நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

தங்க நகை ஏலம்... யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

gold
பிரீமியம் ஸ்டோரி
News
gold

கேள்வி - பதில்

வங்கியில் நடத்தப்படும் நகைகள் ஏலத்தில் யாரெல்லாம் கலந்துகொள்ளலாம், ஏலம் விடப்படுவது குறித்து தெரிந்துகொள்வது எப்படி?

ராகவன், முகநூல் வழியாக...

ஆர்.செல்வமணி, கனராவங்கி உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு)

“தங்க நகை ஏலத்தில் விருப்பமுள்ள யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஏலம் குறித்த அறிவிப்பு, பத்திரிகைகளில் வெளியிடப்படும். வங்கிக் கிளைகளின் அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்படும். பத்திரிகைகளில் பார்க்கத் தவறினாலும்கூட வங்கியின் அறிவிப்புப் பலகையிலோ, வங்கி அலுவலர்களிடம் விசாரிப்பதன் மூலமோ தெரிந்துகொண்டு கலந்துகொள்ளலாம்.”

ஆர்.செல்வமணி, ஸ்ரீனிவாசன்
ஆர்.செல்வமணி, ஸ்ரீனிவாசன்

எனக்கு 65 வயது. கடன் சார்ந்த ஃபண்டுகளிலும் வைப்புநிதியிலும் ஏற்கெனவே முதலீடுகள் இருக்கின்றன. தற்போது கூடுதலாக மாதந்தோறும் 35,000 ரூபாயை முதலீடு செய்ய விரும்புகிறேன். மிதமான ரிஸ்க்குள்ள முதலீட்டு ஆலோசனைகளைக் கூறவும்.

ஆர்.ரெங்கநாதன், சென்னை-17

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

“இன்றுவரை நீங்கள் பாதுகாப்பான முதலீட்டாளராகவே இருக்கிறீர்கள். இதேபோலத் தொடர விரும்புவதால், வங்கியில் ரெக்கரிங் டெபாசிட்டைத் தொடங்கலாம். இல்லையென்றால், குறுகியகால கடன் சார்ந்த ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம்.

மிதமான ரிஸ்க் எடுக்க நீங்கள் தயாராக இருந்தால் 25,000 ரூபாயை குறுகியகால கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டான ஹெச்.டி.எஃப்.சி ஷார்ட் டேர்ம் ஃபண்ட்/ஆக்ஸிஸ் ஷார்ட் டேர்ம் ஃபண்டிலும், மீதமுள்ள 10,000 ரூபாயை ஆக்ஸிஸ் புளூசிப்/ மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்டிலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம்.”

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ‘பேமிலி ஃப்ளோட்டர்’ பாலிசியில் இரண்டாவது குழந்தையை எப்படிச் சேர்ப்பது?

எம்.ரஞ்சித், முகநூல் வழியாக...

கே.பி.மாரியப்பன் இன்ஷூரன்ஸ் நிபுணர்

“அடுத்த முறை பாலிசியைப் புதுப்பிக்கும்போது குழந்தையை இணைத்துக்கொள்ளலாம். இடைப்பட்ட நாள்களில் இணைக்க முடியாது. ஏற்கெனவே இருக்கும் ‘2 பெரியவர் + 1 சிறியவர்’ என்ற திட்டத்திலிருந்து, ‘2 பெரியவர் + 2 சிறியவர்’ என்ற திட்டத்துக்கு மாற வேண்டும். சற்று கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.”

கே.பி.மாரியப்பன், வி.எஸ்.சரண்சுந்தர்
கே.பி.மாரியப்பன், வி.எஸ்.சரண்சுந்தர்

நான் தனியார் பள்ளி் ஆசிரியர். தனியார் டியூஷன் சென்டர் ஒன்றில் பாடமெடுக்க ஒப்பந்தம் செய்திருக்கிறேன். அவர்கள் ஆண்டுச் சம்பளம் தருவார்கள். எந்தப் படிவம் மூலமாக வரிக் கணக்கு தாக்கல் செய்வது?

கே.வினீத், முகநூல் வழியாக...

வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“தனியார் டியூஷன் சென்டரில் பணியாற்றுவதில் இரண்டு வகை ஊதிய ஒப்பந்த முறைகள் இருக்கின்றன. அந்த நிறுவனத்தில் பணியாளராகவே சேர்ந்து பணியாற்றுவது ஒரு வகை. அப்படிச் சேர்ந்தால் உங்களுக்கான ஊதியத்தை டி.டி.எஸ் பிடித்தத்துடன் சம்பளமாகவே தருவார்கள். வருமான வரிக் கணக்குத்தாக்கலின்போது, ஐ.டி.ஆர் பாரத்தில் சம்பளத்தைக் குறிப்பிடும் இடத்தில், உங்கள் டியஷன் சென்டரை இரண்டாவது பணி நிறுவனமாகக் குறிப்பிட்டு, அந்த வருமானத்தை இணைக்க வேண்டும்.

Gold Jewelry
Gold Jewelry

இப்படி வாங்கும் வருமானத்துக்கு `ஃபார்ம் 16’ படிவத்தை அந்த நிறுவனம் உங்களுக்கு வழங்கும். இரண்டாவது வகையில், நீங்கள் பணியாளராகச் சேர்க்கப்படாமல் விசிட்டிங் ஆசிரியராக மட்டுமே கணக்கில்கொள்ளப்படுவீர்கள். அப்போது உங்களுக்கான ஊதியம், பிசினஸ் வருமானம்போல் கணக்கில் வரும். இதற்கான ஊதியத்தை நீங்களே நிறுவனத்திடம் க்ளெய்ம் செய்வதாக இருக்கும். அதை வரிக் கணக்குத் தாக்கலில் காட்டலாம்.”

என் குழந்தையின் உயர்கல்விக்காக, மாதம் 8,000 ரூபாய் வீதம் 12 ஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். நன்கு வருமானம் எதிர்பார்க்கக்கூடிய சில மியூச்சுவல் ஃபண்டுகளைக் கூறவும். அவை ஒரே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருந்தால் நல்லது.

வி.மதிவாணன், சென்னை-15

கனகா ஆசை, CFP, நிதி ஆலோசகர்

“பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நன்முறையில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்துக்கு நீண்டகாலம் நன்முறையில் செயல்பட்ட டிராக் ரெக்கார்டு இருக்கிறது. உங்கள் முதலீட்டை தலா ரூ.2,000 வீதம் நான்காகப் பிரித்து, ஏ.பி.எஸ்.எல் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி (லார்ஜ்கேப்), ஏ.பி.எஸ்.எல் மிட்கேப் ஃபண்ட், ஏ.பி.எஸ்.எல் ஈக்விட்டி ஃபண்ட் (மல்டிகேப்), ஏ.பி.எஸ்.எல் ஈக்விட்டி ஹைபிரிட் 95 ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யவும்.”

40 வயதைக் கடந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நானும், என் மனைவியும் இணைந்து ரூ.20,000 மாதந்தோறும் சேமிக்கிறோம். பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறான். அதிக ரிஸ்க்கில்லாத மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மற்றும் என்.பி.எஸ் போன்றவற்றில் அந்த 25,000 ரூபாயை முதலீடு செய்ய ஆலோசனை கூறவும்.

மகேஷ்குமார், முகநூல் வழியாக...

ஸ்ரீகாந்த் மீனாட்சி, நிறுவனர், primeinvestor.in

“நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் மாதாந்தரச் சேமிப்பு மற்றும் முதலீட்டில் மகனுக்கு எவ்வளவு, உங்கள் ஓய்வூதியத்துக்காக எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்வது. உங்கள் மகனுக்கான முதலீட்டின் தேவை, குறுகியகாலத்தில் வரக்கூடியது என்பதால், அதை மிகவும் குறைந்த ரிஸ்க்குள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

உங்கள் ஓய்வூதியத்துக்கான முதலீடுகளைக் கண்டிப்பாக என்.பி.எஸ் திட்டத்தில் செய்யலாம். ஆனால், முழுவதும் அதில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்காது என்பதால், ஒரு பகுதியை (50-60%) மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப், ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் போன்ற ரிஸ்குள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.”

கனகா ஆசை, ஸ்ரீகாந்த் மீனாட்சி, கே.ஆர்.சத்யநாராயணன்
கனகா ஆசை, ஸ்ரீகாந்த் மீனாட்சி, கே.ஆர்.சத்யநாராயணன்

ஆர்.டி., டெபாசிட், என்.எஸ்.சி மற்றும் மாத வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறேன். இவற்றிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானம், என் மாத வருமானத்துடன் இணைக்கப்பட்டு வருமான வரித் தாக்கலில் காட்டப்படுமா அல்லது இந்த வட்டி வருமானங்களுக்கு வருமான வரிச் சட்டம் 80TTA பிரிவின்படி வருமான வரிச் சலுகை கிடைக்குமா?

எஸ்.நித்யானந்தன், முகநூல் வழியாக...

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“வருமான வரிச் சட்டம் 80TTA பிரிவின்படி, மூத்த குடிமக்களாக இல்லாதவர்களுக்கு ரூ.10,000 வரை வங்கிச் சேமிப்புக் கணக்கு வட்டி வருமானத்துக்கு மட்டும் வரிச் சலுகை உண்டு. வருமான வரிச் சட்டம் 80TTB பிரிவின் கீழ் மூத்த குடிமக்களுக்கு மட்டும் அனைத்து வகை வட்டி வருமானத்துக்கும் ரூ.50,000 வரை வரிச் சலுகை உண்டு. என்.எஸ்.சி வட்டி வருமானத்துக்கு வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு. மற்ற வட்டி வருமானங்களுக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

தங்க நகை ஏலம்... யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com