பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

லாபமே இலக்கு... உங்கள் நிறுவனத்தை மனிதநேயம் உள்ளதாக மாற்றுங்கள்!

நாணயம் புக் செல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் புக் செல்ஃப்

நாணயம் புக் செல்ஃப்

ன்றைய நிறுவனங்கள் செயல்படும்விதம், மிக மிகப் பழைமையான ஒரு நடைமுறை. `இன்றைய பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் ஈடுபாடு இல்லாமல்தான் தங்கள் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்’ என்கின்றன பல ஆய்வுகள். அமெரிக்காவைப் பொறுத்தவரை, கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டும் நிலவும் சூழலல்ல இது. ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற பலரும் தங்கள் தொழிலைவிட்டு விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

மாற்றமே மாறாதது!

நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் பவர் கேம், பாலிடிக்ஸ், உள்மோதல்கள் மற்றும் அதிகாரத்துவம் போன்றவை நீக்கமற நிறைந்திருக்கின்றன. `மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று சொல்லிக்கொண்டே, தொடர்ந்து மாறுதல்களுக்கான நடவடிக்கைகள் மற்றும் செலவுக்குறைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, பணியாளர்களை வதைப்பதுதான் இன்றைய கார்ப்பரேட் உலகின் முக்கிய நடைமுறையாக இருக்கிறது. வழக்கமான நடைமுறைகளை விட்டுவிட்டு நிறுவனங்களைப் புதுமையாக மறு உருவாக்கம் செய்வது எப்படி என்பதைச் சொல்லித்தருகிறது ஃப்ரெடரிக் லாலூக்ஸ் (Frederic Laloux) எழுதிய ‘ரீஇன்வென்டிங் ஆர்கனைசேஷன்ஸ்’ எனும் புத்தகம்.

நிறுவனங்கள்
நிறுவனங்கள்

கட்டுப்படுத்தும் சிஸ்டம்

“நாம் அனைவருமே ஆழ்மனதில் எதிர்பார்ப்பது திருப்தி தரும் வேலை; நன்கு பழகி உறவாடும் நண்பர்கள் நிறைந்த பணியிடம்; ஆர்வமாகச் செய்யக்கூடிய நல்ல நோக்கங்கள் நிறைந்த வேலை போன்றவற்றைத் தவிர வேறில்லை. இதுபோன்ற விஷயங்களை நிறுவனங்களில் நடைமுறைப்படுத்த நிர்வாகிகளுக்குத் தீர்க்கமான ஞானம் வேண்டும். இந்த ஞானம் பெற்ற நிர்வாகிகள் இவற்றை நடைமுறைப்படுத்த நினைத்தால், சிஸ்டம் அவர்களைக் கட்டுப்படுத்தி கழுத்தை நெறிக்கும். இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்து, எண்ணக் குலைவுக்கு ஆளாகி, அதற்குமேல் மேலிடம் சொல்வதைச் சிந்திக்காமல், `வேலை செய்ய முடியாது’ என்று சொல்லி பணியைவிட்டு விலகிவிடுவார்கள்.

எனவே, மேலே சொல்லப்பட்ட நோக்கங்களை நடைமுறைப்படுத்த எந்த அளவுக்கு ஞானம் பெற்ற நிர்வாகிகள் தேவையோ, அதே அளவுக்கு நிறுவனத்தின் நடைமுறைகளும் ஆர்கனைசேஷன் ஸ்ட்ரக்சரும் மாற்றியமைக்கப்பட வேண்டும். இது கைகூடி வந்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்” என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

மாற வேண்டிய அகங்காரம்

நிறுவனங்கள் தங்களை மறு சீரமைப்புச் செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம் என்பதால், நிறுவனங்களின் படிநிலை குறித்த வரலாற்றைச் சொல்லி ஆரம்பிக்கிறார் ஃப்ரெடரிக் லாலூக்ஸ். “ஒரு நிறுவனராக அல்லது ஒரு நிறுவனத்தின் தலைவராக மேலே சொன்ன பிரச்னைகள் எதுவும் இல்லாத சிறப்பான நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு இருக்கவே செய்யும். உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் இதைச் சொன்னால், `என்னதான் நியாய, தர்மம் பேசினாலும், மனிதர்கள் மனதில் அகங்காரம் என்ற ஒன்று இருக்கவே செய்கிறது. அதனால் நாம் அனைவரும் பாலிடிக்ஸ் செய்வது நடக்கத்தான் செய்யும்’ என்றே சொல்வார்கள்.

Reinventing Organizations
Reinventing Organizations

பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதன் வாழும் சூழல் எப்படி மெள்ள மெள்ள மாறி வந்திருக்கிறது என்று பார்த்தால், ஒருவரைப் பற்றிய கரிசனமும் அக்கறையும் ஒரு மனிதருக்கு, சம்பந்தப்பட்டவர் அவருடைய குழுவைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே வருகிறது. ஒரே நிறுவனத்தினுள் பணிபுரியும் பணியாளர்களிடையே வன்மத்துடன்கூடிய ‘நாம்’ மற்றும் ‘அவர்கள்’ என்ற பிரிவைக்கொண்ட வார்த்தைப் பிரயோகம் அடிக்கடி உபயோகிக்கப்படுவதைக் கவனித்தீர்களென்றால், இது உங்களுக்குப் புரியும்” என்கிறார் ஆசிரியர்.

செயல்திறன் Vs தார்மிகம்

இன்றைய சூழ்நிலையில் நிறுவனங்களின் சித்தாந்தம் ‘சாதனை’ என்ற ஒன்றாகவே இருக்கிறது. ‘செயல்திறன்’ என்ற வார்த்தை ‘தார்மிகம்’ என்ற வார்த்தைக்குப் பதிலியாக உபயோகிக்கப்படும் சூழல் இது. முடிவுகள் அனைத்தும் செயல்திறனைக்கொண்டே எடுக்கப்படும் சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். `தார்மிகரீதியாக...’ என்ற கேள்வி எழுப்பப்பட்டால், `வெற்றி பெறாவிட்டால், அனைவருக்கும் பிரச்னையாகும். பரவாயில்லையா?’ என்ற கேள்வியே பதிலுக்கு எழுப்பப்படும்.

நாணயம் புக் செல்ஃப்
நாணயம் புக் செல்ஃப்

இன்றைய நிறுவனங்களின் மத்தியில், `பெஸ்ட் ரிசல்ட்’ என்ற சிந்தனையே மேலோங்கியிருக்கிறது. சாதனை மனப்பான்மையும் ஈகோவும் சூப்பரான கூட்டணி. சூழ்நிலை தெளிவாகப் புரிந்தாலும், சாதனை + ஈகோ என்ற கூட்டணி, உண்மையைக் கேட்க விரும்பாது. நிஜமாகவே மாற நினைக்கும் நிறுவனங்களுக்குக்கூட இதுவே மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.

மனசாட்சியை மறந்த நிறுவனங்கள்

வரலாற்றை உற்றுப் பார்த்தால், ஓர் உண்மை நமக்குத் தெளிவாகப் புரியும். நிறுவனங்களிலிருக்கும் மனிதர்கள் ஒருநாளும் தங்கள் உண்மை முகத்தைக் காட்டுவதில்லை. முகமூடிகளுடனேயே திரிகின்றனர். `முகமூடி’ என்றவுடன், `கண்ணுக்குத் தெரியாதது’ என்று நினைத்துவிடாதீர்கள். டாக்டர்களின் கோட், சி.இ.ஓ-வின் கோட், பிஷப்கள் அணியும் அங்கி ஆகியவை அந்தந்தப் பதவிக்கு தரப்படும் ஆடைகள் அல்லவா... அதேபோல, நிறுவனப் பணியாளர்கள் (அதிகாரிகள்) அந்தந்தப் பதவிக்கு ஏற்றாற்போல் ஒரு முகமூடியை அணிந்துகொண்டே செயல்பட வேண்டும் என்ற கட்டாயச் சூழலில் நாம் இருக்கிறோம்.

தனிநபராக ஒரு குணத்தைக்கொண்டிருக்கும் ஒருவர் அலுவலகத்துக்குள் நுழைந்தால், வேறொரு குணத்தோடு இருப்பதை `முகமூடி’ என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது... ஒரு நிறுவனத்தில் ஒரு ஆளாக இருக்க எத்தனை பொய்களை நீங்கள் அன்றாடம் சொல்ல வேண்டியிருக்கிறது... ஏன் பொய் சொல்ல வேண்டியி ருக்கிறது?

நாம் பிரச்னைகளைச் சந்திக்க பயப்படுகிறோம். அதிலும் ஈகோவால் உருவாக வாய்ப்பிருக்கும் பிரச்னை களைக் கண்டு நடுங்குகிறோம். அதனாலேயே நமக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது என்பதை முழுக்க மறந்துவிடும் அளவுக்குச்் சென்றுவிடுகிறோம்.

லாபம் மட்டுமே இலக்கு

`பிசினஸ்’ என்றால் என்னவென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்... நாம் செய்யும் அனைத்து விஷயங்களும் நமக்கு லாபத்தைத் தருவதாக இருக்க வேண்டும் என்பதுதானே! அது சரியல்ல.

லாபமே இலக்கு... உங்கள் நிறுவனத்தை மனிதநேயம் உள்ளதாக மாற்றுங்கள்!

`ஒரு பிசினஸில் பணிபுரியும் அனைவரும் ஒரு குழுவாகச் சேர்ந்து, மனிதர்களுக்குத் தேவைப்படும் ஒரு விஷயத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் நம் பிறவியின் அர்த்தத்தை எய்த முயல்வது’ என்பதுதான், `பிசினஸ்’ என்பதற்கான சரியான அர்த்தமாகும். இதை மறந்துவிட்டு, லாபத்தை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படும் நிறுவனங்கள் ஒரு தொழிலில் வெற்றியைக் குவித்து (தற்காலிகமாக) அவை ஈடுபடும் மற்றொன்றில் தோல்வியைத் தழுவி, அந்த லாபத்தை இழக்கின்றன’’ என்கிறார் ஆசிரியர்.

மனிதநேயமுள்ள நிறுவனமாக மாறுதல்

ஒரு நிறுவனம் மெள்ள மெள்ள ஒரு மனித நேயமுள்ள நிறுவனமாக மாறுவது எப்படி என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் தெளிவாக விளக்கியிருக்கும் ஆசிரியர் இறுதியாக, ``மனிதநேயம் என்பதை முற்றிலும் மறந்துவிட்டு செயல்படும்போதே நிறுவனங்கள் இந்த அளவுக்கு வெற்றி பெறுகின்றன. அதிக கவனத்துடன், மனிதநேயத்தை மனதில்கொண்டு இவை செயல்பட ஆரம்பித்தால் இன்னும் எப்படிப்பட்ட வெற்றியுடன்கூடிய நிறுவனங்களாக இவை திகழும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்’’ என்று சொல்லி முடிக்கிறார்.

நிறுவனங்கள் முற்றிலும் மறந்துபோன மனித நேயத்தைப் பற்றி விளக்கியும், அதை நிறுவனங்கள் மத்தியில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் விளக்கமாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தைத் தொழில் முனைவோரும் நிர்வாகிகளும் ஒருமுறை அவசியம் படிக்கலாம்.

-நாணயம் விகடன் டீம்