பலருக்கும் வாழ்க்கையில் எவ்வளவு செல்வம் வந்தாலும், `போதும்’ என்ற மனநிலை மட்டும் ஏற்படுவதில்லை. அந்த மனநிலைதான் மகிழ்ச்சியைக் குறைத்து, நம்மை நிம்மதியிழக்கச் செய்துவிடுகிறது. `குறைந்தபட்சத் தேவைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?’ என்பதைத்தான் இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தவிருக்கும் புத்தகம் சொல்கிறது. அது, எரிக்கா லேய்ன் (Erica Layne) எழுதிய ‘தி மினிமலிஸ்ட் வே’ (The Minimalist Way).

“நமக்குப் பெரும் பாரமாக இருக்கும் பணிச்சுமை, முடிக்க வேண்டிய இலக்குகள், மீட்டிங்குகள், படிக்க வேண்டிய / பதில் போட வேண்டிய மெயில்கள் போன்றவற்றுக்கிடையே நம் உடைமைகள்கூட நமக்கு ஒரு சுமையாக மாறிவிடுகின்றன. அவற்றை வாங்கிக்குவித்த நமக்கு அனுபவிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. வெறுமனே பொருள்களோடும், அவை அடைத்துப்போடும் இடத்தோடும் இந்தப் பிரச்னை நின்றுவிடுவதில்லை. எனவே, இதை எப்படிக் கையாள்வது என்பதை விவரிப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்” என்று சொல்லி நூலை ஆரம்பிக்கிறார் நூலின் ஆசிரியர்.

மினிமலிசம் என்பது...

“நமக்கு சந்தோஷம் தரும் விஷயத்தை தவிர, மற்றவற்றை நம்மைச் சுற்றிவைத்திருப்பது முற்றிலும் அநாவசியமானது என்பதுதான் `மினிமலிசம்’ (அவை பொருளோ, ஆட்களோ, சூழலோ எதுவானாலும் சரி). அந்தச் சூழ்நிலையில் என் வீட்டுக்குள் இருக்கும் பொருள்களை ஒரு குற்றம் கண்டுபிடிக்கும் மனநிலையுடன் (Criticial Review) ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். அந்த மனநிலையை எல்லா விஷயங்களிலும் கடைப்பிடிக்க ஆரம்பித்த நான் அபரிமிதமான பலன்களைப் பெற்றேன்.

மினிமலிசம் என்பது வெறுமனே பொருள்களையும் தேவையையும் மட்டும் குறைத்துக்கொள்வது என நினைக்காதீர்கள். அது அதிக நிம்மதியையும் அபரிமிதமான நேரத்தையும் (சந்தோஷமாக உங்களுக்குப் பிடித்தவர்களுடன் செலவிடும் வண்ணம்) வழங்கும் ஆற்றல் படைத்தது.

மினிமலிசம் என்பது எவற்றையெல்லாம் உள்ளடக்கியது தெரியுமா... பொருள்கள், மனநிலை, உணர்வுபூர்வமான விஷயங்கள் ஆகியவை மினிமலிசத்தைச் சார்ந்தவை.

பொருள்களின் நடுவே சிக்கிக்கொண்ட நீங்கள் அவற்றின் மீதிருந்து உங்கள் கவனத்தைத் திருப்புவதே மிகக் கடினமான ஒன்றாக இருக்கும்!

பொருள் குவியல்

பொருள்களின் நடுவே சிக்கிக்கொண்ட நீங்கள் அவற்றின் மீதிருந்து உங்கள் கவனத்தைத் திருப்புவதே மிகக் கடினமான ஒன்றாக இருக்கும். அதையும் மீறி சிந்திக்க ஆரம்பித்தால், `முதலில் இந்தச் சாமான்களை ஒழுங்குபடுத்த வேண்டும்’ என்ற எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றும். எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்ட பிறகு சிந்தித்தால் அது நல்ல பலன்களையே தரும்.

மன அழுத்தக் குவியல்

டெக்னாலஜியை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்ததால், நாம் வாரத்துக்கு அறுபது முதல் எண்பது மணி நேரம் வேலை செய்கிறோம். வேலையிலும் வாழ்க்கையிலும் நாம் சிறப்பான சாதனைகளைச் செய்ய முயல்கிறோம். இதனால் நம் மூளைக்குள் எக்கச்சக்கமான அழுத்தம் உருவாகிறது.

உணர்வுக் குவியல்கள்

தொடர்ந்து பல பிரச்னைகள் குறித்து சிந்தித்துக்கொண்டேயிருப்பதால் நமக்கு எமோஷன் அதிகமாகிறது. எதிர்மறை எண்ணங்கள் ஆட்டோபைலட் மோடில் உங்கள் மனதில் இயங்க ஆரம்பித்துவிடுகிறது. இதைத் தவிர்க்க மனதில் என்னென்ன விஷயங்கள் குவிந்துகிடக்கின்றன என்பதைப் பார்த்து, அவற்றை முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

பொருள்களைக் குவித்தால் என்னவாகும்?

பணத்தைச் செலவு செய்து பொருள்களை வாங்குகிறோம். அவற்றைப் பயன்படுத்துவதேயில்லை. அவை ஒரு மூலையில் இடத்தை அடைத்துக்கொண்டு அழுக்கடைந்து கிடக்கின்றன. அவற்றை மறந்துவிட்டு நாம் புதிதாகப் பல பொருள்களை வாங்குகிறோம். இடம் பற்றாக்குறையாகும் போது பழையவற்றைத் தூக்கிப்போட்டு விடுகிறோம். இதே நிலைதான் மன அழுத்தம் மற்றும் உணர்வுகளின் குவியலிலும். முந்தைய விஷயத்தில் அது பணத்தைச் செலவுசெய்ய வைக்கிறது. பிந்தைய இரண்டும் நம் முன்னேற்றத்துக்குத் தடைபோட்டு பணத்தைச் சம்பாதிக்க விடாமல் செய்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம்” என்று கிண்டலாகச் சொல்லும் எரிக்கா லேய்ன், “மினிமலிசத்தை வாழ்வில் அமல்படுத்தும் நபர்களுக்கு இந்த இடைஞ்சல்கள் குறைந்துபோய்விடும்” என்கிறார்.

“ஒரு மினிமலிஸ்ட்டாக வாழ என்னென்ன செய்ய வேண்டும்... முதலில் விளம்பரங்களை (நேரடியானதோ/மறைமுகமானதோ) பார்ப்பது, செவிசாய்ப்பது இரண்டையும் தவிர்க்க வேண்டும். அத்தியாவசியத் தேவைக்கும், அநாவசிய ஆசைக்கும் இருக்கும் வித்தியாசத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். புதிய பொருளை வாங்க வேண்டும் என்ற உந்துதல் எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதைக் காத்திருந்து பார்க்கும் துணிவு இருக்க வேண்டும். ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அதைப் பராமரிப்பதற்கான நேரம் நமக்கு இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்.

நீங்கள்எந்த மாதிரியான பர்சனாலிட்டியுடன் வாழ விரும்புகிறீர்கள் என்பதும், உங்கள் வீட்டின் நிலைமையும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். திடீரென்று அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் இந்தப் பொருள்களை நிர்வகிப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும். இவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்தாலே பாதிப் பிரச்னையை நாம் கடந்த மாதிரிதான்” என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

வீட்டில் ஆரம்பித்து, அலுவலகம் வரை எப்படி மினிமலிசத்தை அமல்படுத்துவது என்பதை விளக்கமாகக் கூறியிருக்கும் ஆசிரியர், குடும்ப வாழ்க்கை, நிதி மற்றும் பட்ஜெட், நேர மேலாண்மை, உறவுகளைக் கையாள்வது போன்றவற்றிலும் இந்தக் கொள்கையை எப்படி நடைமுறைப்படுத்துவது என விரிவாக தனித்தனி அத்தியாயங்களில் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.

“இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த அதிக மன உறுதி வேண்டும். உங்கள் மன உறுதி அவ்வப்போது குறையத்தான் செய்யும். அப்படிக் குறையும்போதெல்லாம் ‘ஏன்?’ என்ற கேள்வியைக் கேட்டுப் பழகுங்கள். `இந்த விஷயத்தை ஏன் நான் செய்ய வேண்டும்’, `இந்தப் பொருளை நான் ஏன் வாங்க வேண்டும் போன்ற கேள்விகளை ஒரு முறைக்குப் பல முறை கேட்டுப் பழகுங்கள். அவற்றுக்குச் சரியான விடை கிடைத்தாலொழிய, அவற்றைச் செய்யாதீர்கள்.

அதையும் தாண்டி உங்களை ஒரு மினிமலிஸ்ட்டாக அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி அடையாளப்படுத்திக் கொண்டால் மட்டும்தான் மினிமலிசத்தின் உச்சத்தை உங்களால் அடைய முடியும்” என்று சொல்லி முடிக்கிறார் எரிக்கா லேய்ன்.

`உலகிலுள்ள செல்வம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்’ என்றுதான் பெரும்பாலானவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பரபரப்பான இந்த உலகில் வாழும் நமக்கு வாழ்விலிருக்கும் மற்றுமொரு மாற்றுப் பாதையைப் பற்றிச் சொல்லும் இந்தப் புத்தகம் மிக முக்கியமான ஒன்று. அனைத்துத் தரப்பினருமே படித்துப் பயன் பெற வேண்டிய அருமையான நூல்.

- நாணயம் விகடன் டீம்