Published:Updated:

மனதுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்! - மகிழ்வோடு வாழுங்கள்!

நாணயம் புக் ஷெல்ஃப்

பிரீமியம் ஸ்டோரி

‘நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளில் 66 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை’ என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று. இந்த முடிவுகளுக்கு நடைமுறை வடிவம் கொடுக்க வேண்டிய ஊழியர்கள் மிகக் குறைந்த ஆர்வத்துடனும் மிகக் குறைந்த சக்தியுடனும் செயல்படுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

``செயல்திறன் ஏன் குறைகிறது? ஊழியர்களுக்கு நிர்வாகம் எடுக்கும் முடிவுகளில் ஆர்வமில்லாமல் போவதால்தான் அவர்களின் செயல்திறன் குறைகிறது. நிறுவனங்களில் மட்டுமல்ல, தனிமனித வாழ்விலும் இதுதான் நிலைமை. நம் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நாம்தானே அதற்கு பொறுப்பு... அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட நாம் செய்யும் செயல்களில், வேலைகளில் ஆர்வத்துடன் இருக்க வேண்டும் அல்லவா...’’ என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறார் ‘பேஷன் அட் வொர்க்’ (Passion At Work) புத்தகத்தை எழுதியிருக்கும் ஆசிரியர் லாலெர் காங் (Lawler Kang). நமக்குப் பிடித்த காரியங்களைத் தேர்வு செய்து வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்றிக்கொள்வது எப்படி என்பதை எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

‘‘ `உங்களுடைய கனவு என்ன?’ என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்... `செல்வம், கார், பங்களா’ என்ற ஒரு பட்டியல் நிச்சயம் இருக்கும். அதில் தவறில்லை. ஆனால் அவையெல்லாம் கனவல்ல. அவை உங்கள் கனவு என்று வாதிட்டீர்களென்றால், நீங்கள் வாழ்க்கைக் கனவு என்பதில் ஆரம்பப்பள்ளியிலேயே இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் குறுகியகாலத் தேவைகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டியபடியே, நீண்டகாலக் கனவை அடைவதில் கோட்டைவிட்டுவிட வாய்ப்பிருக்கிறது.

கார், பங்களா என்பவையெல்லாம் உங்களுடைய கனவை அடைய உதவவே உதவாது. உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளத்தான் அவை உதவும். `வாழ்க்கைத்தரம் உயர்ந்தால் போதாதா... கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்பதே வாழ்க்கைத்தரம் உயரத்தானே...’ என்று சொன்னீர்கள் என்றால், அது உங்கள் அறியாமை. 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 11:30 மணி நேரம் வேலை, அலுவலகம் எனச் செலவழிந்துவிடுகிறது. வீட்டிலுள்ளவர்கள், குழந்தைகள், உறவினர்களுடன் பேசி மகிழ நேரம் கிடைப்பதேயில்லை.

மனதுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்! - மகிழ்வோடு வாழுங்கள்!

சரி, வேலையை விட்டுவிடலாம் என்றால் பிழைப்புக்கு என்ன செய்வது... நமக்குப் பிடித்த விஷயத்தைச் செய்தால் சம்பாதிக்க முடியுமா என்ன... என்ன பிழைப்பு இது! வேலை என்பது எவ்வளவு தூரம் நம்முடைய நேரத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுகிறது என்ற எண்ணம் நம் அனைவருக்குமே எப்போதும் வரத்தான் செய்கிறது அல்லவா... `வேலை - வாழ்க்கைச் சமநிலை’ என்பதை விட்டுவிட்டு, `வேலை - வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை’ என்பதைக் கண்டறிந்து செயல்பட சொல்லித் தருவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். ஏனென்றால், வாழ்நாள் என்பது வாழும் நாள்களைக் குறிக்கிறதே தவிர, வேலை பார்க்கும் நாள்களைக் குறிப்பதில்லை. வாழ்கிறோமா, வேலை பார்க்கிறோமா என்பதே மேட்டர்...’’ என்று கிண்டலாகச் சொல்கிறார் ஆசிரியர். `` `உங்கள் வாழ்க்கையை வாழ உங்களிடம் தேவையான நேரம் இருக்கிறதா...’ என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

“ `அதிக வருமானத்துக்கும் மகிழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை’ என்கின்றன சில ஆய்வுகள். அதேபோல், ` `பணம் சந்தோஷம்... இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்று கேட்டால், `சந்தோஷம்’ என்பதைத்தான் பெரும்பாலானோர் சொல்கின்றனர்’ என்கிறது ஓர் ஆய்வு முடிவு. நம் வாழ்வில் சில காலகட்டங்களில் 100% சந்தோஷமாக இருக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவ்வப்போது சந்தோஷம் வந்து போகுமே தவிர, நீங்காமல் நிறைந்திருப்பதல்ல அது.

வாழ்நாள் என்பது வாழும் நாள்களைக் குறிக்கிறதே தவிர, வேலை பார்க்கும் நாள்களைக் குறிப்பதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் வாழ்வில் சந்தோஷத்தைக் கொண்டுவர என்னென்ன தேவை என்று பார்ப்போம். பின்வரும் கேள்விகளுக்கான விடையைவைத்து அவற்றைக் கண்டறிவோம். `உங்களுடைய தலையாய பணியாக எதை நினைக்கிறீர்கள்... நீங்கள் பேரார்வத்தோடு செய்யும் விஷயம் எது... உங்களுக்குச் சற்றும் ஆர்வம் இல்லாத ஒன்றில் (பணி/கலை) நீங்கள் சிறந்தவராக இருக்கிறீர்கள் என்றால், அதை என்னவென்று அழைப்பீர்கள்...’ என்றெல்லாம் கேட்டால் என்னென்ன பதில் சொல்வீர்கள்.. `திறமை’ (பிழைப்பதற்கு தேவையான) என்றுதானே!

மனதுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்! - மகிழ்வோடு வாழுங்கள்!

`உங்கள் வாழ்வில் மிக மிக முக்கியமானது எது?’ என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்... நீங்கள் மனதார முன்னுரிமை அளிக்க விரும்பும் ஒரு விஷயத்தைத்தான் அல்லவா... `வேலைச் சந்தையில் நீங்கள் எப்படி உங்களை விலைபோக வைக்கிறீர்கள்?’ என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்... `திட்டம் போட்டு செயல்படுவதால்...’ என்றுதானே! கடைசியாக, `உங்கள் திட்டங்களை எப்படி வெற்றி பெற வைக்கிறீர்கள்...’ என்று கேட்டால், `என்னை நிரூபிப்பதன் மூலம்...’ என்பீர்கள்தானே!

மேலே நீங்கள் சொன்ன விடைகளைக் கொஞ்சம் கூட்டிக் கழித்து, மாற்றங்கள் செய்து பார்ப்போம். அவை உங்களுக்குத் தேவையான விளக்கங்களைத் தந்துவிடும்” என்று சொல்லும் ஆசிரியர், பின்வரும் கணக்குகளைச் சொல்கிறார்.

‘‘ஆர்வம் திறமையுடன் இணைந்தால், அது செய்யும் பணியைச் செழிக்கச் செய்யும். திறமையும் முன்னுரிமையும் சேர்ந்தால், அது பணி-வாழ்க்கை முன்னுரிமையைச் சரிசெய்வதாக அமையும். ஆர்வம், திறமை, முன்னுரிமை ஆகிய மூன்றும் இணைந்தால், அவை ஒரு சிறந்த இடத்துக்கு உங்களை இட்டுச் செல்லும். இந்த மூன்றையும் இணைப்பதற்கு உங்களிடம் நல்லதொரு திட்டம் இருக்க வேண்டும் என்பதுதான் சூட்சுமம்.

வாழ்க்கை என்பது சமநிலைப்படுத்த வேண்டிய ஒன்றல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது எதற்கு முன்னுரிமை தருகிறோம் என்பதைச் சார்ந்தது. உங்கள் வாழ்க்கையைச் சமநிலைப்படுத்த முயல்வதைவிட `இது எனக்கு முக்கியம்’ என்பதை முடிவு செய்து அதற்கு முன்னுரிமை கொடுப்பதே சிறந்தது.

வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதில் பல பள்ளத்தாக்குகள் வரும். முதலாவதாக வரும் பள்ளத்தாக்கு என்பது நீங்கள் சுமந்து செல்லும் சில சுமைகள் (நட்பு, உறவு போன்றவை). இரண்டாவது பள்ளத்தாக்கு, `இன்றைக்கு நான் வாழும் வாழ்க்கைத்தரத்தைக் குறையாமல் பாதுகாக்க இன்று நான் சம்பாதிக்கும் பணம் மிக மிக முக்கியமான ஒன்று’ என்று நினைப்பது. இது உங்களை மிகப் பெரிய பொறியில் அடைத்துவைத்துவிடும் என்பதால், இதுவும் ஒரு பள்ளத்தாக்கே. மூன்றாவதாக வருவது, உங்களிடம் இருக்கும் பொறுப்பு / அர்ப்பணிப்பு இல்லாத நிலைமை. ஒரு முடிவை எடுத்து, அதில் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டியது மிக மிக அவசியமான ஒன்று. அர்ப்பணிப்பில்லாமல் செயல்படுவதுதான் இறுதியான பள்ளத்தாக்கு. இவை அனைத்தையும் சரிவரக் கையாண்டால், உங்களுக்குப் பிடித்தவற்றைக் கண்டறிந்து முழு மனநிறைவுடன் மகிழ்ச்சியோடு வாழலாம்” என்று சொல்லி முடிகிறார் ஆசிரியர்.

பல நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் சிறப்பான பல கருத்துகளை விளக்கமாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்து, வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள முயலலாம்.

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு