நம் எல்லோருக்குமே நாளொன்றுக்கு 24 மணி நேரம்தான் இருக்கிறது. மேற்கொண்டு அதிகமான நேரத்தை நம்மால் உருவாக்க முடியாது என்பதால், நேரத்தை நிர்வகிப்பது மிக மிக அவசியமாக இருக்கிறது. ஆனால், கவனச்சிதறல் என்ற பிரச்னை, நம் நேர நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துவிடுகிறது. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடும் வழிகளைச் சொல்கிறது மெளரா தாமஸ் என்ற பெண்மணி எழுதியிருக்கும் ‘அட்டேன்ஷன் மேனேஜ்மென்ட்’ என்ற புத்தகம்.
இணையமே கதி..!
‘‘இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பமானது, நமக்குத் தேவையானவற்றை சரியான நேரத்தில் தரத் தயாராக இருக்கிறது. இதனாலேயே நமக்குத் தேவையானவற்றை தேவையான நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இணையத்திலேயே கதியாகக் கிடக்கிறோம். இதனால் இணைய வழி கவனச்சிதறல் என்பது எக்கச்சக்கமாக நம்மிடம் உருவாகிறது’’ என நம் பிரச்னையின் மூலகாரணத்தை நச்சென்று சொல்கிறார் ஆசிரியர்.
நேரத்தைக் கொள்ளை அடிக்கும் இணையம்..!
‘‘இன்-ஆப் மற்றும் ஆன்-பேஜ் விளம்பரங்கள், பொழுதுபோக்கு என்ற போர்வையில் விளம்பரங்கள் (Advertainment), உலகத்தின் எந்த மூலைக்கும் உடனடியாகத் தகவலைப் பகிர முடிவதற்கான ஆப்கள், நோட்டிஃபிகேஷன்கள், எக்கச்சக்கமாக வந்து கொண்டிருக்கும் இலவச சேவைகள் (உங்கள் நேரம்தான் நீங்கள் தரும் விலை) – அதிலும் உங்களுக்குத் தேவையான விளம்பரத்தை மட்டுமே கொண்டு சேர்க்கும் திறனுடன் கூடிய ஆப்கள் என உங்கள் கவனத்தைக் கொள்ளையடிக்கும் போட்டி இணைய உலகில் தொடர்ந்து இருந்துகொண்டே வருகிறது. தனிநபரான உங்கள் மீது தொடுக்கப்படும் இந்தப் போரில் நீங்கள் வெல்வதற்குத் தேவைப்படும் கவனத்தைதான் கவன மேலாண்மை என்கிறார் ஆசிரியர். இன்றைக்கே கவனச்சிதறல் அதிகமாக இருக்கிறது. இனிவரும் காலத்தில் இது இன்னும் பல மடங்கு பெருகுமே தவிர, குறைய வாய்ப்பே இல்லை. எனவேதான், கவன மேலாண்மை என்பது மிக மிக அவசியமான ஒன்றாகிறது என்கிறார் ஆசிரியை.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநேர நிர்வாகம் தீர்வாகுமா..?
‘‘கவனச்சிதறல் நம்முடைய பிரச்னை என்பதால், நேரத்தை நிர்வகித்தல் என்பது அதற்குத் தீர்வாகாது. கவனச்சிதறல் தடுப்பு என்பதே இந்தப் புதிய வியாதிக்கான தலைசிறந்த மருந்து. இதை விட்டுவிட்டு நேரத்தை நிர்வகிக்கிறேன் பேர்வழி என்று கிளம்புவது, பழைய மருந்தை புதிய வியாதிக்குக் கொடுத்துவிட்டு குணமாக மாட்டேன் என்று புலம்புகிற மாதிரிதான்!

கவனச் சிதறல் ஏற்படுத்தும் பாதிப்புகள்..!
அதிகமாக வேலை பார்த்தது போன்ற எண்ணம், அதீத அயர்ச்சி, அதிக மன அழுத்தம், ‘சாதனைகளைச் செய்ய முடியவில்லையே!’ என்ற எண்ணம் போன்றவையே கவனச்சிதறல் என்ற வியாதிக்கான அறிகுறிகள். இதனால் ஏற்படும் பிசியான சூழ்நிலை என்பது எப்போதுமே இவற்றுக்கு மட்டுமே நாம் எதிர்வினையாற்றிக் கொண்டிருப்பதால்தான். இதுபோன்ற விஷயங்களில் மட்டுமே நாம் கவனம் செலுத்தும்போது, நாம் செய்தாக வேண்டிய காரியங்களில் நம்மால் ஆற்றலைச் செலுத்தி, நம்முடைய உற்பத்தித்திறனை அதிகரித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும்.
நேர மேலாண்மை டு கவன மேலாண்மை..!
‘‘நேர மேலாண்மை என்பதிலிருந்து கவன ேலாண்மை என்பது குறித்து கருத்தாய் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஏனென்றல், இணையத்தின் தலையாய பணி, நம்மை தொடர்ந்து இணையத்தில் இணைத்து வைத்திருப்பதே அன்றி வேறேதுவும் இல்லை. இணையத்தில் கொண்டு வரப்படும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இந்த நோக்கத்தை நிறைவேற்றவே உருவாக்கப்படுகிறது. இதனாலேயே, உற்பத்தித் திறன் அதிகரிக்க நம்முடைய எண்ணம் நிச்சயமாகவும் உடனடியாகவும் கவன மேலாண்மையை நோக்கி மாறியே ஆக வேண்டும்’’ என்கிறார் ஆசிரியை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நான்கு விதமான செயல்பாடுகள்
கவன மேலாண்மை என்பது ஒரே ஒரு விஷயத்தைச் சார்ந்ததில்லை. எவ்வளவு கவனத்துடன் நீங்கள் இருக்கிறீர்கள், எந்த அளவு உங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள் என்ற இரண்டினையும் உள்ளடக்கியது அது.

பொதுவாக, நாம் நான்கு விதமான அலுவலக செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறோம். ‘ஒரே நேரத்தில் பலவேலையைச் செய்யும் திறமை எனக்கிருக்கு’ என்று இறங்குதல் (multitasking), இயற்கையான, அதீத ஈடுபாட்டுடன் நம்மை மறந்து ஆழ்ந்த நிலையில் ஒரே ஒரு வேலையைச் செய்தல், சிந்தனை வயப்படுதல் (day dreaming), இதை இன்றைக்கே, இப்போதே முடித்தாக வேண்டும் என்ற திட்டத்துடன் வரிந்து கட்டிக் கொண்டு முழுமனதுடனும் முழுக் கவனத்துடன் செயல்படுதல் என்ற நான்கு நிலைகளில் நாம் நம்முடைய செயல்பாட்டைக் கொண்டுள்ளோம்.
இதில் ஆழ்ந்த நிலையில் வேலை செய்தல் மற்றும் வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தல் என்ற இரண்டிலும் பெரிய அளவிலான கவனச்சிதறல் இருக்காது. ஆனால், மற்ற இரண்டு நிலைகளிலும் நிறைய கவனச்சிதறல் வரவே செய்யும். பொறுமையின் அளவு அதிகரிக்கும்போதே கவனம் கூடுகிறது. பொறுமைக் குறைவு அதிகமாக இருக்கும்போது ஒன்றிலிருந்து மற்றொன்று என்று நாம் தாவிக்கொண்டே இருக்கிறோம். எனவே, பொறுமையை வளர்த்தலே கவன மேலாண்மைக்கு முதல்படி.

இதெல்லாம் அலுவல கத்தில் சாத்தியமா, என்னுடைய அலுவலகம் எப்படி இருக்கும் தெரியுமா, தொடர்ந்து ஏதாவது பிரச்னை வந்துகொண்டே இருக்கும் என்பவர்களுடைய அலுவலகத்தை ஆராய்ந்து பார்த்தால் ஓ.பி.பி (Other person’s problem) என்னும் அடுத்த மனிதர்களின் பிரச்னையே கவனச் சிதறலுக்கு முழுமையான காரணமாக இருக்கும்.
இது தவிர, தொழில்நுட்பம், அலுவலக லே-அவுட் (ஒருங்கிணைந்து வேலை செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டது உற்பத்தித்திறனுக்கு எதிராகச் செயல்படும் அவலநிலை) போன்றவையும் கவனச்சிதறலை அதிகப்படுத்தும். கவன மேலாண்மை என்பது இதிலிருந்தெல்லாம் ஒரு மனிதனை வெளியே எடுத்து எதில் கவனம் தேவையோ, அதில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கும் கலையாகும்.
எங்கே ஆரம்பிப்பது?
கவன மேலாண்மையை எங்கே ஆரம்பிப்பது? முதலில், டெக்னாலஜியில் ஆரம்பிக்க வேண்டும். உங்களுடைய டிவைஸ்கள் உங்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர, நீங்கள் அவற்றுக்குத் தீனியாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 800 பணியாளர் களிடையே நடத்திய ஆய்வு ஒன்றில், அவர் களுடைய டிவைஸ் அவர்கள் கண்முன்னே இருந்தாலே கவனச்சிதறல் என்பது வந்து விடுகிறது என்பதைத்தான்.

இரண்டாவது, நீங்கள் பணிபுரியும் சூழல். பணிபுரியும் மேசையில் ஆரம்பித்து கேபினில் இருக்கும் சிறிய நோட்டீஸ் போர்டு முதல் அத்தனையும் சுத்தப்படுத்தப்பட்டு தேவையான விஷயங்களை மட்டுமே அதில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து உங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றியமைத்துக்கொள்வது. 10 நிமிட மீட்டிங் என்றால், டைமர் வைத்து முடிப்பது, ஐந்து நிமிட டீ பிரேக் என்றால் அதைச் செம்மையாகக் கடைப்பிடிப்பது, இடையிடையே கொஞ்சம் தனிமையில் ரிலாக்ஸ் செய்துகொள்ள குறிப்பிட்ட இடைவெளியை வைத்துக்கொண்டு செயல்படுவது எனப் பல பழக்கவழக்கங்களை உருவாக்கிக்கொள்வதன் அவசியத்தை ஆசிரியை விளக்கமாகச் சொல்லியுள்ளார்.
“நம்முடைய கவனத்தைத் தொடர்ந்து கவர போட்டிபோடும் விஷயங்களுக்கு நாம் இரையானோம் என்றால், நாம் நிறைய நாள்கள் படுபிஸியாக இருந்தும் எதையும் உருப்படியாகச் சாதிக்க முடியாமல் போனதாகத்தான் நாம் உணர்வோம். இந்தவித நாள்கள் வாரமாகி, மாதமாகி வருடங்களாக ஆகும்பட்சத்தில் நம்முடைய வாழ்க்கையே ஒரு தேக்கநிலைக்கு வந்துவிடும்.
நம்முடைய வாழ்க்கை என்பது முழுமையாக வாழவும் சாதிக்கவும் நமக்குத் தரப்பட்ட ஒன்று. அதற்கான திறமைகள் பலவும் நம்மிடம் இருந்தும் கவனம் செலுத்த தவறுவதன் மூலம் மட்டுமே நம்மால் சாதிக்க முடியாமல் போகிறது என்ற பரிதாப நிலைக்கு நம்மை நாமே தள்ளிக் கொள்ளாமல் இருக்க கவன மேலாண்மை என்பதைக் கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வெற்றியடைய முயற்சி செய்வது மிகமிக அவசியம்” என்று முடிக்கிறார் ஆசிரியை.
முன்னேறத் துடிக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது!
- நாணயம் விகடன் டீம்