பிரீமியம் ஸ்டோரி

ன்னதான் கடுமையாக உழைத்தாலும் பலரால் பெரிய வெற்றியைப் பெற முடிவதில்லை. காரணம், வெற்றிக்கான சூட்சுமங்கள் அவர்களுக்குப் புரிவதில்லை. யாராக இருந்தாலும் அவர்கள் வெற்றி பெறுவதற்கான சூட்சுமங்களைச் சொல்லித் தருகிறது பாப் ப்ராக்டர் எழுதிய ‘தி ஏபிசி ஆஃப் சக்சஸ்.’

‘‘பள்ளிக்கூடத்தில் வருட இறுதி மதிப்பெண் பட்டியலில் ‘ஏ’ கிரேடு பெற்றிருந்தால், கடந்த வருடம் அவருடைய செயல்பாடு சிறப்பாக இருந்தது என்று அர்த்தம். செய்யும் தொழிலிலும் அதே லாஜிக்தான் உபயோகமாகிறது. எல்லாவற்றிலும் முதல் வகுப்பு பெறும் அளவிற்கான செயல்பாடு என்பது உங்களுக்குவேண்டிய அனைத்தையும் தரும் வல்லமைகொண்டது. நம்முடைய செயல் பாடுகள் குறித்த விழிப்புணர்வும், ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளும் தன்மையும் இருந்தால் சாதனை என்பது கைகூடிவரும்’’ என்று ஆரம்பிக்கிறார் ஆசிரியர். வெற்றிக்கான சூத்திரம் இனி...

உங்களை மேம்படுத்தும் வெற்றிச் சூத்திரங்கள்!

மனதைக் கட்டுப்படுத்துங்கள்...

‘‘உங்களைத் தாண்டி எதுவும் உங்களுடைய வெற்றி/தோல்வியை நிர்ணயம் செய்வதில்லை என்பதைப் புரிந்துகொள்வதிலேயே வெற்றிக்கான பாதை ஆரம்பிக்கிறது. உங்கள் செயல்பாடுகளில் கிடைக்கும் வெற்றி/தோல்வி என்பது உங்களுடைய ஆழ்மனதில் இருக்கும் விஷயங்களின் வெளிப்பாடே. உங்கள் மனநிலையே உங்களது நடவடிக்கைகளைத் தீர்மானிக்கிறது. உங்களுடைய மனநிலையைச் சீரமைத்தால், உங்கள் நடவடிக்கைகளும் சீரமைக்கப்பட்டுவிடும் என்பதை முதலில் நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

ஒப்புக்கொள்ளுங்கள்...

‘‘என்னுடைய செயல்களில் வரும் வெற்றி/தோல்விக்கு நானே பொறுப்பு என்பதை வெளிப்படையாகவும் முழுமனதாகவும் நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். இந்தவித ஒப்புக்கொள்ளுதல் நடந்தால் மட்டுமே உங்களுடைய செயல்பாடுகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் முழுமனதுடன் எடுக்க முடியும். ஒப்புக் கொள்ளுதல் எனும் பண்பே மிகப் பெரிய வெற்றிக்கான முன்னுரையை எழுத ஆரம்பிக்கிறது. நம் செயல்பாடுகளுக்கு நாமே பொறுப்பு என்று ஒப்புக்கொள்ள ஆரம்பிக்கும்போதுதான் நம் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் மாற்றங்களை ஆழ்மனதில் உருவாக்க முடியும். உங்களுடைய செயல்பாடுகள் ஆழ்மனதாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது என்பதால், இதைச் சரிசெய்ய அதிக காலஅவகாசம் எடுக்கும். ஏன் தெரியுமா? ஓர் உதாரணத்தின் மூலம் இதைப் புரிந்துகொள்வோம்.

உங்களை மேம்படுத்தும் வெற்றிச் சூத்திரங்கள்!

சுறுசுறுப்போ அல்லது சோம்பேறித்தனமோ ஒருவருக்கு இருக்கிறது என்றால், அது ஒரே நாளில் உருவாகிய விஷயமில்லை. நாள்பட்ட ஒரு பழக்கமாகவே அது இருக்கிறது. அதைவிட மரபணுக்களுக்கும் இதில் பங்கு உண்டு. அப்படி மரபணுவுடன் தொடர்புடைய நாள்பட்ட ஒரு பழக்கத்தை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. அதற்குக் கொஞ்ச காலம் பிடிக்கும். மாறுவதற்கான முயற்சிகள் தொடரவேண்டிய அந்தக் காலகட்டம்வரை நம்முடைய செயல்பாடுகள் அதற்கேற்றாற்போல் இருக்கவேண்டும் என்றால், ஆழ்மனதில் மாறுதலுக்கான விதைகள் விதைக்கப்படவேண்டும்.

இந்த விதைகள் விதைக்கப்பட்டு வெற்றிப் பூக்கள் பூத்துக்குலுங்க வேண்டும் என்றால், அதன் அடிப்படையான மனது என்பது சரிசெய்யப்பட நம் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ச்சியைச் செய்யவேண்டியிருக்கும். மேலும், மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கும்போது நிறைய ஒழுங்குமுறைகளையும் கடைப்பிடிக்கவேண்டியிருக்கும். நினைப்பதைச் சாதித்துக்காட்டுவது என்பது சுலபமே. இந்தப் புத்தகம் சொல்லும் வழிமுறைகளை நீங்கள் முழுமனதாகக் கடைப்பிடித்தீர்கள் என்றால், நிச்சயம் உங்கள் எண்ணம்போல் எல்லாம் நடக்கும் என்கிறார் ஆசிரியர்.

செயல்படுங்கள்...

நம் வாழ்வில் எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் ஒருசில ரிஸ்க்குகளை எடுத்து அதற்கான விலையையும் நாம் தர வேண்டி யிருக்கும். நீண்ட நாள்களுக்கு எந்த முயற்சியும் செய்யாமல் இருப்ப தால், வரும் ரிஸ்க் மற்றும் அதற்கான விலையைவிட நாம் முயற்சி செய்யும்போது வரும் ரிஸ்க் மற்றும் அதற்கான விலை என்பது மிக மிகக் குறைவு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். செயல் படுதல் நம்பிக்கையைத் தரும். செயலற்று இருப்பது நம்பிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, பயத்தை உருவாக்கும். அதனால் செயல்படுவதே உயர்ந்த நிலையை அடையும் சரியான வழியாகும்.

மாறு அல்லது காணாமல் போய்விடு...

‘‘மாறுங்கள், மாறுங்கள் என்கின்றீர்களே. நான் என்னதான் கஷ்டப்பட்டு மாறினாலும் என்னைச் சுற்றியிருக்கும் விஷயங்கள் மாறிவிடுமா, அதெல்லாம் அப்படியேதானே இருக்கும். அவைதானே எனக்குத் தடையாக இருக்கிறது’’ என்று நீங்கள் கேட்கலாம்.

உங்களை மேம்படுத்தும் வெற்றிச் சூத்திரங்கள்!

இது ஒரு தவறான வாதம். நீங்கள் மாற ஆரம்பிக்கும்போது உங்களுடைய சூழலும் மாறவே செய்யும். உங்களைச் சுற்றி இருந்த நபர் களில் சமீப காலத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் அவர்களுடைய சுற்றுச்சூழலை மாற்றி யிருப்பார்கள். அல்லது வேறு சூழலுக்கு மாறிச் சென்றிருப்பார்கள். நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நாம் காட்டும் அணுகுமுறையை மாற்றும்போது அவர்களும் மாறுவார்கள். இந்த மாறுதல் ஏற்படத் தாமதமானால் நாம் சூழலை மாற்றும் பொருட்டு வேறு இடத்தை நோக்கிப் பயணிக்க வேண்டி யிருக்கும்.

நம்பிக்கையே வெற்றி தரும்

இந்த உலகத்தில் இருக்கும் எந்தச் சக்தியாலும் சரியான அணுகுமுறையைக் கொண்ட மனிதரின் வெற்றி யைத் தடுக்க முடியாது. அதேபோல், உலகத்தில் இருக்கும் எந்த சக்தியாலும் தவறான அணுகுமுறையைக் கொண்ட மனிதரின் தோல்வி யையும் தடுக்க முடியாது நல்ல அணுகுமுறைக்கு அடிப்படைத் தேவை நற்செயல்கள்தான். நல்ல செயலுக்கு அடிப்படைத் தேவை நல்ல எதிர்காலம் வரும் என்ற எண்ணம்தான். எனவே, நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வெற்றிக்கு மிக மிக அவசியமான ஒன்று. மாறாது, நடக்காது, கிடைக்காது என்ற கூண்டி லிருந்து வெளியேறி, பரந்து விரிந்த உலகில் வெற்றிக்கான வாய்ப்புகளை உணர முயற்சி செய்யுங்கள்.

இந்த உலகத்தில் இருக்கும் எந்தச் சக்தியாலும் சரியான அணுகுமுறையைக் கொண்ட மனிதரின் வெற்றியைத் தடுக்க முடியாது. அதேபோல், உலகத்தில் இருக்கும் எந்த சக்தியாலும் தவறான அணுகுமுறையைக் கொண்ட மனிதரின் தோல்வியையும் தடுக்க முடியாது!

பெரிய சாதனைகள் எல்லாம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும்போதே சாதிக்கப்படுகின்றன. சாதனையாளர்கள் யாருமே இது இப்படித்தான் முடிவடையும் என்ற நிச்சயத் தன்மையுடன் பயணத்தை ஆரம்பிக்கவில்லை. அந்த இடத்துக்குக் கட்டாயம் போய்ச்சேருவேனா என்று கேட்டுக்கொண்டே இருந்தால், உங்களுடைய பயணம் ஒருநாளும் தொடங்காது. ஒருவரின் தைரியத்தின் அளவை வைத்தே அவருடைய வாழ்வின் எல்லைகள் விரிவடையவோ சுருங்கவோ செய்கிறது. ஒருவர் இதெல்லாம் நடந்துவிடுமோ என்று படுகின்ற கவலையில் 92% அளவிலான விஷயங்கள் நிச்சயமாக நடப்பதே இல்லை என்கின்றன ஆய்வுகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவலையை ஒழித்துக் கட்டுங்கள்...

உலகத்தில் பொழுதைத் தின்னும் வியாதி ஒன்று உண்டென்றால், அது நாம் கொள்ளும் கவலையேயாகும். கவலை என்பது உங்களை மந்தமான மனிதராகவும் எரிச்சலுடன் செயல் படும் மனிதராகவும் மாற்றி விடுகிறது. எனவே, மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வையுங்கள். நம் அனைவருக்குமே இருக்கும் முழுமுதல் பிரச்னை நாம் நம்மைப் பற்றி ஒருபோதும் சிந்திக்காமல் இருப்பதுதான். உங்கள் பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவே கொஞ்சம் நேரம் ஒதுக்கி, தனியாக ஒரு அறையில் அமர்ந்து, உங்களைப் பற்றிச் சிந்தியுங்கள். முன்னேற்றத்திற்கான பாதை உங்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும் என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

செயல்படுத்துவதில் சிக்கல் இல்லாத, முன்னேற்றத்திற்கான பல நல்ல வழிகளைச் சொல்கிறது இந்தப் புத்தகம். வெற்றியை நோக்கிப் பயணிக்க நினைக்கும் அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு