Published:Updated:

பத்திரங்களை லேமினேஷன் செய்வது சரியா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

எனது வீட்டுமனைப் பத்திரத்தை லேமினேஷன் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இப்படிச் செய்யக்கூடாது என்கிறார் என் நண்பர் ஒருவர் இது தவறா?

நாகராஜன், திருச்சி

த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

‘‘தவறுதான். சொத்துப்பத்திரத்தை லேமினேஷன் செய்யக் கூடாது. அதில் ஏதேனும் மாற்றம் செய்துவிட்டு, லேமினேஷன் செய்திருப்பதாகக் கருத வாய்ப்புள்ளது. எனினும், உங்கள் வீட்டு மனைப் பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகலை அந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும் https://tnreginet.gov.in/ என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்தும் உங்கள் பத்திரத்துக்கான நகலைப் பெறலாம். இதற்கான கட்டணத்தை ஆன்லைனிலேயே டெபிட் கார்டு மூலமாகச் செலுத்த வேண்டும்.’’

த.பார்த்தசாரதி, கனகா ஆசை
த.பார்த்தசாரதி, கனகா ஆசை

வயது 32. பொதுத்துறை ஊழியரான நான் வருமான வரிவிலக்கு மற்றும் ஓய்வுக்காலத் தேவைக்காக மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்ய ஆலோசனை கூறவும். மிதமான ரிஸ்க்தான் எடுக்க முடியும்.

கனகராஜ், பரமக்குடி

கனகா ஆசை, நிதி ஆலோசகர்

‘‘உங்களுடைய முதலீட்டுத்தொகையான பத்தாயிரம் ரூபாயை இரண்டாகப் பிரித்து தலா 5,000 ரூபாய் என ஆதித்ய பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 மற்றும் ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் மாதந்தோறும் முதலீடு செய்யவும். மிதமான ரிஸ்க் உள்ள மற்றும் வரிச்சேமிப்புக்கு உதவக்கூடிய இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன்மூலம் ஆண்டு சராசரி வருமானமாக 11% வரை எதிர்பார்க்கலாம்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
பத்திரங்களை லேமினேஷன் செய்வது சரியா?

என்னிடம் மெடிக்ளெய்ம் பாலிசி இருக்கிறது. சம்பளத்தில் இ.எஸ்.ஐ பிடிக்கிறார்கள். எனவே, மெடிக்ளெய்ம் பாலிசிக்குப் பிரீமியம் செலுத்துவது வீண்செலவு எனக் கருதுகிறேன். அதனை நிறுத்திவிடலாமா?

ராஜேஷ்குமார், சேலம்

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

‘‘மெடிக்ளெய்ம் பாலிசியைத் தொடர்வதே நல்லது. ஏனெனில், இ.எஸ்.ஐ நெட்வொர்க்கில் இருக்கும் இ.எஸ்.ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகள் தவிர, வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவதற்கான வாய்ப்பு மெடிக்ளெய்ம்மூலம் கிடைக்கலாம். மருத்துவச்செலவு இ.எஸ்.ஐ நிர்ணயித்த வரம்புக்கு அதிகமாகும்போது, கூடுதல் தொகைக்கு மெடிக்ளெய்ம் பாலிசியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் அலுவலகம் மாறும்போதோ அல்லது உங்கள் சம்பளம் இ.எஸ்.ஐ பிடிப்பதற்கான வரம்பைத் தாண்டினாலோ மீண்டும் மெடிக்ளெய்ம் பாலிசி பெற விண்ணப்பித்தால், உங்கள் வயது, முன்கூட்டியே உள்ள வியாதிக்கான சிகிச்சைக்கு உரிய காத்திருப்புக் காலம், அதிக பிரீமியம் எனப் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். அதற்குப் பதிலாக, நீங்கள் மெடிக்ளெய்ம் பாலிசியைத் தொடர்வதே நல்லது. பாலிசியில் க்ளெய்ம் கோரவில்லை என்றால், நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்கும்.’’

பி.மனோகரன், த.சற்குணன்
பி.மனோகரன், த.சற்குணன்

வயது 30. ஆறு ஆண்டில் 50 லட்சம் ரூபாயில் வீடு வாங்க, டவுன்பேமன்ட் 10 லட்சம் ரூபாய் சேர்க்க வேண்டும். இதற்கு மாதந்தோறும் 12,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கேற்ற ஃபண்டுகளைச் சொல்லுங்கள்.

லதா கார்த்திகேயன், சென்னை

த.சற்குணன், நிதி ஆலோசகர்

‘‘நீங்கள் மாதந்தோறும் 12,000 ரூபாயை முதலீடு செய்யும்போது தோராயமாக ஆண்டுக்கு 10% வருமானம் எனக் கணக்கிட்டால், ரூ.11 லட்சத்துக்குமேல் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, உங்களுடைய இலக்கை எளிதில் எட்ட முடியும். உங்களுடைய முதலீட்டுத்தொகையை மூன்றாகப் பிரித்து, பின்வரும் திட்டங்களில் ஏதேனும் மூன்றில் தலா ரூ.4,000 வீதம் முதலீடு செய்யவும். கோட்டக் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், ஆக்ஸிஸ் டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் எடெல்வைஸ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்.’’

வங்கியில் மிகக் குறைவான வீட்டுக்கடனே கிடைக்கும் என்று சொன்னதால், வீட்டுக்கடன் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பிராசஸிங் கட்டணத்துக்காகக் கொடுத்த காசோலையையும் நிறுத்திவிட்டேன். இதனால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுமா?

எட்வின், நாகர்கோவில்

ஆர்.செல்வமணி, கனரா வங்கி உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு)

‘‘வங்கிக்கடனை நீங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பிராசஸிங் கட்டணம் செலுத்த வேண்டும். வங்கிக்கடனை ஏற்காதபட்சத்தில், அதற்கான காரணத்தைக் கூறி, கொடுத்த காசோலையைத் திரும்பத் தரும்படிக் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். இதில் உங்கள் தரப்பில் தவறு இல்லாததால், உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் எனது மகனின் பெயரில் பி.பி.எஃப் கணக்குத் தொடங்கி, அதில் நான் முதலீடு செய்ய விரும்புகிறேன். மகனின் வருமானம், வருமான வரி வரம்பைவிடக் குறைவாக உள்ளது. இந்த நிலையில், பி.பி.எஃப் கணக்குக்காக நான் செலுத்தும் தொகையை, வருமான வரிச் சட்டம் 80C பிரிவின்படி, எனது வருமான வரிக்கழிவுக்காகக் காட்ட முடியுமா?

வெற்றிவேல், கோயமுத்தூர்

பி.கமலேசன், ஆடிட்டர்

‘‘வருமான வரிச் சட்டம் 80C பிரிவின்படி, உங்கள் மகனின் பி.பி.எஃப் கணக்குக்காக நீங்கள் செலுத்தும் தொகையை உங்களுடைய வருமான வரிக்கழிவுக்குக் காட்டலாம். அதேவேளையில் உங்கள் மகன் அவரின் வருமான வரிக் கணக்குத் தாக்கலில் இந்தத் தொகையை வரிக்கழிவுக்குக் காட்ட முடியாது.’’

ஆர்.செல்வமணி, பி.கமலேசன், கே.அழகுராமன்
ஆர்.செல்வமணி, பி.கமலேசன், கே.அழகுராமன்

என் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்தின் ஒரு பகுதியை என் நண்பருடைய ஆதரவற்றோர் இல்லத்துக்குத் தானமாகக் கொடுக்க விரும்புகிறேன். அதற்கு என் மனைவி குழந்தைகளின் அனுமதி தேவையா, என்னென்ன ஆவணங்கள் தேவை?

முத்துராஜ், தேனி

கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

“உங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்து, முழுக்க முழுக்க உங்களுக்குப் பாத்தியப் பட்ட சொத்தாகவே கருதப்படும். அதன் ஒரு பகுதியை ஆதரவற்றோர் இல்லத்துக்குத் தானமாகத் தருவது நல்ல செயலாகவே இருந்தாலும் அதை உங்கள் நண்பர் நடத்துகிறார். அந்த இல்லம் முறைப்படி பதிவு செய்யப்பட்டு, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படு கிறதா என்பதை நன்கு ஆராய்ந்துவிட்டு, தான மாகக் கொடுக்கலாம். உங்கள் சுயசம்பாத்தியத்தால் உங்கள் பெயரில் கிரயம் செய்யப்பட்ட சொத்தைத் தானமாகத் தருவதற்கு உங்கள் மனைவி, குழந்தைகளின் அனுமதி தேவையில்லை. அந்த இடத்தை உரிமை மாற்றம் செய்வதற்கு தானப்பத்திரம் ஒன்று ஏற்படுத்திப் பதிவு செய்ய வேண்டும். அதற்கென சொத்தின் வழிகாட்டு மதிப்பில், உரிமை மாற்றத்துக்கான 7+4 சதவிகிதத் தொகையை முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பதிவின்போது அந்தச் சொத்து தொடர்பான அனைத்து மூல ஆவணங்கள், இதர ஆவணங்கள், ரெவென்யூ ஆவணங்கள், பட்டா, சிட்டா, வில்லங்கச் சான்றிதழ்கள் ஆகியவற்றைத் தானமாகப் பெறும் நபரிடம் ஒப்படைக்கவேண்டியது அவசியம்.”

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

பத்திரங்களை லேமினேஷன் செய்வது சரியா?

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com