இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் மோர்கன் ஹவுசல் என்பவர் எழுதிய ‘தி சைக்காலஜி ஆஃப் மணி’ என்ற புத்தகம் சுவாரஸ்யமான ஒரு கதையுடன் ஆரம்பிக்கிறது.
இரு வித்தியாசமான கதைகள்..!
‘‘நான் படிக்கும்போது பகுதிநேரப் பணியாகப் பெரியதொரு கடற்கரையையொட்டிய தங்கும் விடுதியில் பணிபுரிந்தேன். ஓர் அதிபுத்திசாலியான டெக்னாலஜி நிறுவன எக்சிக்யூட்டிவ் அங்கே அடிக்கடி வருவார். 20 வயதிலேயே வைஃபை ரூட்டரின் முக்கியமான ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை பெற்றவர் அவர். ஏகப்பட்ட நிறுவனங்களை ஆரம்பித்து அவற்றை வெற்றிகரமாக நல்ல லாபத்துக்கு விற்றவர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவருக்கும் பணத்துக்கும் இடையேயான உறவு கொஞ்சம் வித்தியாசமானது. 100 டாலர் கட்டுகளை ஒன்றாகச் சேர்த்து சிப்பமாக (bundle) எப்போதுமே வைத்திருப்பார். எல்லோரிடமும் ஒரு தொகையைக் குறிப்பிட்டு இவ்வளவு டாலர் பணத்தைப் பார்க்க ஆசையாக இருக்கிறதா என்று கேட்டு அதைக் காட்டுவார். அவருடைய வசதி வாய்ப்பு மற்றும் செல்வத்தை ஊருக்கே பகட்டாகக் காட்டுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் முயல்வார். ஒரு நாள் ஹோட்டலில் பணிபுரிவர் ஒருவரிடம் பணம் கொடுத்து 1,000 டாலர் மதிப்புள்ள தங்கக்காசுகளை வாங்கி வரச் சொன்னார். அந்தக் காசுகளை அவரும் அவருடன் வந்தவர்களும் யார் அதிக தூரம் வீசுகிறோம் என்று ஜாலியாக ஒரு போட்டி வைத்து கடலில் வீசி விளையாடினர். ஆனால், சில வருடங்கள் கழித்து அவர் திவாலானதாகக் கேள்விப்பட்டேன். எதற்கு இதைச் சொல்கிறேன் தெரியுமா? பணத்தைச் சரியாகக் கையாளுதல் என்பது நீங்கள் எந்த அளவுக்கு ஸ்மார்ட்டான நபர், என்ன மாதிரியாக நடந்துகொள்கிறீர்கள் என்பதிலேயே இருக்கிறது.
இன்னொருவரைப் பற்றிச் சொல்கிறேன், கேளுங்கள். எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உதவியாளராக 22 வருடம் பணிபுரிந்து, சுத்தம் செய்யும் பணியில் 17 வருடம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் தன்னுடைய 92 வயதில் (2014-ம் ஆண்டில்) இறந்தார். அவர் இறக்கும்போது அவரிடத்தில் எட்டு மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து இருந்தது. அதில் ஆறு மில்லியன் டாலரை அவர் வசிக்கும் இடத்தில் இருந்த மருத்துவமனை மற்றும் நூலகத்துக்கு எழுதி வைத்துவிட்டு, ஒரு பெருங்கொடை யாளராக மறைந்தார்.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு ஜீனியஸ் பண விஷயத்தில் சுலபமாகத் தோற்றுப்போவது உறுதி. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய திறன் கொண்ட புத்திசாலித்தனம் எதுவுமே இல்லாத ஆள் பணரீதியாக வெற்றி பெறுவதும் உறுதி’’ என நச்சென்ற செய்தியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபணம் ஏற்படுத்தும் தாக்கங்கள்!
“பணத்தை நிர்வகிக்க உயர்படிப்புகள் புதிது புதிதாக நிறைய வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்த 20 ஆண்டு களில் நாம் சிறந்த முதலீட்டாளராக ஆகிவிட்டோமா என்றால், இல்லை என்பதே பதில்.

‘ஆறுமாத சம்பளத்தை எமர்ஜென்சி செலவுக்கு ஒதுக்கி வையுங்கள், குறைந்தபட்சம் 10% சம்பாத்தியத்தை சேமியுங்கள்’ என்ற தனிநபர் நிதி நிர்வாகத்தில் ஆரம்பித்து, முதலீட்டுத் துறையில் வட்டிக்கும் பங்கு விலைக்குமான தொடர்பு, கார்ப்பரேட் துறையில் சி.எஃப்.ஓ-க்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய ‘காஸ்ட் ஆஃப் கேபிட்டல்’ வரையிலான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் தந்த பின்பும் பெரிய மாற்றங்கள் எதுவும் வந்துவிடவில்லையே ஏன்?’’ என்ற கேள்வியை எழுப்பும் ஆசிரியர் அதற்கான பதிலையும் சொல்கிறார்.
‘‘இது மாதிரியான அறிவுரைகள் நம் மூளைக்குள் சென்று ஏற்படுத்தும் தாக்கங்கள் வெவ்வேறாக இருப்பதுதான் காரணம். இன்ஜினீயர்கள் ஒரு கட்டுமானம் எந்த அளவுக்கு எடை தாங்கும் என்பதைத் தெளிவாகச் சொல்ல முடிபவர்கள். ஏனெனில், திட்டவட்டமான பெளதீக சட்டங்கள் மற்றும் கணக்குகள் இருக்கின்றன. ஆனால், நிதிசார்ந்த நடவடிக்கைகளிலும் விதிகள் இருக்கிற போதிலும் மதியும் கொஞ்சம் சேர்த்து செயல்பட வேண்டியிருப்பதால், எதிர்பாராத சதிகளை நமக்கு நாமே செய்துகொள்கிறோம்’’ என்கிறார் ஆசிரியர்.
பணம் விஷயத்தில் பைத்தியக்காரத்தனம்!
‘‘பணம் தொடர்பான விஷயத்தில் அனைவருமே பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்கிறார்களா என்று கேட்டால், ஆம் மற்றும் இல்லை என்ற குழப்பமான பதிலே கிடைக்கும். யாரும் பைத்தியக்காரத்தனமாக வேண்டுமென்றே பணத்தை தொலைப்பதில்லை.
உதாரணத்துக்கு, எல்லோருமே ரிட்டையர்மென்ட் பற்றி யோசிக்கிறோம் மற்றும் பேசுகிறோம். ஆனால், பெரும்பாலானோர் அதற்கான சேமிப்புகளைச் செய்ய முனைவ தில்லை. ஏனென்றால், நம் அனை வருக்குமே பணம் என்பது புதிய அனுபவமாகவே இருக்கிறது. நம்முடைய அனுபவங்களைக் கொண்டு அன்றைய தினத்தில் எது சரியோ, அதை மட்டுமே நாம் செய்கிறோம். அதனாலேயே பின்னால் இதை ஏன் செய்தோம் என்று சிந்தித்தால் நம்முடைய செயல் கொஞ்சம் பைத்தியக்காரத் தனமாகவே நமக்குத் தோன்றுகிறது’’ என்கிறார் ஆசிரியர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிர்ஷ்டமும் ரிஸ்க்கும்!
அதிர்ஷ்டமும் ரிஸ்க்கும் அண்ணன் தம்பிகள். ஏனென்றால், இந்த இரண்டுமே நம்முடைய நடவடிக்கை களைத் தாண்டி வெளியே உள்ள சூழல்களால் நிர்ணயிக்கப்படுபவை. இதில் நீங்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டியது ரிஸ்க் எடுப்பதற்கும் பொறுப்பற்று செயல்படுவதற்கும் இடையே உள்ள மெல்லிய வித்தியாசத்தைதான். ரிஸ்க் எடுக்கிறேன் பேர்வழி என்ற போர்வையில் செய்யப்படும் பொறுப்பற்ற செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும். உலகம் வெற்றி பெற்றவர்களைக் கொண்டாடுகிறது. அதே சமயம், அவர்களுடைய அந்த வெற்றிக்கு காரணமான புறக்காராணிகள் பெருமளவில் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுவதே இல்லை. வெற்றி பெற்ற இவரைப்போல் செய். தோல்வியடைந்த இவரைப்போல் செய்யாதே என்று சொல்லிச் சொல்லி நாம் வளர்த்தெடுக்கப் படுகிறோம். இந்த இருவருக்கும் வெளிச் சூழல் எப்படி உதவியாகவும் / உபத்திரவமாகவும் இருந்தது என்பது குறித்து நமக்கு சொல்லப் படுவதே இல்லை. ரிஸ்க்கும் அதிர்ஷ்டமும் கண்ணுக்குத் தெரியாமல் நம்முடனேயே இருப்பவை. ஒன்றில் ஈடுபட்டால் மட்டுமே மற்றொன்று வெளிவரும்.

நிதி நிர்வாகத்தில் நம்முடைய இலக்கு (லாபம்/லாப விகிதம்) என்பது மாறாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அவ்வாறு இருக்க கற்றுக்கொள்வது மிகவும் கடினமான காரியமும்கூட. ஏனென்றால், நாம் எப்போதுமே நாம் வாழும் சமூகத்துடன் நம்மைத் தொடர்ந்து ஒப்பீடு செய்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். பெரிய காரியம் ஒன்றைச் செய்ய பெரிய அளவிலான சக்தி தேவையில்லை. சிறுகச் சிறுக செலவிடப்பட்ட சக்தியே போதுமானது என்று சொல்லும் ஆசிரியர், இது பணத்துக்கு மிக மிகப் பொருந்தும் என்று பல உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார்.

பணக்காரராக ஆகுதல் மற்றும் பணக்காரராக தொடர்ந்து இருத்தல், பணம் எப்படி நமக்கு நம்முடைய நேரத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது என்பது போன்ற பல விஷயங்களையும் தனித்தனி அத்தியாயங் களாகத் தந்துள்ள ஆசிரியர், மருத்துவ உலகில் வந்த ஒரு மாற்றத்தைச் சொல்லி புத்தகத்தை முடிக்கிறார்.
உலகப் பொருளாதாரம் இருக்கிற இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் பணம் குறித்த நம் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் உள்ள பல முக்கிய விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன் பெறலாம்!
- நாணயம் விகடன் டீம்