Published:Updated:

அழிக்கும் அகங்காரம்... அகற்றும் வழிகள்!

நாணயம் புக் செல்ஃப்

பிரீமியம் ஸ்டோரி

கங்காரம் மனிதனுக்கு எப்படி இடைஞ்சலைத் தரும் என்பதைச் சொல்லும் புத்தகம் ‘ஈகோ இஸ் தி எனிமி.’ ஒரு இளைஞனாய் அபரிமிதமான லட்சியங்களுடன் இருக்கும் நபராக இருந்தாலும் சரி, வாழ்க்கையை ஓட்டுவதற்கே கஷ்டப்படும் இளைஞனாக இருந்தாலும் சரி – இதுபோல எண்ணற்றப் பல சூழ்நிலைகளிலும் உங்களுக்கு முக்கியமான எதிரி எது தெரியுமா என்ற கேள்வி யுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். அந்த எதிரி உங்களுடைய அகங்காரத்தைத் தவிர, வேறேதும் இல்லை என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ரையான் ஹாலிடே.

‘எனக்கா, அகங்காரமா, சே சே, அதெல்லாம் என்கிட்டே கொஞ்சங்கூட இல்ல பாஸ்’ என்று நீங்கள் சத்தியம் செய்வீர்கள். ‘நாங்கெல்லாம் எல்லாத்தையும் சரிசமமா எடுத்துக்குவோம் இல்ல’ என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் லட்சியம், திறமை, செயல் திறன், ஊக்கம், எடுத்த காரியத்தை முடிக்கும் மனநிலை போன்ற குணங்களைக்கொண்டிருக்கும் அனைவருக்கும் அகங்காரம் என்பது வரவே செய்யும். நம்மை நல்ல சிந்தனையாளர்களாகவும் செயல்வீரர்களாகவும் புதுமையான நடவடிக்கைகளை மேற் கொள்பவர்களாகவும் தொழில்முனைவோராகவும் எது உருவாக்கு கிறதோ, அதனுடைய இருண்ட மறுபக்கம் அகங்காரத்தையும் தருவதாக இருக்கும்.

அழிக்கும் அகங்காரம்... அகற்றும் வழிகள்!

இங்கே நாம் அகங்காரம் என்று சொல்வது, நம்முடைய முக்கியத்துவத்தை எக்கச்சக்கமாக நம்முடைய மண்டைக்குள் ஏற்றிக்கொள்வதேயாகும். இதுபோன்றதோர் எண்ணம் நமக்கு நல்லதில்லை என்றபோதிலும், நம்முள் அது சுலபமாக உருவாகி விடுகிறது. அகங்காரம் என்பது நம்மை மட்டுமே வைத்து நாம் உருவாக்கிக்கொள்ளும் லட்சியங்கள் என்று சொல்லலாம். இதைப் பற்றியே இந்தப் புத்தகம் விரிவாக அலசுகிறது.

அகங்காரம் என்பது...

அகங்காரம் நம்மை நம்முடைய உண்மையான நிலையைவிட மேலானவர் என்று போலியாக உணரவைக்க வல்லது. இதனாலேயே நம்முடைய இயல்பான நிலையில் நமக்குக் கிடைக்கவேண்டிய வெற்றியைக்கூட நமக்குக் கிடைக்காமல் அது செய்துவிடுகிறது. நமக்கும் நிஜ உலகுக்கும் இருக்கும் தொடர்பைப் பொய்யானதாக்கி நிஜத்தை நம்மை உணரச் செய்யாமல் நிறுத்தவல்லது இது. அகங்காரம் என்பது கிட்டத்தட்ட ஒரு போதையைப் போன்றதே என்கிறார் ஆசிரியர்.

சுயகட்டுப்பாடு என்பதைக் கடைப்பிடித்தால் மட்டுமே அகங்காரத்தின் பிடியிலிருந்து முழுமையாகத் தப்பிக்க முடியும். சுயகட்டுப்பாடு என்பது கோபம், இன்பம் மற்றும் வலி என்ற மூன்றின் பிடியில் இருந்தும் காக்கவல்லது.

சுயகட்டுப்பாடு என்பதைக் கடைப்பிடித்தால் மட்டுமே அகங்காரத்தின் பிடியிலிருந்து நம்மால் முழுமையாகத் தப்பிக்க முடியும். சுயகட்டுப்பாடு என்பது நம்மை கோபம், இன்பம் மற்றும் வலி என்ற மூன்றின் பிடியில் இருந்தும் காக்கவல்லது. இந்த மூன்றின் பிடியிலும் சிக்கிய ஒருவரை முகஸ்துதி செய்யும் நபர்கள் சுலபத்தில் நம்பவைத்து ஏமாற்றிவிடுவார்கள் என்கிறார் ஆசிரியர்.

அழிக்கும் அகங்காரம்... அகற்றும் வழிகள்!

பிறவியிலேயே தன்னுடைய திறமைமீது நம்பிக்கை கொண்ட ஒரு பிரிவினரும், வளர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக அடையும் ஒரு பிரிவினரும் இந்த உலகத்தில் இருக்கின்றனர். இதில் இரண்டாம் வகைப் பிரிவினருக்கு வளர்ச்சியால் அகங்காரம் வருவது என்பதற்கான வாய்ப்பு சற்றுக் குறைவுதான். ஏனென்றால், பல சமயங்களில் அவர்கள் பெற்ற வெற்றியானது அவர்களுக்குத் திகைப்பையே தரும். இதற்கெல்லாம் நாம் தகுதியானவர்கள்தானா என்ற கேள்வியை அவர்கள் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்த வெற்றி, திறமையில் வந்ததா அல்லது அதிர்ஷ்டத்தில் வந்ததா என்ற கேள்வி அவர்கள் மனதில் எப்போதும் தொக்கி நிற்கவே செய்யும். மாறாக, பிறவியிலேயே திறமையின்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு நான் ஜெயிக்கா விட்டால் யார் ஜெயிப்பார்கள் என்ற எண்ணம் தோன்றும். ‘இதெல்லாம் எனக்குச் சாதாரணம்’ என்றே எல்லாக் காரியத்திலும் இறங்குவார்கள். ‘முயற்சி பண்ணுவோம். வெற்றி கிடைக்கப் பாடுபடுவோம்’ என்ற எண்ணத்தைத் தூக்கி வீசி, ‘ஜெயித்துக் காட்டுகிறேன் பார்’ என்ற போட்டி மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதையே அகங்காரத்தின் பாதிப்பு என்கிறார் ஆசிரியர்.

ஓவராகப் பேசினால் ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்...

1934-ம் ஆண்டில் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் பதவிக்குத் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் (அவர் பெயர், அப்டன் சின்க்ளேர் - Upton Sinclar) ஒரு காரியத்தைச் செய்தார். தேர்தலுக்கு முன்னரே, “கலிபோர்னியாவின் கவர்னராகிய நான் ஏழ்மையை எப்படி ஒழித்தேன்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகம் எக்கச்சக்கமாக விற்றுத் தீர்ந்தது. தேர்தல் முடிவுகளோ பாதகமாக வந்தது. ஓவராகப் பேசுகிறாரே என்ற எண்ணமும் இவ்வளவுதான் சரக்கோ என்ற எண்ணமும் சேர்ந்தே தோற்க வைத்தது. இங்கே புத்தகத்தை எழுத வைத்தது அகங்காரமேயாகும். எனவே, வெற்றுப்பேச்சு என்பதே கூடாது என்று சொல்லும் ஆசிரியர், நம்மைச் சுற்றியிருக்கும் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவையெல்லாம் ‘வாங்க, வாங்க வந்து கருத்தைச் சொல்லுங்க’ என்று ஊக்குவிப்பதாகவே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளச் சொல்லி எச்சரிக்கிறார்.

அழிக்கும் அகங்காரம்... அகற்றும் வழிகள்!

பணியிடங்களில் அகங்காரம்...

பணியிடங்களில் எல்லாச் சூழல்களிலும் வேலை செய்ய நினைக்கிறோமா, பதவியில் மட்டும் இருக்க நினைக்கிறோமா என்ற கேள்விக்கு நடுவிலேயே நாம் உழல்வதும் இந்த அகங்காரம் என்னும் நோயினால்தான். ஏனென்றால், பதவி தான் திறமையின் அங்கீகாரம் என்பது பொதுப் புத்தியாக இருப்பதுதான் இதற்கான காரணம். அதிகாரத்தைக் கொண்டிருப்பது என்பது வேறு. அதிகாரத்தைச் செயல்படுத்தும் நிலையில் இருப்பது வேறு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குப் பதவி உயர்வு தரப்படுவது, நீங்கள் திறமையானவர் என்பதற்கான அங்கீகாரம் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட மறுநிமிடமே அகங்காரம் என்பது, உங்களை விட்டுச் சென்றுவிடும். எனவே, பதவியா, செயல்படா என முடிவு செய்துகொள் ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

பணிவு வேலைக்காகாதா..?

நாம் எல்லோருமே வெற்றி பெறவே நினைக்கிறோம். நம்மை அனைவரும் முக்கிய மானவராகக் கருதவேண்டும் என நினைக்கிறோம். பணம், வசதி, அங்கீகாரம் என்பதெல்லாம் மிகச் சிறந்தது என்ற கருத்துடன் வாழ்கிறோம். அதனாலேயே இவை அனைத்தும் நமக்குத் தேவை என்று நாம் ஆழமாக நம்புகிறோம். இதை அடைவதற்குப் பணிவு என்பது உதவாது என்று மூளைச்சலவையும் செய்யப்பட்டிருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘பணிவா, பணிந்தால் எல்லாம் ஏறி மிதித்து விட்டுப் போய்விடுவார்கள் பாஸ்’ என்று நாம் சுலபமாக சொல்லிவிடுவோம். அது இல்லவே இல்லை என்பதைப் புரிந்துகொள்ள நாற்பதுகளில் இருக்கும் பலரையும் கேட்டுப் பாருங்கள். ‘பணிவை விட்டு நானேதான் எல்லாம்’ என்று ஆரம்பித்த பலரும் ஆரம்பத்தில் ஒரு சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், தொடர் வெற்றிகளைப் பெற்று சிறப்படைவதில்லை. அகங்காரம் அவ்வப்போது வெற்றி தரும். அகங்காரமின்மை பெரிய வெற்றிகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்கிறார் ஆசிரியர்.

அழிக்கும் அகங்காரம்... அகற்றும் வழிகள்!

அகங்காரத்தை ஒழிக்கும் வழிகள்...

அகங்காரம் என்றால் என்ன அதன் விளைவுகள் என்ன என்பதைப் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கியுள்ள ஆசிரியர், அகங்காரத்தைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் கூறியுள்ளார். ஒரு மாணவராகவே தொடர்ந்து இருக்க முயல்வது, நம்மைப் பற்றிய ஒரு கட்டுக்கதையை நாமே உருவாக்கி அதை நம்பி விடாமல் இருத்தல், நமக்கு எது வேண்டும் என்பதில் தெளிவாக இருத்தல், என் தகுதிக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் என்ற நினைப்பில் இல்லாமல் இருத்தல், நம்மை நாமே சரிவர நிர்வகித்தல் போன்றவற்றைக் கடைப் பிடித்தால் அகங்காரம் நம்மை விட்டு அகலும் என்பதைச் சொல்லியுள்ள ஆசிரியர், இதைப் பல்வேறு நிஜ வாழ்க்கையின் உதாரணங் களுடன் விளக்கியுள்ளார்.

சுலபத்தில் தொற்றிக் கொள்ளும் இந்த அகங்காரம் எனும் நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை நாம் அனைவரும் ஒருமுறை படித்துப் பயன் பெறலாம்.

-நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு