Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : வெற்றிக்கு வித்திடும் ‘கவனம்!’ - கவனச்சிதறலைத் தடுக்கும் வழிகள்!

ஒரு மனிதர் எத்தனை விஷயங்களின் மேல் கவனம் வைக்க முடியும் என்பதில் ஒரு எல்லை இருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி
ம்மில் பலரும் பல காரியங்களில் வெற்றி பெற முடியாமல் போவதற்குக் காரணம், கவனச்சிதறல்தான். `கவனம் செலுத்தும் கலையைச் சரிவர நிர்வகிக்கக் கற்றுக் கொண்டால், உற்பத்தித்திறனில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர முடியும்’ என்பதைச் சொல்கிறது, இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் கிரிஸ் பெய்லி (Chris Bailey) எழுதிய ’ஹைப்பர் ஃபோகஸ்’ என்னும் புத்தகம்.

ஸ்மார்ட்போனை தூரமாக வைத்துவிடுங்கள்..!

“நாம் செய்யும் வேலை நம் மனதுக்குப் பிடிக்கவில்லையென்றால், அது தன் கவனத்தை நூதனமான விஷயங்கள்மீது செலுத்த ஆரம்பிக்கும். நம் ஸ்மார்ட்போன்கள் இது போன்ற நூதனமான விஷயங்களை அள்ளித்தர வல்லவை. எனவே, இந்தப் புத்தகத்தை கவனமாகப் படிக்க வேண்டுமெனில், முதலில் வேறு ஓர் அறையில் ஸ்மார்ட்போனை வைத்துவிட்டு வாருங்கள். கவனச்சிதறல் சுலபத்தில் நடக்க வாய்ப்பிருப்பதால், அதற்கான வாய்ப்புகள் இருக்கும் இடத்திலிருந்து விலகிச் செல்வதே சிறந்த மருந்தாக இருக்கும். நீங்கள் எங்கே ஓடி ஒளிந்தாலும், உங்கள் கவனத்தை சிதறச் செய்ய ஒன்றிரண்டு விஷயங்களாவது கட்டாயம் இருக்கும். எனவே, அவற்றைப் பட்டியலிட்டு ஆராய்ந்தால் கவனத்தைக் குவிக்க முடியும்’’ என்கிறார் ஆசிரியர்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

செய்யும் வேலை எப்படிப்பட்டது?

“எதன்மீது கவனம்வைப்பது என்பதைப் பிரித்துத் தெரிந்துகொள்ள முக்கியமான இரண்டு அளவீடுகளை மனதில்கொள்ள வேண்டும். ஒரு வேலையானது உற்பத்தித்திறன் கொண்டதா மற்றும் அது கவர்ச்சிகரமானதாக இருக்கிறதா அல்லது கவர்ச்சியற்றதாக போரடிப்பதாக இருக்கிறதா என்பதே அந்த அளவீடு. (பார்க்க: மேலே உள்ள அட்டவணை).

நாணயம்  புக் ஷெல்ஃப் : வெற்றிக்கு வித்திடும் ‘கவனம்!’ - கவனச்சிதறலைத் தடுக்கும் வழிகள்!

இதில் தேவையான வேலை என்பது கவர்ச்சியற்றதாக இருந்தபோதிலும், உற்பத்தித்திறன் இருப்பதால் கட்டாயம் செய்ய வேண்டியதாகிறது. டீம் மீட்டிங்குகள், அடுத்த காலாண்டுக்கான பட்ஜெட் திட்டமிடுதல் போன்றவை இந்த வகை வேலைகளுக்கான உதாரணங்கள்.

தேவையற்ற வேலை என்பது உற்பத்தித்திறன் மற்றும் கவர்ச்சியற்ற வேலை. உங்களுடைய மேஜையிலிருக்கும் பேப்பர்களை ஒழுங்கு செய்துவைப்பது, உங்களுடைய கம்ப்யூட்டரிலிருக்கும் ஃபைல்களைப் பிரித்து தனித்தனியாக ஃபோல்டர் ஒன்றில் போட்டுவைப்பது போன்றவை இந்த வகை வேலைகளுக்கான உதாரணங்கள். இந்தவித வேலைகளை நாம் செய்ய நினைக்கவே மாட்டோம். இதைச் செய்ய நினைக்கும்போதெல்லாம் தள்ளிப்போடுவோம் அல்லது வேறு ஏதாவது வேலையைச் செய்வோம்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

கவனம் சிதறச்செய்யும் வேலை என்பது நம்மை இழுக்கும் கவர்ச்சியைக் கொண்டதாகவும், அதே நேரம் உற்பத்தித்திறன் அற்றதாகவும் இருக்கும். இதுவே நம்முடைய செயல்திறனுக்கு முழு அளவில் முட்டுக்கட்டை போடும் விஷயமாக இருக்கும். இந்த வேலைகள் மிகவும் களிப்பைத் தருபவையாக இருக்கும். ஆனால், இவற்றை மிகக்குறைந்த அளவில் மட்டுமே நாம் செய்ய வேண்டும்.

இறுதியாக உள்ள பலன் மற்றும் காரண, காரியங்களுக்காக ஒரு நோக்கத்துடன் செய்யப்படும் வேலை என்பதே உற்பத்தித் திறனை மிகவும் அதிகரிக்கச் செய்யும். நாம் செய்யும் வேலைகளில் வெகு சிலவே இந்தப் பிரிவின்கீழ் வருவதாக இருக்கும். இந்த வகை வேலையைச் செய்ய அதிகப்படியான மூளையின் சக்தி தேவைப்படும். ஒரு நடிகர் ஒத்திகை பார்த்து நடிப்பது, ஒரு முதலீட்டு ஆலோசகர் அவருடைய வாடிக்கையாளருக்கான முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது போன்றவை இந்தவித வேலைகளில் அடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செய்யும் வேலைகளை இந்த நான்கு பிரிவின் கீழ் பிரித்துப் பார்த்தால் உங்களுடைய கவனத்தின் அளவு எந்த அளவில் இருக்கிறது என்பது தெளிவாகப் புரியும். ஒரு நல்ல கவனம்வைக்கும் திறன் கொண்ட நபர் ஒருவர் இந்த நான்கு வகை வேலைகளில் தேவையான வேலை மற்றும் பலன் மற்றும் காரண காரியமுள்ள வேலைகளை மட்டுமே செய்ய முனைவார்.

Hyperfocus
Hyperfocus

ஹைப்பர் ஃபோகஸ் என்பது...

ஒரு மனிதர் எத்தனை விஷயங்களின் மேல் கவனம் வைக்க முடியும் என்பதில் ஒரு எல்லை இருக்கிறது. அதே போல் ஒன்றின்மீது கவனம் செலுத்திய பிறகு அந்தச் செயல் குறித்த எவ்வளவு விஷயங்களை அவர் தன் குறுகியகால ஞாபகசக்தியில் வைத்துக்கொள்ள முடியும் என்பதிலும் எல்லை இருக்கிறது. இந்த இரண்டு எல்லைகளையும் மனதில் கொண்டு செயல்படும்போது எந்த வேலை கவனம்வைக்கத் தகுந்தது மற்றும் அது குறித்த எந்தெந்த முக்கியமான விஷயங்களை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயித்துச் செயல்பட வேண்டும். இதையே கவனம் செலுத்த முடிந்த இடம் (ஹைப்பர் ஃபோகஸ் செய்ய வேண்டிய இடம்)” என்று சொல்கிறார் ஆசிரியர்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

“நம்முடைய கவனம் செலுத்த முடிந்த இடம் நிரம்பி வழியும்போது நாம் அயர்ச்சியுடனும், ஒரு சில விஷயங்களே கவனம் செலுத்தும் இடத்தில் இருக்கும்போது தெளிவாகவும் இருக்கிறோம். உற்பத்தித்திறன் என்பது வெறுமனே எக்கச்சக்கமான வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்வதல்ல. நாம் வேலை செய்யும் ஒவ்வொரு மணித்துளியிலும் சரியான விஷயங்களைச் செய்வதே. ஒரு சில சமயம் அன்றைக்கே முடிக்க வேண்டும் என்ற கால அவகாசமே இல்லாத ஒரு விஷயத்தில் ஈடுபடும் போது உங்கள் கவனம் முழுவதும் அந்த விஷயத்தைச் செய்து முடிக்கும்வரை வேறெதன் மீதும் திரும்பாது இல்லையா? இதுதான் ஹைப்பர் ஃபோகஸ். இந்த ஹைப்பர் ஃபோகஸ் என்பதைச் செய்யும்போது ஒரே ஒரு விஷயத்தை பூதக்கண்ணாடிகொண்டு பார்ப்பதைப்போல் பார்த்து, அதிலுள்ள அத்தனை விஷயங்களையும் இம்மியளவும் பிசகாமல் செய்துவிடும் வல்லமையை நாம்கொண்டிருக்கிறோம் இல்லையா? இதைச் சற்றுக் கூர்ந்துநோக்கி உணர்ந்துகொண்டால் நம்மால் லாகவமாகச் செயல்பட முடியும். இந்த லாகவம் வந்துவிட்டால் ஹைப்பர் ஃபோகஸ் என்பதை சர்வ சாதாரணமாக உங்களால் செய்ய முடியும்.

ஹைப்பர் ஃபோகஸ் என்ற கலையை நீங்கள் பெற்றுவிட்டால், நீங்கள் உற்பத்தித்திறன் இருக்கிற பலன் மற்றும் காரண, காரியங்கள் கொண்ட வேலைகளில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்துவீர்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

கவனச்சிதறலைத் தவிர்ப்பது, ஹைப்பர் ஃபோகஸை பழக்கமாக்கிக்கொள்வது, மூளையின் படைப்பாற்றலை வளர்த்தெடுப்பது உள்ளிட்ட பலவற்றையும் தனித்தனி அத்தியாயம் மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். கவனச்சிதறலைத் தூண்டும் விஷயங்கள் பலவும் நிரம்பியிருக்கும் இந்த உலகில், கவனத்தை அதிகரித்து அதன் மூலம் பலன்களைப் பெறுவது எப்படி என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை படித்துப் பலன் பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு