Published:Updated:

டாக்ஸ் ஃபைலிங்... இனி அபராதம் செலுத்த வேண்டுமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நான், கடந்த மாத முடிவில் வரிக் கணக்குத் தாக்கல் செய்யத் தவறிவிட்டேன். இனி செய்ய வாய்ப்பில்லையா?

சிவசாமி, திருச்சி

கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்

“வருமான வரிச் சட்டம் 234 எஃப் பிரிவில் திருத்தப்பட்ட விதிமுறைகள் 2017, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி, குறித்த காலத்துக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், அதிகபட்சமாக 10,000 ரூபாய் அபராதத்துடன் வரிக் கணக்குத் தாக்கல் செய்யமுடியும். இதன்படி ஆகஸ்ட் 31, 2019 தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் 5,000 ரூபாய் அபராதத்துடன் தாக்கல் செய்யலாம். அதற்குப்பிறகு தாக்கல் செய்தால், ரூ.10,000 அபராதமாகச் செலுத்தவேண்டும். இதிலும்கூட ரூ.5 லட்சம் ரூபாய்க்குக் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்குச் சலுகையாக, அதிகபட்ச அபராதத்தொகை 1,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”

துபாயில் பணியாற்றிவரும் நான், டீமேட் கணக்கு மற்றும் என்.ஆர்.ஐ கணக்கின்மூலம் இந்தியாவிலுள்ள மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். அடுத்த ஆண்டு நிரந்தரமாக இந்தியாவுக்கு வரவுள்ளேன். அப்போது எனது முதலீடுகளை எப்படி மாற்றுவது?

மணிமாறன், சேலம்

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

“அந்நியச்செலாவணி மேலாண்மைச் சட்டப்படி (FEMA) ஒரு என்.ஆர்.ஐ இந்தியர், இந்தியாவுக்குத் திரும்பிவந்து இந்தியாவில் வசிக்கும் குடிமகனாக (ரெசிடென்ட் இந்தியன்) மாறினால், அந்தத் தகவலை அவருடைய வங்கியில் சொல்லி, தன்னுடைய என்.ஆர்.இ மற்றும் என்.ஆர்.ஓ வங்கிக்கணக்குகளைச் சாதாரண சேமிப்புக்கணக்காக மாற்ற வேண்டும். இதன் அடிப்படையில் டீமேட் கணக்கையும் ரெசிடென்ட் கணக்காக மாற்ற வேண்டும். அதன்பின், உங்கள் முதலீடுகள் அனைத்தும் ரெசிடென்ட் இந்தியன் கணக்குகளாக மாறும். நீங்கள் டீமேட் இல்லாமல், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளில் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் வடிவில் முதலீடு செய்திருந்தால், ஒரு கடிதத்தின் வாயிலாக உங்களுடைய தற்போதைய நிலை மற்றும் புதிய வங்கிக்கணக்கு குறித்த விஷயங்களை அந்த அக்கவுன்ட் கேன்சல்டு செக் மற்றும் பழைய என்.ஆர்.ஐ கேன்சல்டு அக்கவுன்ட் செக் ஆகியவற்றை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்குக் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.”

கோபால் கிருஷ்ண ராஜு, ஸ்ரீனிவாசன், எஸ்.ஸ்ரீதரன்
கோபால் கிருஷ்ண ராஜு, ஸ்ரீனிவாசன், எஸ்.ஸ்ரீதரன்

நான் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபடவுள்ளேன். இந்த வர்த்தகத்தில் வாங்கும்போதும், விற்கும்போதும் பெறப்படும் புரோக்கரேஜ் கட்டணம் மற்றும் வரி விகிதம் புரோக்கருக்கு புரோக்கர் மாறுபடுமா?

நாகராஜன், கோவை

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர்

“கமாடிட்டி வர்த்தகத்தில் நீங்கள் வாங்கும்போதும் மற்றும் விற்கும்போதும் கட்டவேண்டிய கூடுதல் தொகையை இரண்டாகப் பிரிக்கலாம். பல்வேறு வகையான வரிகள் மற்றும் புரோக்கரேஜ். பல்வேறு வகையான வரிகள் என்கிறபோது, கமாடிட்டி டிரான்சாக்‌ஷன் டாக்ஸ் (CTT), எக்ஸ்சேஞ்ச் டிரான்சாக்‌ஷன் சார்ஜ், செபி டேர்ன் ஓவர் ஃபீஸ், ஸ்டாம்ப் டியூட்டி, புரோக்கரேஜ் மீதான ஜி.எஸ்.டி போன்றவை எல்லா புரோக்கர்களிடமும் ஒன்றுதான். ஆனால், புரோக்கரேஜ் என்பது வியாபாரப்போட்டியின் அடிப்படையில் புரோக்கருக்கு புரோக்கர் மாறுபடலாம்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
டாக்ஸ் ஃபைலிங்... இனி அபராதம் செலுத்த வேண்டுமா?

என் வயது 36. இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேர் உள்ள என் குடும்பத்தில், நான் மட்டுமே மாதம் 28,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். இதுவரை மெடிக்ளெய்ம், இன்ஷூரன்ஸ் எதுவும் எடுக்கவில்லை. எவ்வளவு சேமிப்பது, அதில் எவ்வளவு முதலீடு செய்வது?

மகேஷ் குமார், ராஜபாளையம்

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர்

“உங்கள் குடும்பத்திலுள்ள நான்கு உறுப்பினர்களையும் கவர் செய்யுமாறு ஒரு ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டத்தை, 2 லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது, நீங்கள் மட்டுமே வருமானம் ஈட்டும் நபராக இருப்பதால், உங்களின் டேர்ம் இன்ஷூரன்ஸின் காப்பீட்டுத்தொகை உங்கள் ஆண்டு வருமானத்தைப் போல் 10 மடங்கு முதல் 20 மடங்கு வரை இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும். மேலும், தங்களின் மாத வருமானத்தில் குறைந்தபட்சம் 20 சதவிகிதத்தைப் பங்குச் சந்தைச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது.”

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், எஸ்.ராமலிங்கம்
ஜி.டி.கோபாலகிருஷ்ணன், எஸ்.ராமலிங்கம்

நான் பொதுத்துறை வங்கியில் ஏற்கெனவே இரண்டுமுறை வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டியிருக்கிறேன். வீட்டுக்கடனையும் முழுமையாகச் செலுத்திவிட்டேன். மூன்றாவது முறை அதே வங்கியில் வீட்டுக்கடன் பெற முடியாது என்கிறார்கள். உண்மையா?

கேசவன், மதுரை

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி

“எத்தனைமுறை வேண்டுமானாலும் வாங்க லாம். ஏற்கெனவே வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச்செலுத்தியிருப்பது உங்கள்மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தவே செய்யும். வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்தும் வருமானமும், பிற தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறதா என்பதே வீட்டுக்கடன் தரும்போது முக்கியமான விஷயமாகப் பார்ப்பார்கள்’’.

மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றிவரும் நான் கடந்த மூன்றாண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துவருகிறேன். தற்போது அலுவலகத்திலிருந்து பணிநிமித்தமாக மூன்றாண்டுக்காலத்துக்கு அமெரிக்காவுக்குப் அனுப்புகிறார்கள். அங்கிருந்து எனது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தொடரமுடியுமா, அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கலையரசன், சென்னை

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

“பணி நிமித்தமாக நீங்கள் மூன்று ஆண்டுகள் வெளிநாடு செல்லும்போது, வெளிநாடு வாழ் இந்தியர் என்னும் தகுதியைப் பெறுகிறீர்கள். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது கே.ஒய்.சி படிவத்தில் ‘ரெசிடென்ட் இந்தியன்’ எனக் குறிப்பிட்டிருப்பீர்கள். தற்போது அதில் நீங்கள் என்.ஆர்.ஐ என்பதை அப்டேட் செய்ய வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் வசிக்கவிருக்கும் முகவரிச் சான்றிதழ், பாஸ்போர்ட், விசா மற்றும் நிரந்தர முகவரிச் சான்றிதழ், மொபைல் நம்பர், இ-மெயில் முகவரி ஆகியவற்றைக் கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும். அதேபோல், உள்நாட்டுச் சேமிப்புக்கணக்கை, வெளிநாடு வாழ் இந்தியருக்கான கணக்காக மாற்ற வேண்டும். பிறகு இவற்றை உங்களுடைய மியூச்சுவல் ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோக்களில் அப்டேட் செய்யவேண்டும். அத்துடன், உங்கள் வங்கியில் என்.ஆர்.இ (Non Resident External) வங்கிக்கணக்கு ஒன்றையும் தொடங்க வேண்டும். வெளிநாட்டில் நீங்கள் சம்பாதித்து இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்க டாலர் ஏதுவாக இருக்கும். இது தவிர, உங்கள் சார்பாக உங்கள் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் உங்களால் அளிக்கப்பட்ட பவர் ஆஃப் அட்டர்னி மூலமாக முதலீடு செய்யலாம். ஆனால், கே.ஒய்.சியில் உங்களின் கையொப்பம் மற்றும் பவர் ஆஃப் அட்டர்னி பெறுபவரின் கையொப்பம் ரிஜிஸ்டர் ஆகியிருக்க வேண்டும். தற்போதைய தகவலின்படி, எஸ்.பி.ஐ, ஆதித்ய பிர்லா சன் லஃப், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ, யூ.டி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, சுந்தரம், பிரமெரிக்கா, எல்&டி, பி.பி.எஃப்.ஏ.எஸ் ஆகிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் என்.ஆர்.ஐ-யிடமிருந்து முதலீட்டைப் பெற்றுக்கொள்கின்றன.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

டாக்ஸ் ஃபைலிங்... இனி அபராதம் செலுத்த வேண்டுமா?

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com