Published:Updated:

உங்களிடம் இருக்கிறதா... சாதிக்கவைக்கும் பேரார்வம்..?

நாணயம் புக் செல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் புக் செல்ஃப்

நாணயம் புக் செல்ஃப்

சிந்தனையாளர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் எனப் பலரின் வெற்றி குறித்த ஆராய்ச்சிகள் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. பயிற்சி, இடைவிடாத முயற்சி, தீராத ஆவல், திருப்தியடையாத மனநிலை போன்றவைதான் பலரின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக இருக்கின்றன என்பதை அவர்களுடைய வெளிப்படையான பேச்சுகளிலிருந்து எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இவை அனைத்துக்கும் பின்னாலிருந்து இயக்கும் பொதுவான விஷயம் ஒன்று, ‘PASSION’ என்று சொல்லப்படும் பேரார்வம்தான் என்கிறார்கள் ‘தி பேஷன் பாரடாக்ஸ்’ எனும் புத்தகத்தை எழுதிய ப்ராட் ஸ்டல்பர்க் மற்றும் ஸ்டீவ் மேக்னஸ்.

உங்களிடம் இருக்கிறதா... சாதிக்கவைக்கும் பேரார்வம்..?

‘‘விளையாட்டு வீரர்கள், உயர்மட்ட பணியாளர்கள், தொழிலதிபர்கள் எனப் பலருக்கும் நாங்கள் பயிற்சியாளராக இருப்பதால், இவர்களுடன் தொடர்ந்து பழகி, அவர்களைப் பற்றி புரிந்துகொள்ளும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இவர்கள் அனைவருமே தீராத பேரார்வத்துடன் தாங்கள் செய்யும் விஷயங்களைத் தொடர்ந்து செய்துவந்தனர் என்பதுதான். இவர்களால், ‘இதுபோதும்’ என்று திருப்திப்படவே முடியாது. ‘என்ன ஆகிவிடும், ஒரு கை பார்த்துவிடுவோம்’ என எல்லைகளைத் தாண்டி, தொடர்ந்து பயணிக்கத் துணிந்தவர்களாகவே இருந்து வருகின்றனர். எடுத்த எந்த விஷயத்திலும் தங்களுடைய முழு அர்ப்பணிப்பை எப்போதும் செலுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது அவர்கள் கொண்டிருக்கும் பேரார்வமே’’ என்கிறார்கள் இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள்.

இந்தப் பேரார்வம் எங்கிருந்து ஊற்றெடுக்கிறது, எப்படி இந்தப் பேரார்வத்தை அவர்கள் உணர்கின்றனர்? மேலும், இந்தப் பேரார்வத்தைப் பின்தொடர்வதால், அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் கடமைகள் பலவற்றையும் செய்யத் தவறுகின்றனர். இந்தச் சமநிலையற்றச் (வேலை மற்றும் வாழ்க்கை இடையேயான) சூழலை எப்படி அவர்களால் மட்டும் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடிகிறது? தவிர, இந்தப் பேரார்வம் ஒரு பாசிட்டிவ்வான விஷயம் என்பதா அல்லது ஒரு போதை நிலை என்பதா, பேரார்வத்துடன் சீராக வாழ வழிவகைகள் உள்ளதா எனப் பல கேள்விகளை எழுப்பி, இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தெளிவாகத் தருகிறார்கள் புத்தகத்தின் ஆசிரியர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘சிறுபிராயத்திலிருந்தே நமக்குப் பெற்றோர், ஆசிரியர், பி.டி மாஸ்டர், பட்டமளிப்பு விழா பேச்சாளர் என அனைவரும் சொல்லும் ஒரு விஷயம், ‘எதிலும் ஆர்வமாய் இருங்கள்’ என்பது தான். ஆனால். நிஜத்தில் ஆர்வம் அதிகமானால் ஆர்வக்கோளாறு என்கின்றனர். ‘அட, பைத்தியம் போல் செயல்படுகிறார்கள்’ என்று பேரார்வத்துடன் செயல்படுபவர்களை உலகம் பழிக்கிறது. ‘எதிலாவது திருப்தி இருக்கிறதா, உடம்பைக் கெடுத்து, டென்ஷனாகி எதற்கு இப்படிப் பைத்தியக்காரத்தனமாகச் செயல்படவேண்டும்’ என்று நம்மைச் சுற்றியிருப்பவர்கள் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

உங்களிடம் இருக்கிறதா... சாதிக்கவைக்கும் பேரார்வம்..?

பேரார்வம் என்பது சரியாகக் கையாளப்படாவிட்டால், அது ஒரு வரமல்ல; சாபம்தான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எல்லைகளற்ற பேரார்வம் நம்மை மூழ்கடித்து, ஒரேயடியாய் குட்டிச் சுவராக்கிவிடும் என்பதையும் நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். பேரார்வம் என்பதைச் சரியான முறையில் கையாளவேண்டும். அது நம்முடைய வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்கவேண்டும். பேரார்வம் என்பதை நல்வழிப்படுத்தி அதை ஒரு பழக்கமாகவே நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி நல்லதொரு பழக்கமாக மாற்றிக்கொண்டால், அது எப்படி நமக்குச் சிறப்பான வழியில் கைகொடுக்கும்.

‘உனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடி’ என்று ஊரே நமக்குச் சொல்லுமே தவிர, நமக்கு உதவும் வகையில் ஆர்வமாக இருப்பது எப்படி என்பது பற்றி நமக்கு ஒருவருமே சொல்லித் தரமாட்டார்கள். ‘ஆர்வமாக இருப்பதைச் செய்’ என்று உலகம் சொல்வதைக் கேட்டு, நீங்கள் பிடித்ததைச் செய்யப்போனால் என்னவாகும்?

வாழ்வியல் சார்ந்த விஷயங்களில் அக்கறையில்லாமல், வெறுமனே ஆர்வம் மட்டுமே அதிகம் கொண்ட செயல்களில் ஈடுபவதைவிட, அக்கறையுடன் கூடிய ஆர்வத்துடன் ஈடுபடுவதே சாதிக்க வைக்கும்மிகச் சிறப்பான விஷயமாக இருக்கும்!

முதலில், நீங்கள் ஈடுபடுகிற, உங்களுக்குப் பிடித்த விஷயத்தில் நீங்கள் வென்றுகாட்ட வேண்டும். இதில் வெற்றிபெற்றாலும் கஷ்டம், தோல்வியடைந்தாலும் கஷ்டம். வெற்றிபெற்றால் ‘இது போதாது, இன்னும் இன்னும் வேண்டும்’ என்று உலகம் உங்களை உசுப்பேற்றும். தோல்வியடைந்தாலோ, ‘எங்களுக்கு அப்பவே தெரியும் இதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று சொல்லும். இந்தப் பழிச்சொல் தரும் மன அழுத்தத்தைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

இரண்டாவதாக, பல சமயங்களில் உலகத்தில் என்ன நடக்கிறது, நாம் ஈடுபடும் விஷயம் எந்த அளவுக்கு உலகத்துடன் ஒட்டாது போய்க்கொண்டிருக்கிறது என்பது எதுவுமே தெரியாத அளவுக்கு நாம் ஆர்வக்குருடாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. மூன்றாவதாக, இதுபோன்ற தவறான நடவடிக்கைகளால் நாம் முற்றிலும் வேலைக்காகாத ஆளாக ஆகிவிடவும் வாய்ப்புள்ளது. இறுதியாக, ஆர்வம்கொண்ட விஷயத்தை எதற்காகச் செய்ய ஆரம்பித்தோம்? சந்தோஷத்திற்காகத்தானே! அதை முற்றாக இழக்கும்போது நாம் அதை ஏன் செய்யவேண்டும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்மில் யாருமே இப்படி வேலைக்கு ஆகாத ஆளாக ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் நமக்குப் பிடித்த விஷயத்தைச் செய்ய ஆரம்பிப்ப தில்லை. யாரும் வருத்தமடைவதற்காகவோ வேலை - வாழ்க்கை நடுநிலையை இழப்பதற்காகவோ மெனக்கெட்டு, பிடித்த விஷயங்களைச் செய்ய இறங்குவதில்லை. ஆனால், பிடித்ததைப் பேரார்வத்துடன் செய்ய முயலும்போது இவையும் நம்மை வந்து பிடித்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பேரார்வம் என்பது கண்ணாடிபோல் உடையும் தன்மைகொண்ட ஒரு விஷயம். அதனைச் சரியாகக் கையாளாவிட்டால், அது உடைந்து நம்மைக் காயப்படுத்தி விடும்’’ என்று எச்சரிக்கின்றனர் ஆசிரியர்கள்.

உங்களிடம் இருக்கிறதா... சாதிக்கவைக்கும் பேரார்வம்..?

“சரி, நமக்கு ஆர்வமுள்ள சரியானதொரு விஷயத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என ஒரு தனி அத்தியாயத்தை இந்தப் புத்தகம் கொண்டிருக்கிறது. உலக அளவிலான ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறது எனில், 78 சதவிகிதத்தினர் மகிழ்ச்சி என்பது நமக்குப் பிடித்த வேலையையோ அல்லது பொழுதுபோக்கையோ செய்வதிலிருந்து கிடைக்கிறது என்று நம்புகின்றனர் என்று சொல்கிறது.

இப்படி ஆராய்ச்சிகள் சொன்னாலும் இந்த நம்பிக்கை எந்த அளவுக்குப் பூர்த்தியாகிறது என்றால், அதில்தான் சிக்கலே இருக்கிறது. நமக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்கள் நமக்குச் (திறமை, தகுதி, செயல்பாடு போன்ற) சரிப்பட்டு வருமா என்பதை நாம் சிந்திப்பதில்லை. ‘நான் இதில் ஆர்வமாக இருக்கிறேன். அதனால் இதைச் செய்யப் போகிறேன்’ என்று ஒருவர் கிளம்புகிறார் என்றால், முதன்முதலில் அவர் அந்த விஷயத்தில் எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலைக்குப்பின், அந்தச் செயலை விட்டுவிட எந்த அளவு வாய்ப்பிருக்கிறது?

எல்லாம் சரியாகப் போனாலுமே அவர் செய்யும் விஷயத்தைவிட ஒருவேளை அதிக லாபம் தரும் விஷயங்கள் அவர் கண்முன்னே தோன்றினால், அவர் என்ன செய்வார்? மனம் தடுமாறுவாரா அல்லது ஆர்வம்கொண்டதையே தொடர்வாரா? இதையெல்லாம் தாண்டி ஒருவருடைய ஆர்வம் என்பது ஒன்றைவிடச் சிறந்த மற்றொன்று கண்ணில் படும்போதுதான். அப்படி மாறுவது மனித இயல்புதானே! இதைப் பற்றியெல்லாம் சிந்தித்தே நாம் செயல்பட வேண்டும்” என்கின்றனர் ஆசிரியர்கள்.

“வாழ்வியல் சார்ந்த விஷயங்களில் அக்கறை யில்லாமல், வெறுமனே ஆர்வம் மட்டுமே அதிகம் கொண்ட செயல்களில் ஈடுபவதைவிட, அக்கறை யுடன் கூடிய ஆர்வத்துடன் ஈடுபடுவதே சாதிக்க வைக்கும் மிகச் சிறப்பான விஷயமாக இருக்கும்” என்று சொல்லி முடிக்கின்றனர் ஆசிரியர்கள்.

மனமகிழ்ச்சியுடன் வாழ, பிடித்ததைச் செய்யுங்கள் என்று கூறும், பல வாழ்வியல் வெற்றிக்கான பயிற்சிதரும் குருக்கள் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பிடித்ததில் பேரார்வத்துடன் இருக்கும் இன்றைய இளைஞர்கள் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் படிக்கலாம்.

-நாணயம் விகடன் டீம்