் அனைத்து வழக்கறிஞர்களும் கேள்வி கேட்பதால், விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது. கொரோனா ஊரடங்கு இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருப்போம். ஆரம்பத்தில் சாட்சி சொல்ல முன்வந்த ஊர்க்காரர்கள் சிலர், இப்போது பயந்துகொண்டு சாட்சி சொல்ல வர மறுக்கிறார்கள்’’ என்றார் ஆதங்கத்துடன்.

‘‘போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?’’ என்று ராசிபுரம் டி.எஸ்.பி பாலமுருகனிடம் கேட்டோம். ‘‘எங்களால் முடிந்த அளவுக்கு, ‘பெயில் கொடுக்கக் கூடாது’ என்று கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தோம். அதையும் மீறித்தான் பெயில் கொடுத்திருக்கிறார்கள்’’ என்றார்.

ஸ்ரேயா பி சிங்
ஸ்ரேயா பி சிங்

நாமக்கல் எஸ்.பி சரோஜ் குமார் தாக்கூர், ‘‘குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை நிச்சயம் வாங்கித்தருவோம். சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு ஏதாவது பிரச்னையென்று சொன்னால் பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார். நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் கவனத்துக்குச் சிறுமிகளின் குடும்பத்தின் நிலையைக் கொண்டுசென்றோம். ‘‘சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை அனுப்புங்கள். என்னால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்துகொடுக்கிறேன்’’ என்றார் நம்பிக்கையுடன்.

பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவருக்கும் அரசுத் தரப்பிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. காப்பகத்தில் உணவு மற்றும் இருப்பிடத்துடன் சொற்பத் தொகை சம்பளமாக அந்தத் தாய்க்கு வழங்கப்படுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டும் போதாது... அரசுத் தரப்பில் வீடும், சிறுமிகளின் தாய்க்கு அரசு வேலையும் கொடுப்பதுதான் அந்தக் குடும்பத்துக்குக் கொடுக்கும் குறைந்தபட்ச நீதியாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism