Published:Updated:

ஓய்வுக்காலத்தில் ரூ.1 கோடி... எதில், எவ்வளவு முதலீடு செய்வது?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

கேள்வி - பதில்

ஓய்வுக்காலத்தில் ரூ.1 கோடி... எதில், எவ்வளவு முதலீடு செய்வது?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

எனக்கு வயது 38. தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறேன். 55 வயதில் நான் பணி ஓய்வு பெறும்போது 1 கோடி ரூபாய் சேர்க்க விரும்புகிறேன். எனக்கேற்ற ஃபண்ட் தேர்வைக் கூறுங்கள்.

ராஜேஷ்குமார், சென்னை

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

“இன்னும் 17 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க விரும்புகிறீர்கள். ஆண்டுக்கு 12% வருமானம் கிடைக்கும் என வைத்துக்கொண்டால் நீங்கள் மாதந்தோறும் 16,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய வேண்டும். அந்தத் தொகையை தலா 8,000 ரூபாய் என இரண்டாகப் பிரித்துக்கொண்டு, எஸ்.பி.ஐ மேக்னம் மல்டிகேப் ஃபண்ட், டி.எஸ்.பி ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யவும்.”

த.முத்துகிருஷ்ணன், ஸ்ரீனிவாசன்
த.முத்துகிருஷ்ணன், ஸ்ரீனிவாசன்

நான் பொதுத்துறை ஊழியர். என் ஆண்டு வருமானம் 6 லட்ச ரூபாய். நான் இதுவரை எதிலும் முதலீடு செய்ததில்லை. வரிச் சேமிப்புக்கேற்ற முதலீட்டையும், 2025-ம் ஆண்டில் வீடு கட்டுவதற்கேற்ற முதலீட்டையும் பரிந்துரைக்கவும்.

வெற்றிவேல், சேலம்

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

“வரிச் சேமிப்புக்காக இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், எஸ்.ஐ.பி அல்லது எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்யலாம். ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி, மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் அல்லது டி.எஸ்.பி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ஆகியவை உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும். இந்தத் திட்டங்களில் 80சி பிரிவின்படி, நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் 1,50,000 ரூபாய் வரையிலான முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. மூன்றாண்டுக் காலம் லாக்-இன் இருக்கிறது. அடுத்ததாக, வீடு கட்டுவதற்கான தொகையை உருவாக்க ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யாமல், பங்கு மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் கலவையாக முதலீடு செய்ய வேண்டும்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செப்டிக் டேங்குக்காகத் தெருவில் நான்கடி பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் பகுதியில் கழிவுநீர்க்கால்வாய்கள் பதிக்கப்படவில்லை. சட்டப்படி எனது செப்டிக் டேங்க்கை விரிவுபடுத்த அனுமதி வாங்க முடியுமா?

லோகேஷ், முகநூல் வழியாக...

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

“உங்கள் வீட்டு மனையைத் தாண்டி செப்டிக் டேங்க் பதிப்பதற்காக, தெருவிலுள்ள பகுதியை ஆக்கிரமிப்பது சட்டப்படி தவறு. நீங்கள் உங்கள் செப்டிக் டேங்க்கை ஆழப்படுத்த முயலலாம். அது முடியாத பட்சத்தில், உங்கள் வீடு அமைந்திருக்கும் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகளைச் சந்தித்து, செப்டிக் டேங்க் விரிவாக்கத்தின் தேவை குறித்துத் தெரிவித்து, அவர்கள் ஒப்புதல் தந்தால் விரிவுபடுத்தலாம்.”

வி.எஸ்.சுரேஷ், ஆர்.செல்வமணி
வி.எஸ்.சுரேஷ், ஆர்.செல்வமணி

என் மகனின் கல்லூரிப் படிப்புக்காக வங்கியில் கல்விக் கடன் பெற்றிருக்கிறேன். பாடங்களில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த ஆண்டுக்குக் கல்விக் கடன் கிடைக்காது என்கிறார்களே... உண்மையா?

சக்திவேல், சேலம்

ஆர்.செல்வமணி, உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), கனரா வங்கி

“கல்விக் கடன் பெறும் மாணவர்களின் படிக்கும் திறனைத் தெரிந்துகொள்ள ஒவ்வோர் ஆண்டும் படிப்பு முடிந்ததும், மதிப்பெண் சான்றிதழைக் கேட்பார்கள். பாடங்களில் எதிலாவது தேர்ச்சி பெறாவிட்டால், அந்த மாணவனுக்குப் படிப்பின் மீது ஆர்வமில்லை என்று எடுத்துக்கொள்ளப்பட்டு, தொடர்ந்து கல்விக் கடனைத் தர மறுக்க வாய்ப்பிருக்கிறது. முதலாமாண்டில் படிப்பில் நல்லமுறையில் தேர்ச்சி பெறாவிட்டால் அந்த மாணவனால் மற்ற ஆண்டுகளிலும் நன்கு படிக்க இயலாமல் போகலாம். எனவே, அந்தக் கல்விக் கடன் வாராக்கடனாக மாற வாய்ப்பிருக்கிறது எனக் கருத்தில்கொள்ளப்பட்டு கல்விக் கடன் தர வங்கி மறுக்கக்கூடும்.”

கேள்வி பதில்
கேள்வி பதில்

பொதுத்துறை வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறேன். முதலில் 10,000 ரூபாய் மாதத் தவணை செலுத்திவந்தேன். பின்னர் என் சம்பளம் உயர்ந்ததால், மாதத் தவணையை 14,000 ரூபாயாக உயர்த்தி, கடந்த மூன்றாண்டுகளாகச் செலுத்திவருகிறேன். இன்னும் ஆறு ஆண்டுகள் வீட்டுக் கடன் செலுத்த வேண்டும். தற்போது சம்பளம் குறைந்திருப்பதால், பழையபடி மாதத் தவணையை 10,000 ரூபாயாக மாற்றிக்கொள்ள அனுமதிப்பார்களா?

பிரகாஷ், முகநூல் வழியாக...

ஆர்.கணேசன், உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்

“பொதுவாக வீட்டுக் கடன் தவணைத் தொகையை இரண்டு முறை மாற்றிக்கொள்ள வங்கிகளில் அனுமதிப்பார்கள். (இந்த எண்ணிக்கை வங்கிக்கு வங்கி மாறுபடக்கூடும்.) தற்போது நீங்கள் இரண்டாவது முறையாக மாதத் தவணையை மாற்றுவதற்குக் கேட்கிறீர்கள் என்பதால் அதற்குச் சம்மதிக்க வாய்ப்பிருக்கிறது. எனினும், நீங்கள் முறையாக, தொடர்ச்சியாகத் தவணைத் தொகையைச் செலுத்திவருகிறீர்களா என்பதையும் கணக்கில்கொள்வார்கள். மாதத் தவணை செலுத்துவதில் விடுதல்கள் இருந்தால், நீங்கள் கேட்டபடி மாற்றித்தருவது சந்தேகமே. அது குறித்து வங்கி மேலாளர்தான் முடிவெடுப்பார்.”

ஆர்.கணேசன், கே.அழகுராமன், கே.ஆர்.சத்யநாராயணன்
ஆர்.கணேசன், கே.அழகுராமன், கே.ஆர்.சத்யநாராயணன்

தத்துக் குழந்தைக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு உண்டா?

ராம்குமார், முகநூல் வழியாக...

கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம்

“சட்டப்படி முறையாகத் தத்தெடுக்கப் பட்டிருக்கும்பட்சத்தில், இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, பூர்வீகச் சொத்தில் ஒரு வாரிசுக்கு உண்டான உரிமைகள் அனைத்தும் இவருக்கும் உண்டு. அந்தப் பூர்வீகச்சொத்தின்பேரில் ஏற்கெனவே உயில் ஏதேனும் எழுதப்பட்டிருந்தால், அதை மெய்ப்பிக்கும்போது, அதில் குறிப்பிட்டுள்ளபடி அந்த உயிலின் பயன்பாட்டாளருக்கு (Beneficiary) அந்தச் சொத்து சென்றடையும். அப்படியல்லாதபட்சத்தில் வாரிசுரிமை இறங்குரிமைப்படி சொத்து அவர்களைச் சென்றடையும். `தத்தெடுக்கப்பட்ட குழந்தைதான்’ எனறு காரணம் காட்டி, அந்த நபருக்கான பங்கை எவரும் மறுக்க இயலாது.”

சீனியர் சிட்டிசனான எனது ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாயைவிட அதிகம். இதற்கு வருமான வரி செலுத்த வேண்டுமா... இ.பி.எஃப்.ஓ முதலீட்டிலிருந்து கிடைக்கும் மாதாந்தர ஓய்வூதியத்துக்கு வருமானவரிக் கழிவு உண்டா?

மாதவன், இ-மெயில் மூலமாக...

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“சீனியர் சிட்டிசன்களுக்கு ஆண்டுக்கு வருமானம் 3 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரையிருந்தால் 5%, அதற்கு மேல் என்றால் வருமான வரி 20 சதவிகிதம் செலுத்த வேண்டும். நடப்பு 2019 -20-ம் நிதி ஆண்டிலிருந்து, `வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டாம்’ என மத்திய அரசு சலுகை அளித்திருக்கிறது. அதன்படி, வருமான வரிச் சட்டம் 87A பிரிவின்படி, 5 லட்ச ரூபாய்க்குள் வருமானமுள்ள சீனியர் சிட்டிசன்களுக்கு வருமான வரி 10,000 ரூபாயைத் தள்ளுபடி செய்துவிடுவார்கள். ஆனால் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானமிருந்தால், அந்த வருமானத்துக்கு 10,000 ரூபாயையும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டும். எனவே, இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் 5 லட்ச ரூபாய்க்கு அதிகமான தொகையை 80சி, 80டி போன்ற பிரிவுகளின் கீழ் முதலீடு செய்யலாம். மேலும், இ.பி.எஃப்.ஓ-லிருந்து கிடைக்கும் ஓய்வூதியத்துக்கு வருமான வரிவிலக்கு கிடையாது. இதில் அடிப்படை வருமான வரி வரம்பைத் தாண்டும்போது, வரி செலுத்த வேண்டி வரும்.”

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

ஓய்வுக்காலத்தில் ரூ.1 கோடி...  எதில், எவ்வளவு முதலீடு செய்வது?

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com